களவிஜயம்
எஸ்.என்.எம்.சுஹைல்
‘‘எமக்கு இந்த காணியை மீட்டுத்தாருங்கள். பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு பெற்றுத்தாருங்கள். எமக்கு சரியான ஆவணங்கள் இல்லை. அநாதைகள் போல் வாழ்கின்றோம். என்னை இங்கிருந்து வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய முடியாது. நான் இங்கிருந்து வெளியேறப்போவதில்லை. அப்படி வெளியேற்றுவார்களாயில் இங்கு எமது குடும்பத்தில் மரணச் சடங்குதான் நடக்கும்.எங்களுக்கு வேறு இடத்துக்குச் சென்று வாழ இடமில்லை’’ என தன்னுடைய இன்றைய அவல நிலையை விபரிக்கிறார் திருகோணமலை, 6 ஆம் கட்டை கப்பல்துறை கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மாயாவதி.
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விவசாயக் கிராமங்களே முத்து நகர் மற்றும் கப்பல் துறை என்பனவாகும். 1970 ஐ அண்மித்த காலங்களில் இப்பகுதியில் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்விரு கிராமங்களில் வசிக்கும் மக்கள் குடிப்பரம்பல் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் ஊடாக பெற முடிந்தது. எமது கோரிக்கைக்கு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் மதிவண்னன் பதிலளித்திருந்தார்.
அதற்கமைய, கப்பல்துறை கிராம சேவகர் பிரிவில் 609 குடும்பங்களைச் சேர்ந்த 1883 பேர் வசிக்கின்றனர். அதேபோல், அதனை அண்டிய கிராமம்தான் முத்துநகர். இங்கு 171 குடும்பங்களைச் சேர்ந்த 533 பேர் வசித்து வருகின்றனர். இவ்விரு கிராம வாழ் மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயத்தில் தங்கியிருக்கிறது.
மேலும் முத்துநகர் கிராமம் 12 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டுள்ளது. அங்கு குடியிருப்பு காணிகள் அண்ணளவாக 69.5 ஏக்கர் எனவும் விவசாய பயிர் நிலங்கள் 903 ஏக்கர் எனவும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கப்பல்துறை கிராமம் 7.8 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டுள்ளது. அங்கு குடியிருப்பு காணிகள் அண்ணளவாக 320 ஏக்கர் எனவும் விவசாய பயிர் நிலங்கள் 120 ஏக்கர் எனவும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முத்துநகர் மற்றும் கப்பல்துறை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்யும் நிலங்கள் திருகோணமலை துறைமுகத்துக்கு சொந்தமான காணி என அறிவிக்கப்பட்டு, பல சவால்களுக்கு முகம்கொடுத்துவருவதாக தெரிவிக்கின்றனர்.
‘‘1974 ஆம் ஆண்டு முத்துநகர் கிராமத்தில் நான் குடியேறினேன். அப்போது எனக்கு 10 வயது. இங்கு குடியமர்ந்தது முதல் 1990 ஆம் ஆண்டுவரை இங்கு நாம் விவசாயம் செய்திருக்கிறோம். அப்போது நாம் சிறுவர்கள், எங்களுடைய தந்தை உள்ளிட்டோர் விவசாயத்தை செய்தனர்’’ என முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த வயது 60 முஹம்மது காதிர் முஹம்மது இனாயதுல்லாஹ் கூறுகின்றார்.
‘‘90 ஆம் ஆண்டு, இனப்பிரச்சினை காரணமாக இந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து சில வருடங் கலேவல, ரங்கடியாவல பாடசாலை அகதிமுகாமில் இருந்தோம். மீண்டும் 2006 ஆம் ஆண்டு இங்கு நாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். அது காணியில்தான் நாம் இன்று விவசாயம் செய்கிறோம். இது திருகோணமலை துறைமுகத்துக்கு சொந்தமான காணி என கூறப்படுவதே எங்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது, அடுத்து என்ன செய்வது என்று எமக்கு தெரியவில்லை’’ என்று தனது கவலையை தெரிவிக்கிறார்.
‘‘எமது விவசாயக் காணிகளை அபகரித்து சூரியமின்சக்தி தொழிற்சாலையொன்றை அமைக்கவிருப்பதாக கேள்விப்படுகிறோம்’’ என்கிறார் முத்துநகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஜெஸ்லி.
அத்தோடு, ‘‘இந்த வயல் நிலங்களுக்கு யாரும் வரக் கூடாது என எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர். எங்களுக்கு விவசாயம் செய்வதற்கோ, வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கோ தடங்களை ஏற்படுத்துகின்றனர். எங்களுடைய காணிகளை சுத்திகரிப்பதற்கும் விடுகிறார்கள் இல்லை. தொடர்ந்தும் தொல்லைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர்’’ எனும் குற்றச்சாட்டையும் முன்வைத்தார் முத்துநகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்.
‘‘எங்களது விவசாய காணிகளில் விவசாயம் செய்வதற்கு தொடர்ந்து இடையூறு விளைவிக்கப்பட்டு வருகிறது. வேலி அடைக்க முடியாதுள்ளது, பயிர்ச்செய்கை செய்ய முடியாதுள்ளது, மால் கட்ட முடியாது அதை பற்றவைக்கின்றனர், கம்பிகளை வெட்டிவிடுகின்றனர். இவையெல்லாம் துறைமுகத்தின் ஊடாகவே செய்யப்படுகின்றது. கடந்த 2 வருடத்துக்குள்தான் இந்த பிரச்சினைகள் பூதாகரமாகியிருக்கிறது’’ என்றார் முத்துநகர் விவசாய சங்கத் தலைவர் ஹலால்தீன் சத்தார்.
‘‘ஏற்கனவே, எமது பிரதேசத்தில் யானை மற்றும் ஏனைய விலங்குகளால் பயிர்ச்செய்கைக்கு பிரச்சினை இருக்கிறது. இதையும் தாண்டி நாம் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது, துறைமுக அதிகார சபையினால் ஏற்படுத்தப்படும் அழுத்தம் எமக்கு இன்னுமொரு பெரும் பிரச்சினையாக மாறியிருக்கிறது என்று குற்றம் சுமத்தும் இளம் விவசாயி மல்ஹர் குத்தூஸ் முஹம்மத் கபீர், ‘‘நாங்கள் மேட்டுநிலப் பயிர் செய்கை மேற்கொள்ளும்போது மாடுகளும் ஆடுகளும் எமது பயிர்களை நாசம் செய்யாதிருக்க வேலியடைக்கவேண்டியிருக்கிறது. நாம் வேலி அடைக்கும்போது துறைமுகத்தை சார்ந்தோர் அதனை பிடுங்கிச் செல்கிறனர்’’ என தனது பிரச்சினைகள் தொடர்பில் விபரிக்கிறார்.
விவசாயக் காணிகளுக்கு அப்பால் மையவாடி காணிக்கும் துறைமுக அதிகாரிகளால் பிரச்சினை ஏற்படுத்தப்படுவதாக குறிப்பிடுகின்றார், முத்துநகர் கிராமத்தின் மூத்த பிரஜைகளுள் ஒருவரான முஹம்மத் காஷிம் முஹம்மத் நஸார். ‘‘எமது மையவாடியை துப்பரவு செய்வதற்கும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய கடமைகளையும் செய்வதற்கும் முடியாமல் இருக்கிறது’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘‘1972 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்டு, 90 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல் காரணமாக வேறு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து எங்களை 2006 ஆம் ஆண்டு UNHCR நிறுவனம் மீள்குடியமர்த்தியது என முத்துநகர் பள்ளிவாசல் செயலாளர் எஸ்.எம்.ரஷீத் குறிப்பிடுகின்றார்.
‘‘நாங்கள் இங்கு பரம்பரையாக வாழ்கிறோம். எங்களுக்கான காணிகளுக்கு உரிய அரச ஆவணங்கள் இதுவரையில் தரப்படவில்லை. எமது விவசாயக் காணிகள் துறைமுக அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என கூறப்பட்டு எமக்கு விவசாயம் செய்ய முடியாது என்றும் எங்களை வெளியேற வேண்டுமென்றும் வலியுறுத்தப்படுகிறது. இது சம்பந்தமான நடவடிக்கைகளை உரிய அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மேற்கொண்டு எமக்கான தீர்வினை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார் பள்ளிவாசல் செயலாளர்.
முத்து நகரை அண்மித்த கிராமம்தான் கப்பல்துறை, இக்கிராம மக்களும் இதே பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இது குறித்து விபரிக்கிறார், கப்பல்துறை இந்து ஆலய நிர்வாக உறுப்பினர் முத்துக்கருப்பன் விஸ்வநாதன், ‘‘எனினும், 1967 ஆம் ஆண்டு இக்கிராமம் உருவாக்கப்பட்டது. பலதடவை நாம் இடம்பெயர்ந்திருக்கிறோம். விவசாயத்தை நாம் வாழ்வாதாரமாக மேற்கொள்கிறோம். 4 ஏக்கர் காணியில் கச்சானும் நெல் அறுவடையும் செய்கிறோம். 2002 இலிருந்து தொடர்ச்சியாக இங்குதான் சேனை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகிறோம். 2017 இற்கு பிறகுதான் துறைமுகத்தினால் எமக்கு பிரச்சினை ஏற்படுத்தப்படுகிறது என்றார்.
தமக்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்படுவதாக மேலும் குறிப்பிடும் விஸ்வநாதன், ‘‘திருகோணமலை துறைமுகத்தினால் அதிகாரிகள் பலதடவை இங்கு வந்து காணி அளவையில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய நிறுவனமொன்றினாலும் எமது காணிகள் அளக்கப்பட்டிருக்கிறது. மண் பரிசோதனையும் செய்தனர். வந்தவர்களிடம் எமது பிரச்சினையை சொன்னோம். இரண்டாம் தடவையாகவும் வந்தனர். விவசாயம் எமக்கு பிரச்சனை அல்ல, ஆனால் கொட்டில்களை உடைத்து நாம் எமது வேலையை பார்ப்போம் என்று சொல்லிச் சென்றனர்’’ என்றார்.
கப்பல்துறை கிராமத்தில் வசிக்கும் 50 வயது மதிக்கத்தக்க மாயாவதி நீண்டகாலமாக இக்கிராமத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருபவர், பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துவருவதாக அவர் கூறுகிறார். ‘‘நான் 6 வயது முதல் இங்கு வசிக்கிறேன். நாங்கள் இருந்த வீட்டில் எமது பிள்ளைகள் இருக்கின்றனர். யுத்த காலத்தில் நாங்கள் 15 வருடமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்தோம். அந்த நேரம் எமது காணிகள் காடுகளாகவே இருந்தன. 2001 ஆம் ஆண்டு நாங்கள் திரும்பி வந்து எமது இடங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம். இந்த காணிகளுக்கு எமக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ யாருமே எமக்கு அனுமதிப் பத்திரம் எடுத்துத் தரவில்லை. எல்லா கூட்டங்களிலும் நாங்கள் அனுமதிப் பத்திரம் கேட்கிறோம் அது கிடைக்கப்பெறவில்லை’’
‘‘நான் பப்பாசி, தென்னை போன்றவற்றையும் பயிரிட்டுள்ளேன். வேலிகளை வெட்டினால் அதற்கான பாதுகாப்பு எங்கே? எங்களுடைய வாழ்வாதாரம் எங்கே? நாம் ஏன் இந்த நாட்டில் வாழ்கிறோம். எமக்கு என்ன உரிமை இருக்கிறது? ஏழைகள் நாங்களே நசுக்கப்படுகிறோம்’’ என்று தனது ஆதங்கத்தை கூறிய மாயாவதி மேலும் தமக்கு ஏற்படும் அநீதிகள் பற்றி விபரிக்கிறார். ‘‘என் கணவரினால் சுகயீனம் காரணமாக வேலை செய்ய முடியாதுள்ளது. நான் தனியாக இருந்து கவனிக்கின்றேன். நான் அந்த இடத்தை விட்டு வந்தால் எம் வாழ்வாதாரம் என்னாவது. வீட்டு வேலைகளுக்கு கூட செல்லமுடியாது, ஏனென்றால் தற்போதும் பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. எமக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவி இந்த காணிக்கு ஒரு விடிவு பெற்றுத்தாருங்கள். வேலி போட்டு நாம் பயிர் செய்கை செய்ய வேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுக்கிறார்.
மக்களின் இந்த பிரச்சினைகள் குறித்து நாம் நேரடியாக திருகோணமலை துறைமுகத்துக்கு சென்று விபரங்களை கேட்க முற்பட்டபோது அதற்கான உரிய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இதுவிடயமாக கொழும்பிலுள்ள துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையிடம் வினவினோம், இவ்விடயம் தொடர்பில் நீதிமன்ற வழக்கு இடம்பெற்று வருவதால் தம்மால் எந்த கருத்துகளையும் ஊடகங்களுக்கு கூறமுடியாது என குறிப்பிட்டார்.
அத்துடன், இது குறித்து துறைமுக அதிகார சபைக்கு மின்னஞ்சல் ஊடாக விடுத்த கோரிக்கைக்கும் அவர்கள் பதிலளித்திருந்தனர். அதிலும் குறிப்பிட்ட விடயத்தில் தற்போதைக்கு துறைமுகத்தால் எந்தவொரு விடயத்தையும் கூற முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் என்றவகையில் மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி சுமுக தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என திருகோணமலை மாவட்ட செயலாளர் சமிந்த ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார்.
மேலும் ‘‘முத்து நகர் மற்றும் கப்பல்துறை கிராம மக்களின் பிரச்சினைகள் எமது கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இடம் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானது என சில வருடங்களுக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. என்றாலும் சிலரிடம் அனுமதிப்பத்திரம் இருக்கிறது. அத்துடன் சிலரிடம் வேறு ஆவணங்கள் உள்ளன. மேலும், சிலரிடம் எந்த ஆவணங்களுமோ அனுமதிப்பத்திரங்களோ கிடையாது. இவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றார்கள். இது தொடர்பில் நாம் துறைமுக அதிகார சபையின் உயர்மட்ட குழுவுடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு வருகின்றோம்’’ என்றார்.
‘‘தொடர்பான தற்போதைய இணக்கப்பாட்டின் படி நாம் மக்களுக்கு எந்தவொரு சிரமங்களையும் கொடுக்கவில்லை. அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. என்றாலும் இந்த இடம் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானதாக வர்த்தமாணியில் வெளியிடப்பட்டுள்ளமையால், மக்களுக்கு எந்தவொரு அனுமதிப்பத்திரத்தையும் எழுத்தில் வழங்க முடியாதுள்ளது என்றும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மேலும், ‘‘துரதிஸ்டவசமாக சிலவேளை துறைமுக அதிகார சபை அபிவிருத்தி வேலைகள் காரணமாக வெளியேற்ற வேண்டிய நிலமை ஏற்பட்டால், அதற்கான மாற்று வழி அமைத்துக்கொடுப்பதோடு தொழில் வாய்ப்புக்களை இழந்தமைக்கான இழப்பீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அது இல்லாமல் அவர்களின் வாழ்வை பாதிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் மேற்கொள்ளமாட்டோம்’’ எனவும் திருகோணமலை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
எது எவ்வாறிருப்பினும் முத்துநகர் மற்றும் கப்பல்துறை பகுதிகளில் மக்கள் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர். இவர்களை திடீரென வேறு இடங்களில் குடியமர்த்தினால் அம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அவர்களுக்கு முழுமையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட பின்னர் வேறொரு இடத்திற்கு குடியமர்த்த திட்டமிடலாம். என்றாலும், அவர்கள் நீண்டகாலமாக வாழ்ந்த இடத்திலேயே வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டிருக்கிறனர். தொடர்ந்தும் அதே இடத்தில் வசிக்கவும் விரும்புகின்றனர். அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு குடியமர்த்துவதானது மரத்தை வேரோடு பிடுங்கி வீசினால் ஏற்படும் வலியை விட கனதியான காயங்களை ஏற்படுத்திவிடும்.
அத்தோடு, திருகோணமலை துறைமுகத்தால் அம்மக்களுக்கும் விவசாய நடவடிக்கைக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பல்வேறு வகையிலும் இடையூறு விளைவிப்பது மக்களை மேலும் சிரமங்களுக்குள் தள்ளியிருக்கிறது. இது விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு வெகு விரைவில் சுமுக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானதாகும் என பல சிவில் சமூகப் பிரதிநிதிகளும் குறிப்பிட்டுள்ளனர்.
இது விடயமாக பேசிய சமூக செயற்பாட்டாளர் ஷ்ரின் சரூர், மக்கள் வாழ்வாதாரத்துக்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்களது விவசாயக் காணிகளில் துறைமுக அதிகார சபை அத்துமீறி செயற்படுவதை அனுமதிக்க முடியாது. பயிரிடப்படாத நிலங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ வழங்கி வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தலாம். ஆனால், விவசாயக் காணிகளில் மக்கள் பயிர்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். முன்னைய அரசாங்கங்கள் விட்ட தவறுகளை புதிய அரசாங்கமும் விடக் கூடாது. அவர்கள் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
‘துறைமுக அதிகார சபை விவசாய காணிகளை ஆக்கிரமிப்பு செய்வதை மக்கள் பலமாக எதிர்க்க வேண்டும்’ என தெரிவிக்கின்றார் சமூக செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, ‘மக்களுடன் இணைந்து சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவதற்கு நாங்களும் இருக்கிறோம். மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும். கடந்த அரசாங்கம் தனியார் துறைக்கு சாதகமாக செயற்பட்டதனால் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆகவே, இந்த அரசாங்கம் மக்களின் உணர்வை புரிந்து செயற்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமையளித்து, பயிரடப்படாத வேறு நிலங்களை ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் வசந்த தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதார பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கும்படியே சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர். அத்தோடு, மக்கள் சார்பாகவே அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் குறிப்பிடுகின்றார். இந்நிலையில், இதுவிடயமாக எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்துவதற்கு துறைமுக அதிகார சபையும் திருகோணமலை துறைமுக நிர்வாகமும் தயங்குகின்றது. எது எவ்வாறிருப்பினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான தீர்வே அவசியமாகிறது.- Vidivelli