பேராசிரியர் எம்.வை.எம்.சித்தீக்
System Change என்றால் என்ன?
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்கட்கு வாக்களிக்காவிட்டால் முஸ்லிம்களின் பாராளுமன்றப்பிரநிதித்துவம் அவர்களது சனத்தொகை விகிதாசாரத்தைவிட மிகவும் குறைவடையக்கூடிய பெரும் ஆபத்து பற்றிய கருத்துக்களை சமூகவலைத்தளங்களிலும் வேறு தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களிலும் காணக்கூடியதாக/கேட்கக்கூடியதாகவுள்ளது. அது சம்பந்தமானதே இக்குறிப்பாகும்.
இன அடையாளமற்று பேரினவாதக்கட்சிகள் என்று பலராலும் வர்ணிக்கப்படுகின்றவற்றிற்கு அடிமையாக புதைந்து கிடந்த முஸ்லிம் சமூகத்தை மேலெழுப்பி ஒர் இன அடையாளத்தை நிலை நிறுத்த எடுக்கப்பட்ட ஒரு முற்சியாக SLMC யின் 1986ம் ஆண்டைய, அரசியற்கட்சிப்பிரகடனத்தைக் குறிப்பிடலாம். முஸ்லிம்கள் பற்றிப் பேசுவதானால் SLMC யுடன்தான் பேச வேண்டும் என்ற நிலையினை அது பின்னொரு காலத்தில் உருவாக்கியது. ஒரு தனிமனிதனைப்பற்றிப் பேசும்போது அவரின் முகம் எம்முன் எவ்வாறு தோற்றமளிக்கின்றதோ, அதே போல முஸ்லிம்களைப்பற்றி மொத்தமாக அவர்களின் அரசியல், பொருளாதார, சமய கலாச்சார விடயங்களைப்பற்றிப்பேச நினைக்கும் போதெல்லாம் மற்றைய தரப்பினருக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் நினைவுக்கு வந்தது.
1994ல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் SLMC யில் போட்டியிட்ட மாவட்டங்களில் ஏழு ஆசனங்களை வென்று முஸ்லிம்களின் தனித்துவத்தை அது உறுதிப்படுத்தியது. 1989ம் ஆண்டைய பாராளுமன்றத்தேர்தலில் நான்கு ஆசனங்களை மட்டுமே இக்கட்சி வென்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் பின் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல்களில் தனித்துப்போட்டியிட்டு ஏழு ஆசனங்களை வெல்லக்கூடிய பலத்தை அது இழந்தது என்று கூறலாம்.
முஸ்லிம்களின் அரசியல், மற்றும் உரிமைகள் பற்றிப்பேசுவதென்றால் SLMC யுடன்தான் பேச வேண்டும் என்ற நிலையினை அது இன்று இழந்து காணப்படுகின்றது. இன்று SLMC துண்டு துண்டாகப்பிளவுபட்டு முஸ்லிம் என்ற நாமம் கொண்ட பல கட்சிகள் உருவாகியுள்ளன. இக்கட்சிகளில் இருந்து பாராளுமன்றம் சென்ற பல உறுப்பினர்கள் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய அளவிற்கு எதையும் இதுவரை முஸ்லிம் சமூகத்திற்காகச் சாதித்தது கிடையாது. மாறாக அவர்களின் சில செயற்பாடுகள் முஸ்லிம்கட்கு மிகவும் பாதகமாகவே அமைந்துள்ளன. இவர்கள் ஆதரவு வழங்கிய சில இனவாதச்சக்திகள் முஸ்லிம்களுக்கு பல பாதகமான செயல்களில் வெளிப்படையாகவே ஈடுபட்டிருந்தபோதும் இவர்களால் அவற்றைத்தடுக்க முடியவில்லை. அவர்களின் குறிகள் எல்லாம் தமக்கு தனிப்பட்ட இலாபம் தரக்கூடிய பக்கம் சேர்ந்து நிற்பதாகவே தென்பட்டது. இவர்களின் இயலாமையினைச்சுட்டிக்காட்ட ஒரு சிறு உதாரணம் சாய்ந்தமருது பிரதேச சபை பற்றிய அவ்வூர் மக்களின் போராட்டமாகும். அப்போதய பிரதம மந்திரி உட்பட தற்போது முஸ்லிம் பெயர் கொண்ட எல்லாக்கட்சித்தலைவர்களாலும் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயம் இதுவாகும். இவ்வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பின் பிரதேச சபைகளை உருவாக்குவதற்கான அதிகாரத்துடனான விடய அமைச்சர்களாக இரண்டு முஸ்லிம்கள் கடமையாற்றியிருந்தும் அவர்களால் அதனைப்பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இவர்களின் கையாலாகாத்தன்மைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இவர்களுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் கிடைத்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கு அதனால் எதிர் பார்த்த அளவுக்கு பிரயோசனம் இல்லை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. மேற்குறிப்பிட்ட அமைச்சர்களில் ஒருவர் இந்த சாய்ந்தமருது அமைந்துள்ள திகாமடுல்ல தேர்தல் தொகுதியிலேயே வாழ்கின்றார். இவர் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் இன்னும் பல நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுடன் இந்த சாய்ந்தமருது மக்களின் வாக்கு வேட்டையில் இன்று ஈடுபட்டுள்ளார்.
இன்னும் ஓர் உதாரணம் உயிர்த்த ஞாயிறு தொடர்பாக முஸ்லிம்கட்சித்தலைவர்களில் ஒரு சிலர் பாராளுமன்றத்தில் பேசியிருந்தும், பத்திரிகையாளர் மாநாடுகள் சிலவற்றை நடாத்தியிருந்தும் அதன் பின்னணி இன்னும் மர்மமாகவே கடந்த சுமார் ஐந்து வருட காலங்களாக இருந்து கொண்டிருக்கின்றன.
இருந்தும் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பற்றிய, முஸ்லிம் உரிமைகள் பற்றிய, முஸ்லிம் கட்சிகள் அழிந்து போகக்கூடிய ஆபத்து பற்றிய கோசங்கள் மட்டும் பிளவுபட்ட முஸ்லிம் பெயர் கொண்ட கட்சித் ‘தொண்டர்களிடம்’ இருந்து இந்த தேர்தல் பிரச்சார காலத்தில் அணல் விட்டுப்பறந்து கொண்டிருக்கின்றன. இதுவரை குறிப்பிட்டுச்சொல்லுமளவிற்கு எதையும் சாதிக்காத இவர்கள் எதிர்காலத்திலும் எதையும் சாதிக்கப்போவதில்லை. எனவே இவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் அளிக்கப்படும் வாக்குகள் பயனற்ற வாக்குகளாகக்கூடும் என ஆயிரக்கணக்கான ஆரம்ப கால SLMC தொண்டர்கள் இன்று நினைக்கின்றனர்.
SLMC இன்று துண்டு துண்டாக அரியப்பட்டு அசிங்கப்பட்டு பெரும் ஆதரவற்று குற்றுயிருடன் காணப்படுகின்றது. மிகப் பலருக்கும் அன்று தேவைப்பட்ட அந்த முகம் இன்று அந்தளவிற்கு தேவையற்றதாகக் காணப்படுகின்றது. காரணம் எல்லோருக்கும் வெளிப்படையானது. கட்சிக்குள் ஏற்பட்ட போட்டி, பொறாமை, சுய நலம், பதவி ஆசை, பிளவு ஆகியன முக்கிய காரணங்களாகும். பழைய நிலைக்கு SLMC எதிர்காலத்தில் மீண்டெழுவது மிகச்சாத்தியமற்றதுபோலவே தோன்றுகின்றது!. பல்லாயிரக்கணக்கான ஆரம்ப கால SLMC போராளிகள் மட்டுமல்ல, பின்னர் அக்கட்சிக்காக உழைத்த கணிசமான எண்ணிக்கையினையுடய இளைஞர்களும் விரக்தியடைந்து காணப்படுகின்றனர். முஸ்லிம்களின் தனித்துவத்தைக்காக்கப்புறப்பட்ட இக்கட்சி ஏற்கனவே முஸ்லிம்கள்மீது பேரின சமூகத்தவர்கள் வைத்திருந்த மதிப்பைக்கூட அழித்துக்கெண்டிருப்பதாக பலர் இன்று கருதுகின்றனர். முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிகளில் இருந்து பாராளுமன்றத்திற்குச்சென்ற பலர் கடந்த காலங்களில் நேரத்திற்கு நேரம் தாம் சார்ந்து நின்ற கட்சி நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதும், இவர்களது செயற்றிறமையின்மையும் இதற்குக்காரணங்களாகக்குறிப்பிடப்படலாம்.
இதற்கு மேல், அடிமேல் அடி விழுந்தது போல் ஏனைய ‘பேரினவாதக்கட்சிகளில்’ இருந்து தெற்கு, மேற்கு மத்திய மாகாணங்களில் முஸ்லிம்கள் கணிசமான அளவு பாராளுமன்றத்திற்குச்செல்வதும் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் சாத்தியமற்றது போலவே தெரிகின்றது. இந்த சந்தேகத்திற்கு காரணம் இம்மாகாணங்களில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற பல தேர்தல் தெகுதிகளில் சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற SJB போன்ற கட்சிகள் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் கணிசமான முஸ்லிம் வாக்குகளைப்பெறாமையாகும். உதாரணமாக, SLMC தலைவர் போட்டியிடுகின்ற கண்டி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், அம்மாவட்டதில் உள்ள முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற சில தேர்தல் தொகுதிகளில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், SJB பெரும்பான்மை வாக்குகளைப்பெறவில்லை. இத்தொகுதிகளுள் ஹரிஸ்பத்துவவும் அடங்கும். இத்தேர்தல் தொகுதி காலம் சென்ற ACS ஹமீதின் அசைக்க முடியாத செல்வாக்குள்ள தெகுதியாக ஒரு காலத்தில் இருந்தது என்பது நோக்கத்தக்கது. மேலும் கண்டி மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளை அநுரவே பெற்றார். இதே போல் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் கொழும்பு மாவட்டத்திலும் அநுர பெற்றவாக்குகள் சஜித் பெற்றதைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். சஜித் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்றது ஆக ஏழு தேர்தல் மாவட்டங்களில் மட்டுமே. அவை யாவற்றிலும் கணிசமான தமிழ்வாக்களர்கள் உள்ளனர் என்பது அவதானிக்கத்தக்கதாகும். இவர்களின் நிலைப்பாடு எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையக்காணப்படுகின்றன. மேலும் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சஜித் இற்கு வாக்களித்த பல்லாயிரக்கணக்கான SLMC வாக்காளர்களில் கணிசமானவர்கள் (swing voters) பொதுத்தேர்தலில் NPP இற்கு வாக்களிப்பர் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இதற்குக்காரணம், முன்னர் கூறியது போல், என்றுமில்லாதவாறு முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு மேல் முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருந்தும் இவர்களால் குறிப்பிட்டுச்சொல்லுமளவிற்கு எதையும் சாதிக்க முடியவில்லை என்பதாகும். முஸ்லிம்கட்குப் பாதகமான பல சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றிற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு சுமார் நாற்பது வருடங்களாகியும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மிகப்பல அடிப்படை பொருளாதார, அரசியல், சமூக கலாச்சாரப்பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது ஒரு பக்கம் இருக்க, அவற்றுள் சிலவற்றிற்கு முஸ்லிம் காங்கிரஸே காரணமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எனவேதான், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் முஸ்லிம்கட்கென தனிக்கட்சிகள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிற்கு இன்று வந்துள்ளனர். இது அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் இருந்து மிகத் தெளிவாகத்தெரிகின்றது. இதை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்திருப்பது இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு எதிர்வரும் பொதுத்தேர்தலில் மிகக்கணிசமான முஸ்லிம் இளைஞர்கள் அபேட்சகர்களாக NPP யில் போட்டியிடுவதாகும். ஊழலுக்கு எதிராக மிகவும் தைரியத்துடன் பல தசாப்தங்களாகப் போராடிவரும், ஒப்பீட்டளவில் பேரினவாத உணர்வு மிகக்குறைவான NPP யிற்கு ஒரு சந்தர்ப்பத்தைக்கொடுத்துப்பார்ப்போம் என்று இவர்கள் நினைத்து முன்வந்திருக்கின்றனர். இவர்களில் பலர் நாட்டின் பொருளாதார, அரசியல் நலன் கருதி, இன ஐக்கியம் கருதி முன் வந்திருப்பதுபோலும் தெரிகின்றது.
முஸ்லிம் பாராமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை முக்கியம் அல்ல; அவர்களின் பிரச்சினைகளைத்தீர்க்கக்கூடிய ஒரு சில பாரளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைப்பிரதிநிதித்துவப்படுத்தப்போதுமானது என இவர்கள் நினைக்கின்றனர். இந்த முடிவுக்கான பின்னணி, கடந்த பாராளுமன்றத்தில் இருந்த சுமார் இருபத்திரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் எவரும் இந்த முஸ்லிம் இளைஞர்கள் எதிர்பார்த்த அளவு எதையும் சாதிக்காமைதான்.
காலம் சென்ற SLMC தலைவர் அக் கட்சியினை ஆரம்பிக்கும் போது மேடைகளில் முழங்கி வந்தது என்னவென்றால் பேரினவாதக்கட்சிகளுக்கு அடிமைகளாக வேலை செய்கின்ற, தமது பதவிகளைப் பெரிதாக மதிக்கின்ற ‘டசின்’ கணக்கான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதைவிட, முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை துணிந்து போராடி தீர்க்கக்கூடிய ஒரு பிரதிநிதியேனும் போதுமானது என்பதாகும்; அவர்கள் பிரச்சினைகள் உலகறியச்செய்யப்பட வேண்டும்; ஏனைய சிறுபான்மை தமிழ் இனத்தைப் போல் தனித்துவமான முறையில் (as a separate entity) தேசிய இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளில் கலந்து சம உரிமைக்காக வாதாட வேண்டும் என்பதே! அன்னாரின் மறைவிற்குப்பின்னர் இந்த நிலை என்றும் ஏற்பட்டதில்லை. எனவேதான் முஸ்லிம்கள் என்ற பெயரில் கட்சிகள் தொடர்ந்து அரசியல் வியாபாரம் செய்யத்தேவையில்லை என்று இந்த இளைஞர்கள் அவற்றைப்புறக்கணிக்கின்றனர். “போராளிகளே புறப்படுங்கள்” என்று அன்று தொடங்கியவர்கள் இன்று “போராளிகளே புறக்கணியுங்கள்” (முஸ்லிம் கட்சிகளை) என்று புறப்பட்டுள்ளனர். இருபத்திரண்டு என்பது ஒரு வெறும் இலக்கம் மட்டுமே என்று இவர்கள் நினைக்கின்றனர்.
கடைசியாக ஒரு குறிப்பு. இதுவரை பணத்திற்காகவும், பதவிக்காகவும், சாராயப்போத்தல்கட்காகவும் விலைபோன பல வாக்காளர்கள் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப ஆட்சிக்கு எதிராகவும், இனவாதத்திற்கெதிராகவும், செயற்றிறமையீனத்திற்கு எதிராகவும் மட்டுமே பெருமளவு ஒன்றுபட்டனர்; புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை நிறுவுவதற்காக இவர்கள் ஒன்றுபட்டனர் என்று கூறினால் அது மிகையாகாது. இதே மனோ நிலைதான் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் கணிசமான வாக்காளர்கள் மத்தியில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களின் சுயநலமற்ற எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய பெரும் கடப்பாடு புதிதாக அமையப்போகும் அரசுக்கு இருக்கின்றது!
மாற்றம் ஒன்றை நாடி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் NPP க்கு வாக்களிக்க இலட்சக்கணக்கில் ஒன்று திரண்டுள்ள வாக்காளர்கள் புதிய அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது வெறும் ஆளும் கட்சி மாற்றம் மட்டுமல்ல; அது முழு முறைமை மாற்றமாகும். இன்னும் அழுத்திக்கூறுவதானால் அது அடிப்படை மாற்றமாகும். அதாவது கொள்கைகள், செய்முறைகள், இனங்களிடையேயான தொடர்புகள், அதிகாரக்கட்டமைப்பு என்பனவற்றில் அடிப்படை மாற்றமாகும்; மக்கள் மத்தியில் ஆழ்ந்து உறைந்து போய்க்கிடக்கின்ற பிழையான விழுமியங்கள், அரசியல், பொருளாதாரம், கொடுக்கல் வாங்கல்கள், மனித உறவு பற்றிய நம்பிக்கை என்பவற்றிலான முழு மாற்றமாகும். நாளாந்தம் நாட்டு மக்கள் அரசிடம் இருந்தும், அதனுடன் சார்ந்த நிறுவனங்களிடம் இருந்தும் சேவைகளைப்பெற்றுக்கொள்ளும் முறைமையில் ஏற்பட எதிர் பார்க்கப்படும் மாற்றமாகும். இன்னும் கூறப்போனால் மக்களுக்கும், அரச அதிகாரிகட்குமிடையிலான உறவு முறையில் எதிர் பார்க்கப்படும் மாற்றத்தையும் இது உள்ளடக்கும்.- Vidivelli