உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி பெற்றுத் தாருங்கள்

கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் ஜனாதிபதியிடம் மன்றாடிய மக்கள்

0 23

எம்.வை.எம்.சியாம்

‘‘ஓர் உயிர் பறி­போகும் பட்­சத்தில் அந்த உயிரை பெற்­றுக்­கொ­டுப்­பதே அதற்கு நீதி­யாக அமையும். ஆனால் அந்த வாழ்வை மீளப் பெற்றுக் கொடுக்க முடி­யாது என்­பதை நாம் அறிவோம். இதுவே யதார்த்தம். குற்­ற­வா­ளி­களைக் கண்­ட­றிந்து சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டனை பெற்­றுக்­கொ­டுப்­பதும், அவ்­வா­றான பேர­ழிவு மீண்டும் நடக்­காமல் பார்த்துக் கொள்­வ­துமே நீதி­யாக அமையும். ஓர் உயி­ருக்­குப் பகரமாக மற்­றொரு உயிரைப் பெற்றுக் கொடுப்­பது நீதி­யாக அமை­யாது’’ என்று ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

இந்த விட­யங்கள் மண்­ணுக்குள் புதை­யுண்டு அழி­வ­தற்கு நான் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தோடு, மீண்டும் அவ்­வா­றா­ன­தொரு அழி­வுக்கு நாட்­டுக்குள் இட­ம­ளிக்­காத வகையில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக நீதியும் நியா­யமும் நிலை நிலை­நாட்­டப்­படும் என ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்தார்.
கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை நீர்கொழும்பு கட்­டு­வா­பிட்­டிய தேவா­ல­யத்­திற்குச் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி ஈஸ்டர் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்­காக அமைக்­கப்­பட்­டி­ருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்­சலி செலுத்­தினார். ஜனா­தி­ப­தியின் வரு­கையை நினை­வூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்­போது வழங்கி வைக்­கப்­பட்­டது.

பின்னர் ஈஸ்டர் தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருடன் ஜனா­தி­பதி கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­ட­துடன் இதன்­போது நேர­டி­யாக ஜனா­தி­ப­தி­யிடம் அவர்கள் பிரச்­சி­னை­களை எடுத்துக் கூறினர்.

இதன்­போது அங்கு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க,
இந்­நாட்டில் அண்­மைய காலத்தில் மிக மோச­மான அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திக­தியே நிகழ்ந்­தது. அந்த விட­யங்கள் மண்­ணுக்குள் புதை­யுண்டு அழி­வ­தற்கு நான் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் தனக்கு வாக்­க­ளித்­ததன் பின்­ன­ணியில் ஈஸ்டர் தாக்­குதல் தொடர்­பி­லான நீதியும் நியா­யமும் நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்ற எதிர்­பார்ப்பும் இருந்­த­தென நான் நம்­பு­கிறேன்.

இந்­நாட்டு மக்­களின் நோக்­கங்­களும் எதிர்­பார்ப்­புக்­களும் நான் கொண்­டி­ருக்கும் நோக்­கங்கள் மற்றும் எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு மாறு­பட்­டவை அல்ல. ஈஸ்டர் தாக்­குதல் குறித்து மக்கள் எதிர்­பார்க்கும் நீதியும் நியா­யமும் நிலை­நாட்­டப்­படும் என்­ப­துடன் அதற்­கான முன்­னெ­டுப்­புக்கள் தற்­போதும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பி­லான முழு­மை­யான முடி­வொன்­றுக்கு வந்து அந்த முடிவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு சாட்­சி­களை திரட்­டு­வ­து­வதால் மாத்­திரம் இந்த விசா­ர­ணை­களை கொண்டு நடத்த முடி­யாது. வெளிப்­படைத்தன்­மை­யுடன் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ருக்கு அறி­வு­றுத்­தி­யி­ருக்­கிறேன்.

அர­சியல் மாற்­றத்­துக்­காக இந்த தாக்­குதல் நிகழ்த்­தப்­பட்­டதா என்ற கேள்வி மக்கள் மத்­தியில் உள்­ளது. அர­சி­ய­லுக்­காக நூற்றுக் கணக்கில் அப்­பாவி உயிர்­களை பலி­யி­டு­வது பாரிய அழி­வாகும்.அவ்­வா­றான நிலைப்­பாடு நாட்டின் அர­சி­ய­லுக்குள் காணப்­ப­டு­மாயின் அந்த நிலை­மையை
முழு­மை­யாக துடைத்­தெ­றிய வேண்டும்.

இரண்­டா­வது விட­ய­மாக அப்­போ­தைய ஆட்சிப் பொறி­மு­றையும் இத­னுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­ததா என்ற சந்­தே­கமும் மக்கள் மத்­தியில் நில­வு­கி­றது. அவ்­வா­றான நிலை மிகவும் பாது­காப்­பற்­றதும் ஆபத்­தா­ன­து­மான நிலை என்­ப­தோடு அதன்­படி இதற்குள் நடந்­தது என்­ன­வென்­பதை கண்­ட­றிய வேண்­டி­யது மிக அவ­சி­ய­மா­னது.

அடுத்­த­ப­டி­யாக 274க்கும் மேற்­பட்­ட­வர்­களின் உயிர்­களை பறித்த மற்றும் பெரு­ம­ள­வா­ன­வர்­களை காயத்­துக்கு உள்­ளாக்­கிய அழி­வினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தமது அன்­புக்­கு­ரி­ய­வர்கள் மீது கொண்­டி­ருக்கும் அன்­புக்­கான நீதியை நிலை­நாட்ட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதேபோல் இவ்­வா­றான பிரச்­சி­னை­யினால் ஏற்­ப­டக்­கூ­டிய மிகப்­பெ­ரிய பாதிப்­பி­லி­ருந்து சமூ­கத்தை பாது­காத்­த­மைக்­காக மத­கு­ரு­மார்­க­ளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறு­கிறேன். சமூ­கத்­திற்குள் காணப்­பட்ட இணைவு ஒரு­மைப்­பாடு நம்­பிக்கை சிதைந்து போயி­ருக்­கி­றது. மற்­று­மொரு சமூ­கத்தின் மீது குரோ­தத்­துடன் பார்க்கும் நிலை உரு­வா­வது சமூக நல்­வாழ்­விற்கு மிகப்­பெ­ரிய ஆபத்­தா­னது. அதனால் ஈஸ்டர் தாக்­குதல் குறித்து நியா­ய­மான விசா­ர­ணை­யொன்றை நடத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

கடந்­து­போன 05 வரு­டங்­களில் ஒவ்­வொரு ஏப்ரல் 21 ஆம் திக­தியும் வீதி­க­ளி­க­ளிலும் சந்­தி­க­ளிலும் ஒன்­று­கூ­டிய மக்கள் அவர்­களின் மன­தி­லி­ருந்த நீதி தொடர்­பி­லான எதிர்­பார்ப்­புக்­க­ளையே வெளிப்­ப­டுத்­தினர் என்று ஜனா­தி­பதி மேலும் குறிப்­பிட்டார்.

இதன்­போது ஈஸ்டர் தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்ப சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது.

கண்ணீர் மல்க தாய் ஒருவர்,
ஜனா­தி­பதி அவர்­க­ளே, எமது இந்த அவல நிலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுங்கள். நான் அதனை மாத்­தி­ரமே உங்­க­ளிடம் எதிர்­பார்க்­கிறேன். எனது மகன், எனது பெரிய மகள் பெரிய மகனின் இரு பிள்­ளைகள் அவ­ரது மூன்று பிள்­ளை­களும் அவர்கள் அனை­வ­ரையும் இழந்து தனி­யா­கவே வாழ்­கிறேன்.

இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி-,
அம்மா நீங்கள் கூறி­யது உண்மை. தனிப்­பட்ட வகையில் எடுத்துக் கொண்­டாலும் உயி­ரி­ழக்கும் வேத­னையை நானும் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கிறேன். காரணம் எதுவும் இல்­லாமல் எமக்கு நெருங்­கி­ய­வர்­களை குழு­வொன்று கொலை செய்யும் போது தினமும் எமது நெஞ்சு வலிக்கும். நாமும் அதனை அனு­ப­வித்­துள்ளோம்.இதற்கு நியா­யத்தை பெற்­றுக்­கொ­டுப்­பதை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாத பொறுப்­பாக உள்­ளது.

மற்­று­மொரு தாய்-­
பு­ல­னாய்வுப் பிரி­வினர் தம்மை தவ­றாக வழி­ந­டத்­தி­ய­தாக ரவி சென­வி­ரத்­னவும், ஷானி அபே­ய­சே­க­ரவும் குறிப்­பிட்­டி­ருந்­தனர். அவ்­வா­றாயின் எதிர்­கா­லத்தில் விசா­ரணை நடத்தும் தரப்­பி­னரை தவ­றாக வழி­ந­டத்தி இருந்தால் இன்றும் அந்த நிலைமை ஏற்­ப­டாது என்­ப­தற்கு நீங்கள் வழங்கும் உறுதி என்ன?

இதற்கு பத­ல­ளித்த ஜனா­தி­பதி,
விசா­ரணை மேற்­கொள்ளும் பட்­சத்தில் இந்த அதி­கா­ரிக்கு அந்த சம்­ப­வத்­துடன் தொடர்பு இருக்கும் என தெரிந்­து­கொள்ளும் போது அவரை பிறி­தொரு பக்­கத்தில் வைப்­ப­தற்கு ஒரு­போதும் பின்­வாங்க போவ­தில்லை. அதே­போன்று மற்­றைய பக்­கத்தில் உள்ள அனைத்­தையும் ஒதுக்கி வைக்கப் போவ­து­மில்லை.ஒரு சாரா­ருக்கு மாத்­திரம் நியா­யத்தைப் பெற்றுக் கொடுப்­பது நன்­மை­யாக அமை­யாது. ஏனைய அனை­வ­ருக்கும் நன்மை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். எனவே சந்­தேகம் கொள்ள வேண்டாம். அந்த வேலையை நாம் சரி­யாக செய்வோம்.

தனது பெற்­றோ­ரையும், பிள்­ளை­யையும் இழந்த தந்தை ஒருவர்,
தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக இங்கு வருகை தந்த நாம் மாத்­தி­ரமே அறிந்­தி­ருக்­க­வில்லை. இந்த தாக்­கு­தலை தடுப்­ப­தற்கு சந்­தர்ப்பம் இருந்­தது. உங்­களால் தண்­ட­னை ­பெற்­றுக்­கொ­டுக்க முடி­யுமா? அல்­லது எனது பெற்­றோ­ரையும் பிள்­ளை­யையும் உயி­ருடன் மீள தர முடி­யுமா?

இம்முறை தேர்­தலில் உங்­க­ளுக்கே நான் வாக்­க­ளித்தேன். ஆனால் அர­சி­யலை முற்­றாக வெறுத்­துள்ளேன். நீங்கள் இங்கு வருகை தரு­கி­றீர்கள் என தெரிந்திருந்தால் நான் நிச்­சயம் இங்கு வந்­தி­ருக்க மாட்டேன். உங்­க­ளிடம் நான் வின­ய­மாக ஒன்றை மாத்­திரம் எதிர்­பார்க்­கிறேன். அர­சி­யல்­வா­தி­களால் தொட­மு­டி­யாத நீதித்­துறை சுதந்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­துங்கள். அன்று தான் எமது நாட்டின் தூய்­மை­யற்ற அர­சியல் முடி­வுக்கு கொண்டு வரப்­படும்.

இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி-
பிர­மு­கர்­க­ளுக்­கான பாது­காப்­புப்­பி­ரி­வினர் இதனை அறிந்­தி­ருந்­தனர். புல­னாய்வுப் பிரி­வினர் பிர­மு­கர்­க­ளுக்­கான பாது­காப்பு பிரி­வுக்கு அறி­வித்­த­னரா என்­பது எனக்கு தெரி­யாது. எமது கட்­சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மூவர் இது­வரை அந்த பிர­முகர் பாது­காப்பை பெற்­றது கிடை­யாது. பிர­மு­கர்­க­ளுக்­கான பாது­காப்பை பெற்­ற­வர்கள் மாத்­தி­ரமே அதனை அறிந்­தி­ருக்க முடியும்.

ஒரு உயிர் பறி­போகும் பட்­சத்தில் அந்த உயிரை பெற்­றுக்­கொ­டுப்­பதே அதற்கு நீதி­யாக அமையும். ஆனால் அந்த வாழ்வை மீளப் பெற்றுக் கொடுக்க முடி­யாது என்­பதை நாம் அறிவோம். இதுவே யதார்த்தம்.நீதி என்றால் என்ன? குற்­ற­வா­ளி­களை கண்­ட­றிந்து சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டனை பெற்­றுக்­கொ­டுப்­பதே நீதி­யாக அமையும். அவ்­வா­றான பேர­ழிவு மீண்டும் நடக்­காமல் பார்த்துக் கொள்­வதே நீதி­யாக அமையும். ஒரு உயி­ருக்­காக மற்­றொரு உயிரை பெற்றுக் கொடுப்­பது நீதி­யாக அமை­யாது. இந்த கட்­ட­மைப்பு வீழ்ச்­சி­ய­டைய அர­சி­யலே கார­ண­மாக இருக்­கு­மாயின் அந்த அமைப்பை சீர்­செய்­வதும் அர­சி­ய­லா­கவே அமையும். அர­சி­யலின் கார­ண­மா­கவே நீதிக்­கட்­ட­மைப்பு சீர்­கு­லைந்­துள்­ள­தாக சிலர் நினைக்­கின்­றனர்.

அர­சியல் இன்றி இந்த கட்­ட­மைப்பை சீர் செய்ய முடி­யாது. ஒட்­டு­மொத்த கட்­ட­மைப்பின் வீழ்ச்­சிக்கு அர­சி­யலே வித்­திட்­டுள்­ளது. எனவே இந்த கட்­ட­மைப்பை அர­சியல் மூலமே சரி செய்ய வேண்டும்.

தனது இரு பிள்ளைகளை இழந்த தாய் ஜனாதிபதியை நோக்கி-,
எனது மகளுக்கு 20 வயது. எனது மகனுக்கு 13 வயது. துடிக்க துடிக்க அங்கிருந்த கதிரையில் தான் தமது உயிரை நீத்தனர். இவ்வளவு காலமும் நியாயத்தை கோரி போராடினோம். இரு பிள்ளைகளை இழந்த வேதனையில் எனது கணவர் பட்ட துன்பத்தை நான் மாத்திரமே அறிவேன்.

குற்றவாளிகளை தண்டிப்பதாகக் கூறியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். ஆணைக்குழுக்களை ஆரம்பித்து விசாரணைகளை செய்தார்.
மக்கள் பணத்தை விரயம் செய்தார்கள்.நாம் பட்ட துன்பங்கள் போதும். இன்னும் தாமதப்படுத்தாதீர்கள். உங்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வேதனையுடனேயே இதனை நான் கூறுகிறேன்.

ஏன் இன்னும் எமது நாட்டில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை. குற்றவாளிகள் ஏன் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அதிகாரத்திற்குள் இவை மறைக்கப்படுகின்றன. இனிமேலும் இவை இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.