சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகார வழக்கில் சேவ் த பேர்ள் பொருளாளர் சாட்சியம்; சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி. பொறுப்பேற்ற ஆவணங்களில் வவுச்சர்கள் மாயம் ; மதுரங்குளி காணி குறித்தும் சாட்சியம்
எப்.அய்னா
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைவராக செயற்பட்ட சேவ் த பேர்ள் அமைப்பின் ஊடாக கொழும்பின் தெருவோர குழந்தைகளுக்கு வலமான எதிர்க்காலத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு அவர்களை பொறுப்பேற்று கவனிக்காமல் இருந்திருப்பின் அவர்கள் போதைப் பொருள் கும்பல்களிலும், பாதாள உலகத்தினரினதும் பிடிக்குள் சிக்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் புத்தளம் மேல் நீதிமன்றில் சாட்சியம் அளிக்கப்பட்டது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் சாட்சியான சேவ் த பேர்ள் அமைப்பின் பொருளாளராக செயற்பட்ட மொஹம்மட் இம்ரான் என்பவர் சாட்சியம் அளிக்கும் போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
கடந்த வாரம் புத்தளம் மேல் நீதிமன்றில் நடந்த வழக்கு விசாரணைகளின் இடையே, இந்த விடயத்தை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகமவின் நெறிப்படுத்தலில் சாட்சியம் அளிக்கும் போது குறித்த சாட்சியாளர் வெளிப்படுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு கடந்த வாரம் நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, பிணையில் இருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2 ஆம் பிரதிவாதியான அல் சுஹைரியா மத்ரசா பாடசாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
முதல் பிரதிவாதியான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
2 ஆம் பிரதிவாதியான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தலைமையில் குழுவினர் ஆஜராகினர்.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம ஆஜராகினார்.
அத்துடன் இவ்வழக்கு விசாரணைகளை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தமை விஷேட அம்சமாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினதாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை காண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகமவின் நெறிப்படுத்தலில் சேவ் த பேர்ள் அமைப்பின் பொருளாளராக செயற்பட்ட இம்ரான் சாட்சியமளித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தான் சேவ் த பேர்ள் அமைப்பின் பொருளாளராக கடமையாற்றியதாகவும் அக்காலப்பகுதியில் அவ்வமைப்பின் தலைவராக முதலில் நஜ்மான் என்பவரும் பின்னர் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் கடமையாற்றியதாக சாட்சியாளர் குறிப்பிட்டார்.
அமைப்பின் திட்டங்கள் தொடர்பிலான நிதி அனுமதிகள் பூரண ஆராய்வின் பின்னர், உரிய நிறைவேற்றுக் குழுவின் அனுமதியும் கிடைத்த பின்னர் தன்னாலேயே இறுதி அனுமதியளிக்கப்பட்டதாக சாட்சியாளர் குறிப்பிட்டார்.
இதன்போது, சேவ் த பேர்ள் அமைப்புக்கு சொந்தமான மதுரங்குளி பகுதியில் உள்ள காணி ஒன்றினை மையப்படுத்தி கேள்வி எழுப்பப்பட்டது. குறித்த காணியை யார், எப்போது, எதற்காக வழங்கினார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரியும் வண்ணம் சாட்சியம் நெறிப்படுத்தப்பட்டது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் குண்டுதாரிகளாக அறியப்படும் மொஹம்மட் இல்ஹாம் என்பவர், சேவ் த பேர்ள் அமைப்பின் நிறைவேற்றுக் குழுவில் இருந்ததாகவும், அவரது சகோதரரான மற்றொரு குண்டுதாரியான இன்சாப் அஹமட்டின் தலையீட்டுடன் இப்ராஹீம் ஹாஜியாரின் குடும்பத்தினரால் குறித்த காணி அன்பளிப்பு செய்யப்பட்டதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார். 2017 ஆம் ஆண்டளவில் அக்காணி அன்பளிப்பு செய்யப்பட்டதாகவும், மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களின் பின்னணியில் குறித்த காணி அன்பளிப்பாக பெறப்பட்டதாகவும் அவர் சாட்சியமளித்தார்.
எவ்வாறாயினும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலின் குண்டுதாரி ஒருவர் அமைப்பின் நிறைவேற்றுக் குழுவில் இருந்தமையை மையப்படுத்தி தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சாட்சியாளர், உண்மையில் மொஹம்மட் இல்ஹாமின் தந்தையான இப்ராஹீம் ஹாஜியாரையே சேவ் த பேர்ள் அமைப்பு தனது அமைப்பில் உறுப்பினராக சேர்க்க முயன்றதாகவும், அவரது வேலைப் பளு காரணமாக அவரது பரிந்துரைக்கு அமைய அவரது மகனை பின்னர் சேர்த்ததாக சாட்சியாளர் குறிப்பிட்டார். கொழும்பு முஸ்லிம் தெருவோரக் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக குறித்த அமைப்பு பாடுபட்டதாகவும், அக்குழந்தைகளை, பல காரணங்களைக் காட்டி பல அரச பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் சேர்க்க மறுத்ததாகவும், அவ்வாறான பின்னனியிலேயே புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸாவுடன் ஓர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் அப்பிள்ளைகளை சேர்த்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.
அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு சேவ் த பேர்ள் அமைப்பு மாதார்ந்தம் ஒரு தொகையை மத்ரஸாவுக்கு செலுத்தியதாகவும், அதற்கு மேலதிகமாக குறித்த மத்ரஸாவில் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடசாலை கல்வி மற்றும் பிற செயற்பாடுகளுக்காக நிதிப் பங்களிப்புக்களை வழங்கியதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.
சேவ் த பேர்ள் அமைப்பு குறித்த நடவடிக்கையை செய்யாதிருந்திருந்தால், குறித்த பிள்ளைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகி, பாதாள உலக கும்பல்களுடன் சேர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் இருந்ததாக சாட்சியாளர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகமவின் கேள்விகளுக்கு பதிலளித்த சாட்சியாளர், பிள்ளைகளை வீடு வீடாக சென்று சேர்க்கும் நடவடிக்கையில் தான் நேரடியாக பங்கேற்கவில்லை எனவும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்விக் குழு ஊடாக தேடிப் பார்த்ததாகவும் சாட்சியமளித்தார்.
இதன்போது ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அம்மத்ரஸாவுக்கு அடிக்கடி சென்றாரா என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கேள்வி எழுப்பிய போதும், தலைவர் என்ற ரீதியில் மாணவர்களின் கல்வி தொடர்பில் தேடிப் பார்க்க அவருக்கு பொறுப்பிருந்ததாக குறிப்பிட்ட சாட்சியாளர், அடிக்கடி நேரடியாக சென்றாரா என்பது தொடர்பில் தனக்கு தெரியாது என குறிப்பிட்டார்.
இதன்போது சேவ் த பேர்ள் அமைப்பின் கூட்டங்களின் போதான கூட்டறிக்கைகளை மையப்படுத்தி கேள்வி எழுப்பப்பட்டது. சேவ் த பேர்ள் அமைப்பின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி. ஆகியன பல ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், தானும் பல ஆவணங்களை சுமார் 20 தடவைகள் விசாரணைக்கு சென்று கையளித்ததாகவும் எனினும் அமைப்பின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிதி கொடுக்கல் வாங்கல்களை காட்டும் வவுச்சர்கள் எவையும் மன்றில் உள்ள சான்றாவணங்களில் இல்லை எனவும் சாட்சியாளர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து இவ்வழக்கின் சாட்சியம் மீதான குறுக்கு விசாரணைகள் ஆகஸ்ட் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அன்றைய தினம் மற்றொரு சாட்சியாளருக்கும் அறிவித்தல் அனுப்பப்பட்ட நிலையில், மேலும் இரு சாட்சியாளர்களின் சாட்சி நெறிப்படுத்தலுடன் வழக்கு தொடுநர் தரப்பின் சாட்சி விசாரணைகளை முடிவுறுத்த எதிர்பார்ப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம குறிப்பிட்டார். – Vidivelli