அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு
கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்தார் ரிஷாத் பதியுதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பில் கூடிய அக்கட்சியின் உயர்பீடம் இது தொடர்பிலான தீர்மானத்தை அறிவித்தது.
ஏற்கனவே, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதற்கான கடந்த 6 ஆம் தினதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம் கொழும்பில் கூடியது. எனினும், அன்றைய தினம் தீர்மானம் எட்டப்படாதநிலையில் இது தொடர்பாக கட்சி அங்கத்தவர்களின் கருத்துகளை அறிவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. இறுதித் தீர்மானம் 14 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில் மாவட்ட மட்டத்தில் கருத்தறியும் வேலைத்திட்டம் கடந்த ஒருவாரகாலமாக இடம்பெற்றது.
இந்நிலையில் நேற்று மாலை கொழும்பில் மீண்டும் கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம், கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்தது.
இதற்கிணங்க கட்சியின் பெரும்பான்மை உறுப்பினரின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே சஜித் பிரேமதாஸவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 10 அம்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதற்கு இணங்கும்பட்சத்தில் தமது ஆதரவை உறுதிப்படுத்தும் என்றும் தெரியவருகிறது.
தமது கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான சாதகமான பதில் கிடைக்கும்பட்சத்தில் ஆதரவை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த கூட்டம் நிறைவடைந்ததையடுத்து எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதற்காக அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் குழுவொன்று சென்றமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli