நகைக் கடை வர்த்தகரை சித்திரவதை செய்து பொய்யாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதா?
குளியாபிட்டிய வர்த்தகரின் அடிப்படை உரிமை மீறல் மனுவை ஏற்றது நீதிமன்றம் 6 பொலிஸாருக்கு எதிராக குற்றவியல் விசாரணை என அறிவித்தார் சட்ட மா அதிபர்
(எப்.அம்னா)
நீர்கொழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறையாடப்பட்ட சம்பவத்தோடு, குளியாபிட்டிய நகரில் தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்புபடுத்தி, கைது செய்து, சித்திரவதை செய்தமை தொடர்பில், அவ்வர்த்தகரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன்படி, இம்மனுவை எதிர்வரும் 2025 ஜூன் 13 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த உயர் நீதிமன்றம், அன்றைய தினம் மன்றில் ஆஜராக பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பித்தது.
எஸ்.சி.எப்.ஆர். 11/24 எனும் குறித்த மனு கடந்த செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையில் நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இம்மனுவில் நீர்கொழும்பு வலய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 15 பேர் பெயரிடப்பட்டுள்ளதுடன் அவர்களில் முதல் 6 பிரதிவாதிகள் தவிர்ந்து ஏனையோர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டவாதி ஒருவர் ஆஜரானார்.
இதன்போது மனுதாரர் தரப்பின் சட்டத்தரணி அரவிந்து மனதுங்க ஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய, சட்டத்தரணிகளான ரிஸ்வான் உவைஸ், சுபுன் திஸாநாயக்க, அயுக பெரேரா ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜரானார்.
கடந்த 2016 ஜூன் 13 ஆம் திகதி,மனுதாரரின் வர்த்தக நிலையத்தின் முகாமையாளர் எனக் கூறப்படும் நபரை அச்சுறுத்தி, பொலிஸ் பரிசோதகர் மனோகர எனும் அதிகாரி தலைமையிலான குழு தன்னை இலக்கு வைத்ததாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் மனுதாரரான சாஹுல் ஹமீட் ஷெய்க் எனும் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக் என்ற, பாத்திமாவத்த, மதகொட்ராமுல்ல பகுதியைச் சேர்ந்த மனுதாரரை சட்ட விரோதமாக கைது செய்து, பல நாட்கள் தடுத்து வைத்திருந்ததாக மனுதாரரின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் நீதிமன்றுக்கு தெரிவித்தார்.
சிவில் உடையில் வந்த, நீர்கொழும்பு வலய குற்றத் தடுப்பு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட குறித்த 6 பேர், மனுதாரரின், இலக்கம் 2, பிரதான வீதி, குளியாபிட்டிய எனும் முகவரியில் அமைந்துள்ள நகைக் கடையில் இருந்த தங்க நகைகளை பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கொள்ளையடித்ததாக சட்டத்தரணி நீதியரசர்களுக்கு தெரியப்படுத்தினார்.
அரகல போராட்டத்தை தொடர்ந்து நீர்கொழும்பு அவேந்ரா ஹோட்டலில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கமும், ஒரு தொகை டொலரையும், மனுதாரர் கொள்வனவு செய்ததாக பொலிஸார் அச்சுறுத்தி, நகைக் கடையில் இருந்த நகைகளை கொள்ளையிட்டதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டி, அதற்கான ஆதாரமாக கடையில் இருந்த சி.சி.ரி.வி. காட்சிகளின் பிரதிகளையும் மனுவோடு சேர்த்து இணைத்துள்ளதாக மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
அவ்வாறு கடையிலிருந்து பொலிசார் கொள்ளையிட்ட நகைகளின் ஒரு பகுதியை, திருடப்பட்ட தங்கம் எனக் கூறி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன், அவை திருடப்பட்டவை அல்ல எனவும் அதற்கான ரசீதுகள் இருப்பதையும், ஒரு தொகை தங்கத்தை பொலிசார் நீதிமன்றில் கூட முன்னிலைபப்டுத்தவில்லை எனவும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மன்றில் விளக்கினார்.
இதனைவிட, சுமார் 48 மணி நேரம் பொலிசார் எந்த நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தாது மனுதாரரை, நீர்கொழும்புக்கு அழைத்துச் சென்று பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தில் தடுத்து வைத்து, அவரின் உடைகளை களைந்து, இரும்பு கம்பி கொண்டு தாக்கி சித்திரவதை செய்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதாகவும், அதற்காக அவர், பிணை பெற்ற பின்னர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் வைத்தியசாலை அறிக்கைகள் அதனை உறுதி செய்வதாகவும் மனுதாரரின் சட்டத்தரணி மனுவூடாக குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையிலேயே, மனுதாரரின் தந்தை, தனது மகன் எங்கே இருக்கின்றார் என்பதை அறிய மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடளித்ததாகவும் அதனைத் தொடர்ந்து, அவேந்ரா ஹோட்டல் மீதான தாக்குதல் வழக்கில் மனுதாரரை 114 ஆவது சந்தேக நபராக பொலிசார் சேர்த்ததாகவும் மனுதாரர் சார்பில் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மன்றில் ஆஜரான அரச சட்டவாதி, மனுதாரர் முன் வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, மனுவின் முதல் 6 பிரதிவாதிகளான நீர்கொழும்பு வலய குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கிஹான் மனோஹர, அப்பிரிவின் சார்ஜன் சிந்தக, பொலிஸ் கான்ஸ்டபிள்களான அமல் சஞ்ஜீவ, வி.ஜி. பண்டார,டி.எம்.பி. திஸாநாயக்க,கே.ஆர்.டி. குலதுங்க ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாக குற்றவியல் விசாரணைகள் நடப்பதாகவும், அவர்கள் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள முன் பிணை கோரிக்கை மனுவால் அவர்களை இதுவரை கைது செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.
எனினும் இந்த விளக்கத்தை உயர் நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்தி சி.ஐ.டி.யின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளிப்படுத்தியது.
இந் நிலையில் முதல் 6 பிரதிவாதிகளுக்கும் சட்ட மா அதிபர் ஆஜராக மாட்டார் என அரச சட்டவாதி நீதிமன்றுக்கு அறிவித்தார்.
இந்த நிலையிலேயே மனுதாரரின் அரசியல் அமைப்பூடாக உறுதி செய்யப்பட்ட 11 , 12( அ) உறுப்புரைகளின் கீழான அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கருதக் கூடிய சான்றுகள் உள்ளதாக கூறி மனுவை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.- Vidivelli