அக்குறணை வெள்ளத்திற்கு தீர்வு காண்பதற்கு சட்டவிரோத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை
மாவட்ட செயலாளர் ஊடாக சம்பந்தப்பட்டோருக்கு ஆலோசனை என்கிறார் அமைச்சர் லால் காந்த
(எம்.வை.எம்.சியாம்)
அக்குறணை பிரதேச வெள்ள அனர்த்தத்துக்கு தீர்வு காண கடந்த காலங்களில் முழுமையான எந்தவொரு செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.முதற்கட்டமாக சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்ட செயலாளர் ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து முறையான வேலைத்திட்டத்தை முன்வைக்க ஆலோசனை வழங்கியுள்ளோம் என விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், மழை காலங்களில் கண்டி அக்குறணை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்றன. அந்தப் பகுதி மக்கள் நீண்ட காலமாக இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அக்குறணை பிரதேச வெள்ள அனர்த்தத்திற்கு தீர்வு காண கடந்த காலங்களில் முழுமையான எந்தவொரு செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அதற்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். முதற்கட்டமாக சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் வடிகான்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளர் ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து முறையான வேலைத்திட்டத்தை முன்வைக்க ஆலோசனை வழங்கியுள்ளோம்.
அத்துடன் அந்த திட்டத்தை அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதன் ஊடாக எமக்கு இந்த விடயத்தில் தலையீடு செய்து தீர்வு காண முடியும் என்றார்.