றிப்தி அலி
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மாத்திரமே உள்ளன. இவ்வாறான நிலையில் பிரச்சாரங்கள் நாடளாவிய ரீதியில் சூடுபிடித்துள்ளன.
கடந்த 2019 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போது சிறுபான்மையினரை எதிரிகளாகக் காண்பித்தே தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்றன. எனினும், இந்த ஜனாதிபதித் தேர்தலில் இனவாதம் ஒரு பிரசாரப் பொருளாக அமையாததைக் காணமுடிகிறது. பெரும்பான்மை சிங்கள மக்களும் இனவாதக் கதைகளை இனியும் கேட்பதற்குத் தயாரில்லை.
இதனால், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணல் மற்றும் ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தல் போன்ற திட்டங்களுக்கே இலங்கை மக்கள் முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.
அது போன்று, கொரோனா வைரஸ் பரவல் காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பலவந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஜனாஸா எரிப்பு விவகாரமும் முஸ்லிம் வாக்காளர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தேர்தல் மேடைகளில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த வாரங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, கொவிட் தொற்று காரணமாக பலவந்தமாக எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். அதேவேளை, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அறிவித்திருந்தார்.
இதற்கு ஒருபடி மேல் சென்று, ஜனாஸா எரிப்புத் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றினை நியமிக்கவுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராபஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடியதை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலம் தற்போது 2 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இந்தக் காலப் பகுதியில் பலவந்த ஜனாஸா எரிப்பிற்கு அவருடைய அரசாங்கம் மன்னிப்புக் கோரியதைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட அறிவிப்புக்களாகவே நஷ்டஈடு வழங்கல் மற்றும் பாராளுமன்ற தெரிவுக்கு நியமனம் போன்றவற்றினை இலங்கை மக்கள் பார்க்கின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பான முறையான வேண்டும் என்ற கோரிக்கை முக்கிய இடம்பிடித்திருந்தது.எனினும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகிய பின்னர் இந்த விடயம் கிடப்பில் போடப்பட்டது. அவர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் கத்தோலிக்க மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இது போன்ற நிலையே பலவந்த ஜனாஸா எரிப்புக்கு நீதி வழங்குவதாக கூறப்படும் வாக்குறுதிகளுக்கும் நடக்குமோ என மக்கள் அங்கலாய்கின்றனர். பலவந்த ஜனாஸா எரிப்பின் பின்னால் நின்று முஸ்லிம்களைப் பழிவாங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதும் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே ஜனாதிபதி இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குவதும் வேடிக்கையாகும்.
இதேவேளை, ஜனாஸாக்கள் எரிக்கப்படவில்லை; ஜனாஸா பெட்டிகளே எரிக்கப்பட்டன என அக்காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வட மேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் கூறியிருந்தார். இந் நிலையில் நசீர் அஹமடின் ஏற்பாட்டில் அவரது சொந்த ஊரான ஏறாவூரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே பலவந்த ஜனாஸா எரிப்பிற்கு நஷ்டஈடு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அப்படி என்றால், எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கா அல்லது எரிக்கப்பட்ட ஜனாஸா பெட்டிகளுக்கா நஷ்டஈடு வழங்கப் போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது தொடர்பில் ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டத்திலேயே குறித்த அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும். பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கக்கூடியவர்களாக எமது நாட்டு மக்கள் மாற வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இதேவேளை, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு நெருக்கடிக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் பகிரங்க மன்னிப்பொன்றினை அரசாங்கம் சார்பில் கோரியிருந்தார்.
குறித்த கடவுச்சீட்டு விவகாரம் அமைச்சர் அலி சப்ரியின் கட்டுப்பாட்டிலுள்ள வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புபட்டதல்ல. இவ்வாறான நிலையிலேயே அவரினால் பகிரங்க மன்னிப்பு கோரப்பட்டிருந்தது. எனினும், அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில் அங்கம் வகித்த காலத்திலேயே பலவந்த ஜனாஸா எரிப்பு இடம்பெற்றது. உண்மையில் அன்றே அவர் தனது எதிர்ப்பை வெளியிட்டு பதவியை இராஜினாமாச் செய்திருக்க வேண்டும் அல்லது அதற்காக பகிரங்க மன்னிப்பாவது கோரியிருக்க வேண்டும். எனினும் தனது சமூகத்தைப் பாதித்த ஒரு விடயத்திற்காக எந்தவித மன்னிப்பும் கோராத அமைச்சர் அலி சப்ரி, திடீரென கடவுச்சீட்டு விடயத்திற்கு மன்னிப்புக் கோரியுள்ளமையானது அவரது இரட்டை நிலைப்பாட்டையே காண்பிப்பதாக அமைந்துள்ளது.
இவர் போன்றே, பலவந்த ஜனாஸா எரிப்பின் போது பெட்டிப் பாம்பாக அடங்கியிருந்து விட்டு இன்று வந்து கபன் துணிப் போராட்டத்தினை விமர்ச்சிக்கின்றார் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எல்.எம். அதாஉல்லா.
தர்கா நகர் வன்முறை முதல் பலவந்த ஜனாஸா எரிப்பு வரையான காலப் பகுதியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற பல வன்முறைச் சம்பவங்களின் போது வாய்மூடி மௌனியாக இருந்ததுடன் மாத்திரமல்லாமல் ராஜபக்ஷ குடும்பத்தினை ஆதரித்து வந்தமை உலகமறிந்த உண்மையாகும்.
இவ்வாறான நிலையில் கபன் துணிப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் விதமாக கடந்த சனிக்கிழமை சம்மாந்துறையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உரையாற்றியிருந்தார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தினை கைவிட்ட சமயத்தில் இரண்டு சிங்கள சகோதரர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முன்வந்து கொழும்பு – 07 பொரளையிலுள்ள கனத்தை மயானத்தின் வேலிகளில் வெள்ளைத் துணிகளை கட்டினர். இதுவே நாடளாவிய ரீதியில் கபன் துணிப் போராட்டமாக மாறியது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அலிசாஹிர் மௌலானா இதனை நாடளாவிய ரீதியில் கொண்டுசென்றார். இதன் ஊடாக பலவந்த ஜனாஸா எரிப்பிற்கு எதிராக மாற்று சமூகத்தவர்களின் ஆதரவு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு இன்று வந்து பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா தேர்தல் மேடைகளில் வீராப்பு பேசுகின்றார். பலவந்த ஜனாஸா எரிப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி இன்று யாருடன் இருக்கின்றார் என்பதாவது பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவிற்கு தெரியுமா?
இவர் போன்றே, முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் ஜனாதிபதியின் தேர்தல் பிராசர மேடைகளில் பொய்களைக் கூறித் திரிகின்றார். முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இவர் முன்வைத்த 14 கோரிக்கைகளில் 12க்கு தீர்வுகளை கிடைத்துள்ளதாக சம்மாந்துறையில் இடம்பெற்ற கூட்டத்தில் இவர் கூறியுள்ளார். ஆனால், தீர்வு கிடைத்த 12 விடயங்களை என்னவென்று அவர் கூற மறந்துவிட்டார். அதே கூட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் சிவில் அமைப்பின் தலைவரொருவர், இது முற்றிலும் பொய் என்றதுடன், 14 கோரிக்கைகளில் ஒன்றும் கூட இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்றார்.
கொழும்பினைத் தளமாகக் கொண்ட அரசியல்வாதிகளான அலி சப்ரி மற்றும் அசாத் சாலி ஆகியோர் இதுவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான ஒரு கூட்டத்தினைக்கூட கொழும்பில் ஏற்பாடு செய்யவில்லை.
இவ்வாறான நிலையில், ஏனையவர்களினால் கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பங்கேற்று பொய்களைக் கூறி ஜனாதிபதியிடம் மார்க்ஸ் போடும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறன நிலையிலேயே நல்லடகம் செய்தல், தகனம் செய்தல் உரிமைச் சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் பிரகாரம், உயிரிழந்த நபரின் விருப்பத்திற்கேற்ப அவரது உடலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுவொரு சிறந்த முயற்சியாகும்.
எப்போதே மேற்கொண்டிருக்க வேண்டிய இந்த விடயத்தினை தற்போதைய தேர்தல் காலத்தில் அவசர அவசரமாக மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமையானது ஜனாஸா எரிப்பு விவகாரத்தையும் ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல் மேடைகளில் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு இந்தத் தேர்தலில் சிறந்த பாடம் புகட்ட வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். இல்லாவிடில் மத நம்பிக்கை மற்றும் கொள்கையினை மீறி தங்களின் சுயலாபத்திற்காக முஸ்லிம் அரசியல்வாதிகளே பலவந்த ஜனாஸா எரிப்பிற்கு துணைபோனதைப் போன்றதொரு நிலமை எதிர்காலத்தில் ஏற்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இருக்கப் போவதில்லை.– Vidivelli