சிங்களத்தில் : எம்.எஸ்.எம். ஐயூப் (லங்காதீப)
தமிழில்: எம். எச். எம். நியாஸ்
பொது மக்களுக்கு ஏற்பட்ட பாரிய பொருளாதார பிரச்சினைகள் காரணமாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகரில் உள்ள வீதிகளுக்கு வந்து அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த பாரிய பொருளாதார பிரச்சினைகள் அவர்களில் பெரும்பாலானவர்களின் அன்றாட வாழ்க்கையை பயங்கரமாக பாதித்தது மட்டுமன்றி அவர்களது குடும்ப வாழ்க்கையையும் மோசமாக பாதித்தது. தமது கனவுகளும் தமது பிள்ளைகளின் எதிர்கால கனவுகளும் வெறும் கானல் நீராய் மாறிக் கொண்டு செல்வதை அவர்கள் அவதானித்தனர். அவர்களிடம் எவ்வித முன் ஏற்பாடுகளும் இருக்கவில்லை. பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் அவர்களிடம் ஏற்பட்ட திடீர் விழிப்புணர்வு இறுதியில் ‘அரகலய’ எனும் பெயரில் அவர்களது எழுச்சியாக உருவெடுத்தது. அதனால்தான் அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதற்கு அவர்கள் முன்வந்தார்கள்.
அந்த மக்கள் எழுச்சி 2022 ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை நான்கு மாதங்களாக நீடித்துச் சென்றது. அது நாட்டிலிருந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ‘அரகலய’ (எழுச்சி அல்லது போராட்டம்) எனும் பெயரில் பிரபல்யமானது. அது நாட்டிலுள்ள மக்களிடம் அசாதாரன வரவேற்பையும் பெற்றது. அதன் உச்சகட்டத்தில் அதற்கு முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் நாட்டின் முப்படை தளபதியான நிறைவேற்று ஜனாதிபதி வெளிநாடொன்றுக்கு பாய்ந்து சென்று விட்டார்.
அந்த போராட்டத்தில் உடனடி இலக்கு ‘(கோட்டா கோ ஹோம்)’ ‘கோட்டா வீட்டுக்குப் போ’ எனும் சுலோகத்தால் கூறப்பட்டது. அதன் நீண்ட கால இலக்காகவிருந்தது ‘சிஸ்டம் சேன்ஜ்’ ஆகும். (அதாவது சமூக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான மாற்றங்களாகும்). நான்டின் ஜனாதிபதி வெளிநாடொன்றுக்கு பாய்ந்து சென்றதன் மூலம் போராட்டக்காரர்களின் உடனடி இலக்கு நிறைவேறியது. எனினும் அந்த போராட்டம் ஒரு அமைப்பு ரீதியிலான திட்டமிட்ட போராட்டமாக இருக்காது திடீரென வெடித்த போராட்டமாக இருந்தது. அதனால் அதன் முதலாம் இரண்டாம் இலக்குகளுக்கிடையில் தொடரொன்றை ஏற்படுத்துவதற்கு போராட்டக்காரர்களினால் முடியாது போயிற்று. எனவே போராட்டக்காரர்கள் தமது முதலாவது இலக்கு நிறைவேறிய பின் தமது மேடையிலிருந்து இறங்கிச் சென்று விட்டனர்.
அந்தப் போராட்டத்தால் பயனடைந்தவர் யார்? பாராளுமன்றத்தின் தேசியப் பட்டியலில் ஒரேயொரு ஆசனத்தை மட்டுமே பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்கவாகும். அவர் 2022 மே மாதத்தில் நாட்டின் பிரதமராகவும் யூலை மாதத்தில் நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரகலயவின் ஆரம்பக் காலத்திலிருந்தே போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியது. ரணில் பிரதமர் பதவியை ஏற்ற பின் ‘கோட்டா கோ கம’ என்று போராட்டக்காரர்களினால் ஆக்கிரமிடப்பட்ட காலிமுகத்திடலுக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொடுத்தார். அவர் தனது கட்சியின் தலைவியான கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவுக்கும் தமது கட்சியின் பிரதித் தலைவரான ருவன் விஜயவர்தனவுக்கும் போராட்டக்காரர்களுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும்படி அறிவுரை வழங்கப்போவதாக பகிரங்கமாக கூறினார்.
கடனை மீளச் செலுத்துவதில்
காணப்படும் சவால்கள்
உண்மையிலே அவர் (ரணில்) அவ்வாறு அறிவுரை வழங்கினாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த சந்தர்ப்பம் வரை, போராட்டக்காரர்களினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் ‘உடனடி இலக்கு’ ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். அதாவது ரணிலை பிரதமராக பதவியேற்க வைத்து கோடாபயவை பதவிநீக்கம் செய்தமையாகும். அதுவும் இரண்டு மாதங்களுக்குள் நடந்தேறியது. அதன்படி அவர்களது (போராட்டக்காரர்களது) இரண்டாவது இலக்கான ‘சிஸ்டம் சேன்ஜ்’ செய்வதை போராட்டக்காரர்களின் ஒரு சாராரேனும் எண்ணியிருந்தால் அது நியாயமான முயற்சியாக இருந்திருக்கும். ஆனால் போராட்டக்காரர்களின் பெரும்பான்மையினர் அவ்வாறு எண்ணவில்லை.
அவர் (ரணில்) போராட்டக்காரர்களை தாக்கி காலிமுகத்திடலில் இருந்தும் வெளியேற்றினார். அதன் பின் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் துணையுடன் நாட்டின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றார். அது ஒரு புதிய வேலைத்திட்டமல்ல. கோட்டாபய ராஜாக்ஷ சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளைக் கோர முன் அந்த நிதியத்தினால் ஸ்ரீலங்காவுக்காக அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவொன்று அவராலேயே தெரிவு செய்யப்பட்ட சர்வதேச மட்டத்தில் ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்களின் ஆலோசனைகளின் பேரில் அவ்வேலைத் திட்டங்களை ரணில் முன்கொண்டு சென்றார்.
அது அடிப்படையில் வரி மற்றும் வெளிநாட்டுக்கடனை கொண்டு நிறைவேற்றப்படும் வேலைத்திட்டமாகும். கடன்களை மீளக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை ஸ்ரீலங்கா அரசாங்கமே தயாரிக்க வேண்டும். ஆனால் இன்று வரை ஸ்ரீ லங்கா அரசு அந்தத் திட்டத்தைத் தயாரித்ததாகத் தெரியவில்லை. எது எவ்வாறாயினும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதி கட்டாயமாக முதலில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பொன்றுள்ளது. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் பெற்றுக்கொண்ட மிகப் பெரிய கடனை மீளச் செலுத்துவதற்கான திட்டமொன்றை தயாரித்து அதை நடைமுறைப்படுத்துவதே அது.
2022 ஏப்ரல் 12ம் திகதி ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கா அரசு வெளிநாட்டுக் கடன்களை செலுத்தாது இடைநிறுத்தியது.
சர்வதேச நாணய நிதியத்தை மையப்படுத்திய வேலைத்திட்டத்தின் கீழ் இரட்டைத் தரப்பு கடன் வழங்குனர்களுடன் யூன் 26ம் திகதி செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கடன் வழங்குனர்களிடம் பெற்றுக்கொண்ட கடனை 2028 வரை பின்போட முடிந்தது. எனினும் அதன் பின்னரும் அந்தக் கடனை 2027முதல் தமக்குத் தரவேண்டுமென சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
‘சிஸ்டம் சேன்ஜ்’ நடந்தாலும் நடைபெறாவிட்டாலும் இன்னும் இரண்டு மாதங்களில் அதிகாரத்துக்கு வரவுள்ள ஜனாதிபதியிடம் கடன்களை மீளச் செலுத்ததுவது பற்றிய திட்டமொன்று இருக்க வேண்டும். அவ்வாறு திட்டமொன்று இல்லாதவிடத்து மேலும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் கழியும் வேளையில் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை பூதாகரமாக உருவெடுப்பது நிச்சயம். நாடு இவ்வாறான பரிதாபமான நிலையில் இருக்கும் காலகட்டத்தில்தான் இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள இந்த ஆபத்தை இந்த நாட்டு மக்களும் இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளும் விளங்கியிருப்பதாக தெரியவில்லை.
இதுவரை காலமும் நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் இருமுனை போராட்டமாகவே காணப்பட்டது. எனினும் இம்முறை முதல் தடவையாக அது மும்முனை அல்லது நால்முனைப் போராட்டமாகவே நடைபெறவுள்ளது.
நாட்டின் பொதுமக்கள் 2022 ஏப்ரல் நடைபெற்ற போராட்டத்தின் (அரகலயவின்) பின்னர் தமது பிரதேச அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சியுடன் முன்பிருந்த நெருங்கிய தொடர்பையும் பொருட்படுத்தாமல் அரசியல் ரீதியாக சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர்.
கடந்த கால தேர்தல்களின் போது 3 வீத வாக்குகளை மட்டுமே பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி இன்று ஏனைய கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் அதுவே. எனினும் தேசிய சொத்துக்களை விற்றல், அதிகாரப் பகிர்வு, மத்திய வங்கியின் ஊழல் ஆகியன பற்றி மொட்டுக்கட்சி தமது ஆதரவாளர்களது உள்ளங்களில் பதியவைத்துள்ள கருத்துக்கள் பற்றிய தீர்மானங்களை அதன் ஆதரவாளர்களுக்கு அதைரியத்தை ஏற்படுத்தாது விட்டுவிடுமா?
செயல்முறையை மாற்றுகின்ற
செய்முறை
பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிசபை போன்றவற்றின் அரசியல்வாதிகள் இது போன்ற கட்டங்களில் மக்கள் நலன் பற்றியோ கொள்கை ரீதியிலான நிலைப்பாட்டையோ ஒதுக்கிவிட்டு தமது எதிர்கால நலன் பற்றி சிந்தித்தே முடிவெடுப்பார்கள். எனவே ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் மொட்டுக்கட்சியை விடவும் ஐக்கிய தேசிய கட்சியில் தமது இருப்புக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நினைத்திருக்கலாம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்த மொட்டுக்கட்சியின் சில முன்னால் மாகாண சபை உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா குழுவினரும் அவ்வாறு தான் நினைத்திருப்பார்கள்.
2022 இல் மொட்டுக்கட்சி, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு தகுதி பெற்ற ஒரேயொரு நபர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என்று கூறிக்கொண்டே அதை நியாயப்படுத்தினார்கள். எனினும் மொட்டுக் கட்சியின் உறுப்பினரான ஜொன்ஸ்டன் பெர்னான்டோ வரியைக் குறைத்த ஜனாதிபதியை (கோட்டாபய ராஜபக்ஷவை) பதவியிலிருந்து வெளியேற்றிவிட்டு, வரியை அதிகரிக்கச் செய்த ஜனாதிபதியை (ரணில் விக்ரமசிங்கவை) மீண்டும் ஜனாதிபதியாக நியமனம் செய்வதற்கு தனது கட்சியில் சிலர் முன்னின்று உழைப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தால் முன்வைத்த அனைத்து பிரேரணை மற்றும் சட்டதிட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மொட்டுக் கட்சியின் வாக்குகளே காரணமாக இருந்தது. அதை அவர் மறந்திருக்கலாம். ஆனால் பொது மக்கள் மறக்கவில்லை என்பதை அவர் அறிவாரா? இறுதியாக போராட்டக்காரர்களுக்கு (அரகலையில் கலந்து கொண்டோர்) நடந்தவையே மொட்டுக் கட்சிக்கும் நடந்தது. அரகலயவும், மொட்டுக் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கறிவேப்பிலையாகிவிட்டது.
மேற்குறிப்பிட்ட எந்த ஒரு விடயமும் அரசியல் ரீதியான கொடுக்கல் வாங்கல்களும் பொது மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை. அவை அனைத்தும் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகளே தவிர வேறொன்றுமில்லை. மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே.
ஜே.வி.பி.யும் சஜித்தின் கட்சியும் சர்வதேச நாணய நிதியத்தை மையமாகக் கொண்ட வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லப் போவதாகக் கூறி வருகின்றன. எனினும் அது தற்போதுள்ள வேலைகளை முகாமைத்துவம் செய்து கொள்வதற்காக எடுக்கப்போகும் நடவடிக்கை மட்டுமே. அது கூட 2027 இல் முடிவடையும் நான்காண்டுகால திட்டமாகும். ஆனால் அவர்கள் கீழ் வரும் விடயங்களைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
அந்தத் திட்டம் 2027 இன் பின்னர் கடன்களை செலுத்தக்கூடியதாகவும் கடன் பெற்றுக்கொள்வதை குறைத்துக் கொள்ளக்கூடியதாகவும் அமைய வேண்டும்.
அது வெளிநாட்டு நாணயத்தை அதிகமாகப் பெறக்கூடிய சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஏற்படக்கூடிய எதிர்பாராத பொருளாதார அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்கக் கூடியதாகவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதன் மூலமாக மட்டுமே ‘சிஸ்டம் சேன்ஜ்’ ஏற்படும்.
அவ்வாறான திட்டமொன்றைக் கொண்ட அரசியல் கட்சி எது? தற்போதைக்கு அவ்வாறான திட்டமொன்று இல்லாதிருப்பினும் எதிர்காலத்திலாவது அவ்வாறான திட்டமொன்றை வகுத்துக் கொள்ளக் கூடிய, அதை முறையாக செயல்படுத்த விரும்பும் உருப்படியான கட்சி எது?
மேற்படி விடயங்களை கருத்திற் கொண்டு நாட்டுக்குப் பொருத்தமான கட்சியொன்றுக்கு வாக்களிக்கும் மாபெரும் பொறுப்பு பொது மக்கள் கைகளில் தான் உள்ளது. – Vidivelli