சேகு இஸ்ஸத்தீன்: சமூக விடுதலைப் போராட்ட அரசியலின் தானைத் தளபதி

0 58

ஏ.எல்.நிப்றாஸ்

முன்னாள் அமைச்சர் வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்­ஸதீன் கடந்த வாரம் மர­ண­மா­னதை தொடர்ந்து அவர் முன்­வைத்த கருத்­தியல் பற்­றியும் அவ­ரது ஆளுமை பற்­றியும் பர­வ­லாக பேசப்­ப­டு­கின்­றது. அவ­ரது போராட்ட குணமும், அவர் வலி­யு­றுத்­திய கோட்­பா­டு­களும் இன்று முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சிலா­கித்துப் பேசப்­ப­டு­கின்­றன.

எத்­த­னையோ அர­சி­யல்­வா­திகள், முக்­கி­யஸ்­தர்கள், மக்கள் பிர­தி­நி­திகள் வருகின்றார்கள், போகின்­றார்கள், மர­ணிக்­கின்­றார்கள். ஆனால் வர­லாறு எல்­லோ­ரையும் குறிப்­பெ­டுத்து வைத்துக் கொள்­வ­தில்லை. சமூகம் எல்­லோ­ரது இழப்­பையும் ‘உண்­மை­யி­லேயே’ ஒரு வெற்­றி­ட­மாக உணர்­வ­தில்லை.

அப்­ப­டியென்றால், வேதாந்தி சேகு இஸ்­ஸதீன் மட்டும் ஏன் இவ்­வ­ளவு கொண்­டா­டப்­ப­டு­கின்றார்? அதுவும் அவர் உயி­ருடன் இருந்­த­போது இல்­லாத அள­வுக்கு பெரு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்றார் என்ற கேள்வி அவரைப் பற்றித் தெரி­யாத பல­ருக்கு ஏற்­ப­டலாம். அதற்­கான விடைதான் இந்தக் கட்­டு­ரை­யாகும்.

சேகு இஸ்­ஸதீன் மூன்று தடவை தேசி­யப்­பட்­டியல் வழங்­கப்­பட்டு கௌர­விக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். பிர­தி­ய­மைச்­ச­ராக, அமைச்­ச­ரவை அந்­தஸ்­தற்ற அமைச்­ச­ராக இருந்­தி­ருக்­கின்றார். ஆனால், அவர் எந்த மக்­க­ளுக்­காக குரல் கொடுத்­தாரோ அந்த மக்கள் அவரை நேர­டி­யாக வாக்­குகள் மூலம் பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­ப­வில்லை என்­ப­துதான் கவ­லை­யாகும்.

வடக்கு, கிழக்கில் முஸ்­லிம்­களின் இருப்பு, இனப் பிரச்­சினைத் தீர்வில் அவர்­க­ளுக்­கு­ரிய பங்கு, முஸ்லிம் தேசியம், முஸ்லிம் சுய­நிர்­ணயம், முஸ்லிம் சமஷ்டி, தனி அலகு என்று பல விட­யங்­களை தெளி­வாக தனது வாழ்நாள் முழு­வதும் பேசியும் எழு­தியும் வந்தார்.
ஆனால், 90களின் பின்­வந்த பல முஸ்லிம் தலை­வர்கள் மற்றும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மேற்­கு­றிப்­பிட்ட விவ­கா­ரங்­களின் ஆழ­அ­க­லமோ, அதன் வரை­வி­லக்­க­ணமோ தெரி­யாது.

வெறு­மனே முஸ்லிம் தேசியம் என்று பேசி­னாலும் சேகுவின் அள­வுக்கு அதைப் புரிந்து கொண்ட முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மிகக் குறைவு என்­பதே உண்­மை­யாகும்.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ர­புக்கு நிக­ரான அந்­தஸ்தில் வைத்து கடை­சி­வ­ரையும் நோக்­கப்­பட்ட அர­சி­யல்­வா­தி­யாக இஸ்­ஸதீன் இருந்தார். சமூ­கத்­திற்­காக போரா­டு­வதில் சேகு­வேரா போல, சிந்­தனை தலை­மைத்­து­வத்தை வழங்­கி­யி­ருந்தார். ஆயினும், து­ரதிர்ஷ்­ட­வ­ச­மாக, அப்­போது அவ­ரது பெறு­ம­தியை உணர முடி­யாத மாய உலகில் இருந்­தனர்.
இந்த சமூகம் தன்னை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற அரபு வச­னத்தை கூறியே அவர் தன் உரை­களை ஆரம்­பிப்­பது வழக்கம். ஆனால், தனது அர­சி­யலை குறிப்­பாக கிழக்கு முஸ்­லிம்கள் விளங்கிக் கொள்­ள­வில்­லையே என்ற வலி அவ­ருக்கு கடைசி வரையும் இருந்­தது என்­றுதான் கூற­வேண்டும்.

கடந்த நவம்பர் 28ஆம் திகதி சேகு இஸ்­ஸதீன் மறைந்தார். அதன் பிறகு, அவர் காலம் கடந்து கொண்­டா­டப்­ப­டு­கின்றார். நினைவு நிகழ்­வு­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன. இதற்கு இன்­னு­மொரு கார­ணமும் உள்­ளது.

அதா­வது மாற்றம் என்ற பெயரில் முஸ்­லிம்கள் பெரு­வா­ரி­யாக என்.பி.பி. உள்­ளிட்ட பெருந்­தே­சியக் கட்­சி­க­ளின்பால் இழு­பட்டுச் சென்­றுள்­ளனர். ஆனால், அங்கும் உரிய அந்­தஸ்­துக்கள் வழங்­கப்­ப­டுமா என்ற பலத்த சந்­தேகம் அமைச்­ச­ரவை நிய­ம­னத்தின் பின்னர் எழுந்­துள்­ளது.

எனவே, இது சரிப்­பட்டு வராது என்றும், முஸ்­லிம்­க­ளுக்­கான தனித்­துவ அர­சி­யலை உயிர்ப்­புடன் வைத்­தி­ருக்க வேண்டும். அதனை மறு­சீ­ர­மைக்க வேண்டும் என்றும் பர­வ­லாக கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­வதால், முஸ்லிம் தனித்­துவ அடை­யாள அர­சியல் கோட்­பாட்டின் வித்­தகர் என்ற வகை­யிலும் சேகு இஸ்­ஸ­தீனின் வகி­பாகம் நினை­வுக்கு வரு­கின்­றது.

1944ஆம் ஆண்டு மே 12ஆம் திகதி அக்­க­ரைப்­பற்றில் பிறந்த சேகு இஸ்­ஸதீன் அடிப்­ப­டையில் பயிற்­றப்­பட்ட ஓர் ஆங்­கில ஆசி­ரி­ய­ராவார். அக்­கா­லத்­தி­லேயே வேதாந்தி என்ற பெயரில் இலக்­கிய உலகில் மிகப் பிர­ப­ல­மா­கி­யி­ருந்­தார். 1982ஆம் ஆண்டு சட்­டத்­த­ர­ணி­யான பிறகு, தீவிர அர­சி­யலில் இறங்­கினார்.

எம்.எச்.எம்.அஷ்­ர­புடன் ஏற்­பட்ட நட்பு இலங்கை முஸ்லிம் அர­சி­யலில் பெரும் திருப்­பத்தை ஏற்­ப­டுத்தக் கார­ண­மா­னது. சேகு இஸ்­ஸதீன் அறி­விலும் பேச்­சிலும் தோற்­றத்­திலும் கூட திட­காத்­தி­ர­மா­னவர். விடு­தலை வேட்கை இயல்­பா­கவே அவ­ரி­ட­மி­ருந்­தது.
முஸ்­லிம்கள், பெருந்­தே­சியக் கட்­சி­க­ளு­டனோ அல்­லது தமிழ்க் கட்­சி­க­ளு­டனோ தொடர்ந்தும் இணைந்து பய­ணிக்க முடி­யாத நிலை 1980களில் ஏற்பட்டது. முஸ்­லிம்­க­ளுக்­கான தனித்­துவ அடை­யாள அர­சியல் இயக்கம் ஒன்று தேவை என்­பதை அஷ்­ரபும் சேகு உள்­ளிட்ட அவர்­க­ளது நண்­பர்­களும் உணர்ந்­தார்கள்.

முஸ்லிம் காங்­கிரஸ் உரு­வா­னது. சேகு தவி­சா­ள­ரானார். மு.கா.வின் யாப்­பு­களை வரைந்­த­திலும், கொள்­கை­களை வகுத்­த­திலும் சேகு முதன்­மை­யா­னவர். அவர் இல்­லா­தி­ருந்­தி­ருந்தால் மு.கா. என்ற இயக்­கமே உரு­வா­கி­யி­ருக்­காது என்று மர்ஹூம் அஷ்ரப் கூறி­யி­ருக்­கின்றார். அந்­த­ள­வுக்கு அவ­ரது பங்கு பிர­தா­ன­மாக இருந்­தது.

மு.கா.வின் தலை­வ­ராக அஷ்­ரபும், தவி­சா­ள­ராக சேகு இஸ்­ஸ­தீனும் கோலோச்­சிய பொற்­கா­ல­மது. அக்­கா­லத்­தில்தான் தனித்­துவ அடை­யாள அர­சியல் கிடு­கி­டு­வென கிழக்கில் வளர்ச்சி பெற்­றது.

அக்­க­ரைப்­பற்றைச் சேர்ந்த மூத்த அர­சியல் சிந்­த­னை­யா­ள­ரான மர்ஹூம் எம்.ஐ.எம் மொஹி­தீனின் கோட்­பா­டுகள் இதற்கு அடித்­த­ள­மாக அமைந்­தன. அந்தக் கோட்­பா­டு­களை அர­சி­யலை நோக்கி கொண்டு சென்­றவர் சேகு இஸ்­ஸதீன் என்றால், அவற்றை அர­சி­யல்­ம­யப்­ப­டுத்தி வெற்றி கண்­டவர் அஷ்ரப் என்று சொல்­லலாம்.

1987 இல் இலங்கை–இந்­திய ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்டு வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­பட்­டன. இந்­திய அமைதி காக்கும் படை இலங்­கைக்கு வந்­தது. தமிழ் ஆயுதக் குழுக்­களும் முஸ்­லிம்கள் மீது அழிச்­சாட்­டி­யங்­களை கட்டவிழ்த்து விட்­டன.
இதற்­கி­டையில் 1988 மாகாண சபை தேர்­த­லை­ய­டுத்து அமையப் பெற்ற இணைந்த வட­கி­ழக்கு மாகாண சபையில் மு.கா. அங்கம் வகித்­த­துடன், சேகு இஸ்­ஸதீன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார். இதன்­படி அவரே இணைந்த வட­கி­ழக்கின் முதலும் கடை­சி­யு­மான முத­ல­மைச்­ச­ராவார்.

பின்னர் தனி­யீழ பிர­க­டனம் மேற்­கொள்­ளப்­பட்­ட­துடன் சம­கா­லத்தில் ஆயு­தக்­கு­ழுக்கள் முன்­கை­யெ­டுத்­தன. சம­கா­லத்தில், இந்­திய இரா­ணு­வத்­தாலும், விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்ட ஆயுதக் குழுக்­க­ளாலும் முஸ்­லிம்கள் மீதான கொலைகள், கடத்தல், இனச் சுத்­தி­க­ரிப்பு ஆரம்­ப­மாகி விட்­டி­ருந்­தது. பின்னர் மாகாண சபை கலைந்­தது.

இந்த தரு­ணத்­தில்தான் முஸ்லிம் காங்­கிரஸ் முக்­கிய வகி­பா­க­மொன்றை எடுக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. அர­சியல் ரீதி­யாக மக்­களை சரி­யாக வழிப்­ப­டுத்­து­வது மட்­டு­மன்றி, ஆயுதக் குழுக்­க­ளி­ட­மி­ருந்து கிழக்கின் முஸ்­லிம்­களை காப்­பாற்ற வேண்­டிய நிர்ப்­பந்­தமும் உரு­வா­னது. இதனை அப்­போது மு.கா.வில் இருந்த அர­சியல் தலை­வர்கள் எல்­லோரும் மிகச் சரி­யாகச் செய்­தனர் என்று சொல்­லலாம்.

இக்­கா­லப்­ப­கு­தியில், எம்.எச்.எம்.அஷ்ரப், சேகு இஸ்­ஸதீன் போன்றோர் இலங்­கை-­ –இந்­திய ஒப்­பந்­தத்­தையும் தமிழ் ஆயுத குழுக்­க­ளையும் நேரி­டை­யா­கவே எதிர்த்­தனர். ‘இலங்­கை-­–இந்­திய ஒப்­பந்தம் முஸ்­லிம்­களின் முதுகில் குத்­தப்­பட்­ட ­அ­டி­மைச்­சா­ச­னம்’ ­என்று பகி­ரங்க­மாக பேசினர். வடக்கும் கிழக்கும் பிரிக்­கப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டை வெளிப்படை­யா­கவே வலி­யு­றுத்­தினர்.

மிக முக்­கி­ய­மாக, கிழக்கில் குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில் வாழும் முஸ்­லிம்­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவும், ஊர்­களை காவல் செய்­வ­தற்­கா­கவும் இளை­ஞர்­களை தயார்­ப­டுத்­தி­ய­துடன் அதற்­கான தைரி­யத்­தையும் வளத்­தையும் வழங்­கி­யதில் சேகு இஸ்­ஸ­தீ­னுக்கு பிர­தான பங்­குள்­ளது.

அதே­போன்று, இனப் பிரச்­சினை தீர்வில் முஸ்­லிம்­க­ளுக்­கான பங்கை வலி­யு­றுத்­தி­ய­துடன், முஸ்லிம் தேசியம், முஸ்லிம் சுய­நிர்­ணயம் பற்றி வலி­யு­றுத்தி வந்தார். அத­னா­லேயே சமூ­க­வி­டு­தலைப் போராட்­டத்தின் தானைத் தள­ப­தி­யாக ஒரு ஹீரோவைப் போலவே இளை­ஞர்கள் கரு­தினர்.

இந்தக் கட்­டத்­தில்தான், 1992 மே 16ஆம் திகதி முஸ்லிம் காங்­கி­ரஸில் இருந்து சேகு வெளி­யேற்­றப்­பட்டார். அதன் பிறகு முஸ்லிம் கட்­சியின் ஊடா­கவும் தேசிய ஐக்­கிய முன்­னணி ஊடா­கவும் அவர் அர­சி­யலை முன்­னெ­டுத்தார். 2000, 2001, 2004ஆம் ஆண்­டு­களில் தேசியப் பட்­டியல் மூலம் எம்.பி.யாக நிய­மிக்­கப்­பட்டு, ஊடக பிர­தி­ய­மைச்­ச­ரா­கவும், ஏற்­று­மதி அபி­வி­ருத்தி அமைச்­ச­ரவை அந்­தஸ்­தற்ற அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்தார்.
2010ஆம் ஆண்­டுக்குப் பிறகு பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் அவர் இல்லை. ஆனாலும் நோய்­வாய்ப்­படும் வரைக்கும் இயங்கிக் கொண்டே இருந்தார். முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் முஸ்லிம் தேசியம் சுயநிர்ணயம், முஸ்லிம் சமஷ்டி, இனப் பிரச்சினை தீர்வில் உப பங்கு பற்றியும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தவர்தான் மர்ஹூம் சேகு இஸ்ஸதீன்!

இவரது அரசியல் தொடர்பிலும் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அதனையெல்லாம் தாண்டி முஸ்லிம்களுக்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில் அவர் முக்கியமானவர். தானைத் தளபதியாக கருத்தியல் தலைவராக அவர் ஆற்றிய பங்கு வரலாறாக மாறியிருக்கின்றது.

எனவே, முஸ்லிம் தனித்துவ அரசியல் அழிந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் போன்றோரின் முஸ்லிம் சமூகம் பற்றிய கருத்தியல்களை, கோட்பாடுகளை தூசுதட்டி, நமக்கான அரசியலை மீளக் கட்டியெழுப்புவதே நமது கடமை.

சேகுவின் கனவுகள் மட்டுமன்றி, இந்த சமூகத்தின் அபிலாஷைகளுக்கு செய்கின்ற பெரும் உபகாரமாக அது அமையும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.