ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேசிய ஷூரா சபையின் மகஜர்

0 33

பொது­வாக அனைத்து சமூ­கங்­க­ளுடன், குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­களை உள்­ள­டக்­கிய வகையில் ஆவணம் ஒன்றை தேசிய ஷூரா சபை தயா­ரித்து ஒவ்­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கும் வழங்­கி­யுள்­ளது.

இந்த ஆவ­ணத்தை தயா­ரிப்­பதில் தேசிய ஷூரா சபையின் நிறை­வேற்றுக் குழு மற்றும் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உப குழு உறுப்­பி­னர்கள், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், கல்­வி­யா­ளர்கள், அர­சியல் ஆய்­வா­ளர்கள் பங்­கேற்­றுள்­ளார்கள்.

விரி­வான அந்த ஆவ­ணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கருத்துக்களது சாராம்சம் வருமாறு:-

தேசிய அள­வி­லான பல முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் குடை அமைப்­பான தேசிய ஷூரா சபை, இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் சார்­பாக 2024 செப்­டெம்பர் 21 ஆம் திகதி நடை­பெறும் ஜனா­திபதித் தேர்­தலில் போட்­டி­யிடும் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளிடம் பின்­வரும் முன்­மொ­ழி­வு­களைச் சமர்ப்­பித்­தி­ருக்­கி­றது. தெரிவு செய்­யப்­படும் ஜனா­தி­பதி அவற்றை நடை­மு­றை­ப்ப­டுத்த வேண்டும் என அது எதிர்­பார்க்­கி­றது:-

  1. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர் பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்­தல்கள், உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள் விரை­வாக நடாத்­துதல்.
  2. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை ஒழித்தல்.
  3. ஜனா­தி­பதி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் இரண்டு ஆண்­டு­களில் சட்­டத்தின் ஆட்­சியை விரை­வாக நிறு­வு­வ­தற்கும், உணவில் தன்­னி­றைவை அடை­வ­தற்கும், ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்கும், விரை­வான பொரு­ளா­தார மீட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் கொள்­கைகள் மற்றும் திற­மை­யான திட்­டங்­களை விரை­வாக செயல்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­ப­தியும், அர­சாங்­கமும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுதல்.
  4. தேசிய ஒற்­றுமை, அமைதி, சக­வாழ்வு என்­ப­வற்­றுக்கு முன்­னு­ரிமை வழங்­குதல்.
  5. தற்­போ­துள்ள கல்வி முறையை மேம்­ப­டுத்­து­வதன் மூலம் அனைத்துப் பிர­ஜை­களும் பய­ன­டை­யக்­கூ­டிய ஒரு புதிய கல்விக் கொள்­கை­யையும் முறை­க­ளையும் உரு­வாக்­குதல்.
  6. அதி­காரத் துஷ்­பி­ர­யோகம், வெறுப்புப் பேச்சு, பார­பட்ச நட­வ­டிக்­கைகள், துன்­பு­றுத்­தல்கள், இலஞ்சம், ஊழல், சித்­தி­ர­வதை அல்­லது பிற கொடூ­ர­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற நடத்தை, அவ­மா­னப்­ப­டுத்தல், தன்­னிச்­சை­யான தண்­டனை முறை ஆகி­ய­வற்றை நீக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்தல்.
  7. கடந்த காலங்­களில் ஊழல் நிறைந்த அர­சி­யல்­வா­திகள் மற்றும் அதி­கா­ரி­களால் முறை­கே­டாக ஈட்­டப்­பட்ட சொத்­துக்கள் மீட்­கப்­பட்டு, குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்கை எடுத்து தண்­டனை வழங்­குதல்.
  8. சுற்­றுலா மற்றும் வர்த்­தக பெயரைப் பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு பிர­ஜைகள் நாட்­டுக்குள் ஊடு­ருவு­வதை அடை­யாளம் காண ஒரு பொறி­மு­றையை உரு­வாக்­குதல்.
  9. பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை (PTA) ஒழித்தல், சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச உடன்­ப­டிக்கை (ICCPR) சட்­டத்தை பார­பட்­ச­மின்றி செயல்­ப­டுத்­துதல், ஒன்லைன் பாது­காப்புச் சட்ட வரைபின் கீழ் முறை­கே­டுகள் நிகழ்­வதை, பாதிக்­கப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்­கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை அறி­மு­கப்­ப­டுத்­துதல். இவை மிகத் துரி­த­மாக மேற்­கொள்­ளப்­படல்.
  10. இலங்­கையில், முறைப்­பாடு செய்­வ­தற்கும் பரி­காரம் கோரு­வ­தற்­கு­மான பொது­மக்­களின் உரி­மை­களை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் வகுக்­கப்­படல்.
  11. கொவிட்-19 மர­ணித்­த­வர்­களின் உடல்­களை கட்­டா­யப்­ப­டுத்தி தகனம் செய்­த­மையால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்­பீடு மற்றும் நீதி வழங்­கப்­பட வேண்டும்.
  12. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான சுயா­தீன ஆணைக்­குழு நிய­மிக்­கப்­படல்.
  13. அளுத்­கமை, திகனை, கிந்­தோட்டை, அம்­பாறை, மினு­வாங்­கொடை, குரு­நாகல் போன்ற பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற இன வன்­மு­றைகள் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்கும் உரிய இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்கும் ஒரு தனி­யான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவை நிய­மித்தல்.
  14. மதம் அல்­லது கலா­சாரம் தொடர்­பாக அர­சாங்­கத்தின் கீழ் வரும் விவ­கா­ரங்கள் அந்­தந்த மதம் சார்ந்த சமூ­கத்­திற்கு ஒதுக்­கப்­படல். அவை ஒவ்­வொன்­றி­லி­ருந்தும் ஒரு அமைச்­சரை நிய­மித்தல்.
  15. முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் (MMDA) மற்றும் முஸ்லிம் பள்­ளி­வாசல் அல்­லது வக்ஃப் சட்­டங்­களும் இவற்­றுடன் தொடர்­பு­டைய சட்­டங்­களும் முஸ்லிம் சமு­தா­யத்தின் தேவை­களைக் கவ­னத்தில் எடுத்து பொருத்­த­மான முறையில் திருத்­தப்­பட்டு இஸ்­லா­மிய மூலா­தா­ரங்­க­ளுக்கு இணங்க நீதி வழங்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தக் கூடிய வகையில் திருத்­தப்­படல்.
  16. காதி நீதி­ப­திகள், மேல­திக நீத­ிவான்­க­ளாகத் தர­மு­யர்த்­தப்­பட்டு நீதி­மன்­றங்­க­ளுக்கு வழங்­கப்­படும் வச­திகள் மேம்­ப­டுத்­தப்­படல்.
  17. முடிக்­கு­ரிய காணிகள் கட்­டளைச் சட்டம் போன்று வக்ஃப் சொத்­துக்கள் விட­யத்தில் கால­வி­திப்­பு­ரிமை பிர­யோ­கிக்­கப்­ப­டா­தி­ருத்தல்.
  18. அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் மூலம் வழங்­கப்­பட்­டுள்ள மத மற்றும் கலா­சார உரி­மை­க­ளுக்­கான உத்­த­ர­வா­தங்கள் அனைத்து அம்­சங்­க­ளையும் பாது­காக்­கக்­கூ­டிய வகையில் ஒரு குறிப்­பான சட்­ட­வாக்க வடிவில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டுதல்.
  19. இலங்­கையின் அனைத்துப் பகு­தி­க­ளிலும் உள்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­திக்­காக உள்­ளூ­ராட்சி வர­வு­செ­லவுத் திட்­டங்கள் நியா­ய­மான முறையில் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­துதல்.
  20. அனைத்துச் சமு­தா­யங்­க­ளி­னதும் சுகா­தார உரி­மை­களும் நலன்­களும் பொருத்­த­மான பொறி­மு­றைகள் மேம்­ப­டுத்­தப்­ப­டுதல்.
  21. யூனானி மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­களின் நியமன செயன்­மு­றையை மேம்­ப­டுத்­து­வதன் மூலமூம் யூனானித் துறையின் தரத்தை பல்­க­லைக்­க­ழகப் பீடங்­களின் மட்­டத்­திற்கு உயர்த்­து­வதன் மூலமும் யூனானி மருத்­துவ முறையை மேம்­ப­டுத்­துதல்.
  22. வடக்கு கிழக்­கிலும் மற்றும் நாட்டின் ஏனைய எல்லாப் பாகங்­க­ளி­லு­முள்ள இழந்த காணி­களும், வலுக்­கட்­டா­ய­மாக அப­க­ரிக்­கப்­பட்ட அனைத்துக் காணி­களும், சொத்­துக்­களும் அவற்றின் சட்­ட­ரீதி­யான உரி­மை­யா­ளர்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்­கப்­படல்.
  23. கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச செய­லாளர் பிரி­வுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட காணி­களை, கோற­ளைப்­பற்று மத்­திய பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு மீள­வ­ழங்­குதல்.
  24. நுரைச்­சோலை சுனாமி வீட­மைப்புத் திட்­டத்தில் உள்ள வீடு­களை, அத்­திட்டம் தொடங்­கப்­பட்ட நோக்­கத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக ஒதுக்­கீடு செய்தல்.
  25. தோப்பூர் பிர­தே­சத்தில் தற்­போ­துள்ள உப பிர­தேச அலு­வ­ல­கத்­திற்குப் பதி­லாக 1994 ஆம் ஆண்டு அர­சாங்க வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­ட­வாறு தோப்பூர் பிர­தேச செய­லாளர் பிரிவை நடை­மு­றைப்­ப­டுத்தி அதற்­கான தனி­யான உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு உத­வுதல்.
  26. உத்­தி­யோ­க­பூர்வ பிர­க­ட­ன­மின்றி 1989ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டின் கீழ் கல்­மு­னையில் உரு­வாக்­கப்­பட்ட அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத கல்­முனை தமிழ் உப பிர­தேச செய­லாளர் பிரிவைக் கலைத்தல்.
  27. கல்­முனை நகரில் காணி அனு­ம­திப்­பத்­திரம் வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு காணி உறு­தி­களை வழங்­குதல்.
  28. அம்­பாறை மாவட்­டத்தில் ஒலுவில் துறை­முகப் பகுதி, உன­வட்­டுனை, வாத்­துவை, பொல்­ஹேனை போன்ற பிர­தே­சங்­களில் விசேட கவனம் செலுத்தி நாட்டின் கரை­யோரப் பகுதி முழு­வதும் நிகழும் கடல் அரிப்பைத் தடுப்­பது தொடர்பில் உரிய கவனம் செலுத்­துதல்.
  29. வனப்­ப­கு­தியை மேம்­ப­டுத்த புதிய தாவ­ரங்கள் மற்றும் பசுமைத் தாவ­ரங்­க­ளையும் நடு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து நேர்­ம­றை­யான காபன் கிரெ­டிட்டை (ஒத்த காடாக்கம் மூலம்) பெறு­வ­தற்­கான நோக்­கத்­துடன் பூச்­சிய காபன் உமிழ்வை உறுதி செய்தல்.
  30. மத மற்றும் கலா­சார மர­பு­களைப் பின்­பற்­று­வதை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்கும், அவை நிறு­வப்­பட்ட சட்­டங்­க­ளுக்கு இசை­வா­ன­தாக இருப்­பதை உறுதி செய்­வ­தற்கும் தெளி­வான நியதிச் சட்ட ஏற்­பா­டு­களை உரு­வாக்­குதல்.
  31. எந்­த­வொரு சமு­தாய நலனும் விடு­ப­டாமல் இருப்­பதை உறுதி செய்து நீதி­யா­னதும் சமத்­து­வ­மா­ன­து­மான கொள்­கை­களின் அடிப்­ப­டையில் இலங்­கை­யி­லுள்ள அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கு­மான மாவட்ட செய­லா­ளர்­களை/அர­சாங்க அதி­பர்­களை நிய­மித்தல்.
  32. சமத்­துவம் மற்றும் சமூக நீதிக் கோட்­பாட்டின் கீழ் சனத்­தொ­கையின் பல்­லினத் தன்­மையைப் பிர­தி­ப­லிக்கும் வகையில், பிரதிப் பொலிஸ் மா அ­தி­பர்கள், அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள், தவி­சா­ளர்கள் போன்ற முக்­கிய பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்­களில் இன விகி­தா­சா­ரங்கள் பேணப்­ப­டு­வதை உறுதி செய்தல்.
  33. இலங்­கையில் கிடைக்க வேண்­டிய சிரேஷ்ட நிர்­வாகப் பத­விகள் பாகு­பா­டான முறையில் மறுக்­கப்­ப­டு­வதை நிறுத்தி சமத்­துவ அடிப்­ப­டை­யிலும் முற்­றிலும் திற­மையின் அடிப்­ப­டை­யிலும் தெரி­வு­களைச் செய்தல்.
  34. ஒவ்­வொரு பொலிஸ் பிரி­வுடன் தொடர்­பு­டை­ய­தாக இன விகி­தா­சாரத்தைப் பிர­தி­ப­லிக்­கக்­கூ­டிய, சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு நீதி கிடைப்­பதை உறுதி செய்­யக்­கூ­டிய சமூகப் பொலிஸ் முறை­யொன்றை உரு­வாக்­குதல்.
  35. இன­ரீ­தி­யான பிர­தி­நி­தித்­து­வத்தைச் சம­நி­லைப்­ப­டுத்தி சட்ட அமு­லாக்கல் நிறு­வ­னங்­க­ளுக்கும் சமு­தா­யங்­க­ளுக்கும் இடை­யி­லான நம்­பிக்­கையை மேம்­ப­டுத்தும் பிராந்­திய பொலிஸ் அமைப்பு ஒன்றை உரு­வாக்­குதல்.
  36. அனைத்துச் சமு­தா­யங்­க­ளி­னதும் விட­யங்­க­ளிலும் பிரச்­சி­னை­களை சிறப்­பான முறையில் தீர்க்கக்கூடியதாக சட்டத்தில் எந்தவொரு இடைவெளியும் இல்லாதவிதத்தில் நியதிச் சட்ட இடவெளியை நிரப்புவதற்குத் தேவையான ஒரு முறையான சட்டமுறையை உருவாக்குதல்.
  37. வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக பாராளுமன்ற, மாகாண மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவான, நீதியான மற்றும் சமத்துவமான அளவுகோல்களை உருவாக்குதல்.
  38. சமுதாய நலன்களையும் சனத்தொகை இயல்புகளையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றங்களில், மாகாண சபைகளில், பாராளுமன்றத்தில் போதுமானளவு விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்.
  39. ஊடகப் பாகு­பாட்டை எதிர்த்துப் போரா­டு­வ­தற்கும் இன­வா­தத்தை ஒழிப்­ப­தற்கும், சம­நி­லை­யான அறிக்­கை­யி­டலை ஊக்­கு­விப்­ப­தற்கும் அமைப்­பு­களை உரு­வாக்­குதல்
  40. அனைத்து சிக்­கல்­களும் பிரச்­சி­னை­களும் தொடர்­பு­டைய அனைத்துத் தரப்­பி­ன­ரையும் ஒன்­று­சேர்த்து அறி­வியில் முறைப்­படி வழி­ந­டாத்­தப்­படும் ஆராய்ச்­சியின் அடிப்­ப­டை­யி­லான பொறி­மு­றை­களின் ஊடாக அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்படுதல்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.