சர்வதேச ஊடகங்கள் மறந்து போய் உள்ள மியன்மாரின் அவலங்கள் !!

0 13

சபீர் மொஹமட்

கடந்த மாதம் மியன்மார், லாவோஸ், கம்­போ­டியா தாய்­லாந்து மற்றும் இலங்கை ஆகிய ஐந்து தென்­கி­ழக்­கா­சிய நாடு­களைச் சேர்ந்த 20 இளைஞர் யுவ­தி­க­ளு­ட­னான ஐந்து நாள் வதி­விட பயிற்­சி­யொன்­றுக்கு தாய்­லாந்து சென்­றி­ருந்தேன். அங்கே நாம் அனை­வரும் தத்­த­மது நாடு­களில் குடி­மக்கள் என்ற வகையில் முகங்கொடுத்து வரு­கின்ற சவால்கள் மற்றும் எமது நாட்டில் காணப்­ப­டு­கின்ற அர­சியல் பொரு­ளா­தார சமூக பிரச்­சி­னைகள் குறித்து ஆழ­மாக உரை­யா­டினோம்.

குறிப்­பாக இலங்கை உட்­பட இந்த ஐந்து நாடு­களும் வெவ்­வேறு விதத்­தி­லான சமூகப் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ளோம். அந்த ஒவ்­வொரு சமூக பிரச்­ச­னையும் வெவ்­வேறு விதத்தில் அங்கே வந்­தி­ருந்த இளைஞர் யுவ­தி­களின் வாழ்க்­கையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எமது உரை­யா­டல்­களின் போது மியன்­மாரைச் சேர்ந்த ஒரு ரோஹிங்ய சகோ­த­ரியும் பங்கு கொண்­டி­ருந்தாள். கடந்த 10 ஆண்­டு­க­ளாக மியன்மார் நாட்டில் ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு வித­மான வன்­முறைச் சம்­ப­வங்கள் அரங்­கேற்­றப்­பட்டுக் கொண்­டுள்­ளன. குறிப்­பாக ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு மியன்­மா­ரிலே குடி­யு­ரிமை இல்லை. அதேபோல் அவர்­க­ளுக்கு வெளி­யி­டங்­க­ளுக்கு நினைத்­தது போல் செல்ல முடி­யாது. ஏதோ ஒரு தீவி­ர­வா­திகள் போன்று தான் அவர்­களை அந்த நாட்டின் தற்­போ­தைய இரா­ணுவம் பார்க்­கின்­றது. இது­போன்ற பல­வி­த­மான பார­பட்­ச­மான கட்­டுப்­பா­டு­க­ளுக்கு அவர்கள் உட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள்.

கடந்த 2012 -ஆம் ஆண்டு ராக்கைன் மாநி­லத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ரோஹிங்ய முஸ்­லிம்கள் பல­வந்­த­மான முறையில் தமது வசிப்­பி­டங்­களில் இருந்து விரட்­டப்­பட்­டார்கள். பின் அவர்­க­ளுக்கு மிகவும் மோச­மான எவ்­வித அடிப்­படை வச­தி­களும் அற்ற முகாம்­களில் வாழ வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது. ஐந்து ஆண்­டு­க­ளுக்குப் பிறகு, 2017-ஆம் ஆண்டு, மியன்மார் ராணுவம் ரோஹிங்யா­க்­க­ளுக்கு எதி­ராக ஒரு கொடூ­ர­மான இன அழித்­தொ­ழிப்பு நட­வ­டிக்­கையைத் தொடங்­கி­யது. ஆயி­ரக்­க­ணக்­கான ரோஹிங்யா மக்கள் கொலை செய்­யப்­பட்­டார்கள் இன்னும் பல பெண்கள் கற்­ப­ழிக்­கப்­பட்­டார்கள். அவர்கள் வாழ்ந்த கிரா­மங்கள் கொளுத்­தப்­பட்­டன. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், 7 இலட்சம் ரோஹிங்யாக்கள் அண்டை நாடான வங்­க­தே­சத்­துக்குத் தப்பிச் சென்­றனர். அவர்­களில் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் அங்­குதான் அக­தி­க­ளாக வாழ்­கின்­றார்கள். மியன்மார் அரசு ரோஹிங்யாக்­களை நடத்­திய விதம் தொடர்­பாக, நெதர்­லாந்தின் ஹேக் நக­ரத்தில் உள்ள சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் இனப்­ப­டு­கொலை குறித்த விசா­ரணை ஒன்றும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது.

என்­னுடன் உரை­யா­டிய ரோஹிங்ய சகோ­தரி கூறு­கையில், சிறு­வ­யதில் அவர்கள் றக்­காயன் மாநி­லத்தில் வாழும் போது கண் முன்னே அவர்­க­ளு­டைய பள்ளிவாயில் எரிக்­கப்­பட்­டுள்­ளது. ‘வன்­மு­றைகள் உக்­கி­ர­மாக நடந்து கொண்­டி­ருக்­கின்ற ஒரு நேரத்தில் நாங்கள் வாழ்ந்த ஊரிலும் வன்­முறை வெடித்­தது. நாங்கள் தொழச் சென்ற பள்ளி எரிக்­கப்­பட்­டது. என்­னு­டைய தந்தை தாய் மற்றும் உற­வி­னர்கள் அனை­வரும் தக்பீர் முழங்­கி­ய­வாறு வீதி­க­ளிலே ஓடி ஒளிந்து கொண்டோம். இரா­ணுவம் எங்­களை பின் தொடர்ந்­தார்கள். அல்­லாஹ்வின் நாட்­டத்தால் நானும் எனது குடும்­பத்­தி­னரும் அன்று உயிர் தப்­பினோம். அதன் பின்னர் நாம் தலை­ந­க­ருக்கு இடம் பெயர்ந்தோம்’ என கூறினார்.

ஆனால் இன்னும் அவர்­க­ளு­டைய உற­வி­னர்கள் பலர் வங்­கா­ள­தேச மியான்மார் எல்­லையில் உயி­ருக்­காகப் போராடிக் கொண்­டுள்­ளார்கள். அவர்­க­ளுக்கு எந்த ஒரு அடிப்­படை வச­தி­களும் இல்லை. ஒரே நாட்டில் இருந்­தாலும் அவர்­களை தொடர்பு கொள்ளக்கூட எங்­களால் முடி­யாமல் உள்­ளது. எந்த ஒரு சர்­வ­தேச ஊட­கமும் இதைப் பற்றி பெரி­தாக அலட்டிக் கொள்­வதே இல்லை என, மிகவும் வருத்­தத்­துடன் கூறினார்.

இத்­த­னைக்கும் மத்­தியில் மியன்­மாரில் ரோஹிங்­கிய முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி இன்னும் நூற்­றுக்­க­ணக்­கான சிறு சிறு இனக்­கு­ழுக்­க­ளி­டையே மோதல்கள் நாடு பூரா­கவும் நடை­பெற்றுக் கொண்­டுதான் இருக்­கின்­றன.

மறு­புறம் இரா­ணுவ ஆட்சி
பல தசாப்­தங்­க­ளுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு மியன்­மாரில் இரா­ணுவ ஆட்சி முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மெது மெது­வாக சீர்­தி­ருத்­தங்கள் அங்கே கொண்­டு­வ­ரப்­பட்­டன. 2015 ஆம் ஆண்டு மியன்­மா­ரிலே பொதுத்­தேர்தல் நடை­பெற்­றது. அர­சியல் ஆய்­வா­ளர்­களின் கூற்­றுப்­படி 2014/15 ஆம் ஆண்டு என்­பது மியன்­மாரின் மறு­ம­லர்ச்சி காலம். 2015 நடை­பெற்ற தேர்­தலில் சமா­தா­னத்­திற்­கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூ சீ தலை­மை­யி­லான ஜன­நா­ய­கத்­திற்­கான தேசிய லீக் கட்சி போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றது. அதே­வேளை அந்­நாட்டின் மறு­புறம் ரோஹிங்­கிய முஸ்­லிம்கள் கொத்துக் கொத்­தாக கொலை செய்­யப்­பட்­டார்கள். இதனை பெரி­தாக மியன்மார் அரசு கண்டு கொள்­ளவே இல்லை. இந்த அத்­தனை படு­கொ­லை­க­ளுக்குப் பின்னால் ஆங் சான் சூ சீ இருப்­ப­தாக பலரும் குற்றம்சாட்­டி­னார்கள்.

அதன் பின்னர் மீண்டும் 2020 ஆம் ஆண்டு அங்கே பொதுத் தேர்தல் நடை­பெற்­றது. ஆங் சான் சூ சீ தலை­மை­யி­லான ஜன­நா­ய­கத்­திற்­கான தேசிய லீக் கட்சி இத்­தேர்­த­லிலும் வெற்றி பெற்­றது. ஆனால் அவர்­களால் தொடர்ந்தும் ஆட்­சியில் இருக்க முடி­ய­வில்லை. மியன்மார் நாட்டின் இருண்ட தினம் 2021 பெப்­ர­வரி முதலாம் திகதி. இரா­ணுவம் மீண்டும் அந்­நாட்டின் ஆட்­சியை கைப்­பற்­றி­யது. 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலின் முடி­வுகள் செல்­லாது என இரா­ணுவம் அறி­வித்­த­துடன் ஓராண்டு அவ­சர கால­நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

மியன்மார் நாட்டைச் சேர்ந்த நான் சந்­தித்த அத்­தனை பேரும் 2021 ஆம் ஆண்டு வரை வெவ்­வேறு துறை­களில் அந்­நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தமது பட்டப் படிப்பை கற்றுக் கொண்­டி­ருந்­த­வர்கள். ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக அவர்கள் அத்­தனை பேரும் தமது கல்­வியை இடை­ந­டுவே நிறுத்­தி­யுள்­ளார்கள். இலங்­கையைச் சேர்ந்த நாங்கள் எம்­மு­டைய பலம் பல­வீனம் பற்றி குறிப்­பிடும் போது “எமது நாட்­டிலே காணப்­ப­டு­கின்ற கருத்துச் சுதந்­திரம், எம் மக்கள் செய்த போராட்­டங்கள்” என்­பன பற்றி உரை­யாடும் போது மியன்­மாரைச் சேர்ந்த அனை­வ­ரு­டைய கண்­க­ளிலும் கண்ணீர் நிரம்­பி­யதை கண்டோம். அவர்­க­ளு­டைய பலம் பல­வீனம் பற்றி கூறும்­போது “நீங்கள் கூறு­கின்ற ஆட்சி ஜன­நா­யகம் இவை அனைத்தும் எங்­க­ளுக்கு வெறும் கற்­ப­னையே” என்­றார்கள். பல கன­வு­க­ளு­டனும் பொரு­ளியல் சமூ­க­வியல் என பல துறை­க­ளிலும் கல்­வியை ஆரம்­பித்த இவர்­க­ளு­டைய கனவு இறு­தியில் வாழ்­வ­தற்கு ஏதோ ஒரு தொழில் என மாறி­யுள்­ளது.

லாவோஸ் மற்றும் கம்­போ­டியா போன்ற நாடு­க­ளு­டைய நிலை­மையும் இதுதான். உறு­தி­யான ஆட்­சி­யா­ளர்கள் அங்கே இல்லை. தினமும் சிறு­பான்மை மக்­க­ளு­டைய உரி­மைகள் அங்கே பறிக்­கப்­ப­டு­கின்­றன. அடிப்­படை வச­திகள் கூட அம்­மக்­க­ளுக்கு இல்லை. சுதந்­திரம், உரிமை என்றால் என்ன என்று கூட அவர்­க­ளுக்கு சரி­யாகத் தெரி­யாது. இலங்­கையில் நாங்கள் கூறு­கின்ற சுதந்­திரம் உரிமை என்­பன அவர்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது. லாவோஸ் நாட்டில் சிறு­பான்மை கிறிஸ்­தவ மக்கள் இப்­பொ­ழுதும் துன்­பு­றுத்­தப்­பட்டுக் கொண்­டுதான் இருக்­கின்­றார்கள். அண்­மையில் Mission News Network (MNN) என்ற அமைப்பின் அறிக்­கை­யொன்­றின்­படி, கம்­யூ­னிஸ்­டுகள் ஆட்சி செய்யும் லாவோஸ் நாட்டில் மதக் குழுக்­களை அச்­சத்தின் பிடியில் வைத்­தி­ருக்­க­வேண்டி அந்­நாட்டு அதி­கா­ரிகள் சீனாவின் மாதி­ரியைப் பின்­பற்­று­வதால், கிறிஸ்­த­வர்கள் பெரிதும் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கின்­றனர் என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

கிரா­மப்­பு­றங்­களில் உள்ள கிறிஸ்­த­வர்கள் இன்னும் கடு­மை­யான கட்­டுப்­பா­டுகள் மற்றும் துன்­பு­றுத்­தல்­களை எதிர்­கொள்­கின்­றனர் என்று கூறும் இவ்­வ­றிக்­கை­யா­னது, லாவோஸில் உள்ள பல அதி­கா­ரிகள் கிறிஸ்­த­வர்­களை அச்சுறுத்துகின்றனர் என்றும், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் அவர்களுக்கான பணிகள் மறுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்திருந்தது.

ஒரு ஜனநாயக நாட்டிற்கு தேர்தல்கள் என்பது எந்த அளவு முக்கியம் என்பதை இந்த கதைகள் மற்றும் அங்கே வருகை தந்திருந்த இளைஞர் யுவதிகளுடைய அனுபவம் எமக்கு உணர்த்தியது. இலங்கையில் இன்னும் ஒரு சில வாரங்களில் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல்கள் என்பன எந்த அளவு முக்கியம் என்பதை மியன்மார் நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞர் யுவதிகளின் கதைகள் எமக்கு நன்கு உணர்த்தியது. ஓர் இருண்ட இடத்தில் திடீரென ஜனநாயக ஒளி தோன்றி சிறிது காலத்தில் மீண்டும் காரிருளில் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.