ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகார வழக்கு : சட்ட மா அதிபர் முன் வைக்க முயன்ற புகைப்பட தொகுப்பினால் சர்ச்சை
தீர்மானம் டிசம்பர் 13 இல்; மட்டக்குளி மைதானத்தில் மாணவர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்ததை ஒப்புக்கொண்ட சாட்சியாளர்
எப்.அய்னா
அடிப்படைவாதப் போதனைகளை செய்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் அல்-சுஹைரியா அரபுக்கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கின் சாட்சியாளர்களாக அரச தரப்பு குறிப்பிடும் பல மாணவர்களின் வாக்கு மூலம் அவர்களின் வீடுகளில் வைத்தோ அல்லது சி.ஐ.டி.யில் வைத்தோ பதிவு செய்யப்படவில்லை என்பதும், மட்டக்குளி பகுதி விளையாட்டு மைதானம் ஒன்றில் வைத்து அவை பதிவு செய்யப்பட்டதாகவும் புத்தளம் மேல் நீதிமன்றில் வெளிப்பட்டது. இது தொடர்பிலான வழக்கு கடந்த 22 ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரம் குறித்த வழக்கானது புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன தலைமையிலான குழுவினரும் அல் சுஹைரியா மத்ரசா அதிபருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தலைமையிலான குழுவினரும் ஆஜராகினர்.
கடந்த 22 ஆம் திகதி வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபருக்காக மன்றில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வாவுடன் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, அரச தரப்பின் சாட்சியங்களை நெறிப்படுத்தினார்.
இதன்போது இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுத்த விசாரணை அதிகாரி ஒருவர் மன்றில் சாட்சியமளித்தார். சி.ஐ.டி.யின் உள்ளக உளவுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக அப்போது கடமையாற்றிய அதிகாரியே இவ்வாறு சாட்சியமளித்தார். தனக்கு அப்போதைய பணிப்பாளர் வழங்கிய உத்தரவுக்கு அமைய ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் விசாரணைகளை ஆரம்பித்ததாக அவர் கூறினார்.
இதன்போது அல் சுஹைரியா மத்ரஸா மாணவர்களில் பலர் மட்டக்குளி பகுதியை சேர்ந்தவர்கள் என வெளிப்பட்டதுடன், அவர்களை மட்டக்குளி பகுதி மைதானம் ஒன்றுக்கு அழைத்து வாக்கு மூலம் பதிவு செய்ததாக குறித்த அதிகாரி குறிப்பிட்டார். கொரோனா நிலைமை அதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.
எனினும் இவ்வழக்கின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான மாணவன் மலிக்கின் வாக்கு மூலமானது, அவரது வீட்டுக்கு சி.ஐ.டி. வாகனம் அனுப்பப்பட்டு, அவர் சி.ஐ.டி.க்கு வரவழைத்து வந்து பெறப்பட்டது என்பதை குறித்த அதிகாரி குறிப்பிட்டார்.
இதன்போது சாட்சியாளர் மலிக்குக்கு புகைப்பட தொகுப்பொன்றினை காட்டி அவரது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது எனவும், அதனூடாக அவர் மதரசாவுக்கு வந்து சென்றோரை அடையாளம் கண்டதாக அவ்வதிகாரி கூறினார்.
இதன்போது அந்த புகைப்படத் தொகுப்பை மன்றில் சான்றாக பதிவு செய்ய சட்ட மா அதிபர் முனைந்த போது அங்கு சர்ச்சை எழுந்தது.
ஹிஜாஸ் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி அசித் சிறிவர்தன மற்றும் சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆகியோர் இதற்கு கடும் ஆட்சேபனம் வெளியிட்டனர்.
நீதிமன்றில் சான்றாவணமாக பதியப்பட முனையும் புகைப்பட தொகுப்பு தானா , சாட்சியாளர் மலிக்குக்கு காண்பிக்கப்பட்டது என்பதை எப்படி நம்புவது எனவும், அப்படியானால் அது ஏன் மலிக்கின் சாட்சியம் பெறப்படும் போது அவருக்கு காண்பிக்கப்படவில்லை எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன் புகைப்படம் என்பது சாட்சிகள் கட்டளை சட்டத்தின் கீழ் சாட்சியமாக பதிவு செய்யப்படுவதானால் அதற்குரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அவர்கள் கோரினர்.
எனினும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம, தான் புகைப்படங்கள் தொடர்பில் சாட்சியம் நெறிப்படுத்த எதிர்பார்க்கவில்லை எனவும், அதில் உள்ள கையெழுத்து தொடர்பில் மட்டுமே கேட்கப் போவதாக கூறினார்.
இந்தநிலையில், குறித்த புகைப்பட தொகுப்பை சான்றாவணமாக மன்றில் பதிவு செய்ய அனுமதிப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதனைவிட இந்த புகைப்பட தொகுப்பு, பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்டிராத நிலையில், அதனை கையளிக்க உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து வழக்கானது எதிர்வரும் 2025 ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்ப்ட்டது.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதிநிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை காண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli