- குற்றவாளிகள் யார் என தெளிவுபடுத்த வேண்டும்
- சம்பந்தப்பட்டோர் தண்டிக்கப்படல் வேண்டும்
- முஸ்லிம்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்
- உரியமுறையில் நட்டஈடும் வழங்க வேண்டும்
- குற்றவாளிகளை பாதுகாக்க திரைப்படமும் தயாரிப்பு
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
கொவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம் மக்களை கட்டாயத் தகனம் செய்தமைக்கு மன்னிப்புக் கோரி அமைச்சரவை தீர்மானம் எடுத்து தப்பித்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
அத்துடன், அந்த பலவந்த தகனம் என்கின்ற அரசியல் தீர்மானத்தை எடுத்தவர் யார் என்பதை வெளிப்படுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரை எரித்து துன்புறுத்தியமையால் பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பத்தாருக்கு உரியமுறையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்த முஸ்லிம் சமூகத்தின் சடலங்களை எரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மன்னிப்பு கோருவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் முதலில் உரையாற்றினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
கொவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை தகனம் செய்தமைக்கு மன்னிப்பு கோருவதற்கு அரசாங்கம் அமைச்சரவை தீர்மானம் எடுத்திருப்பதை வரவேற்கிறேன். கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களின் மத கலாசாரத்தை சீரழித்து, இனவாத அடிப்படையில் முஸ்லிம் மக்களை இலக்குவைத்தே இந்த தீர்மானத்தை அன்று அமைச்சரவையில் எடுத்தனர். இதற்கு தற்போது அமைச்சரவையில் இருக்கும் சிலர் ஆதரவளித்தனர். என்றாலும் இந்த நடவடிக்கையை விட்டு விடுவதற்காக தற்போதாவது இடம்பெற்ற சம்பவத்துக்காக மன்னிப்புக்கோர எடுத்த தீர்மானத்தை மதிக்கிறேன்.
அதேநேரம் கொவிட் தொற்றில் மரணித்தவர்களை எரிப்பதற்கு யாருடைய அறிக்கையின் அடிப்படையில் இந்த பிழையான தீர்மானம் எடுக்கப்பட்டது? இதற்கு ஆலோசனை வழங்கியது யார்? வழங்கிய ஆலோசனையை ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் அதிகாரிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கவில்லை? உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலை புறந்தள்ளிவிட்டு, ஏன் இந்த அநீதியை முஸ்லிம் சமூகத்துக்கு செய்தீர்கள்.
அத்துடன் தற்போது கொவிட் சடலம் எரிப்பு தொடர்பில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்கே இதனை செய்திருக்கிறார்கள். இதற்காக வெட்கப்படவேண்டும்.
அதனால் அரசாங்கம் மன்னிப்புக்கோரி மாத்திரம் இந்த விடயத்தில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த தவறான ஆலோசனை வழங்கியவர்களின் பெயர்களை சபைக்கு வெளிப்படுத்த வேண்டும். அதேபோன்று கொவிட் தொற்றுக்குள்ளாகி தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் நபர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும் என்றார்.
ரவூப் ஹக்கீம்
கொவிட்டில் மரணித்து தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் தொடர்ந்தும் மறைக்காமல் அதனை வெளிப்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் செய்துவிட்டு மன்னிப்பு மாத்திரம் கோரி முடித்துக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும், கொவிட் தொற்றில் மரணித்தவர்கள் தகனம் செய்யப்பட்ட விடயம் தொடர்பில் பல தடவைகள் இந்த சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன். கொவிட் தகனத்துக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் பிரஜைகளின் பெயர் பட்டியலை வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சரிடம் இந்த சபையில் கேட்டேன். அதற்கு அவர், அவ்வாறான எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார். இது உண்மையை மறைப்பதற்கு செய்யும் நடவடிக்கை. அதனால் தகனத்துக்குள்ளானவர்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் தரவேண்டும்.
அரசாங்கம் எல்லாவற்றையும் செய்துவிட்டு முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோரிவிட்டு இதனை முடித்துக்கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும். இதற்கு காரணமானவர்களின் பெயர் பட்டியலை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
முஜிபுர் ரஹ்மான்
தகனம் செய்தமைக்கு மன்னிப்பு கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் மூலம் இந்த நடவடிக்கை பலவந்தமாக செய்யப்பட்டது என்பது உறுதியாகி இருக்கிறது என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும், இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் இதனை யார் செய்தார்கள் என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். கொவிட் மரணம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு சுகாதார வழிகாட்டல் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக வைத்தியர் சன்ன பெரேரா தலைமையிலான குழுவின் அறிக்கையை மாத்திரமே பின்பற்றி வந்தது. இதுவே, முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவுக்கு தேவையான தீர்மானமாகவும் இருந்துள்ளது.
இதற்கு எதிராக அழுத்தங்கள் எழுந்தது. இதன்பின்னர், பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதில் பல நிபுணர்களும் உள்ளடக்கப்பட்டனர். அவர்கள்,நிபந்தனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டனர். அதன் அறிக்கைகள் ஆறு மாதங்களாக வெளியிடப்படாமலேயே இருந்தது. இது குறித்து நாம் பாராளுமன்றில் பலமுறை கேள்வி எழுப்பியிருந்தோம்.
பின்னர் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்குமாறு இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஜனாதிபதி கோத்தாபயவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனையும் புறக்கணித்தே செயற்பட்டனர். பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த நாட்டுக்கு வருகை தந்தபோது அவரும் இதுகுறித்து கோரிக்கை விடுத்திருந்தார்.
என்றாலும் இதற்கு கடும் எதிர்ப்பு வர ஆரம்பித்த பின்னர், சர்வதேசத்தின் அழுத்தத்துக்கு மத்தியில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கினார்கள். மாறாக விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் இந்த அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் அடக்கம் செய்வதற்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி இருந்தும் அதற்கு அனுமதி வழங்காமல் தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்தவர்கள் யார் என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். இவர்கள்தான் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என்றார்.
எஸ்.எம்.மரிக்கார்
அரசாங்கத்தின் மன்னிப்பு கோரும் தீர்மானம் ராஜபக்ஷ்வினரை பாதுகாப்பதற்கான நடவடிக்கை. தகனம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியல் தீர்மானமாகும். அதனால் இதற்கு காரணமானவர்கள் யார். அவர்களை இனம் கண்டு, வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
அத்துடன், படம் தயாரித்தவர்கள் ராஜபக்சாக்களை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். இதுவொரு தெளிவான அரசியல் தீர்மானமாகும். இது குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
ஏ.எல்.எம்.அதாவுல்லா
கொவிட் மரணங்களை எரித்தமை தொடர்பில் அமைச்சரவை மன்னிப்பு கோருவதற்கு எடுத்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி, பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் பாராளுமன்றத்துக்கு தெரியாமல் கொவிட் மரணங்களை எரிப்பதற்கு முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாரச்சி வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். இது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் நடவடிக்கை. இது தொடர்பாக நான் அன்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
மேலும், மன்னிப்புடன் இதனை முடிக்காமல், பாராளுமன்றத்துக்கு தெரியாமல் வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டமை தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் இந்த நடவடிக்கைக்கு எதிராக யாருக்கு தண்டனை கொடுக்கப்போகிறோம் என்பதை இந்த பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
லக்ஸ்மன் கிரியெல்ல
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிப்பது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
மேலும், அவர்களுக்கு நஷ்டயீடுவழங்குவது மிகவும் அவசியமானதாகும். இந்த பிரச்சினையை நிறைவுக்கு கொண்டுவர வேண்டும். இனியொருபோதும் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாதிருப்பதற்கு இது வழிவகுக்கும் என்றார்.
இம்ரான் மகரூப்
இந்த அமைச்சரவை தீர்மானமானது வெறும் கண்துடைப்பாகும். இன்று மன்னிப்பு கோரி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தவர்கள் அன்றும் அரசாங்கத்தின் பங்குதாரர்கள்தான். தேர்தல் நெருங்கும்போது மக்களை ஏமாற்ற இப்படியான பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகிய 276 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டது. இதன்போது, முஸ்லிம்கள் துடித்தார்கள், கண்ணீர் சிந்தினார்கள், கதறி அழுதார்கள், பலரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அரசாங்கத்தின் இந்த இழி செயலை நாம் அன்றும் கடுமையாக கண்டித்தோம்.
கோட்டபாய அரசாங்கம் வேண்டுமென்றே இந்த பலவந்த ஜனாஸா எரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. கண்துடைப்புக்கு சில கமிட்டிகளை அமைத்து தப்பிக்க முயற்சித்தனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், அமைச்சரவையும் இந்த கமிட்டிகளின் பரிந்துரையின் படியே ஜனாஸாக்களை எரித்ததாக கூறியது. இது முற்றிலும் பொய்யானது.
ராஜபக்சாக்களினதும் கடும்போக்குவாத சக்திகளினதும் முஸ்லிம் வெறுப்பு செயற்பாட்டின் ஓர் அங்கமாகத்தான் இந்த ஜனாஸா எரிப்பு இருக்கிறது. முஸ்லிம் மக்களை கஷ்டப்படுத்தி அதில் இன்பம் காண்பதற்காகவே இந்த அநியாயத்தை செய்தனர்.
இந்த துயரிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இப்போது மன்னிப்பு என்ற பேரில் பூச்சாண்டி காட்டி அவர்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் மிகத் தெளிவாக்கத்தான் இருக்கிறது. நீங்கள் நாட்டில் மூளை முடிச்சுகளிலெல்லாம் வாழும் முஸ்லிம் மக்களிடம் வீடு வீடாக சென்று காலில் விழுந்து மன்றாடி மன்ணிப்புக் கேட்டாலும் அவர்களின் மன வேதனைக்கு ஈடு செய்ய முடியாது.
சிங்கள மக்களின் பேராதரவில் ஆட்சியமைத்த ஆணவத்திலேயே ஜனாஸாக்களை எரித்து முஸ்லிம் மக்களை துன்புறுத்தினீர்கள்.
இந்த அசிங்கமான செயற்பாட்டை சிங்கள மக்களே வெறுத்தனர். நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த செயற்பாடுகளும் காரணமாக இருந்ததை சிங்கள மக்கள் புரிந்துகொண்டனர். இதனால்தான், கோட்டாவை அரகலய போராட்டம் மூலமாக சிங்கள மக்களே விரட்டியடித்தனர்.
இன்று மன்னிப்பு என்ற பெயரில் சிங்கள மக்களையும் சிறுபான்மை மக்களையும் ஏமாற்ற நினைக்கிறார்கள்.
இந்த அமைச்சரவை பத்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பட்டமாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். அத்தோடு, இந்த அநியாயத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.
சபை முதல்வர் பதில்
கொவிட் 19 தாக்குதலால் உயிரிழந்த மக்களை தகனம் செய்தவர்களிடம் மன்னிப்பை கோருவதற்கு அப்பால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் மற்றும் விடயம் குறித்த விசாரணை நடத்தி முஸ்லிம் மக்களுக்கு உரிய தீர்வொன்றை வழங்குவோம் என எதிர்க்கட்சியினருக்கு சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டமை குறித்து அமைச்சரவை தீர்மானம் வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம், எஸ்.எம்.மரிக்கார் போன்றோர் தெளிவுபடுத்துமாறு கூறியிருந்தனர்.
அத்துடன், அன்று அமைச்சரவையில் இருந்தவர்கள் இதற்கு கை உயர்த்தியதாக குற்றம் சுமத்தியிருந்தனர். உண்மையில் அன்று நான் அமைச்சரவையில் இருக்கவில்லை.
கோட்டாவின் அமைச்சரவையில் இருந்தவர்கள் தற்போது ஆளும் கட்சியிலும் இருக்கின்றனர், எதிர்க்கட்சியிலும் இருக்கின்றனர்.
எனவே, உங்கள் தரப்பில் உள்ளவர்களிடம் ஏன் அன்று இதற்கு கை உயர்த்தினீர்கள் என்று கேளுங்கள், எங்களுடைய தரப்பிலுள்ளவர்களிடமும் நான் கேட்கிறேன்.
அப்போது உலக சுகாதார ஸ்தாபனத்தில் வழிகாட்டல்களே பின்பற்றியிருக்க வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட நிலைப்பாடாகவும் இருந்தது.
ஏன் இதனை செய்தனர், மன்னிப்பு கோரலுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு வழங்குவது என்பது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவேன். அத்துடன், சுகாதார அமைச்சு மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய அமைச்சுகளிடமும் இதனை முன்வைத்து அறிக்கையொன்றை தருகிறேன் என்றார்.- Vidivelli