மாவனெல்லை மற்றும் கடுகண்ணாவை பிரதேசங்களில் நான்கு இடங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பாக கலாசார அமைச்சு புறம்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமென வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சேதமாக்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொள்ள கலாசாரத் திணைக்களம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சம்பந்தப்பட்ட விசாரணை நடவடிக்கைகளுக்காக கேகாலை தொல்பொருள் உதவிப் பணிப்பாளர் எச்.பி.ஏ.கே.நில்மல்கொடவின் கண்காணிப்பின் கீழ் அதிகாரிகள் சிலர் பங்குபற்றியுள்ளனர். இந்த புத்தபெருமானின் சிலைகள் தொல்பொருள் பெறுமதியைக் கொண்டதல்ல என்பது ஆரம்ப விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் மத்தியில் முக்கிய இடம்பிடித்துள்ள இந்த சிலைகளை புனரமைப்பதன் முக்கியத்துவத்தின் தேவையும் எந்த வகையிலும் கைவிடப்பட மாட்டாது என்றும் அமைச்சர் கூறினார்.
இவற்றை மீண்டும் கட்டியெழுப்புதவற்கான செலவுகள் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli