- உலக நாடுகள் கண்டனம்
- மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரானில் நடந்த தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார். இதனை ஹமாஸ் அமைப்பும் ஈரானிய அரசும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானின் புதிய அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் இஸ்மாயில் ஹனியா வீடு ஒன்றில் தங்கியிருந்ததாகவும் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் குறித்த வீடு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவரும் அவரது உதவியாளரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் தங்கியிருந்த வீட்டின் மீது ராக்கெட் தாக்கியதில் அவரும் அவரது பாதுகாவலரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 19 அன்று ஈரானில் அணுசக்தி நிலையத்தை சுற்றி வான் பாதுகாப்பை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. தற்போதும் அதே முறையை பின்பற்றி ஹனியா மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அந்த நடவடிக்கையில், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் ஈரானிய வான்வெளிக்கு வெளியில் இருந்து ரொக்கெட்டுகளை வீசியதாக நம்பப்படுகிறது. சவூதி அரேபியாவின் அல் ஹதாத் செய்தி நிறுவனமும் இதேபோன்ற தகவலைத் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் இஸ்மாயில் ஹனியா தங்கியிருந்த இல்லம், வழிகாட்டப்பட்ட ஏவுகணையால் (Guided Missile) தாக்கப்பட்டதாக சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அரசு ஊடகமும் இதையே கூறியுள்ளது.
62 வயதான ஹனியா 1980களின் பிற்பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.
அபு அல் அப்து என்ற புனைப்பெயர் கொண்ட இஸ்மாயில் அப்துல் சலாம் ஹனியா, பலஸ்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். இவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர்.
இஸ்மாயில் ஹனியா ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராக பரவலாகக் கருதப்படுகிறார். 1980களின் பிற்பாதியில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியமான தலைவராக உருவெடுத்தார். 1989ம் ஆண்டு, இஸ்ரேலில் அவர் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
பிறகு 1992 ஆம் ஆண்டு இதர ஹமாஸ் தலைவர்களுடன் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடைப்பட்ட பகுதியில் மனிதர்கள் யாரும் இல்லாத பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். இஸ்ரேலால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்ட இவர், ஒரு காலத்தில் 6 மாதங்களுக்கு தெற்கு லெபனானில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இவரை கொல்வதற்கான முயற்சிகளும் அவ்வபோது நடந்த வண்ணம் இருந்தன. 2003ம் ஆண்டு ஹமாஸ் நிறுவனருடன் சேர்த்து இவரையும் கொல்ல இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சியில் அவர் உயிர் தப்பினார்.
பலஸ்தீன அரசாங்கத்தின் (Palestinian Authority government) பத்தாவது பிரதமராக 2006 ஆம் ஆண்டில் வகித்தார். ஓராண்டுக்கு பிறகு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவர் 2017 இல் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இஸ்மாயில் ஹனியாவைக் கொலை செய்வதற்கு இஸ்ரேல் பல தடவைகள் முயற்சி செய்திருந்தது. அண்மைக்காலத்தில் இவரது பிள்ளைகள் உட்பட பலர் இஸ்ரேலினால் இலக்கு வைத்து கொல்லப்பட்டனர்.
இதேவேளை இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுவரை உரிமை கோரவில்லை. உலகின் பல நாடுகள் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளன.
ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இது ஏற்றுக்கொள்ளவே முடியாத அரசியல் கொலை என்று கூறியதாக அரசு ஊடகமான ரியா அறிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மிக்கைல் போக்டனோவ், இந்த கொலை மேலும் பதற்றத்தை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதற்கு தன்னுடைய கண்டன குரலை பதிவு செய்துள்ளது. “தெஹ்ரானில் நடைபெற்ற வெட்கக்கேடான கொலை இது,” என்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், “இந்த கொலை, காஸாவில் நிலவி வரும் போரை பிராந்திய அளவில் பரப்புவதை இலக்காக கொண்டுள்ளது,” என்றும் தெரிவித்துள்ளது.
காஸாவில் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கான பேச்சுவார்த்தையில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டமை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு முழுமையான போர் ஏற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது என ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு கற்கைகள் பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாதெர் ஹஷெமி கூறுகிறார். இது முக்கியமான நிகழ்வாகும் என்று கூறும் அவர், இது லெபனானிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்.
‘‘இத்தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன், தெற்கு பெய்ரூட்டில், ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவரை கொல்ல முயற்சி செய்தது இஸ்ரேல். ஈரானும், ஹிஸ்புல்லாவும் இந்த விவகாரத்தை பெரிதாக்க விரும்பாது என்று நினைத்து இதனை இஸ்ரேல் அரங்கேற்றியது. ஆனால் ஹனியாவின் கொலையானது அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது,” என்றும் நாதெர் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli