அடுத்துவரும் இலங்கையின் தேர்தலில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பிளவுபட்டு பலவீனமாகும் ஆபத்து இருப்பதாக இப்புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய அனுசரணையுடன் நடாத்தப்பட்ட புதிய ஆய்வுக் கருத்திட்டத்தின் மூலம், எதிர்வரும் தேர்தல்களில் இனரீதியான சிறுபான்மையினரும் மற்றும் சமயக் குழுக்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பிளவுபட்டுப் பலவீனமடையும் ஆபத்துக்கு உள்ளாகியிருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசியலில் வினைத்திறனுடன் பங்கேற்பதற்கும் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை ஊக்குவிப்பதற்குமுள்ள இயலளவுக்கும் பாதிப்பு ஏற்படுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்திற்கான சிறுபான்மையினரை வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் (Minority empowerment for democracy and pluralism ) ஒரு பகுதியாக ஒக்ஸ்ஃபோர்ட் ப்றூக்ஸ் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவருவதாவது, ஐக்கிய தேசிய கட்சி(UNP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (SLPP) போன்ற பிரதான தேசிய கட்சிகள் சிறுபான்மையினர் பங்கேற்பதற்கும் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கும் கட்சிகளில் உள்ளக ரீதியாக வழங்கப்படும் வாய்ப்புக்களைப் படிப்படியாகக் குறைத்துள்ளமையை அவதானிக்கலாம். அத்துடன், சிறுபான்மைக் கட்சிகள் பிளவுபட்டும், அவர்களுடைய தேவைகளையும் உரிமைகளையும் எடுத்தியம்புவதற்கு மாறாக, பெரும்பான்மையினரின் நிகழ்ச்சி நிரலுக்கமைவாக தமது பரப்புரைகளை வடிவமைத்துள்ளனர்.
‘இலங்கையில் பிரதான தேசிய கட்சிகளின் தலைமைப் பதவிகள் வகித்த சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்களைப் பெயர் குறித்துரைக்கும் வரலாறு காணப்பட்டது. இக்கட்சிகளிலுள்ள சிறுபான்மை அரசியல்வாதிகள் பெரும்பாலும் தனியாக்கப்பட்டு இருக்கின்றமையை உணர்வதுடன், சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எடுத்தியம்புவதற்குள்ள வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளமையால், தற்போதைய நிலைமை மாறியுள்ளமையை ஒக்ஸ்ஃபோர்ட் ப்றூக்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரதம ஆய்வாளர் கலாநிதி. ஃபாரா மிஹ்லார் தெரிவித்துள்ளார்.
கூட்டணிகள் மூலம் சிறுபான்மையினருக்கு ஏற்படும் சவால்கள்
தற்போது தேசிய கட்சிகள் தமது சொந்த வேட்பாளர்களை போட்டியிடச் செய்வதை விடவும் சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டணிகளை அல்லது ஒருங்கிணைவதற்கு விருப்பம் காட்டுகின்றன. இக் கூட்டணியை அல்லது ஒருங்கிணைவை உருவாக்குகின்ற போட்டித்தன்மையான செயன்முறையில் சிறுபான்மைக் கட்சிகளின் வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கும், அவர்கள் பிரதான தேசிய கட்சிகளுக்கு தொடர்ச்சியான கட்சித் தாவல்கள் காரணமாக அமைந்துள்ளது. இது அவர்கள் மீதுள்ள நம்பகத்தன்மையை இழக்கச் செய்வதற்கான காரணம், அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வாக்குறுதிகளாலும் மற்றும் வேறு தனிப்பட்ட நன்மைகளுக்காகவும் மோசடியான முறையில் நடந்து கொள்வதாலாகும்.
‘முஸ்லிம்கள் மற்றும் மலையக சமூகத்தின் சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறுவதற்கு விருப்பம் காட்டுவது, அது தமது சமூகத்திற்காக ஏதேனுமொன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களாகக் கருதுகின்றார்கள். “அதிகாரத்துடன் முன்னோக்கிப் பயணிக்கின்ற சமீபத்திய விரக்தியானது, அவர்களின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் மோசமாகப் பாதித்துள்ளமையால் சமூகத்திலுள்ள வாக்காளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதென, கலாநிதி மிஹ்லார் மேலும் தெரிவித்தார்.
இத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ‘இவை கரிசினை கொள்ள வேண்டிய விடயங்களாக அமைவதுடன், புதிய சுயேச்சை வேட்பாளர்கள் பலர் தேர்தலில் போட்டியிடுவதுடன், கட்சிப் பிளவுகள் பலவற்றையும் காணக்கூடியதாகவுள்ளது. இப்போட்டியானது கட்சிகள் மற்றும் இனக்குழுக்களுக்கிடையே தேவையற்ற பதற்றங்களைத் தோற்றுவிப்பதுடன், அவை வன்முறைகளையும் அதிகரிக்கச் செய்யுமென’, கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி மன்றத்தின் புஹாரி முகமட் அவர்கள் தெரிவித்தார்.
சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் தேர்தலில் வேட்புமனுப் பத்திரங்களைத் தயாரிக்கும் போது ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு குறுகியகால நன்மைகளை விடவும் இனரீதியான அரசியல் மற்றும் சிறுபான்மையினரிக் உரிமைகளுக்கான நீண்டகால நல்விளைவுகளைவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படல் வேண்டும். சிறுபான்மை அரசியல் பிரபலமற்ற தலைவர்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நலிவுற்ற குழுக்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் தோல்வியடைந்தமையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமையை ஆய்வின் மூலம் தெரியவருகின்றது. பிரதான கட்சிகளால் கடைப்பிடிக்கப்படும் மூலோபாயங்களால் இந்நிலைமை தீவிரமடைவதற்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.
சிறுபான்மை பெண் வேட்பாளர்கள்
சிறுபான்மை சமூகங்களில் பெண்களை தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்துரைப்பதில் அரசியல் கட்சிகள் புறக்கணிப்புக்களைக் காட்டுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் வேட்புமனுப் பத்திரத்தில் பெயர் குறித்துரைக்கப்பட்டிருப்பினும், அவர்களுடைய தனிநபர் நிலையை மேம்படுத்துவதற்கான போதியளவு நிதி, பாதுகாப்பு அல்லது வாய்ப்புக்களைப் பெண்களுக்கு வழங்குவதில்லை. பெண்களில் அதிகமானவர்கள் போட்டியிடுவதற்கு இயலுமை கிட்டும் வகையில் சிறுபான்மைக் கட்சிகளின் தமது கட்சி உள்ளகக் கட்டமைப்புக்கள் மற்றும் கலாச்சாரத் தடைகளுக்கு சவால் விடுப்பதில் தோல்வியடைந்துள்ளமை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
‘சிறுபான்மை கட்சிகள் சிறுபான்மை சமூகங்களிலுள்ள பெண்களை பெயர் குறித்துரைக்க வேண்டியதுடன், அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான நிதி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். தாம் வாழ்கின்ற சமூகங்களிலுள்ள அதிகமான துணிச்சலான பெண் தலைவியர்களுடன் இணைந்து செயலாற்றுவதாகவும், ஆனாலும் அவர்கள் கட்சியின் பிரதான பரப்புரை மேடைகளில் கலந்து கொள்வதில்லையெனவும்’, மனித அபிவிருத்தி நிறுவனத்தில் (HDO), கருத்திட்டப் பங்காளரான பொன்னையா லோகேஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி (NPP)
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அவர்களின் கட்சியான தேசிய மக்கள் சக்தி (NPP) சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகளை ஊக்குவிப்பதற்காக முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட மொத்தம் 15 வேட்பாளர்களில் ஒருவர் மாத்திரமே சிறுபான்மை வேட்பாளரை நியமிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தியமை மிகக் குறைவாகவே இருக்கின்றது. அத்துடன், குறிப்பாக தமிழ் பேசுகின்ற மக்களை புறக்கணித்து சிங்கள மொழியில் மாத்திரம் செயற்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி தமது வேட்புமனுப் பட்டியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், குறித்த பெண் பிரதிநிதிகள் சிறுபான்மை சமூகங்களிலும் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.
வடக்கு கிழக்கு மோதல்களால்
ஏற்பட்ட பாதிப்புக்கள்
மோதல்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள வாக்காளர்கள், இனரீதியாகவும் அரசியல் அடிப்படையிலும் பெரிதும் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமை சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் குறிப்பிடத்தக்களவு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. வடக்கு கிழக்கு வாக்குகளின் அடிப்படை பிளவுபட்டுள்ளமையை ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. அண்ணளவாக மூன்றிலொரு பங்கு மக்கள் தமது பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமையளித்து அரசுடன் இணைந்துகொள்வதற்கு விரும்புவதுடன், மேலும் மூன்றிலொரு பங்கினர் தேசிய அரசியலிலிருந்து முழுமையாக விலகுவதற்கும் விரும்பம் காட்டுகின்றனர். தமிழ் புலம்பெயர்வாழ் சமூகம் குறித்த இரண்டாவது குழுவுக்கு செல்வாக்கு செலுத்துவதாகக் குற்றஞ்சுமத்தப்படுவதுடன், தேசிய கட்சிகளால் முன்னிறுத்தப்பட்ட சில வேட்பாளர்கள் முதலாவது குழுவுக்கு செல்வாக்க செலுத்துகிறார்கள். ஆயினும், இவ் வேட்பாளர்கள் பெரும்பாலும் வன்முறைகளைக் கொண்டமைந்த வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், அவர்கள் பிளவுபட்டுள்ளமையையும் காணலாம்.
வன்னி மாவட்டத்திலும், கிழக்கிலும் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகளுக்கிடையிலான போட்டிகளால் வாக்காளர்களின் தீவிர இனவாத மயப்படுத்தல் காணப்படுகின்றது. யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் இத்தகைய பதற்றங்கள் மோதலுக்கு வழிவகுக்கும், இதனை அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகள் இனப்பிரச்சினைகளை அரசியலாக்க முயற்சிக்கின்றன. அத்துடன் உரிமைகள் அல்லது இன மோதலுக்கு அரசியல் தீர்வு குறித்த ஆக்கபூர்வமான கொள்கைகளை விடவும், எதிர்த்தரப்பினருக்குப் பதலளிக்கும் வகையிலான பரப்புரைகளை மேற்கொள்கின்றமையை இவ் ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.
“35 வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தில் பிரதான கட்சிகள் இன்னுமே சிக்கிக் கொண்டிருக்கின்றன, இதற்கப்பால் சிறிதளவு சலுகைகளை மட்டும் வழங்குகின்றன, மேலும் சிறுபான்மை இனரீதியான கட்சிகள் தமது தேர்தல் தொகுதிகளில் முக்கியமான சிறுபான்மையினரின் உரிமைகளை முன்னிறுத்துவதற்கு தேர்தல் மேடைகளை சரியான வகையில் பயன்படுத்துவதில்லை. அவர்கள் தேசியக் கட்சிகளுக்கு எதிரெதிர் பதிலளிப்புக்களைக் காட்டுவதையே முக்கியமெனக் கருதுகின்றனர்” என கலாநிதி மிலார் அவர்கள் தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைத்தல், பொதுமக்களின் காணிகளை மீளக் கையளித்தல், மற்றும் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்றவற்றை சகல அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்வாங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்காணிப்பும் தரவுகளும்
இனம், மதம் மற்றும் பால் என பிரிக்கப்பட்ட தரவுகளில் காணப்படுகின்ற பற்றாக்குறையையும் இவ் ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. தேசியக் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையகம் போன்ற அரச நிறுவனங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு சிறுபான்மை அரசியல் பங்கேற்பு பற்றிய தகவல்களைத் திரட்டல் வேண்டும்.
‘தேர்தல் கண்காணிப்பாளர்கள் தரவுகளை பிரிக்க வேண்டும், சிறுபான்மையினர் மீதான இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எவ்வாறு தடுக்கின்றனதெனவும் ஆராய்ந்து பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்’ என இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் அசாத் முஸ்தபா தெரிவித்தார்.- Vidivelli