17 கோடி மக்கள் வசிக்கும் பங்களாதேஷில் மக்கள் போராட்டங்கள் புதிதல்ல. ஆனால் கடந்த வாரத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் தீவிரம் முன்னரைவிட மிக மோசமாக இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் அரசாங்க வேலைகளில் மேற்கொள்ளப்படும் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுத்துறை அரசு வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு 1971இல் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நாட்டின் விடுதலை போரில் உயிரிழந்த படைவீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமானது என்று மாணவர்கள் வாதிடுகின்றனர், மேலும் தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.
பல்கலைக்கழக வளாகங்களில் அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு தழுவிய ஆர்ப்பாட்டமாக உருமாறியுள்ளது.
காவல்துறையும், ‘பங்களாதேஷ் சட்ரா லீக்’ என அழைக்கப்படும் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினரும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிருகத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
ஜூலை 15 முதல் கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. ஜூலை18 வியாழன் அன்று வன்முறை உச்சகட்டத்தை அடைந்தது. அன்று குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும், வெள்ளிக்கிழமை மட்டும் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நேற்றுவரை இந்த வன்முறைச் சம்பவங்களில் 180 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை போராட்டக்காரர்கள் சிறைக்குள் நுழைந்து 850 கைதிகைள விடுவித்தனர்.
பல நூற்றுக் கணக்கான பொது மற்றும் தனியார் கட்டிடங்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. பல நூறு வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் உச்சத்தில் இருந்த நாட்களில் அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைய சேவைகளை முடக்கியது. தொலைபேசி சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டன. நேற்று முதல் இணைய சேவைகள் ஓரளவு வழமைக்குத் திரும்பியுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் தொழில்களுக்குச் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நாளை முதல் மீண்டும் பாரிய போராட்டங்களில் ஈடுபடுவோம் என மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
பங்களாதேஷைப் பொறுத்தவரை அங்கு போராட்டங்கள் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக பங்களாதேஷ் இருந்தாலும், பட்டதாரிகளுக்கான போதிய வேலை வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுமார் 1.8 கோடி பங்களாதேஷ் இளைஞர்கள் வேலை தேடி வருவதாக ஆய்வு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களை விட குறைவாக படித்தவர்களை விட அதிக வேலையின்மை விகிதத்தை எதிர்கொள்கின்றனர்.
பங்களாதேஷ் ஆயத்த ஆடைகள் (ready-to-wear clothing) ஏற்றுமதியின் அதிகார மையமாக மாறியுள்ளது. இது உலக சந்தைக்கு சுமார் 40 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.
இந்தத் துறையில் 40 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணியாற்றுகின்றனர், அவர்களில் பலர் பெண்கள். ஆனால் பட்டம் பெற்ற இளைய தலைமுறையினருக்கு இந்த தொழிற்சாலை வேலைகள் போதுமானதாக இல்லை.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியின் கீழ், தலைநகர் டாக்காவில் புதிய சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள் , மெட்ரோ ரயில் என கட்டமைக்கப்பட்டதன் மூலம் நாடு புதிய மாற்றங்களைக் கண்டது.
கடந்த பத்து ஆண்டுகளில் பங்களாதேஷின் தனிநபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்த வளர்ச்சி பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே பலன் அளிப்பதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.
“நாங்கள் பல ஊழல்களை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் செய்யும் ஊழல் நீண்ட காலமாக தண்டிக்கப்படாமல் தொடர்கிறது,” என டாக்கா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர் சமினா லுத்பா கூறுகிறார்.
சமீப மாதங்களில் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில், ஹசீனாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் சிலருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய விவாதங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. முன்னாள் இராணுவத் தலைவர், முன்னாள் காவல்துறை தலைமை அதிகாரி, மூத்த வரி அதிகாரிகள் மற்றும் மாநில ஆட்சேர்ப்பு அதிகாரிகள் உட்பட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
ஹசீனாவின் அலுவலக உதவியாளராக இருந்த ஒருவரே 34 மில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்கள் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ‘‘சாதாரணப் பயணங்களுக்கு கூட அவர் ஹெலிகொப்டர் பயன்படுத்துகிறார். அவர் எப்படி இவ்வளவு பணம் சம்பாதித்தார்? இதை அறிந்த நான் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்தேன்,” என ஹசீனா விளக்கமளித்துள்ளார்.
