நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றிருப்பது இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதொரு மைல் கல்லாகும். சுமார் 5 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் அரசியல் பரப்பில் இயங்கி வந்த மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தியினால் 2020 ஆம் ஆண்டு வரை நாட்டிலுள்ள சுமார் 3 வீதமான மக்களின் ஆதரவையே பெற முடிந்தது. எனினும் இத் தேர்தலில் 42 வீதமான மக்களின் ஆதரவைப் பெற்று நாட்டின் உயர்ந்த அதிகாரமிக்க பதவியை கைப்பற்றியிருப்பது அக் கட்சியின் மிகப் பெரிய அடைவே அன்றி வேறில்லை எனலாம்.
இந்த வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாட்டு மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்த வெற்றியானது இலங்கையில் இதுவரை புரையோடிப் போயிருந்த ஊழலும் மோசடியும் நிறைந்த அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது எனலாம்.
இருந்த போதிலும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதோடு மாத்திரம் இந்த நாட்டில் ஓர் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய ஒரு பலத்தைப் பெற்றுக் கொள்ளும் போது மாத்திரமே தற்போது அக்கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியும் அதனோடு இணைந்து அதன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பயணிக்க கூடிய புதிய பாராளுமன்ற பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். எனவே தான் இந்தப் பணிக்கு ஒத்துழைக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மிகவும் தகுதியானவர்கள் இனங்காணப்பட்டு சகல கட்சிகளின் ஊடாகவும் தேர்தலில் களம் இறக்கப்பட வேண்டும். இறுதியாக இருந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 225 பேரில் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் பொருத்தமற்றவர்கள் என்பதை நாடே அறியும். 2022 ஆம் ஆண்டு நாட்டில் அரகலய போராட்டம் தோற்றம் பெற்றபோது “225 பேரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்ற கோஷம் வலுப்பெற்றதை நாம் அறிவோம். அந்த வகையில் கடந்த பாராளுமன்றத்தில் இருந்தவாரே ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட, அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் திடசங்கற்பம் பூண வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரைக்கும் கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த சுமார் 20 பேரில் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரும் சமூகத்திற்கு நன்மை செய்வதற்குப் பதிலாக சமூகத்தை தலைகுனியச் செய்யும் வேலைகளிலேயே ஈடுபட்டார்கள் என்பதை நாம் அறிந்துள்ளோம். 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்தமை, ஜனாஸா எரிப்பின் போது சமூகம் சார்பில் குரல் கொடுக்காது, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தாது மௌனமாக இருந்தமை, மாறி மாறி வந்த அரசாங்கங்களிடமிருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டமை, இந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் ஆதரவளிப்பவர்களுக்காக உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடத்தியமை என இவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த ஒரு உறுப்பினர் வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வர முற்பட்டபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் முழு முஸ்லிம் சமூகத்தையும் தலை குனிய வைத்திருந்தது. இவ்வாறான அரசியல் வியாபாரிகள் சமூகத்தில் இருந்து துரத்தி அடிக்கப்படுவதோடு மாத்திரமன்றி, நன்கு படித்த ஒழுக்கமும் சமூக அக்கறையும் கொண்ட புத்திஜீவிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் கடப்பாடாகும்.
தேசிய மக்கள் சக்தி தற்பொழுது ஊழலுக்கு எதிரான ஒரு அரசியல் புரட்சியை முன்னெடுத்துள்ளது. புதியதொரு அரசியல் கலாசாரத்தை இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் மிகவும் தகுதியான பலர் அமைச்சுகளின் செயலாளர்களாகவும், ஆளுநர்களாகவும் திணைக்களங்களின் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கின்றோம். இந்த மாற்றத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் முஸ்லிம் சமூகம் தமது தரப்பிலிருந்து மிகச்சிறந்த பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதின் ஊடாக எதிர்வருகின்ற பாராளுமன்றத்தில் மிகவும் திறமையும் தேச நலனை முன்னிறுத்தி செயல்படக் கூடியதுமான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கக் கூடியதாக அமையும். அந்த வகையில் இது தொடர்பில் சகல தரப்பினரும் விரைந்து செயல்படுவதுடன் எஞ்சியுள்ள மிகக் குறுகிய காலத்தினுள் தகுதியான வேட்பாளர்களை முஸ்லிம் சமூகத்தில் இனம் கண்டு தேசிய மக்கள் மத்தியில் மாத்திரமன்றி ஏனைய பிரதான கட்சிகளிலும் வேட்பாளர்களாக களம் இறக்கி, ஒரு மிகச்சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.