ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்
டெல் அவிவ் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வீச்சு பதிலடி பலமாக இருக்கும் என இஸ்ரேல் எச்சரிக்கை
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிரந்தர போர் மூளும் அபாயம் தோன்றியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை இலக்கு வைத்து ஈரான் நூற்றுக் கணக்கான ஏவுகணைகளை ஏவியதில் இஸ்ரேலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் நோக்கிலேயே ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.
‘ஒபரேஷன் ட்ரூ ப்ரொமிஸ் 2’ எனும் பெயரிலான தமது தாக்குதல் 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக ஈரான் பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் நசீர்சாதெஹ் தெரிவித்துள்ளார். ஈரானின் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகள் எதிரியின் ஏவுகணை பாதுகாப்பு திட்டங்களையும் மீறிச் சென்று இராணுவ இலக்குகளை அடைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் பொது மக்கள் இருப்பிடங்களை தாம் தாக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் மூன்று இராணுவ தளங்கள் ஒரு புலனாய்வு தளம் ஆகிவற்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஏப்ரல் மாதத்திலும் ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கியது.
ஈரானின் இந்த தாக்குதல் தற்போது நின்றுள்ளதாகவும், தற்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் இஸ்ரேல் நேற்று மாலை தெரிவித்தது.
செவ்வாய்கிழமை இரவு ஈரான் 181 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. எனினும் சுமார் 400 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தாம் இஸ்ரேலை நோக்கி ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது பெரிய தாக்குதலாகும். ஐந்து மாதங்களுக்கு முன்பு சுமார் 110 பாலிஸ்டிக் (மேலே நீண்ட உயரம் சென்று தாக்கும்) ஏவுகணைகள் மற்றும் 30 க்ரூஸ் (தாழ்வாக பறந்து தாக்கும்) ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை ஈரான் தாக்கியது.
செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 7:45 க்கு (இந்திய நேரம் இரவு 10:15 மணி) டெல் அவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏவுகணைகள் பறப்பதை தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காட்சிகளில் காண முடிந்தது.
தாக்குதலின் போது சில ஏவுகணைகள் இலக்குகளை தாக்கியதை இராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர். இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தனது இராணுவம் முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியது என்றும் 90 சதவிகித எறிகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கின என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படை (ஐஆர்ஜிசி) கூறுகிறது.
மூன்று இஸ்ரேலிய இராணுவ தளங்கள் தாக்குதலின் இலக்குகள் என்று ஐஆர்ஜிசி வட்டாரங்கள் ஈரானிய அரசு ஊடகத்திடம் தெரிவித்தன. ஆனால், ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளில், ‘பெரும்பாலானவை’ அழிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தங்கள் அமைப்பின் உயர் தளபதி மற்றும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியே இது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஐஆர்ஜிசி தளபதி அப்பாஸ் நில்ஃபோரோஷன் தெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஆகியோர் கொல்லப்பட்டமை ஆகியவற்றுக்கு பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறுகிறது.
ஹனியாவின் மரணத்திற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இதற்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக நம்பப்படுகிறது.
நாட்டின் அதிஉயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமைனி தனிப்பட்ட முறையில் இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார் என்று மூத்த ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதனிடையே இந்த தாக்குதலுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“ஈரான் மிகப்பெரிய தவறை செய்துள்ளது, அதற்கு அந்த நாடு பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் இராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதல்கள் தீவிரமானவை என்றும், நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார். ”இந்த தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது, திட்டமிட்ட நேரத்தில் மற்றும் இடத்தில் அதை நாங்கள் செயல்படுத்துவோம்” என்றார் அவர்.
முன்னதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் ”ஈரான் இஸ்ரேலை தாக்கினால், அது ‘கடுமையான விளைவுகளை’ ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார். இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ஈரானின் எதிர்வினை “மேலும் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய தாக்குதல்களும் பதிலடி தொடர்பான அறிக்கைகளும் பிராந்தியத்தில் நிரந்த போர் மூளும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது. ஈரான் லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குப் பயணிப்பதை தவிர்க்குமாறு பல நாடுகள் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.
நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவை வழங்கிய ஈரானின் அதி உயர் தலைவரான காமைனி, ஒரு பாதுகாப்பான இடத்தில் தொடர்ந்து இருப்பதாக ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இதனிடையே, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை குட்டெரெஸ் “வெளிப்படையாக கண்டிக்க” தவறியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கின் மோதல் அதிகரித்து வருவதை கண்டித்த ஐ.நா பொதுச்செயலாளர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க இராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli