இஸட்.ஏ.ஸன்ஹிர்
முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்
புத்தளம்
புத்தளம் பிரதேசத்தின் புகழ்பூத்த கல்விமான் ஜவாத் மரைக்கார் அவர்கள் ஓர் இலக்கியவாதி மட்டுமல்ல. எழுத்தாளர், பேச்சாளர், ஓவியர் என பல கலைகளுக்கு சொந்தக்காரர். அவர் புத்தாக்க சிந்தனையாளரும் சிறந்த விமர்சகரும் பாடகரும் கூட. இலக்கியவாதி ஜவாத் மரைக்கார் அவர்கள் ஓர் இலக்கியத் தகவல் களஞ்சியம் என்பதும் மிகையல்ல. புத்தளம், நுரைச்சோலைக் கிராமத்தில் அபூபக்கர் மரைக்கார், அப்துல் ஹமீது நாச்சியா தம்பதிக்குப் பிறந்த ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை நுரைச்சோலையிலும் பின்னர் கல்பிட்டி அல் அக்ஸா மகா வித்தியாலயத்திலும் பயின்று, உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியில் பெற்றார். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விஞ்ஞானத் துறையில் பயிற்சிபெற்ற இவர் விஞ்ஞானமானி கல்விமானிப் பட்டதாரி ஆவார்.
ஆசிரியராக 1971 இல் அரச நியமனம் பெற்ற ஜவாத் மரைக்கார் அவர்கள் பள்ளிவாசல்துறை முஸ்லிம் வித்தியாலயம், குருநாகல், பறகஹதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயம், கல்பிட்டி அல் அக்ஸா மகா வித்தியாலயம், புத்தளம் ஸாஹிறாக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியப் பணி புரிந்து, 1980 இல் விஞ்ஞான ஆசிரிய ஆலோசகராகப் பதவியேற்றார். அக்காலத்தில் இலங்கையில் இருந்த ஒரு சில ஆசிரிய ஆலோசகர்களுள் அவரும் ஒருவர். பிரயோகத்துடன் கூடிய சேவைக்காலப் பயிற்சிவகுப்புக்களைப் புத்தளம் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியவர் ஜவாத் மரைக்கார் அவர்களே.
கல்வியமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்திலும் (Curriculum Development Centre) மஹரகம தேசியக் கல்வி நிறுவகத்திலும் (NIE) வளவாளராகப் பணியாற்றிய இவர், அக்காலப் பகுதியில் விஞ்ஞானம், ஆரம்பக்கல்வி, இஸ்லாம், தமிழ்மொழி ஆகிய துறைகளில் பாடவழிகாட்டி நூல்களை ஆக்குவதிலும் தேசியமட்டத்தில் ஆசிரிய ஆலோசகர்களைப் பயிற்றுவிப்பதிலும் ஈடுபட்டார். 1980 களில் கற்பிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூலாக்கக் குழுவில் அவரும் ஒருவர். தொலைக் கல்விப் போதனாசிரியராகவும், சிரேஷ்ட போதனாசிரியராகவும் அதன் பொறுப்பாளராகவும் இருந்து ஆசிரியர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு 1999 இல் உள்ளீர்க்கப்பட்டு, புத்தளம் கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், 21.02.2006 இல் இங்கு, தமிழ்ப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதலாவது பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையேற்றார்.
ஓய்வுநிலையடையும் வரை தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு அவர் ஆற்றிய அருஞ்சேவைகளை அதிபர்களும் ஆசிரியர்களும் இன்றும் நன்றியுடன் நினைவுகூருவர். ஓர் இலக்கியவாதியாக ஜவாத் மரைக்கார், 1968 இல் தடம்பதித்தார்.
அன்று வெளிவந்த தினபதிப் பத்திரிகையில் கவிதா மண்டலத்துக்குள் நுழைந்து பின்னர் இலக்கிய உலகுக்குள் ஒரு ஜாம்பவானாக வலம்வரத் தொடங்கினார். ஆரம்பத்தில் மரபுக் கவிதைகளைப் படைத்த அவர், 1970 களின் தொடக்கத்தில் புதுக் கவிதைகளையும் எழுதத் தொடங்கினார்.
‘சோலைக்குமரன்’ என்ற பெயரில் அவர் எழுதிய ஆக்கங்களை இலக்கிய உலகு நன்கறியும். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ‘இலக்கிய மஞ்சரி’ என்ற வாராந்த சஞ்சிகை நிகழ்ச்சியினை 1982 – 1984 காலப்பகுதியிலும் பின்னர் 1995 – 2000 காலப்பகுதியிலும் நடத்தி நேயர்களின் அபிமானத்தைப் பெற்றார். இப்பணியைப் பாராட்டி தமிழகத்தை சேர்ந்த இறையருட் கவிமணி, பேராசிரியர் கா. அப்துல் கபூர், திருச்சி ரஸூல் போன்றோர் முஸ்லிம் சேவைக் கட்டுப்பாட்டாளருக்கு அன்று அனுப்பிய கடிதங்கள் கவிஞர் ஜவாத் மரைக்காருக்குக் கிடைத்த பெரும் கெளரவங்களாகும்.
ஜவாத் மரைக்கார் அவர்கள் ஆற்றிய தேசிய மட்டக் கல்விப் பங்களிப்புக்கள் பல. தினகரன் நாளிதழில் புதன், வியாழன் தினங்களில், மாணவர்களுக்காக “வித்தியாகரன்” என்ற புனைப் பெயரில் “கல்விக் கதிர்” என்ற பக்கத்தையும் ஆசிரியர்களுக்காகத் தனது சொந்தப் பெயரில் “குருபீடம்” என்ற பக்கத்தையும் பெற்று, பலவருடங்களாக அவர் எழுதிவந்தார். அத்துடன் வானொலி, தொலைக்காட்சி கல்விச் சேவைகள் பலவற்றில் அவர் கலந்துகொண்டுள்ளார். ஒரு விமர்சகராக, பத்திரிகைகளில் அவர் எழுதிய விமர்சனங்கள் பலரது அபிமானத்தையும் பாராட்டையும் பெற்றன. குறிப்பாக கவிஞரும் ஜவாத் மரிக்காரின் ஆத்ம நண்பருமான ‘வெள்ளைப்புறா’ புகழ் திக்குவல்ல எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் வெளியிட்ட ‘அஷ்ஷூரா’ மாதாந்த இதழில் “புத்தீட்டி” என்ற புனைப்பெயரில் அக்காலப்பகுதியில் அவர் எழுதிவந்த விமர்சனக்கண்ணோட்டம் சமூகவியலாளர்களினதும் கல்வியியலாளர்களினதும் கவனத்தை ஈர்த்தன. ஜவாத் மரைக்கார் அவர்கள் கல்பிட்டி அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கற்பித்தபோது, அக்கலாபீடம் தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடியது.
அவ்வேளை மலராசிரியராக இருந்து அவர் வெளியிட்ட ‘வெள்ளிவிழா மலர்’ அவரின் எழுத்துத் துறையினதும் கற்பனை வளத்தினதும் ஆற்றலுக்கு மற்றுமொரு சான்றாகும். அல் அக்ஸா வெள்ளிவிழா மலர், அச்சு வசதிகள் நவீனத்துவமற்ற அக்காலத்தில் புதுமைகளைப் புகுத்தி, நேர்த்தியாக வெளிவந்த படைப்பாகும். பேராசிரியர் க. கைலாசபதி பேராசிரியர் எம். ஏ. நுஃமான் போன்றோரின் பாராட்டுக்களை அது அப்போது பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயின்றபோது கல்வியியலாளர்களும், எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களுமான அன்பு ஜவஹர்ஷா, ஹாபிஸ் இஸ்ஸதீன், திக்குவல்ல கமால், மூதூர் முஹைதீன், கலைவாதி கலீல், ஓவியர் ரமணி, ரைத்தலாவல அஸீஸ், எம். எஸ். அமானுல்லாஹ் போன்றோரின் நட்பு கிடைத்தது. அவர்களின் சகவாசம் தனது இலக்கியத் துறை மேம்பாட்டுக்கு மேலும் உரமாய் அமைந்தது.
அக்காலத்தில் இயங்கிவந்த வானம்பாடிக் கவிஞர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. வானம்பாடி பிரக்ஞை, சதங்கை, தேன்மழை, விவேகச்சித்தன், கணையாழி போன்ற சிற்றேடுகள் தமிழக நண்பர்கள் மூலம் அவருக்கு வந்து சேர்ந்தன. ஜவாத் மரிக்கார் அவர்கள் தமிழ்நாட்டிலும் பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். தமிழ் நாட்டில் மட்டுமன்றி கேரளாவிலும் புகழ்பூத்த இலக்கியவாதிகளின் தொடர்பு இன்றும் அவருக்கு இருக்கின்றது. ஜவாத் மரைக்காரின் வீட்டு நூலகம் பல்துறைசார் நூல்களால் நிரம்பியது. ஆயிரக்கணக்கான நூல்களை அவர் சேகரித்து வைத்துள்ளார்.
அவற்றுள் பல அரிய பழைய நூல்கள். பிரசுரங்கள், பத்திரிகைகள் உட்பட பல அரிய ஆவணங்களும் அவரிடம் உள்ளன. அண்மையில் https://noolaham.org மூலம் அவற்றில் பல நிகழ்நிலை (Online) சேகரிப்புக்காகப் பெறப்பட்டன. விஞ்ஞான ஆசிரியராக, விஞ்ஞான ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றிய அவரின் தமிழ் மொழிப் புலமையும் இலக்கிய ஆர்வமும் பிரமிக்கத்தக்கவை. யாப்பிலக்கண, மொழி இலக்கணத்தில் தேர்ச்சிவாய்ந்த அவர் மரபுக்கவிதைகளுடன் புதுக்கவிதைகளையும் அதன் நுட்பங்கள் அறிந்து எழுதக்கூடிய வல்லமை படைத்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவியரங்குகளில் பங்கேற்றுள்ளதுடன் அவற்றைத் தலைமைதாங்கியும் நடத்தியுள்ளார். புத்தளம் மண்ணில் இடம்பெற்ற பல கவியரங்குகள் அவர் தலைமையில் இடம்பெற்றுள்ளன.
கலாசார அமைச்சின் முஸ்லிம் நுண்கலைக் குழு உறுப்பினராகவும் அகில இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சம்மேளனத்தின் உப செயலாளராகவும் அகில இலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் உப தலைவராகவும் அமைதிப் பணியாற்றிய ஜவாத் மரைக்கார் அவர்கள் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். அவை அனைத்தும் அவரை நாடிவந்தவையே தவிர, அவர் தாமாகக் கேட்டுப் பெற்றவையல்ல.
அவற்றுள் சில:
1. கலாபூசணம் – 1996 (விண்ணப்பம், சிபாரிசுகள் போன்றன இல்லாத காலம் அது)
2. அகில இலங்கை சமாதான நீதவான் – 2000 (வரலாற்றில் முதல் தடவை பொலீஸ் அறிக்கை, சிபாரிசுகள் இல்லாமல் கொடுக்கப்பட்ட காலம்)
3. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பொன்னாடை போர்த்திக் கெளரவம் – 2002
4. அகில இலங்கை சமாதான நீதிபதிகள் ஏற்பாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரால் வழங்கப்பட்ட தேசகீர்த்தி விருது – 2005
5. ஸ்ரீ லங்கா விஸ்வ சமாதி பதனம ஏற்பாட்டில் தேச மான்ய, லங்கா திலக, சமாஜ சுபசாதன சூரி விருதுகள்
மூத்த இலக்கியவாதி கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் அவர்களின் இலக்கிய ஆற்றல்களை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஜாமிஆ நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பான ‘றாபிததுன் நளீமிய்யீன்’ புத்தளம் கிளையினர் கடந்த 28.07.2023 அன்று நிகழ்நிலை (Online) மூலம் ஏற்பாடுசெய்த ‘இப்படியும் பாடினரே’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இலக்கிய அமர்வு பலரின் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கல்விமான் ஜவாத் மரைக்கார் அவர்கள் கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றத்தின் – Pillars (PILLARS) (Puttalam Intellectuals Lobby for Literacy Advancement and Reforms) ஆலோசகர்களின் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று அவர் தனது எழுபதியைந்தாவது அகவையில் காலடி எடுத்துவைத்துள்ளார்.
பழுத்த அனுபவங்களைப் பறைசாற்றும் வகையில் அவர், நூல்களை வெளியிட வேண்டும். இதுவரை வெளிவராத ஒன்றாக, அவர் வெளிக்கொணர முயற்சிக்கும் ‘அகராதி’ விரைவில் வெளிவரவேண்டும். எல்லாம் வல்ல ஏக இறைவன் அவருக்கு நல்லாரோக்கியத்தை வழங்கவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றேன்.- Vidivelli