எப்.அய்னா
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி சிறையிலடைக்க சதி செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த இறுதி பாராளுமன்ற தினத்தன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான், நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இழந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரே அச்சதியின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
உண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், அதனுடன் தொடர்புபட்ட சில விடயங்களை மையப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் பல பிரதிநிதிகள், தலைமைகள் எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்ட வரலாறு உள்ள நிலையில், முஜிபுர் ரஹ்மானின் குற்றச்சாட்டு மிகப் பாரதூரமானது.
இந் நிலையில் தான் ‘விடிவெள்ளி’ இது தொடர்பில் ஆராய்ந்தது. இதன்போது முஜிபுர் ரஹ்மானை கைது செய்ய சதி இருப்பதாக கூறப்படும் விடயதானம் தற்போதும் நிலுவையில் உள்ள ஒரு வழக்குடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்தது.
உண்மையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது பயன்படுத்த 21 குண்டுகளை தயாரித்தமை தொடர்பில் மொஹம்மட் சிபான் சத்தார், செய்யத் அபூ மொஹம்மட் அஸ்ரப், மொஹம்மட் இஷாக் மொஹம்மட் நிலாப்தீன் அல்லது அர்ஷாத், குனசீலன் ரவீந்ரன் அல்லது மொஹம்மட் இஷாக், ஷெய்க் மொஹம்மட் பரீக் மொஹம்மட் பெளசி, மொஹம்மட் மொயினுத்தீன் மூசா அல்லது அப்துல்லாஹ் ஆகிய 6 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் தொடுக்கப்பட்டுள்ள எச்.சி.3886/22 எனும் இந்த வழக்கில் 6 ஆவது பிரதியான மொஹம்மட் மொயினுத்தீன் மூசா அல்லது அப்துல்லாஹ் எனும் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்திருந்தார். இப்போது இந்த வழக்கில் 5 பிரதிவாதிகள் உள்ளனர்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் தப்ரபேன் உணவகத்தில் தற்கொலை குண்டுதாரியாக குண்டை வெடிக்கச் செய்த, மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டின் ஆலோசனைக்கு அமைய கடந்த 2018 ஜனவரி முதலாம் திகதிக்கும் மார்ச் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குண்டு தயாரித்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சட்டமாஅதிபரால் முன் வைக்கப்பட்டுள்ளதாகவே சட்ட மா அதிபர் தரப்பு தெரிவித்துள்ளது.
இவ்வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றினை மட்டும் மையப்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இவ்வழக்கில் உள்ள விடயங்களின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் நாட்டுக்குள் பெருமளவான வாள்களை இறக்குமதி செய்தமை, குண்டுகள் தயாரித்து அவற்றை களனி கங்கையில் வீசியதாக கூறப்படும் விடயம் போன்றன உள்ளடக்கமாக உள்ளது.
இவ்வழக்கில் பிரதிவாதியாக உள்ள மொஹம்மட் இஷாக் மொஹம்மட் நிலாப்தீன் அல்லது அர்ஷாத் எனும் நபருக்கு சிறையில் வைத்து, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயரை தொடர்புபடுத்தி சில விடயங்களை பாதுகாப்பு தரப்புக்கு வழங்க, அவரை பார்வை இட வந்த இருவரால் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அந்த சம்பவத்தை மையப்படுத்தியே, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புபடுத்த முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
உண்மையில் இதற்கு முன்னர் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் போன்றோர் ஆதாரங்கள் இன்றி இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டிருந்தனர். குறிப்பாக அவர்களைக் கைது செய்யும் போது, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் தப்ரபேன் உணவகத்தில் தற்கொலை குண்டுதாரியாக குண்டை வெடிக்கச் செய்த, மொஹம்மட் இப்ரஹீம் இன்ஷாப் அஹமட்டை ஏதோ ஒரு விதத்தில், அவ்விருவருடனும் தொடர்புபடுத்த விசாரணையாளர்கள் முயன்றிருந்தனர்.
குறிப்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில், சேவ் த பேர்ள் எனும் அமைப்பின் கட்டமைப்பு ஊடாகவும், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விவகாரத்தில் செப்பு தொடர்பிலான கொள்வனவினை மையப்படுத்தியும் தொடர்புபடுத்த முயற்சிக்கப்பட்டது. எனினும் அவை தோல்வியில் முடிவடைந்தன.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சான்றுகள் இல்லை என சட்டமா அதிபரே அவரை விடுவிக்க ஆலோசனையளித்து அவர் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார்,
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு அது, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சி நெறிப்படுத்தலின் இறுதிக் கட்டத்தை எட்டி நிலுவையில் உள்ளது. இதுவரையில் அவ்வழக்கில் நெறிப்படுத்தப்பட்ட சாட்சியங்களில் பல்வேறு முன்னுக்குப் பின் முரணான விடயங்களை அவதானிக்க முடிவதுடன், சில சாட்சியாளர்கள் தாம் பொலிஸ் வாக்குமூலத்தில் குறிப்பிட்ட விடயங்கள் உண்மை இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், இப்போது அதே பாணியில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இலக்கு வைக்கப்பட முயற்சிக்கப்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குறிப்பாக 2020 தேர்தலை மையப்படுத்தி எப்படி ஹிஜாஸ், ரிஷாத் பதியுதீன் போன்றோர் இலக்கு வைக்கப்பட்டனரோ அதே பாணியில், 2024 ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி முஜிபுர் ரஹ்மான் இலக்கு வைக்கப்படுகின்றாரா என சந்தேகம் எழுகின்றது.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை மையப்படுத்தி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் முறைப்பாடொன்றினை முன் வைத்துள்ளார். அந்த முறைப்பாடு மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
குறித்த முறைப்பாட்டை மையப்படுத்தியும், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தரப்பினரின் தகவல்களை வைத்துப் பார்க்கும் போதும், ஜனாதிபதி தேர்தலை நெருங்கும் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முஜிபுர் ரஹ்மான் தொடர்புபட்டுள்ளார் எனும் பிரசாரம் ஒன்றினை முன்னெடுக்க ஒரு தரப்பு தயாராக இருந்துள்ளதாகவும், அதற்காக குறித்த விடயத்தை பயன்படுத்தி பின்னர் அவரை கைது செய்ய நிர்ப்பந்திக்க சந்தர்ப்பம் இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ இது விடயத்தில் இரு முறைப்பாடுகள் சி.ஐ.டி.யினருக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் உள்ள உண்மைகளை அவர்கள் விசாரணை ஊடாக வெளிப்படுத்த வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் அச்சுறுத்தல் அல்லது அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் சார்பிலும் சி.ஐ.டி. உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு முறையிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அச்சுறுத்திய அல்லது அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் குறித்த இரு நபர்களின் பெயர்களையும் விபரங்களையும் கூட விசாரணையாளர்களிடம் கையளித்துள்ளதாக அறிய முடிகின்றது. இது குறித்து நீதிமன்றின் அவதானத்துக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட பிரதிவாதியின் சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எது எப்படியோ, மீண்டும் ஒரு முறை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வைத்துக்கொண்டு, வாக்கு வேட்டைக்காக போலி கைதுகள், வழக்குகளை தாக்கல் செய்து புதிதாக நாடகம் ஒன்றினை ஆரம்பிக்காமல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் நியாயமான விசாரணை ஒன்றினை முன்னெடுத்தல் வேண்டும்.- Vidivelli