கருத்தடை செய்த குற்றச்சாட்டிலிருந்து வைத்தியர் ஷாபி விடுதலை

குடும்பத்தினர் உட்பட அனைவரது கடவுச் சீட்டுக்கள், காணி உறுதிகள் என அனைத்தையும் மீள கையளிக்க குருணாகல் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

0 16

(எப்.அய்னா)
குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாக குற்றம் சுமத்தி கைது செய்­யப்­பட்ட‌ குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனை, அவ்­வ­ழக்­கி­லி­ருந்து முற்­றாக விடு­தலை செய்து குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

வைத்­தியர் ஷாபிக்கு எதி­ரான பி 1398/19 எனும் வழக்கை முன் கொண்டு செல்ல போதிய சான்­றுகள் இன்­மையால், அவ்­வ­ழக்கை இனி மேல் முன் கொண்டு செல்லப் போவ­தில்லை என சட்ட மா அதிபர் எழுத்து மூலம் குரு­ணாகல் நீதிவான் பந்­துல குண­ரத்­ன­வுக்கு அறி­வித்­துள்ள நிலையில், அவ்­வ­ழக்கை முடி­வு­றுத்தி நீதி­மன்றம் இந்த உத்­த­ரவை பிறப்­பித்­தது.

கடந்த 5 வரு­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களின் கோவையை, சி.ஐ.டி. யினர் சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்­பி­யி­ருந்த நிலையில், அதனை ஆராய்ந்து, குற்­ற­வியல் வழக்குத் தொடுக்க போது­மான ஆதா­ரங்கள் இல்லை என்­பதை மையப்­ப­டுத்தி, சட்ட மா அதிபர் தனது நிலைப்­பாட்டை எழுத்து மூலம் நீதி­மன்­றுக்கும், விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கும் அறி­வித்­துள்ளார்.

நேற்று இந்த விவ­கார வழக்கு குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்றின் நீதிவான் பந்­துல குண­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது சி.ஐ.டி.யின் இந்த விவ­கா­ரத்தை தற்­போது கையாளும் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மொஹான் விஜேகோன் ஆஜ­ரான நிலையில், வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்­காக சட்­டத்­த­ரணி சமீல் மொஹம்மட் உள்­ளிட்ட குழு­வி­ன­ருடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன ஆஜ­ரானார்.

இந்த நிலையில், வழக்கின் ஆரம்­பத்­தி­லேயே பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மொஹான் விஜேகோன் சட்ட மா அதி­பரின் நிலைப்­பாட்டை மன்றில் அறி­வித்தார்.

இதன்­போது நீதிவான் பந்­துல குண­வர்­தன திறந்த மன்றில்,’ சட்ட மா அதிபர் இந்த வழக்கை முன் கொண்டு செல்­வ­தில்லை என தீர்­மா­னித்­துள்ளார். அதனை எழுத்து மூலம் இம்­மன்­றுக்கும் அறி­வித்­துள்ளார். எனவே சந்­தேக நபரை இவ்­வ­ழக்கில் இருந்து முற்­றாக விடு­தலை செய்து இவ்­வ­ழக்கை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­கின்றேன்.’ என அறி­வித்தார்.

இதன்­போது வைத்­தியர் ஷாபிக்­காக மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி, ‘ வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக சான்­றுகள் இல்லை எனக் கூறி அவரை விடு­விக்க நாம் இம்­மன்றில் கோரிக்கை வைத்தோம். ஆனால் நீதி­மன்றம் அவரை விடு­விக்க மறுத்­தது. ஆனால் சட்ட மா அதிபர் இப்­போது வழக்கை முன் கொண்டு செல்­வ­தில்லை என அறி­வித்­துள்ளார். நீதி­மன்றம் செய்­தி­ருக்க வேண்­டிய வேலையை, சட்ட மா அதிபர் தனது நிலைப்­பாடு ஊடாக அறி­விக்கும் வரை காத்­தி­ருந்­துள்­ளமை கவ­லைக்­கு­ரி­யது.’ என குறிப்­பிட்டார்.

இதன்­போது நீதிவான் பந்­துல குண­ரத்ன, ‘ இவ்­வ­ழக்கு நான் வரு­வ­தற்கு முன்­பி­ருந்தே விசா­ர­ணையில் உள்­ளது. சட்ட மா அதிபர் தனது நிலைப்­பாட்டை கூறும் போது காரணம் சொல்ல வேண்­டிய அவ­சியம் இல்லை. இக்­க­டி­தத்­திலும் காரணம் இல்லை. சட்ட மா அதிபர் வழக்கை முன் கொண்டு செல்­ல­வில்லை என்று சொன்­னதும் அதற்கு மேல் வழக்கை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது. சாட்­சிகள் உள்­ள­னவா, இல்­லையா என்­ப­தெல்லாம் அதற்கு பின்னர் தேவை­யற்­றது.’ என குறிப்­பிட்டார்.

இதன்­போது ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்­ன­வுக்கும், நீதி­வா­னுக்கும் இடையே சற்று கார­சா­ர­மான வார்த்தை பிர­யோ­கங்கள் பரி­மாற்­றப்­பட்­டன.

இந்த நிலையில், விஷேட அறிக்கை ஒன்­றினை முன் வைத்த பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மொஹான் விஜேகோன், வைத்­தியர் ஷாபியை கைது செய்த போது, நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய அவ­ரது கடவுச் சீட்டு முடக்­கப்­பட்ட நிலையில், அவ­ரது கடவுச் சீட்­டையும், அவ­ரது பிள்­ளைகள் உள்­ளிட்ட குடும்­பத்­தாரின் கடவுச் சீட்­டுக்­க­ளையும், பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்ட அவ­ருக்கு சொந்­த­மான காணி உறு­தி­க­ளையும் விடு­விக்க உத்­த­ரவு கோரினார். அதன்­படி அவற்றை விடு­வித்து, வைத்­தியர் ஷாபி­யிடம் அந்த இவ்­வ­ழக்­கோடு தொடர்­பு­டைய அனைத்து வழக்குப் பொருட்­க­லையும் கைய­ளிக்­கு­மாறு நீதிவான் சி.ஐ.டி.யின­ருக்கு அறி­வித்தார்.

அதன்­படி நட்ட ஈடு தொடர்­பி­லான வழக்கை தாக்கல் செய்ய, நேற்­றைய வழக்கின் குறிப்­புக்­களை வைத்­தியர் ஷாபி தரப்பு கோரிய நிலையில், அவற்றை வழங்­கவும் நீதிவான் உத்­த­ர­விட்டு வழக்கை முடி­வு­றுத்­தினார்.
கடந்த 2019 மே மாதம் 6 ஆம் திகதி வைத்­தியர் ஷாபியால் நடாத்­தப்­பட்டு வந்த வைத்­திய நிலையம் குரு­ணாகல் பொலிஸ் நிலைய அதி­கா­ரி­களால், அப்­போ­தைய குரு­ணாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்­சிரி ஜய­லத்தின் உத்­த­ர­வுக்கு அமைய பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்­சிரி ஜய­லத்தின் உள­வாளி எனக் கூற­ப்படும் நபர் கொடுத்­த­தாக கூற­ப்படும் தக­வல்­களை மையப்­ப­டுத்தி இந்த சோதனை நடாத்­தப்­பட்­ட­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தரப்பில் கூறப்­ப‌­டு­கின்­றது. குறிப்­பாக வரு­மா­னத்தை மீறிய சொத்து, மற்றும் பயங்­க­ர­வாத , அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­க­ளு­ட­னான தொடர்பு மற்றும் குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லைக்குள் சிலரால் பேசப்­பட்ட வதந்­தி­யான கருத்­தடை விட­யத்தை மையப்­ப‌­டுத்தி இந்த சோத­னை­களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்­சிரி ஜய­லத்தின் உத்­த­ரவில் பொலிஸார் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். ஆனால், அதன்­போது சந்­தே­கத்­துக்­கி­ட­மான எதுவும் அங்கு கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

அதி­லி­ருந்து 6 நட்­களின் பின்னர் கடந்த 2019 மே 12 ஆம் திகதி, ஷாபி வைத்­தி­யரை குறி­வைத்த இரண்­டா­வது நகர்வு எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் சிரேஷ்ட வைத்­தியர் ஷாபி ஷிஹாப்தீன் தௌஹீத் ஜமாஅத் அமைப்­போடு தொடர்பு வைத்­தி­ருப்­ப­தாக தகவல் கிடைத்­தி­ருக்­கி­றது என்­பதைச் சுட்­டிக்­காட்டி அப்­போ­தைய குரு­நாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்­சிரி ஜயலத் 2019 மே 12 ஆம் திகதி அப்­போ­தைய குரு­நாகல் பொலிஸ் அத்­தி­யட்­சகர் மஹிந்த திஸா­நா­யக்­க­வுக்கு டீஐஜி/ கேயூ/ ஆர்­ஐயூ/ 134/19 இலக்கம் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பி விசா­ர­ணை­க­ளுக்கு உத்­தரவிட்­டி­ருந்தார். அந்த கடிதம் குரு­னாகல் பொலிஸ் நிலை­யத்தின் முன்னாள் குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­லா­லுக்கு, பொலிஸ் அத்­தி­யட்சர் ஊடாக அனுப்­பட்ட நிலை­யி­லேயே விசா­ர­ணைகள் ஆரம்­பித்­துள்­ளன.

இத­னை­ய­டுத்து கடந்த 2019 மே 22 ஆம் திகதி குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்­றுக்கு சென்­றுள்ள , பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­பலால், தெளஹீத் ஜமாஅத்­துடன் தொடர்­பு­டைய வைத்­தியர் ஒருவர் தொடர்பில் விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பீ 1398/19 எனும் முதல் விசா­ரணை அறிக்­கையை தாக்கல் செய்­துள்ளார். எனினும் அதில் அந்த வைத்­தியர் யார் என குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந் நிலை­யி­லேயே 2019 மே 23 ஆம் திகதி திவ­யின பத்­தி­ரி­கையில், ‘தௌஹீத் ஜமாஅத் டாக்டர், சிங்­கள தாய்மார் 4000 பேருக்கு கர்ப்­பத்­தடை செய்­துள்ளார். சாட்­சி­க­ளோடு அம்­ப­ல­மா­கி­யுள்­ளது’ என்று செய்தி வெளி­யி­டப்­பட்­டது. ஆனால் அந்த செய்­தி­யிலும் டாக்­டரின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை

எனினும் இவ்­வாறு கருத் தடை விவ­காரம் ஒன்று தொடர்பில் நாட்டில் எங்கும் எந்த வைத்­தி­ய­ருக்கும் எதி­ரா­கவும் அப்­போதும் விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வில்லை என அப்­போ­தைய பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர ஊடாக அந்த திணைக்­களம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது.

இந்­நி­லையில் 2019 மே 24 ஆம் திகதி குரு­நாகல் பகு­திக்குப் பொறுப்­பான அப்­போ­தைய பொலிஸ் அத்­தி­யட்­சகர் மஹிந்த திஸா­நா­யக்­கவும் , குரு­நாகல் பொலிஸ் நிலையப் அப்­போ­தைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சேனா­ரத்ன, குற்­ற­வியல் பிரிவு அப்­போ­தைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­பலால் உள்­ளிட்­டோ­ருடன் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் விவ­காரம் தொடர்பில் விஷேட கூட்டம் நடந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து வைத்­தியர் ஷாபியைக் கைது செய்ய பொலிஸ் அத்­தி­யட்சர், பொலிஸ் பொறுப்­ப­தி­காரி ஊடாக குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரிக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இந்த பணிப்­பு­ரைக்­க­மை­யவே பொலிஸ் பரி­சோ­தகர், புஷ்­பலால் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வொன்று 2019 மே 24 ஆம் திகதி இரவு 10 மணிக்கு டாக்டர் ஷாபியை கைது செய்­தது.

குரு­ணாகல் பொலிஸ் அத்­தி­யட்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் ஆரா­யப்பட்­டுள்ள மூன்று விடயங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு இந்த கைது நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. முத­லா­வ­தாக, தௌஹீத் ஜமாஅத் அமைப்­பி­ட­மி­ருந்து பணம் பெற்று, அவ்­வ­மைப்பின் நோக்­கத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக சிசே­ரியன் அறுவைச் சிகிச்சை மூலம், சிங்­களத் தாய்­மார்­களை கருத்தடை செய்­தமை, இரண்­டா­வது தவ­றான வழி­களில் பெற்ற பணத்­தைக்­கொண்டு சொத்­துக்கள் சேர்த்­தமை, மூன்­றா­வ­தாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாட்டில் இவர் கைது செய்­யப்­ப­டாது போனால் நாட்டை விட்டு அவர் தப்­பிக்க வாய்ப்­பி­ருப்­ப­தா­கவும் இவ­ருக்கும் இவ­ரது வீடு­க­ளுக்கும் சேதம் விளை­விக்­கப்­ப­டலாம் என்­ப­தாகும்.

எனினும் அதற்கு முன்­ப­தாக 2019 மே 23 ஆம் திக­தியே வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக வெளி­நாட்டுப் பயணத் தடையைப் பெற குரு­ணாகல் பொலிஸார் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான பின்­ன­ணியி­லேயே மே 24 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­கர­வாத தடை சட்­டத்தின் கீழ் வைத்­தியர் ஷாபி குரு­னாகல் பொலி­ஸாரால் கைது செய்­யப்பட்­டி­ருந்தார்.

இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடுப்புச் சட்ட (தற்­கா­லிக விதி­களின்) 6(1) ஷரத்தின் கீழ் 72 மணித்­தி­யா­லங்கள் தடுத்து வைப்­ப­தற்கு அப்­போ­தைய குரு­நாகல் பொலிஸ் அத்­தி­யட்­சகர் மஹிந்த திஸா­நா­யக்க, குரு­நாகல் பொலி­ஸா­ருக்கு அதி­கா­ர­ம­ளித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்தே 2019 மே 25 ஆம் திகதி அவரை சி.ஐ.டி.யிடம் ஒப்­ப­டைக்­கும்­படி அப்­போ­தைய பதில் பொலிஸ்மா அதிபர் குரு­னாகல் பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுத்­தி­ருந்தார். அது முதல் சில மாதங்கள் வைத்­தியர் ஷாபி சி.ஐ.டி. தடுப்புக் காவலில் இருந்தார். பின்னர் அவர் கடந்த 2019 ஜூலை 12 ஆம் திகதி குரு­ணகல் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார். அதன் பின் அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்­டி­ருந்தார். அதன் பின்­னரே அவ­ருக்கு பிணை­ய­ளிக்­கப்­பட்­டது.

வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்பட்ட போதும், பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவ­ருக்கு எதி­ராக எந்த சான்­று­களும் இல்லை எனவும் அவ­ருக்கு எதி­ராக கறுப்பு பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் விட­யங்கள் முன் வைக்­கப்­பட்ட போதும் அதற்­கான சான்­று­களும் மன்றில் முன்­னி­லையில் இல்லை எனவும் கூறி கடந்த 2022 மே 17 ஆம் திகதி அவ்­விரு குற்­றச்­சாட்­டுக்­க­லையும் நீதி­மன்றம் நீக்கி, தண்­டனை சட்டக் கோவையின் கீழ் மட்டும் குற்­றச்­சாட்­டுக்­களை முன் கொண்டு சென்­றது.

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் வைத்­தி­ய­ராக இருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீது, கருத்­தடை விவ­கார முறைப்­பாட்டை முன்­வைத்த இரு பெண்­க­ளுக்கு, குளி­யா­பிட்­டிய போதனா வைத்­தி­ய­சா­லை­யிலும் மற்­றொரு வைத்­தி­ய­சா­லை­யிலும் முன்­னெ­டுக்­கப்­பட்ட எச்.எஸ்.ஜி. பரி­சோ­த­னை­களில், அவ­ர்களது பெலோ­பியன் குழாயில் எந்த தடை­களும், தடங்­கல்­களும் இல்லை என உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கொழும்பில் மற்­றொரு பெண்­ணுக்கு முன்­னெ­டுக்­கப்­பட்ட லெப­ரொஸ்­கொபிக்ஸ் பரி­சோ­த­னை­யிலும் அவ­ரது பெலோ­பியன் குழாயில் எந்த தடை­களும், தடங்­கல்­களும் இல்லை என உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் சி.ஐ.டி.க்கு முறைப்­பா­ட­ளித்த 143 தாய்­மாரில் 130 இற்கும் அதி­க­மானோர் கர்ப்பம் தரித்து குழந்த்­தை­க­லையும் பிர­ச­வித்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே (மரணமடைந்து விட்டார்), சி.ஐ.டி.யின் அப்போதைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ்.திசேரா (ஷாபி விவகாரத்தை விசாரணை செய்த குழுவை மேற்பார்வை செய்தவர்) ஆகியோர், அத்துரலிய இரத்தின தேரர் மற்றும் குருநாகல் வைத்தியசாலையின் அப்போதைய பிரதிப் பணிப்பாளர் கெந்த்தன்கமுவ ஆகியோர் இந்த விவகார விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாக‌ முறைப்பாடு செய்திருந்தனர்.

அத்துடன், அந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியன, குருணாகல் முன்னாள் நீதவான் சம்பத் ஹேவாவத்துக்கு எதிராக அவரது பக்கச் சார்பு நிலைமை தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தன.

இவ்வாறான பின்னணியிலேயே அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து, சட்ட மா அதிபர் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கை முன் கொண்டு செல்வதில்லை என எழுத்து மூலம் குருணாகல் நீதிவானுக்கு அறிவித்துள்ள நிலையில், அவ்வழக்கில் இருந்து வைத்தியர் ஷாபி விடுவிக்கப்பட்டு, வழக்கும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.