எம்.ஐ.அப்துல் நஸார்
இவ் வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்கத்தில் தேங்கிக் கிடக்கும் அல்குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
அண்மையில் தடுத்து வைக்கப்பட்ட அல்குர்ஆன் பிரதிகள் மற்றும் அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் தொடர்பில் கொழும்பு டைம்ஸ் இணையத்தளத்திற்கு கருத்த வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் ரஷீன் பாப்பு, அல்குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அவற்றை 4 மாதங்கள் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் அதற்கான கட்டணத்தை செலுத்துவதும் பண விரயமாகும் எனக் குறிப்பிட்டார்.
சுங்கம், பாதுகாப்பு அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அல்லது மீளாய்வுக் குழுவைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றினால் சமயப் புத்தகங்கள், வெளியீடுகள் வீடியோக்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தன, இது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுள் ஒன்றாகும்.
எனினும், சில நாடுகளில், தங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் சமய புத்தகங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. சவூதி அரேபியா, எகிப்து, மலேசியா, கட்டார், குவைத், ஓமான் போன்ற முஸ்லிம் நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது.
நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு புத்தகமும் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இணக்கப்பாட்டைப் பெறுதல் வேண்டும். இதே நடைமுறையைத்தான் இலங்கையும் பின்பற்றுகிறது. ‘தமிழ் மற்றும் சிங்கள அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் கடந்த காலங்களில் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு கடுமையான சவாலாக இருந்தன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள், இவ்வாறான அல்குர்ஆன் மொழிபெயர்ப்பால் செல்வாக்கிற்குட்டதாக நம்பப்படுகிறது. இது அல்குர்ஆனின் உண்மையான மொழிபெயர்ப்பிற்கு முரணான நேரடி மொழிபெயர்ப்பாகும், ‘காபிர்களை (பிற நம்பிக்கையாளர்கள்) எங்கு கண்டாலும் கொல்லுங்கள்’ என்று தெளிவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கேள்விக்குரிய மொழிபெயர்ப்புகள், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சிபாத் (குணங்கள்) தொடர்பான அல்லது ஜிஹாத் தொடர்பான 30 வசனங்களுக்கு (ஆயாத்கள்) எந்த விளக்கமும் இல்லாமல் அல்குர்ஆனின் நேரடி மொழிபெயர்ப்பாகக் காணப்படுகின்றது. இது போன்ற மொழிபெயர்ப்புகளே ஞானசார தேரர் போன்ற துறவிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூளையாக’ அழைக்க தூண்டியது. சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் புனிதச் செய்தியை தவறாகக் கூறும், தவறாகப் புரிந்துகொள்ளச் செய்யும் இத்தகைய அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் நமக்கு இன்னும் தேவையா? என்பதுதான் இங்குள்ள கேள்வி.
இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களுக்கான மீளாய்வுக் குழு 2020 ஆம் ஆண்டு தொடக்கம் புனித அல்குர்ஆன்கள் மற்றும் ஏனைய இஸ்லாமிய பாடப் புத்தகங்களை அனுமதிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. அரபுக் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் இதுபோன்ற பல அல்குர்ஆன்கள் மற்றும் ஏனைய இஸ்லாமிய பாடப் புத்தகங்களை அனுமதிப்பதற்கு இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சூபி தரீக்காக்கள் மற்றும் ஜாமியா நளீமியாவின் பட்டதாரிகள் ஆகிய புகழ்பெற்ற மற்றும் தகுதிவாய்ந்த இஸ்லாமிய அறிஞர்களை உள்ளடக்கிய ஒரு சுயாதீன அமைப்பாகும். புனித அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் தொடர்பான கட்டமைப்பில் அவை எவ்வாறிருக்க வேண்டும் என பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:
1. அல்குர்ஆனின் அரபு உரை இல்லாத எந்த மொழிபெயர்ப்பும் சிபாரிசு செய்யப்படமாட்டாது.
2. மொழிபெயர்ப்பு அல்குர்ஆனின் மொழியியல் சார்ந்த மொழிபெயர்ப்பாக இருக்கக்கூடாது, ஆனால் ‘உம்மஹாத்துத் தப்சீர்’ இற்கு அமைவாக குறித்த மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.
3. குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் அடிக்குறிப்புகள் அல்லது விளக்கக் குறிப்புகள் இருக்க வேண்டும், குறிப்பாக அந்த ஆயத் (வசனங்கள்), ஜிஹாத் மற்றும் ஏனைய வசனங்களுக்கு சரியான விளக்கம் இல்லாமல் வாசகரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், குறிப்பாக தேவைப்படும் இடங்களில் அடிக்குறிப்புகள் அல்லது விளக்கக் குறிப்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்
4. அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வவல்லமையுள்ள அல்லாஹ், அவனது அன்பிற்குரிய நபி முஹம்மது (ஸல்), ஏனைய அனைத்து நபிமார்கள், மற்றும் மலக்குகள் பக்தியுள்ள ஆண்கள் மற்றும் பெண்களை குறிப்பிடுவதற்கு பொருத்தமான மற்றும் மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். மேற்கூறியவற்றை அவமரியாதை செய்வதாகக் கருதப்படும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பின் தடையகற்றலுக்காக சிபார்சு செய்யப்படமாட்டாது.
அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை ஆய்வுக்குட்படுத்துவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதை குழு புரிந்துகொள்கிறது.
எனவே இறக்குமதியாளர் நாட்டிற்கு புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கு முன்பே, மொழிபெயர்ப்புகளின் குறைந்தபட்சம் 10 மாதிரி பிரதிகளை வழங்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக, தடுத்து வைக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகள் 2020 முதல் நடைமுறையில் உள்ள இந்த வழிகாட்டுதலுக்கு இயைபாக இருக்கவில்லை. நன்கொடையாளர் அரபுக் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களின் நலனுக்காக நல்ல நோக்கத்துடனேயே அனுப்பியுள்ளார். நன்கொடையாளர் முன்பே மாதிரிகளை அனுப்பியிருந்தாலும், அவை உத்தியோகபூர்வ தரப்புகள் மூலம் அனுப்பப்படவில்லை. உத்தியோகபூர்வ பரிந்துரைகள் மற்றும் இணக்கப்பாடுகளைப் பெற்ற பின்னர் நன்கொடையாளர் கப்பல் மூலம் அனுப்பியிருந்தால், தற்போதைய நெருக்கடி நிலை தோன்றியிருக்காது. இந்த அணுகுமுறைகள் தொடர்பில் நன்கொடையாளருக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளால் முன்பே விளக்கமளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், மீளாய்வுக் குழு அரபு அல்குர்ஆனின் 26,000 பிரதிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளதால், பாதுகாப்பு மற்றும் சுங்கம் சார்ந்த அமைச்சு அவற்றை விரைவில் வெளியிட வேண்டும். மொழிபெயர்ப்புகளை உள்ளடக்கிய மீதமுள்ள புத்தகங்களை நன்கொடையாளருக்கு அனுப்பலாம் அல்லது சரியான மொழிபெயர்ப்புகளை சரியான அடிக்குறிப்புடன் சேர்க்கலாம். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், நன்கொடையாளர் மற்றும் சுங்கத் தரப்பினருடன் ஒருங்கிணைத்து மேலும் தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – Vidivelli