எம்.எஸ்.எம். நூர்தீன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை கிராமத்தில் அண்மையில் வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற கைக் குண்டு வீச்சுச் சம்பவமும் வெடிக்காத நிலையில் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் பாதுகாப்புத்தரப்பினரின் கெடுபிடிகளுக்கும் காரணமாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இப் பூநொச்சிமுனை கிராமம் அமைந்துள்ளது. வரலாற்று பாரம்பரியமிக்க இந்த கிராமத்தில் 300 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களின் பிரதான வாழ்வாதாரமாக ஆழ் கடல் மீன்பிடித் தொழிலே காணப்படுகிறது. மீனவர்களை அதிகம் கொண்டுள்ள இக் கிராமம் கடந்த கால யுத்தத்தினாலும் சுனாமி அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட கிராமமாகும். கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பலரும் இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
மிகவும் அமைதியாகவும் சுமுகமாகவும் வாழ்ந்து வரும் இக்கிராம மக்கள், அண்மையில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாரிய நெருக்கடிக்குள்ளும் அச்சத்தினுள்ளும் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கிராமத்தில் பச்சை வீட்டு திட்டம் எனப்படும் ஒரு பகுதியும் உண்டு. இதில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த கைக்குண்டு வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள வீடொன்றின் மீது கடந்த ஜுலை 15 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சுமார் 8.45 மணியளவில் இந்த கைக்குண்டு வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ஸ்தலத்துக்குச் சென்ற காத்தான்குடி பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டனர். பொலிஸ் தடயவியல் பிரிவு அதிகாரிகளும் ஸ்தலத்திற்கு சென்று வீட்டில் முழுமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த வீட்டில் வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளதுடன் கூரையிலிருந்து தரையில் வந்து விழுந்த ஒரு பொருள் வெடித்த சத்தம் கேட்டதாகவும் பின்னர் அது புகையாக கிளம்பியதாகவும் அவ் வீட்டில் குடியிருக்கும் பெண் தெரிவித்துள்ளார். வெடிப்புச் சத்தத்தை தம்மால் தெளிவாக கேட்க முடிந்ததாக அயலவர்களும் தெரிவிக்கின்றனர்.
சம்பவ நேரம் குறித்த வீட்டினுள் வீட்டு உரிமையாளரின் மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் குறித்த வீட்டுக்கு பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் வீட்டின் கூரையில் இரண்டு ஓடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு மல்வத்த 24 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அணில் பெரேரா, மட்டக்களப்பு கல்லடி 243வது படைப் பிரிவின் பிரிகேடியர் சந்திம குமாரசிங்க ஆகியோர் சென்று பார்வையிட்டனர். அதே போன்று மட்டக்களப்பு மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
கொழும்பிலிருந்து வந்த வெடிபொருட்கள் பகுப்பாய்வு செய்யும் பொலிஸ் அதிகாரிகளும் ஸ்தலத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக பல கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இந்தச் சம்பவம் இடம்பெற்று பல கோணங்களில் விசாரணைகள் இடம் பெற்று வந்த நிலையில் அதே பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மாலை வெடிக்காத நிலையில் காணப்பட்ட கைக் குண்டு ஒன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. இதே பச்சை வீட்டுத்திட்ட வீதியிலேயே இக் கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளது.
வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மரத்தின் கீழ் கைக் குண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதனை அப்பகுதியிலுள்ள சிலருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பிரதேச மக்கள் காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்துக்கு சென்ற பொலிஸார், இராணுவத்தினர், தடவியல் பரிசோதனை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் வவுணதீவிலுள்ள விசேட அதிரடிப் படையினரினால் குறித்த கைக் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இதே நேரம் இவ்விரு சம்பவங்களும் பதிவான பூநொச்சிமுனை பச்சை வீட்டுத் திட்டப் பகுதி நேற்று புதன்கிழமை அதிகாலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால சுற்றி வளைக்கப்பட்டதுடன் மோப்ப நாய்களின் உதவியுடன் வீடு வீடாக சோதனைகள் இடம்பெற்றன.
குறித்த பச்சை வீட்டுத் திட்ட பகுதியில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் விபரங்களும் பொலிசாரினால் திரட்டப்பட்டு சோதனை நடவடிக்கைகளும் இடம் பெற்றன.
இந்த சோதனை நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சுற்றி வளைப்பின் போது பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சுமுகமாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பாதசாரிகள், பாடசாலை மாணவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறே சுற்றி வளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையை மேற் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த சம்பவங்கள் அமைதியாக வாழ்ந்து வரும் இந்தக் கிராம மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இந்த பூநொச்சிமுனை கடற்கரையில் மீன்பிடிப் படகு ஒன்றும் எரிக்கப்பட்டது. இது தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் படகு உரிமையாளருக்கு முப்பது இலட்சம் ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவத்தை கண்டித்து பூநொச்சிமுனை மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து, தற்போது சுமுகமாக வாழ்ந்து வரும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் அச்சத்தினைத் தோற்றுவித்துள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில் தீய சக்திகள் மக்கள் மத்தியில் வீண் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தோற்றுவிக்கும் வகையில் இவ்வாறான சதித்திட்டங்களை மேற்கொள்கின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொலிசார் நீதியான முறையில் விசாரணைகளை நடத்தி வெடித்த குண்டு மற்றும் வெடிக்காத குண்டின் பின்னணிகளைக் கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே பூநொச்சிமுனை வாழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli