எஸ்.என்.எம்.சுஹைல்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வெளியாகியிருந்தது. எனினும், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே இலங்கை அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. குறிப்பாக முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி முஸ்லிம் சமூகம் கூடுதல் ஆர்வம்கொண்டிருந்தது.
சமூக நீதிக்கான கட்சி எனும் பதிவுசெய்யப்படாத தரப்பு தேர்தல் அறிவிப்புக்கு முன்பதாகவே அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுடன் கொண்டிருந்த தேனிலவை முறித்துக்கொண்டது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக்குள் இருந்த முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதை தாமதப்படுத்தின. தேசிய காங்கிரஸானது அரசாங்கத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டிவந்தது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அறிவித்த காலி கூட்டத்தில் கலந்துகொண்ட அதாவுல்லாஹ் தான் ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் பிரதிநிதிகள் வெவ்வேறான நிலைப்பாடுகளில் இருந்தனர். அரசாங்கத்தை ஆதரிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளும் ஆரம்பத்தில் அமைதி காத்தனர்.
தேர்தலுக்கான தினம் அறிவித்ததன் பின்னர், முஸ்லிம் கட்சிகளின் உயர்பீடங்கள் ஆங்காங்கே கூட தாம் யாரை ஆதரிப்பது என்று ஆராய்ந்தனர். எனினும், கடந்த வாரம் வேட்புமனு தாக்கள் இடம்பெற்றது. இதற்கு முன்பதாக கடந்த 4 ஆம் திகதி தாருஸ்ஸலாமில் கூடிய மு.கா. சஜித்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. 8 ஆம் திகதி சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சிகளின் ஒப்பந்தத்திலும் மு.கா. தலைவர் கைச்சாத்திட்டார். 6 ஆம் திகதி கொழும்பில் கூடிய அ.இ.ம.கா. யாரை ஆதரிப்பது என்ற கட்சி உயர்மட்டத்தில் ஆராய்ந்தாலும் தீர்மானம் வெளியிடவில்லை. இந்நிலையில் மாவட்ட மட்டத்தில் கருத்தறிந்த பிறகு 14 ஆம் திகதியன்று சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்ற பின்னர் தேசிய காங்கிரஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்தியது.
இவ்வாறு பாராளுமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள முஸ்லிம்கட்சிகள் தமது ஆதரவை குறித்ததொரு வேட்பாளருக்கு வழங்கியிருந்தாலும் கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு இருந்து வந்தது. இதனால் கட்சிகளுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் தற்போது உட்கட்சிப் பூசல் பூதாகரமாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு அறிவிக்கப்பட்டதையடுத்தே இது வெளிப்பட்டுள்ளது.
சஜித்துக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை கட்சியின் உயர்பீடம் எடுத்திருந்தது. 4 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தின்போது பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஹக்கீம், ஹரீஸ், பைஸல் காஷிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். எனினும் அலிஸாஹிர் மௌலானா கலந்துகொண்டிருக்கவில்லை. பின்னர் ஐக்கிய மக்கள் கூட்டணி ஒப்பந்தம் இடம்பெற்றபோது, கட்சித் தலைவருடன் எம்.எஸ்.தௌபீக் கலந்துகொண்டிருந்தார். ஆனால், ஹரீஸ், பைஸல், அலிசாஹிர் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்ட மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவை சாடி கட்சித் தலைவர் பஸ் கதை ஒன்றை பேசியிருந்தார். இந்நிலையில், வேட்புமனு தாக்கலின் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அலிசாஹிர் மௌலானா ரணிலை சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இதன் பின்னர் அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, கட்சியின் பிரதித் தலைவர்களுள் ஒருவரான எச்.எம்.எம்.ஹரீஸை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாக ஓட்டமாவடியில் திங்களன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார். இதன்படி மறுநாள் செவ்வாயன்று, அதாவது நேற்றுமுன்தினம் இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
அக்கடிதத்தில், ‘சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரம் சம்பந்தமாக கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் 2024 ஆகஸ்ட் 16ஆம் திகதி தலைவரின் தலைமையில் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் அத்தியாவசியமாக கட்டாயமாக எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அதில் கலந்து கொள்ளவில்லை. அதுமாத்திரமல்ல, அன்றில் இருந்து இன்றுவரை சஜித் பிரேமதாஸவின் எந்தவொரு தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடுவதை தொடர்ச்சியாக அவர் தவிர்த்து வந்தார்’ இதனால் ஹரீஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க கடந்த சனிக்கிழமை குருநாகலில் இடம்பெற்ற சஜித் பிரேமதாஸவின் பிரசார கூட்டத்தின்போது பைஸல் காஷிம் மேடை ஏறி தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இதன்போது, ரிஷாத் பதியுதீன் மற்றும் ஹக்கீம் ஆகியோரும் பைஸலை தட்டிக்கொடுத்து சஜித்திடம் பேசினர், அவரே அசட்டையாக கடந்து சென்றதை காணொளிகள் மூலம் காணக்கிடைத்தது.
