பங்களாதேஷில் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் அந்நாட்டின் வரலாற்றையே புரட்டிப்போட்டுள்ளன. வேலைவாய்ப்புகளில் நியாயமான இட ஒதுக்கீடு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், எதிர்பாராத விதமாக பிரதமர் ஷேக் ஹஸீனாவையே நாட்டை விட்டு விரட்டியடிக்குமளவு வீரியம் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட 2022 இல் இலங்கையில் நடந்த அரகலயவுக்கும் இப்போது பங்களாதேஷில் நடக்கும் நிகழ்வுகளுக்குமிடையில் பெரியளவு வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை.
கடந்த 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பொலிஸை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு கடந்த ஞாயிறன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஆடைத்துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்களும் பொலிஸார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 14 பொலிஸார் உயிரிழந்தனர்.
ஷேக் ஹஸீனா அரசுக்கு அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஞாயிறு மாலை நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. மேலும், இணைய சேவையும் முடக்கப்பட்டதுடன் 3 நாள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் பங்களாதேஷின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 119 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகிது. போராட்டங்கள் ஆரம்பித்த கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுல் மொத்தம் 440 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முப்படை தளபதிகள், காவல் துறை தலைவர் உட்பட பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா “அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மாணவர்கள் இல்லை. அவர்கள் தீவிரவாதிகள். நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் அவர்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மக்கள் இந்த நாச வேலையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என தெரிவித்தார்.
எனினும் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் பெரிதாகி, இலட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கியதால் அவரால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. பதவியை இராஜினாமாச் செய்து நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர அவருக்க வேறு வழி இருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது மட்டுமல்லாமல், தனது சகோதரியுடன் நாட்டை விட்டும் வெளியேறினார்.
ஷேக் ஹசீனா பங்களாதேஷில் இருந்து இந்தியாவின் டெல்லியை ஹெலிகொப்டர் மூலம் சென்றடைந்தார். இந்திய விமானப்படை, பலத்த பாதுகாப்புடன் அவரை டெல்லிக்கு அழைத்து வந்தது.
“இந்திய விமானப்படை திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில், தாழ்வாகப் பறக்கும் விமானம் ஒன்று இந்தியாவை நோக்கி வருவதைக் கண்டது. அந்த விமானத்தில் வருவது யார் என்ற தகவல் விமானப்படை வீரர்களிடம் இருந்ததால் விமானம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது” என்று ஏஎன்ஐ முகமை கூறியுள்ளது.
தற்போது இந்தியாவில் தங்கியுள்ள அவர் ஐரோப்பிய நாடு ஒன்றில் தஞ்சமடைய முயற்சித்து வருவதாக தெரிகிறது. எனினும் மேலும் சில வாரங்களுக்கு அவர் இந்தியாவிலேயே தங்கியிருப்பார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார்
ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் ஊடகத்திடம் தெரிவித்த அவர், “இவ்வளவு கடின உழைப்புக்குப் பிறகும் மக்கள் தனக்கு எதிராக திரும்பியதால் ஷேக் ஹசீனா மிகவும் அதிருப்தியடைந்துள்ளார். ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஆலோசித்து வந்தார். இனி அவர் அரசியலுக்கு திரும்பி வரமாட்டார். அவர் இந்த நாட்டையே தலைகீழாக மாற்றினார். அவர் ஆட்சிக்கு வரும்போது இது ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக இருந்தது. ஏழை நாடாக கருதப்பட்டது. ஆனால் இப்போது இந்த நாடு ஆசியாவின் அதிகம் வளரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள்
போராட்டக்காரர்கள் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து சூறையாடினர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்து டாக்காவில் இருந்து இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய நிலையில், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து கையில் சிக்குவதை எடுத்துக்கொண்டு ஓடினர். சிலர் முக்கிய ஆவணங்களை கிழித்தெறிந்தனர்.
கைகளில் தடிகளுடன் அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி பிரதமர் இல்லத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஆட்டுக்குட்டி, முயல், வாத்து என்று கிடைத்த பொருட்களை எடுத்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. சிலர், பிரதமரின் நாற்காலியில் அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர். இன்னும் சிலர் அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டனர். சிலர் பாத்திரங்கள், மேசை விரிப்புகளை எடுத்துச் சென்றனர். இன்னும் சிலர் அங்கிருக்கும் புல்வெளி, அழகான இடங்கள் முன் புகைப்படம் எடுத்தனர். போராட்டக்காரர்களின் செயல்கள் புகைப்படங்கள், வீடியோக்களாக வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன.
மேலும், அவாமி லீக் கட்சியின் மத்திய அலுவலகம், அவாமி லீக் கட்சியின் பல தலைவர்களின் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களும் ஒரே நேரத்தில் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்து கோயில்கள் மீதும் தாக்குதல்
தலைநகர் டாக்காவில் இந்திய கலாச்சார மையம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 4 இந்துக் கோவில்கள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து தெரிவித்துள்ள இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் தலைவர் கஜோல் தேவ்நாத், டாக்காவின் தன்மோந்தி பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி கலாச்சார மையம் வன்முறை கும்பலால் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் 4 இந்து கோயில்கள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தவிர டாக்காவில் உள்ள பங்கபந்து நினைவு அருங்காட்சியகம் உட்பட பல்வேறு முக்கிய கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. பங்கபந்து அருங்காட்சியகம், 1975ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வங்கதேச அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் (ஷேக் ஹசீனாவின் தந்தை) நினைவாக கட்டப்பட்டது. சேதமடைந்த இந்திய கலாச்சார மையத்தில் 21 ஆயிரம் புத்தகங்கள், பல்வேறு வரலாற்று ஆவணங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோயில்களை இரவிரவாக பாதுகாத்த முஸ்லிம்கள்
வன்முறைகளின்போது இந்து கோயில்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் இலக்கு வைக்கப்பட்டன. அதனையடுத்து நாட்டிலுள்ள ஏனைய கோயில்களும் தாக்கப்படலாம் என்ற அச்சம் பரவியதால் முஸ்லிம் மக்கள் முன்வந்து கோயில்களுக்கு இரவிரவாக பாதுகாப்பு வழங்கினர்.
முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஸியா விடுதலை
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஸியா வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் முகம்மது சகாபுதீன் பிறப்பித்துள்ளார். மேலும், கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை கைது செய்யப்பட்ட அனைவரையும் அதிபர் விடுதலை செய்துள்ளார்.
பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பி.என்.பி.) தலைவரான பேகம் காலிதா ஸியா அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர்.
அவர், பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் விலகியே இருந்து வருகிறார். அவருக்கு நீரிழிவு, இருதய பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் உள்ளன என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த காலத்தில், ஷேக் ஹசீனாவுடன் இணைந்து பணியாற்றினார். ஆனால், இருவருக்கு இடையேயான ஒத்துழைப்பு நீண்ட நாட்கள் வரை நீடிக்கவில்லை. அதன்பின் நடந்த தேர்தலில் ஹசீனாவை வீழ்த்தி காலிதா ஸியா வெற்றி பெற்றார். முதல் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த சூழலில், ஷேக் ஹசீனா பிரதமரான பின், காலிதா ஸியாவுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவருக்கு 17 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஏறக்குறைய 6 ஆண்டுகளாக காவலில் இருந்த நிலையில், ஸியாவை விடுவித்து அதிபர் சகாபுதீன் உத்தரவிட்டு உள்ளார்.
பின்னணியில் வெளிநாட்டு சக்தியா?
பங்களாதேஷில் நடந்த இந்த சடுதியான அரசியல் மாற்றத்தின் பின்னணியில் வெளிநாடுகளின் மறைகரம் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்திருக்கலாம் என சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் கலைப்பு
நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டதையடுத்து பங்களாதேஷ் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த ஜனவரி 7 ஆம் திகதி நடைபெற்ற தேசியத் தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்ட 12-வது நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் இன்று (ஆகஸ்ட் 6) கலைத்தார். முப்படைகளின் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத் தலைவர்கள் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
அரசியலமைப்பின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 90 நாட்களுக்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் முன்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால் அடுத்த 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, வரும் 90 நாட்களுக்குள் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே, வங்கதேசத்தில் இடைக்கால அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை, இராணுவத் தளபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இடைக்கால பிரதமராக பேராசிரியர் முகம்மது யூனுஸ்?
நோபல் பரிசுபெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ், புதிய அரசின் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். அவரைத் தவிற வேறு யாரையும் தங்களால் ஏற்க முடியாது என்றும் அவர்கள் கூறி உள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று புதிய அரசை வழிநடத்த தயார் என்று முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
“மாணவர்கள் மிகப் பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மிகப் பெரிய விலையை கொடுத்திருக்கிறார்கள். மாணவர்களால் இவ்வளவு பெரிய தியாகம் செய்ய முடியுமானால், எனக்கும் சில பொறுப்புகள் உண்டு. எனவே, அவர்கள் கோரிக்கையின்படி நான் பொறுப்பை ஏற்க முடியும் என்று மாணவர்களிடம் கூறினேன்” என்று முகமது யூனுஸ் கூறியதாக கூறப்படுகிறது.
தற்போது பிரான்சில் தங்கியிருக்கும் முகம்மது யூனுஸ் ஓரிரு தினங்களில் பங்களாதேஷை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு கடன் வழங்குமளவுக்கு பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வந்த பங்களாதேஷில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. உடனடியாக அங்கு ஸ்திரமான ஆட்சி நிறுவப்பட்டு நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரதும் அவாவாகும்.- Vidivelli