றிப்தி அலி
பாராளுமன்றத் தேர்தலுக்கு சரியாக இன்னும் ஒரு வாரம் மாத்திரமே உள்ளது. சுமார் 60க்கு மேற்பட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடமால் ஒதுங்கியுள்ளனர். இதனால் அடுத்த பாராளுமன்றத்தில் பல புதிய முகங்களையே காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் சிறுபான்மை இனப் பிரதிநிதித்துவமும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
விகிதாசார முறையில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக சிறுபான்மையினப் பிரதிநிதித்துவத்தினை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் காரணமாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக சிறுபான்மையினப் பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவத்தினைப் பெறுவது மிகக் கடினமாக உள்ளது. அதிலும் முஸ்லிம் சமூகம் சார்பான மக்கள் பிரதிநிதித்துவமும் சிரமமாக உள்ளது. இலங்கையிலுள்ள முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
ஏனைய இரண்டு பகுதியினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுக்கொடுப்பதற்காக முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமாகும்.
குருநாகல், கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாகக் காணப்பட்டாலும் கடந்த பல தசாப்தங்களாக குறித்த மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவமொன்றினை பெற முடியாதுள்ளது.
இதனால் குறித்த மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. கடந்த பாராளுமன்றத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த 12 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டனர்.
இதற்கமைய கொழும்பு – 02 (எஸ்.எம். மரைக்கார், ஏ.எச்.எம். பௌசி), புத்தளம் – 01 (அலி சப்ரி றஹீம்), கண்டி – 02 (ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ. ஹலீம்), கேகாலை – 01 (கபீர் ஹாசீம்), அனுராதபுரம் – 01 (இஷாக் ரஹ்மான்), தேசியப்பட்டியல் – 05 (அலி சப்ரி, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முஜீபுர் ரஹ்மான், மர்ஜான் பளீல், முஹம்மது முஸம்மில்) என்ற அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் காணப்பட்டது.
எனினும், குறித்த எண்ணிக்கை அடுத்த பாராளுமன்றத்தில் தக்கவைக்கப்படுமா என்ற கேள்விக்குறி காணப்படுகின்றது. இதற்கு பிரதான காரணம் முஸ்லிம் வாக்காளர்கள் தேசிய மக்கள் சக்தியினை நோக்கி நகர்வதாகும்.
கடந்த பாரளுமன்றத் தேர்தலில் அதிகமான முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். இதனால் கொழும்பு மாவட்டத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களையும், கண்டி மாவட்டத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இடங்களையும், அனுராதபுரம் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 1ஆம் இடத்தினையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பெற முடிந்தது.
இந்த விடயம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்கள் மத்தியில் பாரிய கருத்தாடலை ஏற்படுத்தியது. இவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு அளிக்கப்படும் முஸ்லிம் வாக்குகள் இந்த தேர்தலில் குறையுமாயின் மேற்படி இடங்களை பிடித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் கனவு கேள்விக்குறியாகிவிடும்.
இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு முஸ்லிம் மக்கள் வழங்கும் வாக்குகளின் ஊடாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவாவதற்கான வழிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
மாறாக முஸ்லிம் சமூகம் வழங்கிய வாக்குகளின் ஊடாக தேசிய மக்கள் சக்தியின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படாத பட்சத்தில் செலுத்தப்பட்ட குறித்த வாக்குகளுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லாது போய்விடும்.
ஏனென்றால், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்திக்கான வாக்கு வங்கி பாரியளவில் அதிகரித்துள்ளது. எனினும் குறித்த மாவட்டங்களில் இக்கட்சிகளின் ஊடாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை பெறுவது மிகக் கடினம் என்ற கருத்தாடல் மக்கள் மத்தியில் காணப்படுன்றது. முஸ்லிம் சமூகத்தில் செல்வாக்குள்ள மற்றும் மிக்க பிரபல்யமான வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
எனினும், எமது கட்சியுடன் தொடர்ந்து பயணிப்போரையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம் என்று அக்கட்சியினால் முன்வைக்கும் காரணத்தினை ஒருபோதும் நிராகரிக்க முடியாது.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு முதல் அனுராதபுர மாவட்டத்தில் தக்கவைக்கப்பட்டு வந்த முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்தும் இத்தேர்தலில் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் பல கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாகும்.
இது போன்று மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக புத்தளம் மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தக்கவைக்க வேண்டியுள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டவர் “தங்க மகனாக” மாறியமையினால் புத்தளம் மாவட்டத்திற்கு பாரிய அவமானம் ஏற்பட்டது. இதனால் “தங்க மகன்” போன்ற ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பாமல் சமூகத்திற்கு பணியாற்றக்கூடிய சிறந்த ஒருவரை பாராளுமன்றம் அனுப்ப புத்தளம் மாவட்ட மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் தேசிய மக்கள் சக்தியினால் உறுதிப்படுத்த முடியும். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அஞ்சான் உம்மா செயற்பட்டார்.
இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் பாராளுமன்ற உறுப்பினரான இவர் தேசிய மக்கள் சக்தியிலுள்ள ஒரேயொரு அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராவார்.
இவரைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்திலிருந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இதுவரை தெரிவுசெய்யப்படவில்லை. பல கட்சிகள் சார்பில் பல பாராளுமன்றத் தேர்தல்களில் பல முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் அவர்களினால் வெற்றி பெற முடியவில்லை.
இவ்வாறான நிலையில் இந்த தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் முனீர் முழப்பர் போட்டியிடுகின்றார். சிறந்த சமூக செயற்பட்டாளரான இவர், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட்டால் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தியின் ஊடாக முனீர் முழப்பரை பாராளுமன்றம் அனுப்ப முடியும் என்பதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை.
இது போன்றே குருநாகல் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் கடந்த இரண்டு தசாப்தங்களாக எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவுசெய்யப்படவில்லை.
குறித்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் மக்கள் மிகவும் சிந்தித்து முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை பெறுவதற்கான வழிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் பல முஸ்லிம் வேட்பாளர்கள் இந்த முறை களமிறங்கியுள்ளமை முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தவறிழைத்தமையினை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இதேவேளை, 2004ஆம் ஆண்டு முதல் களுத்துறை மாவட்டம் இழந்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு இம்முறை கிடைத்துள்ளது. இதற்கு பிரதான காரணம் களுத்துறை மாவட்டத்திற்கான ஆசனம் ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளமையாகும்.
அத்துடன், கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகளான ராஜித சேனாரத்ன மற்றும் காலஞ்சென்ற குமார் வெல்கம ஆகியோர் இந்த முறை அக்கட்சியில் போட்டியிடவில்லை.
இதனால், களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்ற இப்திகார் ஜெமீலின் ஊடாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை தக்கவைக்க முடியும். இதற்காக வேண்டி அக்கட்சியின் தவிசாளரான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் பிரச்சாரத்தில் இறங்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் அரூஸும், தனது தேர்தல் பிரச்சார வியூகங்களை நன்கு திட்டமிட்டு செயற்படுத்தினால் அவரும் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். ஏனெனில், தேசிய மக்கள் சக்திக்கான களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகள் அதிகரித்துள்ளமையாகும். இதன் ஊடாக களுத்துறை மாவட்டம் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற முடியும் என்பது குறிப்படத்தக்கதாகும். விகிதாசார அடிப்படையில் இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் நற்பிட்டிமுனைக் கிராமம் மூன்று கட்சிகள் சார்பில் மூன்று உறுப்பினர்களைப் பெற்றமையினை களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு சிறந்த உதாரணமாக முன்வைக்கின்றேன்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது. அடுத்த பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம், சட்டத் திருத்தம் போன்ற பல விடயங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்காக முஸ்லிம் சமூகம் சார்பில் குரல்கொடுக்கக்கூடியவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட வேண்டியுள்ளது. கடந்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு முஸ்லிம் சமூகத்திற்காக கடுமையாக குரல் கொடுத்த ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்றோர் அடுத்த பாராளுமன்றத்திற்கும் கட்டாயம் தெரிவுசெய்யப்பட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் குறித்த மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் மக்கள் செயற்பட வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் தேவையாக மாறியுள்ளது.- Vidivelli