இது இப்படியிருக்க, கட்சி உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து ரணில் விக்ரமசிங்க அவருக்கு ஆதரவு கோரியிருக்கிறார். கட்சித் தலைவராகிய தன்னிடம் ஆதரவு கோரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஹக்கீம் இதனால்தான் தான் சஜித்தை ஆதரிக்க தீர்மானித்ததாக பிரசாரக் கூட்டங்களில் முழங்கி வருகிறார். இதுமட்டுமல்லாமல் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதே அவரின் கோஷமாக இருக்கிறது.
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் கருத்துகளையெல்லாம் பெற்று பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கப்போவதாக கடந்த 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஐக்கிய மக்கள் கூட்டணியானது பங்காளிக் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னரே அ.இ.ம.கா. இவ்வாறு சஜித்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.
புத்தளம், களுத்துறை, கண்டி மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர்கள் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்த கோரியிருந்த நிலையில், ஏனைய தரப்பினர் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். எனினும், பொரும்பான்மையானோர் சஜித்தை ஆதரிக்க கோரியமையினால் கட்சித் தலைமை தனது இறுதி முடிவை வெளியிட்டது.
இது இப்படியிருக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து கட்சியின் சொந்த சின்னமான மயில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எம்.எம்.முஸர்ரப், அ.இ.ம.க. சார்பாக முஸ்லிம் தேசியக் கூட்டணியின் தராசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், அ.இ.ம.கா. சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் அனுராதபுர மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இஷாக் ரஹ்மான் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதாக தெரிவித்தனர். இவர்கள் ஏற்கனவே, பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு அவ்வப்போது ஆதரவளித்தும் ஆதரவை விலக்கியும் வந்தவர்களே.
தேசிய காங்கிரஸ்
அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கடந்த புதன்கிழமை ஜனாதிபதியை அவரது தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை 34 கட்சிகள் கலந்துகொண்ட ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டது.
ஒற்றை பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றமையினாலோ என்னவோ, அந்த கட்சி மாத்திரம் பிளவுகளில் இருந்து தப்பித்துக்கொண்டது எனலாம்.
ஏனைய முஸ்லிம் கட்சிகள்
பதிவு செய்யப்பட்டுள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகளான ஜனநாயக ஐக்கிய முன்னணி (துஆ) அபூபக்கர் இன்பாஸ் என்பவரை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது. இந்த துஆ கட்சியானது முன்னாள் அமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமான நஸீர் அஹமதுடையது என்பது பகிரங்கமானது.
எனினும், அவர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கி வருவதும் வெளிப்படையானதே. அத்தோடு, அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது. இது இவ்வாறிருக்க, நீண்டகாலமாக ராஜபக்சாக்களோடு உறவை பேணிவந்த உலமா கட்சியானது தனது பெயரை ஐக்கிய காங்கிரஸ் என மாற்றிக்கொண்டு தற்போது சஜித்துடன் கரம் கோர்த்திருக்கிறது. அத்தோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு (தராசு சின்னம்) என பெயரை மாற்றிக்கொண்டுள்ள முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பும் இதுவரைக்கும் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இதனிடையே, பஷீர் சேகுதாவூதை தவிசாளராகவும் எம்.ரி.ஹஸனலியை செயலாளராகவும் கொண்ட ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.
பதிவு செய்யப்படாத சமூக நீதிக் கட்சியானது எந்த தீர்மானத்திற்கும் வரவில்லை. எனினும், அநீதிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. சில பதிவு செய்யப்படாத கட்சிகள் ரணிலுக்கும் சில சஜித்துக்கும் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றன.
மு.கா.வுக்குள் பிளவு
எனினும் முஸ்லிம் பிரதான கட்சிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தேசிய காங்கிரசுமே நோக்கப்படுகின்றன. இதில் தேசிய காங்கிரசை பிரிக்க முடியாது. ஏனெனில் அக்கட்சிக்கு ஒரேயொரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம்தான் இருக்கிறது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்தான் தேசிய காங்கிரஸ், தேசிய காங்கிரஸ்தான் அதாவுல்லாஹ்.
இருப்பினும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸானது தற்போது பிளவுபட்டுள்ளது. ஹக்கீமும் தௌபீக்கும் சஜித் பிரேமதாசவை வலுவாக ஆதரித்து வருகின்றனர். எனினும், பைஸல் காஷிம் கொஞ்சம் அமைதியாக இருந்துவிட்டு கடந்த வாரம் குருநாகல் பிரசார மேடைக்கு எறியிருந்தார்.
இங்கு அலிசாஹிர் மௌலானா கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக ரணிலை ஆதரித்து இருக்கிறார். இவர், ரணிலை ஆதரிப்பதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார். இது இவ்வாறிருக்க அலிசாஹிருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இருப்பதாக கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்திருக்கிறார்.
வடமேல் மாகாண ஆளுநராக பதவிவகிக்கும் நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸிற்குள் உள்வாங்கப்பட்டார். மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் ஹக்கீம் நன்றாக சதுரங்க ஆட்டம் ஆடுகிறார் என்பது இங்கு தெளிவாகிறது. ஏற்கனவே, பஷீர் சேகுதாவுத் ஓரம்கட்டப்பட்டதையும் இன்று அலிசாஹிர் தானும் பங்கிற்கு காய்நகர்த்தலை மேற்கொண்டிருக்கிறார். தற்போது ஹிஸ்புல்லாஹ்வை உள்ளீர்த்து மேற்கொள்ளப்படும் நகர்வுகளே இவ்வாறான பிளவுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது.
சஜித்தை ஆதரிக்க மு.கா. தீர்மானித்திருந்தும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்காமையினால் ஹரீசும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதாக மு.கா. தெரிவிக்கிறது. எனினும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை அவர் இதுவரை பகிரங்கமாக வெளிப்படுத்தவும் இல்லை.
இங்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஏன் சஜித்தை ஆதரிக்கிறது என்பதற்கு வலுவான காரணத்தை சொல்லவில்லை. கட்சியை ரணில் விக்கிரமசிங்க உடைக்கிறார் அதனை பாதுகாக்க வேண்டும் என்று ஊர் ஊராக சென்று மு.கா. புராணம் பாடுகின்றார் ரவூப் ஹக்கீம்.
உண்மையில் இது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல். இங்கு ஏன் இவர் ஜனாதிபதியாக வேண்டும் என்பதை கூறி வாக்கு கோர வேண்டும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் வெறுமனே கட்சி ரீதியாக மக்களை உசுப்பேற்றுவதை அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் ஏன் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அத்தோடு, அக்கட்சி பிரதான மூன்று கோரிக்கைகளுடன் சஜித்தை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது. அவை என்ன கோரிக்கைகள், சமூக நலன்சார் கோரிக்கையா, கட்சி நலன் சார் கோரிக்கையா என்பதும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
தனித்துவிடப்பட்ட ரிஷாட்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது கடந்த பொதுத் தேர்தலில் கூட்டாகவும் தனித்தும் என நான்கு ஆசனங்களை பெற்றது. இதில், கட்சித் தலைவர் தொடர்ந்தும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியிலேயே நீடித்து வருகின்றார். எனினும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரகுமான், எஸ்.எம்.எம்.முஸர்ரப் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் ஆரம்பம் முதல் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாகவே செயற்பட்டு வந்துள்ளனர். முஸ்லிம் காங்கிரசுக்குள்ளும் அவ்வப்போது இந்நிலைமை தோன்றியிருக்கிறது. அங்கு மன்னிப்பு என்ற மந்திரம் அவ்வப்போது வேலை செய்திருக்கிறது.
எனினும், அ.இ.ம.கா. பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான முரண்பாடு இந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் யாரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டில் தோன்றியதல்ல. கட்சி சஜித்தை ஆதரிக்க தீர்மானித்திருக்கிறது. அக்கட்சி சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் ரணிலை ஆதரிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். என்றபோதிலும், வேட்புமனு தாக்கல் செய்தபின்னர் அக்கட்சி உறுப்பினர்கள் மூவரும் உத்தியோகபூர்வமாக ஊடக சந்திப்பில் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றனர்.
மக்கள் காங்கிரசும் ஏன் சஜித்தை ஆதரிக்கிறது என்பதற்கான வலுவான காரணத்தை வெளியிடவில்லை. இவர்கள் கட்சியின் பெரும்பான்மையினரின் விருப்பின்பேரில் ஆதரவை வெளியிட்டிருந்தாலும், சமூக நலன் கருதி எந்தவொரு உடன்படிக்கையையும் ஐக்கிய மக்கள் சக்தியோடு செய்துகொண்டதாக இதுவரை தெரியவில்லை.
தலைமைத்துவத்தில்தானா சிக்கல்?
கட்சிகளுக்குள் முரண்பாடுகள் இன்று நேற்று தோன்றியதல்ல. 2000 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்து கட்சியை பாதுகாப்பதாக கூறியே தொண்டர்களிடம் வாக்குக் கேட்கும் நிலையில் ரவூப் ஹக்கீம் இருக்கிறார். அத்தோடு, ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பிளவுகளை சந்தித்து வருகின்றது.
அத்தோடு, 18 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்தது முதல், ராஜபக்ச அரசாங்கத்திலும் சரி மைத்திரி அரசாங்கத்திலும் சரி முஸ்லிம்களுக்கு அநீதிகள் இழைக்கப்படும்போதெல்லாம் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்காது அமைதி காத்த இவர்கள் மக்களிடம் மன்னிப்பு கோருவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
எனவே, இங்கு தலைமைத்துவத்தில்தான் ஏதோவொரு சிக்கல் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இப்படி முஸ்லிம் கட்சிகளின் பெயரில் ஏமாற்று வியாபாரம் நடத்துவதைவிட தேசிய கட்சிகளில் நேரடியாக இணைந்து இணங்கி ஒத்துழைத்து அரசியல் மேற்கொள்ள முடியும் அல்லவா.
முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஏன் சஜித்தை ஆதரிக்கின்றது என்பதற்கான வலுவான காரணத்தை முஸ்லிம்களுக்கு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. அத்தோடு, தேசிய காங்கிரசும் தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) யும் ரணிலை ஆதரிக்கிறமைக்கான காத்திரமான பதிலையும் தெரிவிக்கவில்லை. ஐக்கிய தேசிய கூட்டமைப்பு (முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு), நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் மௌனம் கலைக்க வேண்டும். இதுபோக, சமூக நீதிக் கட்சி ஏன் ஒதுங்கிப் போகிறது என்பதும் புரியவில்லை.
ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கொள்கை பிரகடனத்தை வெளியிட முன்பே முஸ்லிம் கட்சிகள் சில யாரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறது. அவர்களின் செயற்திட்டம் என்னவென்று அறியாமல் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், முஸ்லிம் சமூகத்தை முன்வைத்து மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மையுடையதாக அமைய வேண்டும்.
முஸ்லிம் கட்சிகள் தேர்தல் காலங்களில் முன்னுதாரணமற்ற அரசியல் கலாசாரத்தையே நாட்டுக்கு காட்டி நிற்கின்றன. இங்கு கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளையும் கட்சிகளுக்கிடையேயான பிரச்சினைகளையும் வைத்து, அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூத்தை கூறுபோட முற்படுவதையே அவதானிக்க முடிகிறது.
மு.கா. தலைவரும் அ.இ.ம.கா. தலைவரும் மேடைகளில் தற்போது கைகளை கோர்த்துக்கொண்டு நிற்பதை பார்க்கிறோம். இது நாகரிகமானதொன்றாக கருதுகிறோம். எனினும், அடுத்து வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இதை காணமுடியுமா என்பது கேள்விக்குறிதான்.
அத்தோடு, ஜனாதிபதித் தேர்தல் குறித்து முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் கட்சிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளையும் பார்க்குமிடத்து இக்கட்சிகள் எந்த திசையையும் நோக்கி நகர முடியாது முட்டுச் சந்திக்குள் முடங்கிக் கிடப்பதாகவே தெரிகிறது.- Vidivelli