தனியார் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை
அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவிப்பு
(எம்.வை.எம்.சியாம்)
முஸ்லிம் விவாகரத்து சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்போவதில்லை.அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவுமில்லை. எனினும் நடைமுறையில் உள்ள சமயம் சார்ந்த சட்ட மூலங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமானால் சம்பந்தப்பட்ட மதத்தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து முஸ்லிம் விவாகரத்து சட்ட மூலம் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம் விவாகரத்து சட்டமூலம் தொடர்பில் பல்வேறு அமைப்புகள் வெவ்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அதனை கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அந்த கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். எனினும் அரசாங்கம் என்ற வகையில் நாம் முஸ்லிம் விவாகரத்து சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. எடுக்கப் போவதுமில்லை.
அதேபோன்று தற்போது நடைமுறையில் உள்ள சட்ட மூலங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமானால் சம்பந்தப்பட்ட மதத்தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
பௌத்தம் உள்ளிட்ட ஏனைய மதங்கள் தொடர்பான திருத்தங்களும் அவ்வாறே மேற்கொள்ளப்படும். விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இதனை நான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். தற்போது உள்ள முஸ்லிம் விவாகரத்து சட்டமூலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திருத்தங்களை கொண்டு வராது என்றார்.- Vidivelli