கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் முன்னர் என்னைப்பற்றிய ஓரிரு உண்மைகளை வாசகர்களுக்கு உணர்த்த விரும்புகிறேன். சுயபுராணம் பாடுவதற்காக என்னை மன்னிக்கவும் வேண்டுகிறேன்.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் அரசியலில் அடிப்படையான மாற்றங்கள் மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசநாயகாவின் ஜனாதிபதி ஆட்சியின்கீழ் ஏற்படவேண்டும் என்று நான் இடையறாது வலியுறுத்திவந்ததை விடிவெள்ளி வாசகர்கள் தமிழிலும் கொழும்பு ரெலிகிராப், டெய்லி எப்ரி ஆகிய ஏடுகளில் ஆங்கிலத்திலும் அறிந்திருப்பர். இருந்தும் நான் அநுரவையோ அவரது கட்சியினரையோ சந்தித்ததும் இல்லை, அவர்களுடன் பேசியதும் இல்லை. நான் அந்தக் கட்சியின் அங்கத்தவனும் அல்ல. ஆனால் அவர்களுடைய கொள்கைகளால் கவரப்பட்டவன். அதுமட்டுமல்ல, நான் பிறந்துவளர்ந்து என்னை உருவாக்கிவிட்ட தாய்த்திரு நாடு எவ்வாறு இனவாத அரசியல் வெறிக்கு ஆளாகி இனவாதிகளின் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு உட்பட்டுச் சீரழிந்ததை கண்டு அந்த நாட்டைச் சீர்படுத்த கண்ணியமிக்க இளம் தலைமுறையொன்று உருவாகவேண்டும் என்று பலவருடங்களாகக் கனவுகண்டேன். எனது கனவின் பலனாக 2022ல் அரகலயக் கிளர்ச்சி உருவானபோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அந்த இளைய தலைமுறையின் அரசியல் சாயம் பூசப்படாத இனமத பேதமற்ற, அதே சமயம் அமைப்பு மாற்றம் ஒன்றே வேண்டும் என்ற ஏகோபித்த குரலைக் கேட்டபின் இலங்கைக்கு விடிவுகாலம் வந்துவிட்டதெனப் பெருமைப்பட்டேன். அதன் பின்னர் தேசிய மக்கள் சக்தி என்ற ஒரு கூட்டணி உருவாகியதும் அதன் தலைவராக அநுர குமார திசாநாயக்க தெரியப்பட்டதும் எனக்கு மேலும் ஊக்கமளித்தன. அதன் பலனே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர வெற்றிபெற்றமை என்பதைக் கூறிக்கொள்வதிலே பெருமைப்படுகின்றேன். ஆனாலும் அவருடைய வெற்றியைப் பூரணமாககக் கொண்டாடுவதற்கு ஒரு தடையாக அமைந்தது எனது முஸ்லிம் உடன்பிறப்புகள் அதிலும் கிழக்கிலங்கை முஸ்லிம் வாக்காளர்கள் அநுரவுக்குப் பெருமளவில் வாக்களிக்கத் தவறியமை. அதற்குரிய காரணத்தை விளக்கி அந்தத் தவறு எதிர்வரும் பொதுத் தேர்தலில் நடைபெறக்கூடாது என்ற எண்ணத்திலுமே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.
அரகலய இளைஞரின்
விழிப்புணர்வு
அரசாங்கம் மாறவேண்டும், ஆளும் கட்சி மாறவேண்டும், அமைச்சர்கள் மாறவேண்டும் என்றுதானே சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம் அரசியல் பிரச்சார மேடைகளிலே கிளர்ச்சிக் கோஷம் எழுப்பப்பட்டது? அதற்கேற்ப கட்சிகள் மாறின, அரசாங்கங்கள் மாறின, அமைச்சர்கள் மாறினர். அதாவது தலையிடியை அகற்றத் தலையணைகள்தான் மாற்றப்பட்டனவே ஒழிய தலையிடிக்கான சரியான பரிகாரத்தை யாரும் நாடவில்லை. நடைமுறையிலிருந்த அரசியல் கலாச்சாரமே ஊழலும் வர்க்கபேதமும் இனப் பாரபட்சமும் நிறைந்துகாணப்பட்ட வேளையில் யாராவது அந்தக்கலாச்சாரத்தையே மாற்றவேண்டுமெனக் குரல் எழுப்பினரா? இல்லவே இல்லையே. ஆனால் முதல் முதலாக 2022லேதான் ஒரு புதிய தலைமுறையினர் காலிமுகத்திடலிலே குழுமி அமைப்பையே மாற்று எனக் குரல் கொடுத்தனர். அந்தக் குரலின் எதிரொலியாகத்தான் அரசியல் கலாசாரத்தையே மாற்றுவேன் என்று பின்னர் அநுர குமார திசாநாயக்க பகிரங்கத்திலேயே பறைசாற்றியது. இந்த அறைகூவல் ஏற்படுத்திய விழிப்புணர்வே பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தை ஓர் அரசியல் சுனாமிக்குள் தள்ளியது. அந்தச் சுனாமியின் விளைவாகவே அநுர ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் அந்தச் சுனாமி கிழக்கிலங்கை முஸ்லிம்களை தொட்டுச் சென்றதே ஒழிய அதன் வீச்சுக்குள் அவர்களை இழுக்கவில்லை. நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கில் அநுர ரணிலையும் சஜித்தையும்விட குறைவான வாக்குகளையே பெற்றமை இதற்கான ஆதாரமாகும். இந்த நிலை எப்படி ஏற்பட்டது?
பிரதேசவாதமும்
மதக்கண்ணாடியும்
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பிரதேசவாதம் பழமையானது. மட்டக்களப்புப் பிரதேசத்திலிருந்து கரைவாகுப்பற்று வேறுபட்டது என்ற கருத்தை விதைத்தவர்கள் பிரித்தானியக் குடியேற்றவாதிகள். அது அவர்களின் பிரித்தாளும் தந்திரங்களுள் ஒன்று. அந்தப் பிரிவினையைக் கட்டிக்காத்து வந்தவர்கள் அப்பிரதேசங்களின் அரசியல் தலைவர்கள். இது 1947ல் ஆரம்பித்த ஒரு கதை. அது ஒரு புறமிருக்க, நாடளாவிய எந்தவொரு பிரச்சினையையும் மதக்கண்ணாடி ஊடாக நோக்கும் ஒரு மரபை மதத்தலைவர்கள் விதைத்துள்ளார்கள். எந்த ஒரு தேசமாற்றத்தையும் அது முஸ்லிமுக்குப் பொருந்துமா பொருந்தாதா என்ற எடையில் வைத்து நிறுத்து அதன்படி மக்களுக்கு அந்த மாற்றத்தை ஏற்பதா இல்லையா என முடிவு செய்தனர். உதாரணமாக, 1950களில் சிங்கள ஸ்ரீ பிரச்சினை தோன்றியபோது சிங்களவர்கள் அதனை தமது வாகனங்களிலே பொறிக்க அதேவேளை தமிழர்கள் அதனை தமிழ் வடிவத்தில் பொறிக்க கல்முனையிலிருந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதி அதனை அரபியில் எழுதிப் பொறித்தமை ஞாபகத்துககு வருகின்றது. அந்த அளவுக்கு முல்லா இஸ்லாம் கிழக்கிலங்கை முஸ்லிம்களை ஆட்கொண்டிருந்ததால் தேசிய நீரோட்டத்திலிருந்து அவர்கள் விலகியே நின்றனர். இதனை சமூகவியல் அடிப்படையில் முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வோர் புரிந்துகொள்வர். இந்தக் காரணிகளே இம்முறையும் அரகலய ஏற்படுத்திய அரசியல் விழிப்பிலிருந்து கிழக்கிலங்கை முஸ்லிம்களை ஒதுக்கி வைத்தது எனலாம்.
அதேவேளை கிழக்கிலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளோ இந்த நீரோட்டங்கள் முஸ்லிம் வாக்காளர்களின் சிந்தனைகளை ஆட்கொண்டு அவர்களை தங்களுக்கு எதிராக வாக்களிக்கச்செய்யும் என்ற ஒரு பயத்தால் மதவெறியூட்டித் தங்களைப் பாதுகாத்துக்கொண்டனர். உதாரணமாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்குச் சார்பாகப் பிரச்சாரம் செய்த ஒரு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரபலம் அநுரவின் அமைப்பு மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால் முஸ்லிம்கள் இரண்டு பெருநாட்களுள் ஒன்றைத்தான் கொண்டாட அனுமதிக்கப்படுவர் என்றும் அவர்களது தினசரித் தொழுகைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அப்பட்டமான பொய்களைப் பரப்பியதை மறுக்கமுடியாது. இவ்வாறான பிரச்சாரங்களாலேதான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அப்பிரதேசத்தில் தளம் கொண்டிருக்கிறதெனின் அது மிகையாகாது. இந்த நிலை தொடருமாயின் இம்முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்படுவர். அதன் விளைவுகள் பாரதூரமானவை.
எதிர்வரும் பொதுத்தேர்தலும்
கிழக்கிலங்கை முஸ்லிம்களும்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர ஜனாதிபதியாகப் பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டமை அரகலய தலைமுறையின் பாதி வெற்றியே. அதன் அடுத்த முக்கிய பாதி அக்கட்சியின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதிலே தங்கி உள்ளது. அதற்கு சிறுபான்மை இனங்களின் ஆதரவு மிக அவசியம்.
இனபேதமற்ற, ஊழல் அகன்ற, சமதர்ம ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்கி இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தி நியாயமான பங்கீட்டின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிகாணவெனத் திடசங்கற்பம் பூண்டுள்ளனர் புதிய ஜனாதிபதியும் அவரின் கட்சி உறுப்பினர்களும். ஜனாதிபதியின் வெற்றியைக்கண்டு சர்வதேச நாணய நிதி நாட்டைவிட்டு ஓடவில்லை. உலக வங்கி உதவ முன்வந்துள்ளது. ஜப்பானோ தடுத்து நிறுத்தப்பட்ட பதினொரு செயற்திட்டங்களையும் மீண்டும் செயற்படுத்த இணங்கியுள்ளது. மூடி என்னும் சர்வதேச நாணயமாற்று நிறுவனம் புதிய மாற்றத்துக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. கொழும்புப் பங்குச் சந்தையும் சுறுசுறுப்படைந்துள்ளது. சுற்றுலாத்துறையும் உற்சாகம் அடைந்துள்ளது. ஏற்றுமதியாளர்களும் வரவேற்றுள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் அநுரவின் வெற்றியைத் தொடர்ந்து ஓர் ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ளதை எதிரிகளாலும் மறுக்க முடியாது.
ஆனாலும் ஜனாதிபதியின் திட்டங்கள் யாவற்றையும் நிறைவேற்ற வேண்டுமாயின் அவருக்குப் பக்கபலமாக பாராளுமன்றம் இயங்கவேண்டும். எனவேதான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை ஈட்ட வேண்டியுள்ளது. இங்கேதான் சிறுபான்மை இனங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. முதலில் ஓர் ஆரோக்கியமானதும் அதே சமயம் வினோதமானதுமான மாற்றத்தை சிறுபான்மை இனங்கள் உணரல் வேண்டும். இதுவரை அரசியலை பேரினவெறியால் ஆட்கொண்டு நாட்டையே சீரழித்தபின் அந்த வெறியை உதறித்தள்ளி எல்லா இனங்களையும் உள்ளடக்கிய ஒரு தார்மீக ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை இனத்திடையே விழிப்புணர்வெடுக்க, சிறுபான்மை அரசியல்வாதிகளோ பழமையையே இன்னும் தழுவிக்கொண்டு வியாபார அரசியல் நடத்த விரும்புவதன் மர்மம் என்னவோ? முதலில் நாங்கள் தமிழர் அல்லது முஸ்லிம்கள் என்ற எண்ணம் நீங்கி நாங்கள் முதலில் இலங்கையர் பின்புதான் தமிழர்களும் முஸ்லிம்களும் என்ற மாற்றம் ஏற்படவேண்டும். அந்த மாற்றத்தைத் தழுவினாலொழிய இனநல்லிணக்கம் காண முடியாது. அதனை சிங்கள இளம் தலைமுறை உணர்ந்துவிட்டது. அந்த உணர்ச்சியின் பிரதிபலிப்பே அரகலய.
முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சுயலாபத்துக்காக ஷைத்தானுடனும் சேர்ந்துகொள்ளத் தயார் என்பதை அவர்களின் கடந்தகால வரலாறு வெளிப்படுத்தும். அவர்களை, அந்த ஆஷாடபூதிகளை, குறிப்பாக கிழக்கிலங்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கு அங்குள்ள முஸ்லிம் வாக்காளர்கள் தயாராக வேண்டுமென இக்கட்டுரை வலியுறுத்துகிறது. ஜனாதிபதித் தேர்தலில் இழைத்த தவறை பொதுத்தேர்தலிலும் இழைக்கக்கூடாது. இது காலத்தின்கட்டாயம்.
முஸ்லிம் குழுக்கள் ஒன்று சேர்ந்து துடிப்புள்ள அதேசமயம் நாட்டின் அரசியல் நீரோட்டத்தை நன்கு உணர்ந்த இளம் புத்திஜீவிகளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் அபேட்சகர்களாக நிறுத்த முயற்சிப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது. அந்தத் தெரிவில் முஸ்லிம் பெண்களும் அடங்க வேண்டும். அப்படிப்பட்டவர்களே இப்புதிய சகாப்தத்துள் முதலில் இலங்கையர் நாங்கள், ஆனாலும் முஸ்லிம்கள் என்ற தோரணையிலே மற்ற இனங்களுடன் கைகோர்த்துச் செயலாற்ற முடியும். அவர்களுக்குப் பின்னால் முஸ்லிம் வாக்காளர்கள் அணிதிரள வேண்டும். முஸ்லிம்கள் புதிய சகாப்தத்தின் பார்வையாளர்கள் அல்லாமல் அதன் பங்காளிகளாக மாறுதல் வேண்டும்.
இறுதியாக, திருமறையின் திருவசனம் ஒன்றை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது இக்கட்டுரை. ஓர் இனம் தன்னைத்தானே திருத்தும்வரை இறையும் அதனைத் தொடாது.- Vidivelli