பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதுமே தமது பிரதான இலக்குகள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தி இந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை சரிசெய்து அதனை அனைவருக்கும் பயனுள்ளதாக மாற்றினால், இனவாதம் இல்லாத அல்லது மத சகிப்புத்தன்மைகொண்ட நாட்டைக் கட்டியெழுப்பினால், சமூகநீதியை நிலைநாட்டினால் அதுவே எமக்கு கிடைக்கும் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் ஊழலை ஒழிப்பது மாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அதனுடனான உடன்படிக்கையில் சில திருத்தங்களைச் செய்வோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு முதலீடு குறித்து கருத்து வெளியி்ட்ட அவர், எரிசக்தி துறையில் “இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம்” உள்ளது என்றார். “புதுப்பிக்கத்தக்க, குறிப்பாக காற்று, எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான மகத்தான ஆற்றலை இலங்கை கொண்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதனை விரைவில் மேற்கொள்ள முடியும் என நினைக்கிறேன். எனினும் சிலவேளை அதில் தாமதங்களும் ஏற்படலாம் என்றார். இதனை ஒழிப்பதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் எவ்வாறு ஆட்சியை முன்கொண்டு செல்வீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் தான் ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தில் ஏற்படும் வெற்றிடத்திற்கு எமது கட்சியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுவார். இதன் மூலம் நான்கு பேரைக் கொண்ட அமைச்சரவையை அமைக்க முடியும். அல்லது ஜனாதிபதி மாத்திரமே சகல அமைச்சுப் பதவிகளையும் வைத்திருக்கவும் முடியும். இன்றேல் தற்போதைய பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் காபந்து அரசாங்கத்தை அமைக்க முடியும். இவை அனைத்தும் கள நிலைமைகள் மற்றும் அடுத்தவர்கள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே சாத்தியமாகும் என்றார்.
நாட்டின் பல பாகங்களிலும் அநுர குமார திசாநாயக்கவுக்கான ஆதரவு அலையைக் காண முடிந்தாலும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் அவரது கட்சி இன்னும் பெரிய அளவில் ஊடுருவியதாகத் தெரியவில்லையே என்ற கேள்விக்க பதிலளித்த அவர் ‘‘தமிழர்கள் விரும்பும் போர்க்கால பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதி தொடர்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “கடமை” என்றார். “உள்நாட்டுப் பொறிமுறைகளை நம்பகத்தன்மையுடனும், உறுதியானதாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும், எனவே தமிழ் மக்கள் அவற்றை நம்ப முடியும். கடந்த கால அரசாங்கங்கள் உண்மையை மறைத்து நடைமுறைகளை தாமதப்படுத்துவதில் உறுதியாக இருந்தன’ என்றும் அவர் தி இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் மேலும் குறிப்பிட்டுள்ளார். -Vidivelli