பங்களாதேஷ் ஊடகங்களில் இந்த விவகாரம் பற்றிய பல எதிர்வினைகள் எழுந்தன. அரசாங்க ஒப்பந்தங்களுக்கான இலஞ்சம், ஊழல் ஆகியவற்றின் மூலம் இவ்வளவு பணம் குவிக்கப்பட்டிருக்கும் என ஊடகங்கள் கருதுகின்றன.
ஒரு காலத்தில் ஹசீனாவின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்பட்ட முன்னாள் காவல்துறைத் தலைவர் பெனாசிர் அகமது சட்டவிரோதமான வழிகளில் மில்லியன் கணக்கான டொலர்களைக் குவித்ததற்காக பங்களாதேஷ் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பொருளாதார நெருக்கடி ஆகிய சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் நாட்டில் உள்ள சாதாரண மக்களுக்கு இந்த செய்திகள் சீற்றத்தை ஏற்படுத்தியது.
ஊழல் குற்றச்சாட்டுகள் மட்டுமன்றி, கடந்த 15 ஆண்டுகளில் ஜனநாயக நடவடிக்கைகளுக்கான இடம் சுருங்கிவிட்டதாக பல சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“தொடர்ந்து மூன்று தேர்தல்களில் நம்பகமான, சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்குப்பதிவு செயல்முறை இல்லை,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி பிபிசியிடம் தெரிவித்தார்.
2014 மற்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தல்களை பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) புறக்கணித்தது. ஹசீனாவின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் சாத்தியமில்லை என்றும் தேர்தல்கள் நடுநிலையான கண்காணிப்பு நிர்வாகத்தின் கீழ் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் விரும்புவதாகக் கூறினர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஹசீனா நிராகரித்துவிட்டார். ஷேக் ஹசீனா இந்த ஆண்டு ஜனவரி மாதம் நான்காவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 15 ஆண்டுகளில் 80 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர், அவர்களில் பலர் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் என்றும், அவர்களது குடும்பத்தினருக்கு அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.
ஷேக் ஹசீனா கடந்த சில ஆண்டுகளில் அரசியல் ரீதியாக எதேச்சதிகாரமாக வளர்ச்சி அடைந்துள்ளார் என்ற பரவலான விமர்சனங்களுக்கு மத்தியில், அரசாங்கம் ஊடகங்களையும் ஆட்சியை எதிர்ப்பவர்களையும் ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.
“மக்கள் இப்போது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தங்களுக்கு எந்த வழியும் இல்லை என்ற சூழலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்கிறார் டாக்டர் லுத்பா.
இந்த போராட்டங்களுக்கு முக்கிய காரணம் எதிர்க்கட்சிதான் என்று அமைச்சர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சில இஸ்லாமியக் கட்சிகளாலும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியதாக அவர்கள் கூறுகிறார்கள். பிரச்சினைகளை நிதானமாக விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் கூறினார்.
“மாணவர் போராட்டக்காரர்களை அரசு அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நியாயமான வாதம் முன்வைக்கப்பட்டால், நாங்கள் கேட்க தயாராக இருக்கி றோம்” என்று ஹக் இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் கூறினார்.
சமீபத்தைய போராட்டங்களுக்கான பிரதான காரணமான இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் ஜூலை 21 இல் இரத்துச் செய்துள்ளது. அரசு வேலைகளில் அதிகபட்சம் 5% பணியிடங்களை மட்டுமே முன்னாள் சுதந்திரப் போர் வீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. எனினும் அந்த ஏற்பாட்டையும் நீக்கி அனைவரையும் உள்வாங்கும் வகையில் இட ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு மாணவர்கள் போராடி வருகின்றனர்.
பங்களாதேஷ் மாணவர் போராட்டங்களுக்கு உலகின் பல நாடுகளிலும் ஆதரவுகள் வலுத்துள்ளன. இலங்கையிலும் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (பி.பி.சி.)- Vidivelli