இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸினால் கடந்த 02.10.2024 அன்று கொழும்பிலுள்ள துறைமுக மஸ்ஜித் மண்டபத்தில் நடத்தப்பட்ட மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நினைவுரை ஆற்றிய தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அரபு மொழிப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி, பேராசிரியர் மெளலவி எம்.எஸ். எம். ஜலால்தீன் ஆற்றிய நினைவுரையிலிருந்து….
எம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘மக்களுக்கு சேவை செய்பவனே அவர்களின் தலைவனாவான்’ என்றார்கள். மற்றொரு அறிஞர் கூறுகின்றார், Don’t follow where the path may lead. Go instead where there is no path and leave a trail’
‘உனக்கு வழிகாட்டிச் செல்லும் பாதையை தொடராதே. மாறாக பாதையே இல்லாத வழியில் சென்று முயற்சித்துப் பார்.’ (Ralph Waldo Emerson)
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இவ்வறிஞனின் கூற்றையே தனது இலட்சிய வேட்கையாகக் கொண்டார். இலங்கை அரசியல் வரலாறு ஆரம்பித்த காலம் முதல் இலங்கை முஸ்லிம்களிடையே தோன்றிய ஆரம்பகால அரசியல்வாதிகள் அனைவரும் பெரும்பான்மை இன கட்சிகளுடனேயே ஒன்றித்து செயல்பட்டதுடன் அவர்களால் வழங்கப்படும் சலுகைகளில் பூரண திருப்தியடைந்ததுடன், தனது சமூகத்தையும் ஏதோ ஒரு வகையில் திருப்திப்படுத்த முயன்றனர். அதில் வெற்றியும் பெற்றனர். கடந்த எழுபது வருட சுய நிர்ணய அரசியல் வரலாறு இவ்வாறே தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் தான் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இத்தகு கண்மூடித்தனமான முஸ்லிம் அரசியல் தலைமைகளின் போக்கை மாற்றி, முஸ்லிம்களுக்கென சொந்தமான அரசியல் கட்சியை உருவாக்க முன்நின்றனர்.
அரசியல் தலைமைக்கேற்ற தோற்றம் துணிவு, வசீகரிக்கப்பட்ட குரல்வளம், பல்மொழி ஆளுமை போன்ற சகல குணாம்சங்களும் இயற்கையாகவே கொண்டிருந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் இளமைக்காலம் குறிப்பாக மாணவப் பருவம் அவரின் எதிர்கால அரசியல் ஈர்ப்புக்கு கட்டியம் கூறி நின்றது.
அஷ்ரப் அவர்களின் தந்தை கல்முனைக்குடியைச் சேர்ந்த பிரபல கிராம சேவகராக காணப்பட்டதோடு, அவர் சம்மாந்துறையைச் சேர்ந்த பிரபலமான குடும்பப் பெண்ணான மதீனா உம்மாவை திருமணம் செய்திருந்தாலும் தான் செய்கின்ற கிராம சேவகர் (விதானை) உத்தியோகம் காரணமாக தனது வதிவிடமாக கல்முனைக் குடியையே தெரிவு செய்திருந்தார். மூன்று சகோதரிகளுக்கு மத்தியில் தனி ஒரு ஆண்மகனாக 1948ஆம் ஆண்டு பிறந்த அஷ்ரப் அவர்கள், தனது ஆரம்பக் கல்வியை கல்முனை அல் அஸ்ஹர் ஆண்கள் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி கல்லூரியிலும் தொடர்ந்தார்.
பாடசாலையிலேயே பளிச்சிடத் தொடங்கினார்
அல் அஸ்ஹர் பாடசாலையில் மிகச் சிறிய வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சிறுவன் அஷ்ரப் அவர்கள் தான் கதிரையை விட்டு எழும்பிய போது தனது கதிரையில் நெருஞ்சி முள் ஒன்றை வைத்ததாக தனக்கு முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த சக மாணவன் ஒருவனால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அம்மாணவனுக்கு பின் ஆசனத்திலேயே சிறுவன் அஷ்ரப் அமர்ந்திருந்தார். வகுப்பு ஆசிரியரால் இவ்விடயம் விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட முயன்ற போது சிறுவன் அஷ்ரபிடம் இது பற்றி விளக்கம் கேட்கப்பட்ட போது அஷ்ரப் அவர்கள் அம்மாணவனிடம் உன் கதிரையில் முள்வைத்ததை நீர் கண்டீரா? எனக் கேட்ட போது அம்மாணவனும் எனது இரு கண்களாலும் கண்டேன். என்று ஒப்புவித்தான். உன் கண்களால் கண்டும் ஏன் நீர் கதிரையில் உட்கார்ந்தாய்? என்ற அஷ்ரபின் கேள்வியோடு அக்குற்றச்சாட்டு பொய்யென்று நிரூபிக்கப்பட்டது. இச்சம்பவம் அவரின் எதிர்கால சட்டத்துறை ஆற்றலுக்கு கட்டியம் கூறியது.
பின்னர் உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது பாடசாலை முடித்து வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அஷ்ரப் அவர்களும் அவரின் பாடசாலை நண்பரும் கண்டெடுத்தனர். இதை என்ன செய்வது? என இருவரும் மிக ஆழமாக யோசித்துக்கொண்டிருந்த போது பாடசாலை மாணவனான (14 வயது) அஷ்ரப் அவர்கள் உடனடியாக கல்முனை பொலிஸ் உயரதிகாரியின் காரியாலயத்துக்கு சென்று தாம் கண்டெடுத்ததை அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு வீடு சென்றார்.
மறுநாள் பாடசாலை சென்ற போது காலை நேர மாணவர் கூட்டத்தில் பாடசாலை அதிபர் அஷ்ரபையும் அவரது நண்பரையும் முன்னால் அழைத்து பொலிஸ் அதிகாரி அவர்களை பாராட்டி அனுப்பிய கடிதத்தையும் வாசித்துக் காட்டி, மாணவர்களுக்கு முன்னால் மிகவும் பாராட்டினார்.
இச்சம்பவம் அஷ்ரப் அவர்களின் சிறுவயதிலேயே அவர் வருத்திக் கொண்ட உண்மை நேர்மை துணிவு என்பவற்றிற்கு சான்றாக அமைந்தன. மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரிக்கு மாணவனாக அனுமதிக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டில் கம்பளையைச் சேர்ந்த வைத்தியத்துறை மாணவி பேரியல் அவர்களை திருமணம் செய்து தனது நிரந்தர வசிப்பிடமாக கல்முனையையே தெரிவு செய்து கொண்டார்கள்.
இளமையில் ஏற்பட்ட எழுச்சி உணர்வுகள்
மர்ஹூம் அஷ்ரப் இளமையிலிருந்தே தனது சமூகத்தைப் பற்றியும், தனது பிரதேச மக்களின் பின்னடைவுகளை பற்றியும் அறியவும் ஆய்வு செய்யவும் முயன்றதுடன் அதற்கான நிரந்தரத் தீர்வுகளையும் சிந்திக்கத் தொடங்கினார். சமூகம் சார்ந்த கலந்துரையாடல்கள், நிறுவனங்களில் தொடர்ந்து பங்கேற்றதுடன் அது பற்றிய பூரண விழிப்புணர்வை தன்னுள் ஏற்படுத்திக் கொண்டார். இவற்றின் மூலம் தனது சமூகம் அரசியல் ரீதியாகவும், பிரதேச எழுச்சியிலும் அடைந்துள்ள அதள பாதாளத்தை மிக விரிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இந்த அதல பாதாள வீழ்ச்சியிலிருந்து தனது சமூகத்தையும், தான்சார்ந்த பிரதேசத்தையும் மீட்டெடுப்பதற்கு இலங்கை முஸ்லிம்களுக்கென தனித்துவமான அரசியல் கட்சி அவசியம் என்ற பிரச்சாரத்தை அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், சமூகம்சார்ந்த ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வேரூன்றச் செய்தார். அக்கருத்துக்கள் சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியதுடன் தனித்துவ அரசியல் கட்சியின் அவசியத்தையும் உணர்த்தியது.
பல்வேறு முயற்சிகளின் வெளிப்பாடாக 1980 செப்டெம்பர் 21ஆம் திகதி காத்தான்குடியில் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர் அஹமட் லெவ்வை ஹாஜியின் தலைமையில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ என்ற பெயரில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களைத் தலைவராகக் கொண்டு கட்சி ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அஷ்ரப் இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 1977ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற மற்றொரு கட்சியுடன் இணைந்து தீவிர அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட போதும் அவரது எதிர்பார்ப்புகளுக்கு அக்கட்சி முழுமையாக ஈடு கொடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 1980இல் ஆரம்பித்து வைக்கப்பட்டபோதும் அக்கால சூழலில் இடம்பெற்ற பல்வேறு எதிர்முனை நிகழ்வுகளினால் அஷ்ரபின் அபிலாஷைகளுக்கேற்ப முழுமையாக செயற்பட முடியவில்லை. ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவுமில்லை. எவ்வாறெனினும் 1988 இல் இக்கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு, தனது இலக்கை நோக்கி வீறுநடை போடத் தொடங்கியது.
இக்கால கட்டம் மர்ஹூம் அஷ்ரப் வாழ்க்கையில் மட்டுமன்றி இலங்கையில் முஸ்லிம்கள் குறிப்பாக வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியிலும் பல்வேறு அகோர சம்பவங்களைப் பதிவு செய்து முஸ்லிம்களையும் நாட்டு மக்களையும் நிலை குலையச் செய்திருந்த கால கட்டமாகும். தமிழ் பேசும் மக்களுக்கான தனி நாட்டுக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வட கிழக்கில் மட்டுமன்றி, முழு இலங்கைத் தீவிலும் மிகத் தீவிரமாக போராடிக்கொண்டிருந்த காலகட்டமது. தமது எதிரிகளை தேடித் தேடி கொலை செய்து கொண்டிருந்த காலம்.
கல்முனையில் இருந்த தமிழ் மக்களுக்கு மத்தியில் மிகவும் ஒன்றித்து வாழ்ந்து கொண்டிருந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கும் பயங்கர அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போது வேறு வழியின்றி 1984ஆம் ஆண்டில் தனது குடும்பத்தோடு கொழும்புக்கு ‘ஹிஜ்ரத்’ மேற்கொண்டார். தனது அரசியல் வாழ்வையும் சட்டத்துறை தொழிலையும் கொழும்பிலேயே தொடர்ந்து மேற்கொண்டார். 1984 இல் சாய்ந்தமருது மாளிகைக் காட்டில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்கள் மீதான படுகொலையும், காரைதீவு பொலிஸ் நிலையக் கிளை ஒன்று தாக்கப்பட்டதும் கூட அஷ்ரபின் வெறுத்தொதுக்கிய பயணத்துக்கு காரணமாக அமைந்திருந்து.
1984 ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை கிழக்கு மாகாணத்தின் ஏறாவூர் வாழைச்சேனை சாய்ந்தமருது, திருகோணமலை, மூதூர், கிண்ணியா, புல்மோட்டை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, முல்லைத்தீவு 13ஆம் கொலனி, காத்தான்குடி போன்ற பல பிரதேசங்களில் வாழ்ந்த பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சுடப்பட்டும், வெட்டியும், கடத்தப்பட்டும் தமது இன்னுயிர்களை இழந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் விவசாய நிலங்கள், தொழில் சாதனங்கள் பறிக்கப்பட்டன. அல்லது அழிக்கப்பட்டன. நாட்டில் பயங்கர அராஜக நிலை தலைவிரித்தாடிய போது, இந்திய நாட்டின் தலையீட்டை அப்போதைய ஆட்சியாளர்கள் வேண்டி நின்றார்கள். இலங்கையின் சமாதானத்தையும் ஸ்தீர தன்மையையும் ஏற்படுத்தும் நோக்கும் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பிய ‘இந்திய சமாதானப் படை’ (Indian Peace Keeping Forces- IPKF) இலங்கைக்கு காலடி வைத்ததில் இருந்து இலங்கையின் உள்நாட்டுப் போரும், சமாதான முயற்சிகளும் வேறு வடிவம் பெறத் தொடங்கியது. இப்படையின் வருகை இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பல்வேறு பாதக நிலைகளையே தோற்றுவித்திருந்தது. 1989 இல் இப்படை இலங்கையில் காலடி வைத்த போதும் 1990ஆம் ஆண்டிலேயே அப்படைக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள் இலங்கையின் சகல இன குழுக்களிடையேயும் தளிர் விடத் தொடங்கியது. இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் இப்படையை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்ற கோஷமே முன்னிலை பெற்றிருந்தது. மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இப்படையின் வெளியேற்றத்தினால் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பில் ஏற்படப் போகும் ஆபத்து நிலை பற்றிய அச்ச நிலையில் எதிர்மாறான கருத்தையே கொண்டிருந்தார்.
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடியதாக முஸ்லிம்களுக்கென தனியான அரசியல் கட்சி ஒன்று காணப்படாமையும் அஷ்ரபின் முழுக் கவனத்தையும் பெற்றிந்தது. தமிழ் அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள் பலவும் தோற்றம் பெற்று பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை அடிப்படை கருப்பொருளாகக் கொண்டிருந்ததால் முஸ்லிம் இளைஞர்கள் பலரும் ஆயுதப் போராட்டத்தை விரும்புபவர்களாகவும் ஈர்க்கப்படக்கூடியவர்களாகவும் காணப்பட்டமை அஷ்ரபுக்கு மேலும் அச்ச உணர்வை ஏற்படுத்தியது. இவற்றுக்கான விடையாக முஸ்லிம் காங்கிரஸை மேலும் வளர்த்து வெகுஜனக் கட்சியாக மாற்றும் பகீரத முயற்சியில் ஈடுபட்டு 1989, 1994ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் தமது கட்சி சின்னத்தில் தனித்து பெரும்பான்மையின கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டதன் மூலம் முறையே ஒன்று, இரண்டு பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொண்டது. 1994இல் ஜனாதிபதியாக போட்டியிட்ட சந்திரிக்கா அவர்கள் மர்ஹூம் அஷ்ரப் அவர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன், பாராளுமன்றத் தேர்தலிலும் பெற்றி பெற்றார். இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மொத்தமாக ஏழு பிரதிநிதித்துவத்தை பெற்று சந்திரிக்காவின் அரசில் ஒரு அசைக்க முடியாத கட்சியாக பரிணமித்தது. சந்திரிக்காவின் அரசியல் ஸ்திரத்துக்கு அத்திவாரமிட்ட அஷ்ரப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய ஜனாதிபதி சந்திரிக்கா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் ஒலுவில் துறைமுகத்தையும் நிறுவிக்கொள்ள பூரண ஒத்துழைப்பு வழங்கினார். ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்ட மிக செல்வாக்குள்ள அமைச்சுக்களான துறைமுகங்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சின் மூலமே துறைமுக அதிகார சபையில் சுமார் 2000 க்கு மேற்பட்ட முஸ்லிம் ஊழியர்கள் உள்வாங்கப்பட்டு, அவர்களது குடும்பங்களின் எழுச்சிக்கு வழிசமைக்கப்பட்டது. 1995 இல் உருவாக்கப்பட்ட தென் கிழக்குப் பல்கலைக்கழகம் சுமார் 225 ஏக்கரில் பூரண அந்தஸ்தும், சகல வசதிகளும் கொண்ட ஒரு தலைசிறந்த பல்கலைக்கழகமாகவும், ஆறு பீடங்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. மும்மொழியும் பேசும் நான்கு மத மாணவர்கள் சுமார் 20000 பேர் அளவில் இங்கு கல்வி கற்று வருகின்றார்கள்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்று வெளியாகியுள்ளனர். இன்றுவரை சுமார் நாற்பது, பேராசிரியர்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் அஷ்ரபினால் குடும்ப வாழ்வில் பலன் பெற்ற நீங்கள் துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸை உருவாக்கி,அதன் மூலம் மர்ஹூம் அஷ்ரபை இன்று நினைவு கூருவது நீங்கள் அவருக்கு செய்யும் பெரும் கைமாறாகும். இதன் மூலம் உங்களின் வாழ்விலும் பல்வேறு உயர்வுகள் பெற ‘துஆ’ செய்கிறேன்.– Vidivelli