- சிறுபான்மை கட்சிகள் வேறுதிசையில் சென்றாலும்
தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு எனக்கு உண்டு - ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாறாவிட்டால் மீண்டும் ஒரு
நெருக்கடி நிலை ஏற்படலாம் என்கிறார் ஜனாதிபதி
இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040 காலப்பகுதியில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “Ask Me Anything” என்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ இவ்வாறு குறிப்பிடார். .
இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடவுச் சீட்டு பெறுவதில் உள்ள நெரிசலை விரைவில் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தாம் விரும்பிய அமைச்சரவையை நியமிக்காது, நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளேன். இதற்காக மக்கள் தமக்கு விருப்பமானவர்களை புதிய பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள்.
சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள போது, இந்நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது.
தற்போது, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீன எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் கடன் நிலைத்தன்மை, கடன் நிவாரணம் மற்றும் 2032 வரையிலான முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளோம். இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லப் போகிறோமா அல்லது மாற்றப் போகிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வி. அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் தற்போதைய அளவுகோல்களை மாற்ற முடியாது. வரித் திருத்தங்கள் செய்யப்படலாம் என்றாலும், அதற்கு முழு அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மாற்று வருமான வழிகளை முன்வைக்காமல் வரிகளைக் குறைத்து, அரச வருவாயைக் குறைத்து, நலன்புரி நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கச் செலவினங்களை அதிகரிக்க ஏனைய கட்சிகள் பரிந்துரைக்கின்றன. 2019 இல் வரி குறைப்பு மற்றும் அதிகப்படியான சலுகைகள் காரணமாக வருமானம் குறைந்தது. இதனாலேயே 2022 இல் பொருளாதார சிக்கல்கள் எழுந்தன. கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டுமா என்று வினவ விரும்புகிறோம்.
சாதி, இனம் போன்று நீடித்து காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆணைக்குழுவொன்று தொடர்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறோம். இனம், சாதி, மதம் வேறுபாடின்றி அனைவரையும் பாதித்த பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தல் நடைமுறை காண கிடைத்துள்ளதையிட்டு ஜனாதிபதி என்ற வகையில் நான் பெருமையடைகிறேன்.
இந்த சூழ்நிலை ஒரு நாடாக ஒன்றிணைவதற்கும், தற்போதுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வாய்ப்பளிக்கும். குழந்தை பராமரிப்பு மற்றும் குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவு இருந்தாலும், அதற்குள் மேலும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அதேபோல் நமது அரசியல் முறையிலும் மாற்றம் தேவைப்படுகிறது. பொருளாதாரச் சரிவு அரசியல் முறையினையும் பாதித்துள்ளது. மற்றைய கட்சிகள் பழைய பொருளாதார கொள்கைகள் மீதே தங்கியுள்ளன. அது இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சியாகும். அவ்வாறான செயற்பாடுகளை நம்பியிருக்க முடியாது.
அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்களை நீதிமன்றம் வரையில் கொண்டு செல்லும் கலாச்சாரத்திற்கு மாறாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே சட்ட வரையறைக்குள் செயற்படும் வகையில் ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் செயற்படுத்தப்படும் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.- Vidivelli