திருப்திகரமான ஆட்சியை நடாத்தும் திறன் சஜித் அணியிடமே இருக்கிறது – பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான்

0 44

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதித் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் விடி­வெள்­ளிக்கு வழங்­கிய நேர்­கா­ணல்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி அநுர குமா­ர­வுக்கு ஆத­ர­வ­ளித்­தது. இந்த தேர்­தலில் அவ­ருக்­கான ஆத­ரவு அதி­க­ரித்­துள்ள போதிலும் நீங்கள் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்க தீர்­மா­னித்­துள்­ளீர்கள். ஏன் இந்த நிலைப்­பாடு? அதற்கு காரணம் என்ன?

தேர்தல் முடி­வு­களை பொது நன்­மை­களை முன்­னி­றுத்­தியே நாம் மேற்­கொள்ள வேண்டும். எனது கட்­சிக்கு என்ன நன்மை? எனக்கு என்ன நன்மை? இந்த விட­யங்­களை மையப்­ப­டுத்­தியே ஏரா­ள­மா­ன­வர்கள் யோசிக்­கி­றார்கள். இவ்­வா­றான அணு­கு­மு­றை­களில் இருந்து நாங்கள் விலகி நிற்­கிறோம். அத்­தோடு பொது நன்மை என்­பது ஒவ்­வொரு கால சூழ­லுக்­கு­மேற்ப வேறு­ப­டு­கின்ற ஒன்­றாகும். கடந்த தேர்­தலில் இருந்த சூழ்­நிலை வேறு இப்­போது இருக்­கின்ற சூழ்­நிலை வேறு. கடந்த தேர்­தலில் ஈஸ்டர் குண்டு தாக்­கு­தலை தொடர்ந்து இன­வாதம் மேலோங்கி இருந்­தது. இன­வா­தத்தை மட்­டுமே மூல­த­ன­மாகக் கொண்டு தேர்­தலை வெல்­வ­தற்­கான அனைத்து தயார் நிலை­யிலும் ராஜ­பக்ஷ அணி­யினர் இருந்­தனர். அந்த சூழலில் வேறு வேட்­பா­ளர்கள் வெல்­வ­தற்­கான வாய்ப்பு இல்லை. எனவே தான் அந்த தேர்­தலில் அளிக்­கப்­படும் வாக்­கு­களை கொண்டு ராஜ­பக்­சேக்­களை தோற்­க­டிக்க முடி­யா­விட்­டாலும் எதிர்க்­கட்­சியை பலப்­ப­டுத்த வேண்டும் என்­பது பொது நோக்­க­மாக இருந்­தது. அந்த வகையில் தான் மூன்­றா­வது சக்­தி­யினை பலப்­ப­டுத்த வேண்டும் என்ற நோக்கில் என் பி பி அணியின் அநுர குமா­ர­வுக்கு நாம் ஆத­ரவு வழங்­கினோம். அந்த நேரத்தில் அநு­ர­வுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு இப்­போது இருப்­பது போல வேறு எவரும் முன்­வ­ரவும் இல்லை. நாம் அதனை தியா­கத்­தோடும் பொது நன்­மைக்­கா­கவும் செய்தோம். அந்த அத்­தி­வா­ரத்தில் கட்­டப்­பட்ட தேசிய மக்கள் சக்தி தான் இன்று பல­மான ஒரு சக்­தி­யாக வளர்ந்து நிற்­கி­றது என்­பதில் நமக்கு சந்­தோஷம் இருக்­கி­றது.

ஆனால் இந்தத் தேர்­தலில் சூழ்­நி­லைகள் வித்­தி­யா­ச­மா­னது. எல்லா வழி­க­ளிலும் நாட்டை நாச­மாக்­கிய ராஜ­பக்ஷ்­களை, பிழை­யான ஆட்­சி­யா­ளர்­களை மக்கள் விரட்­டி­ய­டித்து விட்­டார்கள். அதற்கு மாற்­றீ­டான நல்­ல­தொரு அர­சாங்கம் எதிர்­வரும் தேர்­தலில் அமைய வேண்டும் என்­பதே தற்­போ­தைய பொது­நோக்­காக இருக்­கி­றது.

அர­சாங்கம் என்­பது ஜனா­தி­ப­தியால் மட்டும் உரு­வா­கின்ற ஒன்­றல்ல. அவ­ரோடு சேர்த்து அவ­ரது அமைச்­ச­ரவை, அவ­ரது ஆளும் அணி என ஒரு கூட்டுப் பொறுப்­பாகும். அந்தக் கூட்டுப் பொறுப்­பினை செய்­யக்­கூ­டிய மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கக்­கூ­டிய மக்கள் எதிர்­பார்க்கும் ஆட்­சியை வழங்­கக்­கூ­டிய நடை­முறை சாத்­தி­ய­மான திட்­டங்­களும் அவற்றை அமுல்­ப­டுத்­தக்­கூ­டிய ஆற்­றல்­களும் கொண்­ட­வர்­களை ஒப்­பீட்­ட­ளவில் நாம் மதிப்­பீடு செய்து பார்க்க வேண்டும்.

இன்­னொரு வகையில் சொன்னால் ஆட்சிப் பொறுப்பை ஒப்­ப­டைத்தல் என்­பது மிக மிக பார­தூ­ர­மான ஒன்­றாகும். ஆட்சி செய்யும் விட­யத்தில் ஒரு சில அம்­சங்­களில் சறுக்கி விட்­டாலும் என்ன நடக்கும் என்­பதை நாம் கடந்த காலத்தில் அனு­ப­வித்­தி­ருக்­கிறோம். ஒரு அம்­சத்தை மட்டும் வைத்து அது தொடர்­பாக சொல்­லப்­படும் கோஷங்­களை வைத்து மட்டும் ஆட்­சி­யினை ஒரு தரப்­பிடம் ஒப்­ப­டைத்து விட முடி­யாது. நல்­ல­தொரு ஆட்­சியை வழங்­கு­வ­தற்கு அவ­சி­ய­மான சகல விட­யங்­க­ளையும் பட்­டி­ய­லிட்டு அதன் அடிப்­ப­டையில் இருக்­கின்ற தெரி­வு­களை மதிப்­பீடு செய்ய வேண்டும். அந்த வகையில் தான் எஸ்.ஜே.பி அணி­யா­னது தற்­போ­தைய சூழலில் இருக்­கின்ற தெரி­வு­க­ளுக்கு மத்­தியில் பொருத்­த­மான ஒன்­றாக இருக்­கி­றது. இத­னு­டைய அர்த்தம் என்.பி.பி போன்ற சக்­தி­களை நாம் முற்­றாக நிரா­க­ரிக்­கிறோம் என்­பது அல்ல. அவர்­களும் இந்த நாட்­டுக்கு மிக அவ­சி­ய­மான ஒரு சக்­தியே. எதிர்­கா­லத்தில் அவர்கள் இன்னும் முதிர்ச்சி அடைந்து தமது ஆற்­றல்­களை வளர்த்­துக்­கொண்டு நடை­முறைச் சாத்­தி­ய­மான தீர்­வு­க­ளோடு அதற்­கு­ரிய ஆள் பலத்­தோடு முன் வரு­கிற போது நிச்­ச­ய­மாக இந்த ஆட்­சியை அவர்கள் பொறுப்­பேற்­கவும் முடியும்.

சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்க வேண்டும் என உங்கள் கட்சி தீர்­மா­னித்­த­மைக்­கான கார­ணங்கள் என்ன? எஸ்.ஜே.பி. உடன் ஏதேனும் விசேட ஒப்­பந்­தங்கள் உள்­ள­னவா?
ஒன்றை மட்டும் நான் முதலில் உறு­தி­யாக சொல்ல வேண்டும். அதா­வது இந்த தேர்­தலை பொறுத்த அளவில் யாருக்கு வாக்­க­ளித்தால் எமது கட்­சிக்கு நன்மை; எமக்கு நன்மை என்ற ஒரு துளி எண்ணம் கூட எங்­க­ளிடம் இருக்­க­வில்லை. அல்லாஹ் மீது ஆணை­யாக. சத்­தி­ய­மிட்டு ஒரு முஸ்­லி­மாக இதனை உறு­திப்­ப­டுத்த முடியும். ஏற்­க­னவே எமக்கு எஸ்.ஜே.பி அணி­யோடு தொடர்பு இருக்­கி­றது என்ற ஒரே கார­ணத்­துக்­காக அவ­ச­ரப்­பட்டு அந்தத் தெரிவை நாம் மேற்­கொள்­ள­வில்லை. அதே­போல என் பி பி அணிக்கு கடந்த காலங்­களில் ஆத­ர­வ­ளித்தோம் என்­ப­தனால் அவர்­க­ளுக்கே இம்­மு­றையும் ஆத­ரவு என முடி­வெ­டுக்­கவும் இல்லை.

எமது கட்­சியின் தலை­மைத்­துவ சபை மூன்று அம்­சங்­களின் அடிப்­ப­டையில் வேட்­பா­ளர்­களை கூட்­ட­ணி­களை தேர்வு செய்ய வேண்டும் என முடி­வெ­டுத்­தது. முத­லா­வ­தாக ஜன­நா­ய­கத்தை, நீதித்­து­றையை, நாட்டின் சட்­டங்­களை மதித்து இந்த நாட்­டுக்கு அவ­சி­ய­மான சீர்­தி­ருத்­தங்­களை அதா­வது ஊழல் மோச­டிகள் இன­வாதம் என்­ப­வற்றை நடை­முறைச் சாத்­தி­ய­மான வழியில் இல்­லாமல் செய்­கின்ற மாற்­றங்­களை செய்ய வேண்டும். இரண்­டா­வ­தாக இந்த நாட்டு மக்கள் எதிர்­கொள்­கின்ற உட­னடி பிரச்­சி­னை­க­ளான பொரு­ளா­தாரப் பிரச்­சினை உள்­ளிட்­ட­வற்­றுக்கு நடை­முறைச் சாத்­தி­ய­மான தீர்­வு­களை வழங்­கக்­கூ­டிய ஆற்­றல்­களை கொண்­டி­ருக்க வேண்டும். மூன்­றா­வ­தாக சட்டம் ஒழுங்­கினை சம­மாக அமுல்­ப­டுத்­து­கின்ற புதிய ஆட்சி முறை ஒன்­றினை உரு­வாக்க வேண்டும்.

இதன் அடிப்­ப­டையில் எஸ்­ஜேபி அணி­யோடு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம். என்­பிபி அணி­யோடும் பேசு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கோரி இருந்தோம். துர­திஷ்­ட­வ­ச­மாக அவர்கள் அதற்கு முன்­வ­ர­வில்லை. இதற்­கி­டையில் தான் கடந்த ஆகஸ்ட் எட்டாம் திகதி எஸ்­ஜேபி கூட்­டணி பிர­க­டனம் செய்­கின்ற நிகழ்வு கொழும்­பிலே நடந்­தது. ஏற்­க­னவே அந்த கூட்­ட­ணியில் இருந்­ததன் அடிப்­ப­டையில் எமக்கும் அழைப்பு கிடைத்­தது. கலந்து கொண்டோம். அந்த பிர­க­ட­னத்தில் சொல்­லப்­பட்ட நோக்­கங்கள் நாட்­டுக்கு அவ­சி­ய­மா­னவை என்­பதை எவரும் மறக்க மாட்­டார்கள் என்­ப­தனால் அதில் கலந்து கொண்டோம். ஆனால் அவற்றை எவ்­வாறு அடை­வது என்­கின்ற வேலைத்­திட்­டங்­களை எஸ் ஜேபி முன்­வைக்க வேண்டும் அதன் அடிப்­ப­டையில் தான் நாம் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்தோம். அந்த பிர­க­ட­னத்தில் சொல்­லப்­பட்ட விட­யங்­க­ளுக்­கான எமது ஆலோ­ச­னை­க­ளையும் இன்னும் பல ஆலோ­ச­னை­க­ளையும் எழுத்து மூலம் அவர்­க­ளுக்கு வழங்­கினோம்.

அதேபோல என்பிபி அணி கட்சி மட்­டத்தில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு முன் வராத போதிலும் கூட அவர்­க­ளையும் தனிப்­பட்ட முறையில் சந்­தித்தோம். எமது கருத்­துக்­களை சொன்னோம். அவர்கள் பற்­றிய குறை நிறை­களை அவர்­க­ளுக்கு நேர­டி­யா­கவே சொன்னோம். அவர்­க­ளது கருத்­துக்­க­ளையும் கேட்­ட­றிந்தோம். கொள்கை சார்ந்த பல விட­யங்­க­ளுக்கு நாம் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அவர்­க­ளிடம் இருந்து திருப்­தி­யான பதில் கிடைக்­க­வில்லை. அத்­தோடு மாத்­திரம் நாம் முடிவு எடுக்­க­வில்லை. இரண்டு தரப்­பு­டைய தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­வரும் வரையில் பொறு­மை­யாக காத்­தி­ருந்தோம். அவை இரண்­டையும் படித்துப் பார்த்தோம். அதை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நடந்த பல தளங்­க­ளி­லான விவா­தங்­களை பார்த்தோம். இதி­லி­ருந்து எம்மால் ஒன்றை புரிந்து கொள்ள முடிந்­தது.

இரண்டு அணி­க­ளுமே நல்­ல­தொரு ஆட்­சியை நாட்­டுக்கு வழங்கப் போகிறோம் என்று சொன்­னாலும் நடை­முறைச் சாத்­தி­ய­மான திட்­டங்கள், அதற்கு ஏற்ற ஆற்­றலும் ஆளு­மையும், அதனைக் கொண்­டி­ருக்­கின்ற ஆளணி பலம், இந்தத் திட்­டங்கள் தொடர்பில் ஏற்­க­னவே மேற்­கொண்டு இருக்­கின்ற அர்த்­த­பூர்­வ­மான சில நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்றின் அடிப்­ப­டையில் ஒப்­பீட்­ட­ளவில் எஸ்.ஜே.பி.யினால் எல்லா வகை­க­ளிலும் ஓர­ளவு திருப்­திப்­ப­டக்­கூ­டிய ஆட்­சியை வழங்க முடியும் என்று நம்­பிக்கை நமக்கு இருக்­கி­றது.

ஊழல் மோச­டி­க­ளுக்கு முற்றுப் புள்­ளி­வைப்போம் என என்.பி.பி. உறு­தி­யாகக் கூறு­கி­றதே? அவர்கள் ஆட்­சிக்கு வந்தால் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பார்கள் என்ற நம்­பிக்கை உங்­க­ளுக்கு இல்­லையா?
திரு­டர்­களை பிடிப்போம் என்­கின்ற கோஷம் என்.பி.பி தரப்பில் மேலோங்கி இருந்­தாலும் அதிலும் அவர்கள் 100% நேர்­மை­யாக செயல்­ப­ட­வில்லை என்ற ஆதா­ர­பூர்­வ­மான அவ­தா­னமும் எமக்கு இருக்­கி­றது. ஊழல் எதிர்ப்பு விட­யத்­திலும் கூட பார­பட்­சங்­க­ளோடே செயல்­ப­டு­கி­றார்கள் என்ற அவ­தானம் இருக்­கி­றது. அதனை நான் நேர­டி­யா­கவே அவர்­க­ளுக்கு கூறி­யி­ருக்­கிறேன். அதற்கு திருப்­தி­யான எந்த பதி­லையும் அவர்கள் வழங்­க­வில்லை. அத்­தோடு ஊழல் எதிர்ப்பு விட­யத்தை சட்டம் ஒழுங்கு நடை­மு­றை­க­ளுக்கு வெளியில் சென்று ஒவ்­வொ­ரு­வரும் கையில் எடுத்து தனிப்­பட்ட கோப­தா­பங்­களை தீர்த்துக் கொள்­கின்ற ஒன்­றாக மாற்றிக் கொள்­வார்­களோ என்­கின்ற அச்­சமும் இப்­போது மேலோங்கி இருக்­கி­றது. அவர்­க­ளது மேல்­மட்டம் முதல் கீழ்­மட்ட உறுப்­பி­னர்கள் வரையில் தெரி­விக்கும் கருத்­துக்கள் இதனை நிரூ­பிக்­கின்­றன.

பொரு­ளா­தாரத் திட்­டங்­களை பொறுத்­த­வ­ரையில் அவர்­களின் பதில்கள் மழுப்­ப­லா­கவே இருக்­கி­றது. அவர்­களின் எதிர்­கால நிதி அமைச்சர் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் நபர் பொதுத்­த­ளங்­களில் கூறி­வரும் கருத்­துக்கள் பெரும் ஏமாற்றம் அளிக்­கின்­றன. முன்­னுக்குப் பின் முர­ணாக இருக்­கின்­றன. ஆட்­சி­முறை தொடர்­பிலும் அவர்கள் கூறும் கருத்­துக்கள் அவர்­களின் தடு­மாற்­றத்தை காட்­டு­கி­றது. எனவே அர­சாங்­கத்தை பொறுப்­பேற்று நடத்­துதல் என்­கின்ற இந்தப் பார­தூ­ர­மான விட­யங்­களில் இன்னும் அவர்கள் முதிர்ச்­சியும் அனு­ப­வமும் பெற வேண்டி இருக்­கி­றது.

அப்­ப­டி­யானால் எஸ்­ஜேபி இவற்றைச் செய்யும் என்று உங்­களால் எப்­படிக் கூற முடியும்?
எஸ்­ஜேபி அணி­யு­டைய இந்த விவ­கா­ரங்­க­ளையும் மதிப்­பீடு செய்தோம். ஒப்­பீட்டு அளவில் இந்த எல்லா விட­யங்­க­ளிலும் அவர்­க­ளது திட்­டங்கள் நடை­முறைச் சாத்­தி­ய­மா­ன­வை­க­ளாக இருக்­கின்­றன. அத்­தோடு ஜனா­தி­ப­தி­யோடு சேர்த்து இந்த நாட்­டுக்கு தீர்­வு­களை வழங்­கக்­கூ­டிய ஆளுமை உள்ள ஒரு குழுவும் அங்கு இருக்­கி­றது. மேலும் கடந்த நான்கு வரு­டங்­களில் பொறுப்­புள்ள எதிர்க்­கட்­சி­யாக சகல விட­யங்­க­ளிலும் மக்­க­ளுக்கு விசு­வா­ச­மாக நடந்த வர­லாறும் அவர்­க­ளுக்கு இருக்­கி­றது. மேலும் அவர்கள் ஆட்­சிக்கு வந்தால் செய்வோம் என கூறும் முக்­கிய விட­யங்­களை எதிர்க்­கட்­சியில் இருக்கும் போதே செய்யத் தொடங்கி இருக்­கின்ற அவ­தா­ரங்­க­ளையும் பார்க்க முடி­கி­றது. எனவே தற்­போ­தைய சூழ்­நி­லையில் அந்த அணி ஆட்சிப் பொறுப்பை ஏற்­ப­துதான் நாட்­டுக்கு உகந்­தது என நினைக்­கிறேன்.

இத­னு­டைய அர்த்தம் என் பி பி அணி ஒரு­போதும் இந்த நாட்டில் ஆட்சி செய்­யக்­கூ­டாது என்­ப­தல்ல. அவர்கள் இன்னும் அதி­க­மாக முதிர்ச்சி அடைந்த நிலையில் அனு­ப­வப்­பட்ட நிலையில் நடை­முறைச் சாத்­தி­ய­மான திட்­டங்­களைப் புரிந்து கொண்ட வகையில் அவர்கள் எதிர்­கா­லத்தில் ஆட்­சிக்கு வரலாம். நிச்­ச­ய­மாக அந்த நேரத்தில் நாட்டு நலன் என்­கின்ற பொது நோக்­கத்தின் அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு நாம் ஒரு­போதும் பின்­னிற்கப் போவ­தில்லை.

நமது நாட்டின் அவ­சர தீர்­வாக தேவைப்­ப­டு­வது பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வே. அந்த வகையில் எஸ்­ஜேபி அணி தான் அதற்கு மிகப் பொருத்­த­மா­னது என எவ்­வாறு கூறு­வீர்கள்?
ஒவ்­வொரு வேட்­பா­ளரும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்­கு­ரிய சிறந்த தீர்­வினை தாம் கொண்­டி­ருப்­ப­தா­கவே கூறு­கி­றார்கள். அதன் அடிப்­ப­டை­யி­லேயே தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தையும் வெளி­யிட்­டுள்­ளார்கள். ஆனால் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை மட்டும் வைத்து நாம் இறுதி முடி­வு­களை எடுக்க முடி­யாது.

இன்னும் பல விட­யங்­களை நாம் பார்க்க வேண்டும். முதலில் இந்த நாட்­டி­னு­டைய பொரு­ளா­தார விட­யத்தில் தேர்­த­லுக்கு முன்­பாக ஒவ்­வொரு வேட்­பா­ள­ரி­னதும் பார்வை எப்­படி இருந்­தது என்­பது மிக முக்­கியம். எதிர்க்­கட்­சி­யாக இருந்து கொண்டு அர­சாங்­கத்தை எதிர்க்க வேண்டும் என்­கின்ற ஒரே கார­ணத்­துக்­காக ஒன்றை கூறு­வதும், பின்னர் ஆளும் கட்­சி­யாக மாற நினைக்கும் போது இன்­னொன்றை கூறு­வ­து­மாக இருந்தால் அது ஒரு கட்­சி­யி­னு­டைய நேர்­மை­யீ­னத்­தையே காட்­டு­வ­தாக அமையும். மக்­க­ளுக்கு விசு­வா­ச­மாக அவர்கள் இல்லை என்­ப­தையே அது உறுதி செய்யும். உதா­ர­ண­மாக IMF இடம் கடன் பெறு­வ­தா­னது நாட்­டுக்கு தீர்வே அல்ல என என்.பி.பி முன்னர் கூறி­யது.

ஆனால் இப்­போது ஐஎம்எப் உத­வி­யுடன் தான் நாம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முன் கொண்டு செல்வோம் என கூறு­கி­றார்கள். அப்­படி என்றால் அவர்­க­ளது நிலைப்­பாட்டில் அவர்கள் உறு­தி­யாக இல்லை. அல்­லது அர­சி­ய­லுக்­காக இவ்­வா­றான ஒரு பார­தூ­ர­மான விட­யத்தில் தவ­றாக மக்­களை வழி நடத்­து­கி­றார்கள். எஸ்­ஜே­பியை பொறுத்­த­ளவில் இப்­போது அவர்கள் கூறும் நிலைப்­பாட்­டையே 2020லும் கூறி­னார்கள். அதா­வது மக்­க­ளுக்கு சுமை ஏற்­ப­டுத்­தாத நாட்­டுக்கு பொருத்­த­மான நிபந்­த­னை­க­ளோடு IMF கடனைப் பெற்று நாட்டை பொரு­ளா­தார வீழ்ச்சி நிலை­யி­லி­ருந்து மீட்­டெ­டுத்து பொரு­ளா­தா­ரத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்­கி­றார்கள். ஊழல் மோச­டி­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்­பது IMF கூறும் ஒரு முக்­கிய நிபந்­த­னை­யாகும். இது நாட்­டுக்கு அவ­சி­ய­மான ஒரு நிபந்­த­னையே. இந்த விட­யத்தில் என்.பி.பி.யும் பாரா­ளு­மன்­றத்தில் பேசி இருக்­கி­றது. எஸ்.ஜே.பி.யும் பேசி­யி­ருக்­கி­றார்கள். ஆனால் ஊழல்கள் பற்றி பேசு­வ­தற்கும் அப்பால் சென்று எஸ் ஜே பி ஆனது அர்த்­த­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டி­ருக்­கி­றது என்­ப­துதான் மிக முக்­கி­ய­மாக நாம் கவ­னிக்க வேண்­டிய ஒன்­றாகும். அந்த வகையில் தான் மருந்து இறக்­கு­ம­தியில் மோசடி செய்த அமைச்சர் ஒருவர் சிறையில் அடைக்­கப்­பட்டார். ஊழல்­க­ளுக்கு எல்லாம் தாய் ஊழ­லான VFS ஊழல் எஸ்.ஜே.பி யின் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக தற்­போது நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்டு இருக்­கி­றது. தமது அர­சாங்­கத்தில் இந்த ஊழல் ஒப்­பந்தம் முற்­றாக ரத்து செய்­யப்­படும் எனவும் வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கி­றார்கள். இந்த விட­யத்தில் என்­பிபி இன்னும் மௌன­மா­கவே இருந்து வரு­கி­றது என்­ப­தையும் நாம் கவ­னிக்க வேண்டும்.

இது பெரும் ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. இது பற்றி அவர்­க­ளிடம் நான் நேர­டி­யா­கவே கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறேன். அதற்கு அவர்கள் வழங்­கிய பதில் மழுப்­ப­லா­கவே இருந்­தது. இந்த நாட்டை வங்­கு­ரோத்து நிலைக்கு கொண்டு சென்ற ராஜ­பக்­சக்­களை நீதி­மன்­றத்தின் முன்னால் எஸ்­ஜேபி நிறுத்தி குற்­ற­வா­ளிகள் என தீர்ப்பும் பெற்­றி­ருக்­கி­றது. திரு­டப்­பட்ட சொத்­துக்­களை மீட்­டெ­டுப்­ப­தற்கு அவ­சி­ய­மான புதிய சட்­ட­மூலம் ஒன்றை பாரா­ளு­மன்­றத்தில் எஸ்­ஜேபி ஏற்­க­னவே சமர்ப்­பித்­தி­ருக்­கி­றது. இலங்கை மின்­சார சபைக்கு சொந்­த­மான 28% பங்­கு­களை முறை­கே­டாக விற்கும் நட­வ­டிக்­கை­யினை தடுப்­ப­தற்­காக நீதி­மன்­றத்­திற்கு போய் இப்­போது எஸ்­ஜேபி அணி போராடி வரு­கி­றது. ஆக, ஊழல் மோசடி விட­யத்­திலும் பாரா­ளு­மன்ற பேச்­சுக்­க­ளுக்கும் அப்பால் சென்று காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட அணி­யாக எஸ்ஜே பியை நாம் பார்க்­கலாம். தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தைப் பொறுத்­த­ளவில் நடை­முறைச் சாத்­தி­ய­மான திட்­டங்­களா அவை என்­ப­தனை முதலில் பார்க்க வேண்டும். தாம் கூறும் பொரு­ளா­தாரத் திட்­டங்கள் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­படும் என்­கின்ற ஒரு விரி­வான திட்டம் ஒன்­றினை (blue print 3.0) எஸ்­ஜேபி இப்­போது மக்கள் முன் சமர்ப்­பித்து இருக்­கி­றது. அதில் கூறப்­பட்­டுள்ள ஒவ்­வொரு திட்­டங்­களும் எவ்­வா­றான கால எல்­லைக்குள் அமுல்­ப­டுத்­தப்­படும் என்­ப­தையும் மிக தெளி­வாக கூறி­யி­ருக்­கி­றார்கள். இதன் மூலம் தமது பொரு­ளா­தார திட்­டங்கள் நடை­முறைச் சாத்­தி­ய­மா­னவை என்­ப­த­னையும் அதற்­கு­ரிய சிறந்த ஆளு­மையும் ஆள­ணி­களும் அர­சியல் மன உறு­தியும் தம்­மிடம் இருக்­கி­றது என்­ப­தையும் எஸ்.ஜே.பி நிரூ­பித்­தி­ருக்­கி­றது. ஆனால் என்­பிபி இது­போன்ற தெளி­வான திட்­டங்­களை இது­வரை முன்­வைக்­க­வில்லை. பலரும் சவால் விட்­ட­போ­திலும் கூட அவர்கள் இன்னும் அதனை செய்­ய­வில்லை. இன்­னொரு பக்­கத்தில் அவர்­களின் பொரு­ளா­தார நிபு­ணர்­களும் வருங்­கால நிதி அமைச்­சரும் என சொல்­லப்­படும் நபர்­களும் கூறும் கருத்­துக்கள் அவர்கள் இந்த விட­யத்தில் தெளிவு நிலையில் இல்லை என்­பதை காட்­டு­கி­றது. மாத்­தி­ர­மன்றி பொரு­ளா­தா­ரத்தை நிலை­கு­லையச் செய்து விடுவார்களோ என்­கின்ற பாரிய அச்சம் பொரு­ளா­தார நிபு­ணர்கள் மற்றும் பொரு­ளா­தார நிலை­மை­களை புரிந்து கொள்ளக்கூடிய நபர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால், எஸ்ஜேபி அணியானது மிகத் தெளிவான பொருளாதார நிலைப்பாடுகளை கொண்டிருக்கிறது. மிக விவரமான நடைமுறைச் சாத்தியமான பொருளாதார திட்டத்தை முன் வைத்திருக்கிறது.அதற்குரிய நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கிறது..அதற்கு அவசியமான அரசியல் மன உறுதியினை வெளிப்படுத்தி இருக்கிறது… இதற்கு அத்திவாரமான பல நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியும் இருக்கிறது…. என்ற காரணங்களின் அடிப்படையில் இந்த நாட்டுக்கு தற்கால சூழலில் பொருளாதாரத் தீர்வை வழங்கக்கூடிய மிகப் பொருத்தமான அணியாக அவர்களை நாம் பார்க்கலாம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.