நா.தனுஜா
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக திட்டமிட்டு அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதும், பின்னர் தேவையேற்படுகையில் பொறுப்புக்கூறலின்றி மன்னிப்புக்கோரி அல்லது ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி அறிக்கையிட்டுக் கடந்து செல்வதும் இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல.
இலங்கையில் கடந்த சில வருடங்களில் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைச் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்திருக்கின்றன. அவற்றில் இஸ்லாமியர்களின் மத மற்றும் நம்பிக்கைசார் உரிமையைக் கேள்விக்குட்படுத்தி, அவர்களை உளவியல் ரீதியில் தளர்வடையச்செய்த ‘கட்டாய உடற்தகனம்’ முக்கியமானது.
கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலத்தில் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது மதநம்பிக்கைக்குப் புறம்பாக, தேசிய மற்றும் சர்வதேச எதிர்ப்புக்களை மீறி கட்டாயமாகத் தகனம் செய்யும் கொள்கையை நடைமுறைப்படுத்தியது அரசாங்கம். அவ்வேளையில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட உளவியல் போராட்டத்தை முற்றுமுழுதாகப் புறக்கணித்து கருணையின்றி செயற்பட்ட அரசாங்கம், அதற்காக நேற்று முன்தினம் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியது. ஆனால் எவ்வித விஞ்ஞானபூர்வ ஆதாரங்களுமின்றி கட்டாய உடற்தகனக் கொள்கையைப் பரிந்துரைத்த மற்றும் நடைமுறைப்படுத்த ஆவன செய்த அதிகாரிகளுக்கு எதிராக எவ்வித விசாரணைகளோ, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை.
எது எவ்வாறிருப்பினும் தலைநகர் கொழும்பில் இத்தகையதோர் நாடகம் அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில் தான் திருகோணமலையில் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் 70 பேர் பிறிதொரு உளவியல் போராட்டத்துக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் கல்வி பயின்று, க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சைப்பெறுபேறுகளை அவர்கள் காதை மறைக்கும் விதமாக ஹிஜாப் அணிந்துவந்து பரீட்சை விதிகளை மீறியதாகக் காரணம் குறிப்பிட்டு வெளியிடாமல் இடைநிறுத்திவைத்து, பின்னர் வெளியிட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே. ஆனால் பரீட்சைப்பெறுபேறுகள் வெளியாகி, அனைத்தும் சுமுகமாக முடிந்துவிட்டது போல் வெளித்தெரிந்தாலும், இவ்விவகாரத்தில் இன்னமும் இழுபறிநிலை தொடர்கிறது. கட்டுப்பாடுகள் மிகுந்த சமூகத்திலிருந்து தமது எதிர்காலம் பற்றிய மிகையான கனவுகளுடன் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள், தற்போது எதிர்காலம் தொடர்பான அச்சத்துடன் நாட்களைக் கடக்கின்றனர்.
திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள சம்பவத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சும் வகையில் முதன்முதலில் அறிக்கையொன்றை வெளியிட்ட சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம், ‘பரீட்சைகளின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது உரிய அதிகாரிகளின் பொறுப்பாகும். இதன்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் மத அல்லது பாலின அடிப்படையில் எந்தவொரு மாணவரையும் புறந்தள்ளும் விதமாக அமையக்கூடாது. அவ்வாறிருக்கையில் அம்மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததாகக் குறிப்பிட்டு அவர்களது பரீட்சைப்பெறுபேறுகளை வெளியிடாமல் இடைநிறுத்திவைப்பதானது அவர்களின் மதசுதந்திரத்தை மீறுவதாகவே அமைந்திருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் சமூகங்களுக்கு இடையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முனைவதாகக்கூறும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யாது’ எனக் கடுமையாக சுட்டிக்காட்டியிருந்தது.
இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசியலமைப்பின் 10 ஆவது சரத்தின் பிரகாரம் இந்நாட்டுப்பிரஜைகள் அனைவரும் மதசுதந்திரத்துக்கு உரித்துடையவர்களாவர். அதேபோன்று 12(2) சரத்தானது எந்தவொரு நபரும் பால் அல்லது மத அடிப்படையில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுப்பதுடன், 14(1)(ஈ) சரத்து அனைத்துப் பிரஜைகளும் தமக்கு விரும்பிய மதம், நம்பிக்கை, வழிபாட்டு முறைமை, நடைமுறை அல்லது கோட்பாட்டைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை உறுதிசெய்திருக்கின்றது.
நாட்டின் அதியுச்ச சட்டம் மேற்கூறப்பட்ட விதிகளைக்கொண்டு அனைத்துப்பிரஜைகளினதும் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியிருக்கையில், குறித்தவொரு மதம் மற்றும் அதுசார்ந்த ஆடைகளைக் காரணங்காட்டி பரீட்சைப்பெறுபேறுகளை இடைநிறுத்துவது ஏற்புடையதல்ல எனச் சுட்டிக்காட்டியிருக்கிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு. அதுமாத்திரமன்றி அரசியலமைப்பின் 27(2)(எச்) சரத்தின் ஊடாக சகலருக்கும் சமத்துவமான கல்வி உரிமை உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், அவ்வாறிருக்கையில் மாணவரொருவர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி மறுப்பதோ அல்லது அவரது பெறுபேறை இடைநிறுத்திவைப்பதோ இவ்வுரிமையை மீறுவதாகவே அமையும் எனவும் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் ஜூலை 4 எனத் திகதியிடப்பட்டு, ஜூலை 15 ஆம் திகதி மேற்கூறப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாணவிகளின் கைகளுக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜயசுந்தரவினால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், கடந்த க.பொ.த உயர்தரப்பரீட்சையின்போது பரீட்சை மண்டபத்துக்குள் நுழைவதற்கு முன்னரும், பரீட்சை எழுதும் காலப்பகுதியிலும் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் பரீட்சைக்குத் தோற்றவேண்டும் என்பது குறித்து பாடசாலை அதிபர், பரீட்சை மேற்பார்வையாளர் உள்ளிட்டோரால் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை அம்மாணவிகள் பின்பற்றவில்லை என்பது அவதானிக்கப்பட்டமையால் பரீட்சைப்பெறுபேறுகள் இடைநிறுத்திவைக்கப்பட்டதாகவும், இருப்பினும் அம்மாணவிகள் முதற்தடவையாக பாடசாலைப் பரீட்சார்த்தியாக இப்பரீட்சைக்குத் தோற்றியமையைக் கருத்திற்கொண்டு பரீட்சைப்பெறுபேறுகள் வெளியிடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அம்மாணவிகள் தாம் காதை முழுமையாக மறைக்கும் வகையில் ‘ஹிஜாப்’ அணிந்து செல்லவில்லை எனவும், மாறாக பரீட்சை விதிமுறைகளைப் பின்பற்றும் அதேவேளை தமது மதநம்பிக்கையுடன் முரண்படாத வகையில் காதுகள் தெரியக்கூடியவகையிலான துணியையே (Shawl) அணிந்துசென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறிருக்கையில் அம்மாணவிகள் பரீட்சை விதிகளை மீறியதாகத் தீர்மானித்து, அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் மேற்கூறப்பட்ட கடிதத்தின் நேர்மைத்தன்மை தொடர்பில் கேள்வி எழுகிறது.
இதுகுறித்து தன்னார்வ அடிப்படையில் மீளவும் அவதானம் செலுத்தியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இவ்விவகாரம் தொடர்பில் முறையான உள்ளக விசாரணையை முன்னெடுக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் வலியுறுத்தியிருப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்காக இந்நெருக்கடிக்குக் காரணமாக அமைந்த விதிமுறையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தி, குழப்பமற்ற வகையில் வெளியிடுமாறும் கோரியிருக்கிறது.
ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதாகக் கூறும் நாடொன்றில் ஒருவரின் மத மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த உரிமை, அவரது பிறிதோர் உரிமைக்குத் தடையாக அமைவதையோ அல்லது இடையூறு விளைவிப்பதையோ ஒருபோதும் ஏற்கவியலாது. எனவே கட்டாய உடற்தகன விவகாரத்தில் ‘காலங்கடந்து பிறந்த ஞானத்தைப்போல’ இவ்விவகாரத்திலும் சம்பந்தப்பட்ட மாணவிகள் முகங்கொடுத்துவரும் உளவியல் போராட்டத்தை புறந்தள்ளிவிட்டு, காலங்கடந்து மன்னிப்புக்கோராமல் உடனடியாக அவர்களுக்கு உரியவாறான தீர்வை வழங்க தொடர்புடைய அரச கட்டமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அன்றேல் இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு என்னும் நாட்டின் பெயரில் ‘ஜனநாயக’ எனும் பதம் அர்த்தம் இழக்கநேரும். – Vidivelli