அரசியல் களம்
எஸ்.என்.எம்.சுஹைல்
2024 ஆம் வருடம் தேர்தல் ஆண்டாக இருக்கும் என்ற கருத்து கடந்த ஆண்டிலிருந்தே கூறப்பட்டு வந்தது. இது இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் பல நாடுகளிலும் தேர்தல் ஆண்டாக இருந்துள்ளது. அண்டை நாடான இந்தியா, பிரித்தானியா, பிரான்ஸ், வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்று முடிந்திருக்கின்றன. அமெரிக்காவிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.
ஆனாலும், இலங்கையில் தேர்தலொன்று நடைபெறுமா இல்லையா என்ற கேள்விகள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்கின்றது. குறிப்பாக, தற்போதைய ஜனாதிபதி எப்படியாவது தேர்தலை நிறுத்திவிடுவார் என்று அவர் மீதான அவ நம்பிக்கைக்கு ஏற்றாற்போல அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்பிக்கொண்டே இருக்கின்றது.
எது எவ்வாறிருப்பினும், ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது. எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதியை தேர்தல் தினமாக குறிப்பிட்டிருந்தது ஆணைக்குழு. இதன்படி, தேர்தலை நடத்தமாட்டார் என்று கூறப்பட்டுவந்த ஜனாதிபதியின் தரப்பிலிருந்தே முண்டியடித்துக்கொண்டு முதலாவதாக கட்டுப்பணம் தேர்தல்கள் திணைக்களத்தில் செலுத்தப்பட்டது. அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தினர்.
ஜனாதிபதி தேர்தல் களத்தில்
குதிக்கும் வேட்பாளர்கள்
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக காலியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த சனியன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அத்துடன், சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாஸ ராஜபக்ச கடந்த வியாழன்று தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டு வெள்ளியன்று தனது அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்துகொண்டார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியேர் தாம் ஜனாதிபதி வேட்பாளர்கள் என கூறிவந்தாலும் இதுவரையிலும் அவர்கள் உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும் நேற்றையதினம் சஜித் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
மேலும், பீல்மாஷல் சரத்பொன்சேகா, சம்பிக்க ரணவக்க, திலித் ஜயவீர, தம்மிக பெரேரா போன்றோரும் ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதிக்கப் போவதாக கூறிவருகின்றனர். தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதில் வடக்கு அரசியல் களம் பிசியாக இருக்கிறது. எனினும், இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி சிவப்புக் கொடி காட்டியுள்ளது. அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இல்யாஸ் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகி வருவதாக புத்தளம் செய்திகள் கூறுகின்றன.
சூடுபிடிக்கத் துவங்கும்
தேர்தல் பிரசாரங்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. காலியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூட்டமும், இரத்தினபுரியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கூட்டமும் காலி, மஹரகம, சிலாபம் என்று பல இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் கூட்டங்களும் இடம்பெற்றன. இதுபோக, சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அறிவிக்கப்பட்ட விஜயதாஸ ராஜபக்சவும் கொழும்பில் பிரசார கூட்டத்தை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதி ரணிலின் பஸ்ஸில்
முதல் ஆளாக அதாவுல்லாஹ்
எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கான ஆதரவு நிலைப்பாட்டை கடந்த 2 வருடங்களாக வெளிப்படுத்தி வந்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பஸ்ஸில் முதல் ஆளாக ஏறிக்கொண்டுள்ளார்.
இஷாக் எம்.பி.யும்
ரணில் மேடையில்
அனுராதபுரத்திலிருந்து முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐ.தே.க.வின் யானை சின்னத்தின் ஊடாக கடந்த 2015 இல் தெரிவான ஏ.ஆர்.இஷாக் கடந்த 2020 ஆம் ஆண்டு அ.இ.ம.கா. சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக மீண்டும் பாராளுமன்றம் நுழைந்தார். இந்நிலையில், ஜனாதிபதி கோட்டபாய கொண்டுவந்த 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்து முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட அவர், பின்னர் மீண்டும் எதிர்க்கட்சி பக்கம் சென்றார். இந்நிலையில் மீண்டும் மீண்டும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கும் இவர் தற்போது ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து காலியில் இடம்பெற்ற மேடையில் ஏறி உரையாற்றினார்.
லான்சா குழுவில் முஸர்ரப்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவின் தலைமையில் பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. இந்த குழுவானது கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் கூட்டங்களை நடத்திவரும் நிலையில் பதுளையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் மேடை ஏறியிருந்தார்.
ரணிலுக்கு ஆதரவாக
மு.கா. எம்.பி.க்கள்
முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர்களில் ஒருவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவே கருத்துரைத்து வருகின்றார்.
மு.கா. உறுப்பினர்களான ஹரீஸ், பைஸல் காஷிம் மற்றும் செய்யத் அலிசாஹிர் மௌலானா ஆகியோருக்கு ஜனாதிபதி ஊடாக மாவட்ட அபிவிருத்திக்காக ஒவ்வொருவருக்குமாக தலா 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக இருப்பதாக சமூகமட்டத்தில் கருத்துகள் வெளியாகியிருந்தன.
இம்ரானுக்கும் நிதி ஒதுக்கீடு
இதனிடையே, திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபுக்கும் ஜனாதிபதி ஊடாக மாவட்ட அபிவிருத்திக்காக 2.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தின் ஊடாக அவர் இதற்கான வேலைத் திட்டங்களை சமர்ப்பித்திருக்கிறார்.
சஜித்தையே மு.கா. ஆதரிக்கும் – தௌபீக்
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது மு.கா. ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் கட்சியின் இறுதித் தீர்மானத்தை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஹிஸ்புல்லாஹ்வின்
நிலைப்பாடு என்ன?
முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தற்போது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. குறிப்பாக அவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் புணானையிலுள்ள அவரது பல்கலைக்கழகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்துவந்து திறந்து வைத்தார். இதுபோக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் வாழைச்சேனை, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதிகளில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.
அப்துர் ரஹ்மான்
கடந்த பொதுத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு வேட்பாளராக களமிறங்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தற்போது சஜித் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகிறது. குறிப்பாக காத்தான்குடியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் முன்னெடுக்கப்படும் சக்வல திட்டத்திற்கு அப்துர் ரஹ்மான் பாடசாலை ஒன்றை தெரிவு செய்திருந்ததாகவும் எனினும் அந்நிகழ்விற்கு ஹிஸ்புல்லாஹ்வையும் சஜித் அழைத்தமையால் அவர் அந்நிகழ்வைப் புறக்கணித்ததாகவும் தெரிய வருகிறது. இது தொடர்பில் அவர் காட்டமான செய்தி ஒன்றையும் சஜித்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
புத்தளத்தில் ரிஷாட் கூட்டம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட எழுச்சி மாநாடு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் அ.இ.ம.கா.வின் நிலைப்பாடு வெளிப்படலாம் என கூறப்பட்டாலும் அலிசப்ரி ரஹீமை திட்டித் தீர்ப்பதிலேயே கட்சித் தலைமையின் பேச்சு நீண்டு சென்றது.
அநுரவுடனான உறவை
முறித்தது சமூக நீதி கட்சி
ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியுடனான உறவை முறித்துக் கொண்டது நஜா முஹம்மத் தலைமையிலான சமூக நீதிக் கட்சி. ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த வியாழனன்று கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய நஜா முஹம்மத் தலைமையிலான குழு, தேசிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
குறிப்பாக அந்த கூட்டணியில் தமக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சமூக நீதிக் கட்சி, சிறுபான்மையினர் விடயத்தில் அவர்கள் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரியவில்லை எனவும் கூறியிருக்கின்றனர்.
பொதுஜன பெரமுன தனித்து களமிறங்கும்
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக கடந்த திங்களன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பை கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார். அக்கட்சியின் தவிசாளர் நாமல் ராஜபக்ஷவே தமது கட்சி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்துவந்தார். இந்நிலையில், அக்கட்சியின் வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக பெரேரா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
92 எம்.பி.க்களின் ஆதரவு ரணிலுக்கு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்பதாக நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உறுதிப்படுத்தியுள்ளனர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் அடங்குவர். குறிப்பக பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரும் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவை தெரிவித்திருந்தனர்.
எனினும் ராஜபக்ச ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினரான மர்ஜான் பழீல் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தாக தெரியவில்லை.
முஸ்லிம் கட்சிகள் ரணிலுடன் பேச்சு
ரணிலை முஸ்லிம் கட்சிகள் ஆதரிப்பதற்கு பொதுஜன பெரமுனவே தடையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுஜனபெரமுன தனிவழி பயணத்தை ஆரம்பித்ததையடுத்து முஸ்லிம் கட்சிகளும் தமிழ் கட்சிகள் பலவும் ஜனாதிபதி ரணில் தரப்போடு பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
மூன்றாக உடையும் சுதந்திரக் கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிப்பதாக அறிவித்ததனையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குழுவினர் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினரும் அறிவித்துள்ளனர்.
தயாசிறி ஜயசேகர தலைமையிலான இன்னொரு குழுவும் இயங்குகிறது. இவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கக் கூடும் என கூறப்பட்டாலும் வேறு முடிவுகளையும் எடுக்கலாம் என தெரிகிறது.
ராஜபக்சாக்களுக்கு முரண் வலுக்கிறது
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமையினால் மொட்டு கட்சி பிளவை சந்தித்திருக்கிறது. குறிப்பாக ராஜபக்சாக்களின் பேச்சை அக்கட்சி உறுப்பினர்கள் செவிமடுக்க மறுத்துள்ளனர்.
பெரும்பாலானோர் ரணில் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றமையால் ராஜபக்சாக்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இந்நிலையில் தினமும் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் பேச்சுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும், ராஜபக்சாக்களுக்கிடையே வெவ்வேறான கருத்துகள் நிலவுவதால் முரண்பாடுகள் வலுவடைகின்றன. எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது மகன் நாமலின் எதிர்கால அரசியல் குறித்தே அதிகம் கரிசனை செலுத்துவதாக தெரிகிறது.- Vidivelli