மு.கா. தேர்தல் மேடைகளில் அவிழ்க்கப்படும் பொய் மூட்டைகள்!

0 45

றிப்தி அலி

இலங்­கையின் 9ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை  தீர்­மா­னிப்­ப­தற்­கான தேர்­த­லுக்கு இன்னும் எட்டு நாட்கள் மாத்­தி­ரமே உள்­ளன. இதற்­காக தற்­போது கள­மி­றங்­கி­யுள்ள 38 வேட்­பா­ளர்­களில் ரணில் விக்­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாசா, அனுர குமார திசா­நா­யக்க மற்றும் நாமல் ராஜ­பக்ஷ ஆகிய நான்கு பேர் தீவிர பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

கடந்த தேர்­தல்­களைப் போலில்­லாமல், இந்த முறை நடை­பெறும் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரங்கள் முற்­றிலும் மாறு­பட்­டுள்­ளன. அதா­வது 2010, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்­டு­களில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் சிறு­பான்­மை­யினர் இலக்­கு­வைக்­கப்­பட்­டனர். அது மாத்­தி­ர­மல்­லாமல், இன­வாத விட­யங்­க­ளுக்கே தேர்தல் பிர­சார மேடை­களில் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டன.

ஆனால் இந்த தேர்­தலில் இன­வாதப் பிரசா­ரத்­திற்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­ட­வில்லை. அதே­வேளை, இன­வாத பிர­சா­ரத்­தினை மேற்­கொள்ளும் வேட்­பா­ளர்­களை மக்கள் நிரா­க­ரிக்­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இதனால், வேட்­பா­ளர்கள் இன­வாத பிர­சா­ரங்­களை கைவிட்டுவிட்டு பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பு தொடர்­பான விட­யங்­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் வழங்கி வரு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில், முஸ்லிம் சமூ­கத்­தினைச் சேர்ந்த அர­சி­யல்­வா­தி­களே இன­வாத பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். பிர­சார மேடை­களில் என்ன பேசு­கின்றோம் என்று தெரி­ய­ாமலேயே அவர்கள் பேசி வரு­கின்­றனர். இதனால் அவர்­க­ளு­டைய உரைகள் தொடர்ச்­சி­யாக சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்தி வரு­வ­துடன் மக்கள் மத்­தியில் அவர்களுக்குள்ள செல்­வாக்கையும் இழக்கச் செய்வதைக் காண முடிகின்­றது.

அண்­மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனுர குமார திசா­நா­யக்­க­வினை விமர்சித்து சர்ச்­சை­யி­ல் சிக்கியிருந்தார்.

இவ்­வா­றான நிலையில் அர­சி­யல்­வா­தி­க­ள் அனைவருக்கும் முன்­னு­தா­ர­ண­மாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் செயற்­பட்­டி­ருந்தார். அதா­வது, ‘‘தெற்கு மக்கள் விரும்­பு­கின்ற மாற்­ற­த்திற்கு எதிரான நிலைப்பாட்டை  வடக்கு மக்கள் எடுப்பார்களாயின் அது தெற்கு மக்களை அதிருப்திக்குள்ளாக்கும்’’ என்ற தொனியிலான கருத்­தொன்­றினை அண்­மையில் அனுர குமார திசா­நா­யக்க யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில் வெளி­யிட்­டி­ருந்தார்.

இந்த கருத்து வடக்கு மக்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­வ­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க விமர்சித்­தி­ருந்தார். எனினும் அனுர குமார திசா­நா­யக்கவின் கருத்தின் பின்னணியில் இனவாதம் இருப்பதாக தான் கருதவில்லை என்றும் அவர் அவ்வாறு இனவாதம் பேசுகின்ற ஒருவரல்ல என்பதை தான் நன்கு அறிவேன் என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இந்த கருத்து சிங்கள் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி அரசியல் விமர்சகர்களினதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சுமந்திரன் ௪ஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற நிலையில் அவர் நினைத்திருந்தால் இதனை அனுரவுக்கு எதிராக திசை திருப்பியிருக்கலாம். எனினும் அவர் மிகவும் நேர்மையாக இதனைக் கையாண்டிருந்தால்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­வினால் அனுர குமார திசா­நா­யக்க தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட கருத்­தொன்று இன்று பாரிய சர்ச்­சை­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

காத்­தான்­கு­டி­யி­லுள்ள பிர­பல­மான அல் – அக்ஸா பள்­ளி­வா­ச­லுக்கு முன்­­பாக இடம்­பெற்ற கூட்­டத்­தி­ல் உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ்  “தான் ஆட்­சிக்கு வந்தால் சிங்­கள மக்­க­ளுக்கு ஒரு பெருநாள், முஸ்லிம் மக்­க­ளுக்கு ஒரு பெருநாள், தமிழ் மக்­க­ளுக்கு ஒரு பெருநாள் என்று இல்லை. நாட்டில் எல்­லோரும் சமம், அதனால், எல்­லோ­ருக்கும் ஒரு நாள் தான் பெருநாள்” என்று அனுர குமார திசா­நா­யக்க ஒரு பிர­சார மேடையில் சிங்­க­ளத்தில் பேசி­ய­தாக குறிப்­பிட்டார்.

இதற்­க­மைய, அனுர குமார திசா­நா­யக்க ஆட்­சிக்கு வந்தால் இலங்­கையில் எல்­லோ­ருக்கு ஒரு நாள் தான் பெருநாள் தான் கொண்­டாட வேண்டும். சீனாவில் பெருநாள் கொண்­டா­டு­வது போன்றே இலங்­கை­யிலும் பெருநாள் கொண்­டாட வேண்­டி­யுள்­ளது. இதனால், ஏப்ரல் மாதத்தின் ஒரு வாரத்­திற்குள் நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் மற்றும் தைப் பொங்கல் ஆகி­ய­வற்­றனை கொண்­டாட வேண்டி வரும் எனவும் இக்­கூட்­டத்தில் ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் அனுர குமார திசா­நா­யக்­க­வினால் சிங்­க­ளத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த உரை தொடர்­பான வீடியோ தன்­னி­ட­முள்­ள­தா­கவும் ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார். எனினும், அனுர குமார திசா­நா­யக்­கவின் குறித்த வீடி­யோ­வினை இன்று வரை ஹிஸ்­புல்லாஹ் வெளி­யி­ட­வில்லை.

ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்துக்கு அவரது ஆதரவாளர்களே சமூக வலைத்தளங்களில் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான பொய்களை இனியும் தாம் நம்பத்தயாரில்லை என  சமூக ஊட­க பதிவுகளில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

­இவரின் குறித்த உரை­யினைக் கண்­டித்து நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதித் தவிசாள­ரான பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான், ஹிஸ்­புல்­லா­விற்கு கடி­த­மொன்­றையும் எழு­தி­யுள்ளார்.

‘இன­வா­தத்தை தூண்­டக்­கூ­டிய பொய் பிர­சா­ரங்­களை செய்ய வேண்டாம்’ என்ற தலைப்­பி­லேயே இக்­க­டிதம் எழு­தப்­பட்­டுள்­ளது. இந்த உரையின் உண்மைத் தன்­மையை அறிந்து கொள்ளும் பொருட்டு குறித்த வீடி­யோவை பகிர்ந்து கொள்­ளு­மாறும் அப்துர் ரஹ்மான் கோரிக்கை விடுத்­துள்ளார்.

தேர்தல் காலங்­களில் சிங்­கள மக்­களை உசுப்பேற்றுகின்ற பேச்­சுக்கள் தற்­போது அருகியுள்ள நிலையில், சிறு­பான்­மை­யி­ன­ரான முஸ்லிம் சமூ­கத்­தினை உசுப்பேற்று­கின்ற நிலை தொடர்ந்து செல்­கின்­றமை கவ­லை­ய­ளிக்­கின்­றது.

மக்­களை ஏமாற்றும் வகையில் பொய்­யான பரப்­பு­ரை­களை செய்­வது என்ற விடயம் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு புதிய விடயம் அல்ல. ஆனால், பொய்­யான பிர­சா­ரங்கள் தொடர்பில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முதலில் அல்­லாஹ்வை பயந்­து­கொள்ள வேண்டும்.

இரண்­டா­வ­தாக இந்த பொய்கள் ஏற்­ப­டுத்தும் சமூக பாதிப்­பு­க­ளையும் அவர்கள்  புரிந்து பொறுப்­புடன்  நடந்து கொள்ள வேண்டும்.  அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக இவ்­வாறு மக்­களை பிழை­யாக வழி­ந­டத்தும் அர­சியல் வழி­மு­றை­களை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் உட­ன­டி­யாக கைவிட வேண்டும்.

அம்­பாறை மாவட்­டத்தின் எல்லைக் கிரா­ம­மான தெஹி­யத்தக் கண்­டி­யி­லுள்ள சிங்­கள மக்கள் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து செயற்­பட தயா­ரா­க­வுள்­ள­தாக அதே கூட்­டத்தில் ­கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­தி­ருந்தார்.

அது போன்று முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீ­மிற்கு கண்டி மாவட்­டத்­தி­லுள்ள சிங்­கள மக்கள் தொடர்ச்­சி­யாக வாக்­க­ளித்து வரு­கின்ற விடயம் யாவரும் அறிந்த உண்மையாகும். இவ்வாறு சிறுபான்மை கட்சியான முஸ்லிம் காங்கிரஸுடனும், அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் பெரும்பான்மை இன மக்கள் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்ற சமயத்தில் ஏன் அக்கட்சியின் உறுப்பினர்கள் இனவாத பேச்சுக்களை கைவிடத் தயாரில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக தலையிட வேண்டியுள்ளது. அவ்வாறில்லாத பட்சத்தில் கண்டி மாவட்டத்தின் அவருடைய இருப்பு கேள்விக்குறியாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது மாத்திரமல்லாமல், முன்னாள் அமைச்சர் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி, இனவாத கட்சி என்ற தோற்றப்பாடே பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் நிலைக்கும்! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.