- பிரபாகரனின் மனைவியை போல சுவிட்ஸர்லாந்தில் வாழலாம் என ஆசை காட்டினராம்
- உண்மை விளம்பல் விசாரணையில் வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவு
- அடுத்த தவணையில் சாட்சியமளிக்கிறார் ஹாதியா
எப்.அய்னா
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா தொடர்பிலான வழக்கின் சாட்சி நெறிப்படுத்தல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
பாத்திமா ஹாதியா பயங்கரவாத தடைச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள வாக்கு மூலத்தின் சுயாதீனத் தன்மையை ஒப்புவிக்க உண்மை விளம்பல் விசாரணைகள் தற்போதும் இடம்பெற்று வரும் நிலையில், அவ்விசாரணையில் வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்சியங்கள் மீதான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன. அதன்படி பிரதிவாதி தரப்பு சாட்சியங்கள் அடுத்த தவணையின் போது நெறிப்படுத்தப்படவுள்ளன. அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி, பிரதிவாதி தரப்பின் முதல் சாட்சியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹாதியா, சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கவுள்ளார்.
ஹாதியாவுக்கு எதிரான வழக்கில், வழக்கை நிரூபிக்க சட்ட மா அதிபர் தரப்பு பயங்கரவாத தடை சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக ஹாதியா கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள வாக்கு மூலத்திலேயே தங்கியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்து அறிந்திருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரிவித்ததன் ஊடாக), அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உண்மையில், சாராவிடம் இருந்து தகவல்களை அறிந்துகொண்டு ஹாதியா அவற்றை மறைத்தாரா அல்லது, சி.ஐ.டி.யினரின் கட்டுக்காவலில் இருந்த போது அவர்களின் வாக்குறுதி, நிர்ப்பந்தம் மற்றும் அழுத்தம் காரணமாக கோட்டை நீதிவானுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் வாக்கு மூலம் வழங்கினாரா என்ற விடயத்திலேயே ஹாதியா குற்றவாளியாவதும் நிரபராதியாவதும் தங்கியுள்ளது. அதன்படியே ஹாதியாவின் குறித்த வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசாரணை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமன் ட்ரொஸ்கி முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த தவணையில் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்ட போது, ஹாதியா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு இல: 2 இன் பொறுப்பதிகாரி ஜயசுந்தரவிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு அவரது சாட்சியம் நிறைவு செய்யப்பட்டது. வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் ஜயசுந்தர வழங்கிய சாட்சியம் இதன்போது, ஹாதியாவின் சார்பில் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸுடன் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
குறிப்பாக சி.ஐ.டி.க்கும் அரச உளவுச் சேவைக்கும் இடையே கருத்து முரண்பாடுகளும், ஒவ்வாமையும் நிலவியதாகவும், உயர் மட்ட அழுத்தங்கள் காரணமாக உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் மிக முக்கிய பங்குதாரராக கருதப்படும் சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்திரன் என்பவர் இறந்துவிட்டார் என்பதை, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹாதியா ஊடாக ஒப்புதல் வாக்கு மூலமாக பெற முயற்சிக்கப்பட்டதாக மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் அதனை பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர, தனக்கு அழுத்தங்கள் இருக்கவில்லை எனக் கூறி நிராகரித்தார்.
அத்துடன் சிவா என அறியப்படும் சிவலிங்கம் எனும் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரை அழைத்து, அவர் சி.ஐ.டி.யின் பேச்சைக் கேட்டதால் இன்று சுதந்திரமாக இருப்பதாகவும், அதனால் தாங்கள் சொல்வதைப் போல் செயற்படுமாறும் ஹாதியாவை பலவந்தப்படுத்தியதாக பரிந்துரைக்கப்பட்டது. எனினும் சாட்சியாளர் அதனை ஏற்க மறுத்தார்.
முன்னதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் முன்னெடுத்த மேலதிக சாட்சிப் பதிவின் போது தனது பிரிவு புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்பில் எந்த விசாரணையையும் செய்யவில்லை என அப்பிரிவில் கடமையாற்றிய சுமனதிஸ்ஸ எனும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.
எனினும் பிரதான விசாரணை அதிகாரி மஹிந்த ஜயசுந்தர சாட்சிப் பதிவின் ஆரம்பத்திலேயே, புலிகள் இயக்க குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்ததாக குறிப்பிட்டார். குறிப்பாக தான் கட்டுநாயக்க விமான நிலைய குண்டுத் தாக்குதல், சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்ததாக கூறினார்.
இதன்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹாதியா, நீதிவானிடம் இரகசிய வாக்கு மூலம் வழங்க தன்னிடம் விருப்பம் தெரிவித்ததாகவும், அவர் சிங்கள மொழியை அறிந்திருந்ததாகவும் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
ஹாதியாவுக்கு சிங்களம் தெரியும் என்பதை வெளிப்படுத்த அவர், ஹாதியா வசித்த கெக்குனுகொல்ல பகுதியியை சூழ சிங்களம் பேசுபவர்கள் இருப்பதை சாட்சியம் உதாரணமாக குறிப்பிட்டார்.
இதன்போது ஹாதியாவின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சாட்சியாளரான ஜயசுந்தர நீண்ட காலம் சி.ஐ.டி.யின் சேவையாற்றுவது, புலிகள் இயக்க உறுப்பினர்களை விசாரித்துள்ளமை, தமிழ் பேசும் மக்கள் அதிகம் வதியும் கொழும்பில் கடமை புரிவது ஆகிய விடயங்களை முன்னிறுத்தி, ஒப்புதல் வாக்கு மூலம் வழங்க ஹாதியா சிங்கள மொழியில் தன்னிடம் கூறியதாக கூறும் விடயத்தை தமிழில் தெரிவிக்குமாறு குறிப்பிட்டார்.
எனினும் பொலிஸ் கல்லூரியில் தமிழ் படித்த, தமிழ் பேசும் மக்கள் வதியும் பகுதியில் வசிக்கும், தமிழர்கள் தொடர்புபட்ட சம்பவங்களை விசாரித்த, அதிகாரிக்கே தமிழ் பேச முடியாமல் இருக்கும் நிலையில், 9 ஆம் தரம் வரை மட்டுமே கற்ற ஹாதியா சரளமாக சிங்களம் பேசுவார் என்ற சாட்சியாளரின் ஊகம் பிழையானது என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மன்றில் எடுத்துரைத்தார்.
அத்துடன் புலிகள் இயக்க சம்பவங்கள் குறித்து தான் விசாரித்த போதும் அதில் கைது செய்யப்பட்டவர்கள் சிங்களவர்கள் எனவும் சாட்சியாளர் கூறினார்.
அத்துடன் ஹாதியாவை நீதிவானிடம் அழைத்துச் செல்ல முன் அவருக்கு அவரது குழந்தை ருதைனாவை மையப்படுத்தி அழுத்தங்கள் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும், ஹாதியாவின் தந்தை அப்துல் காதரை கெக்குனுகொல்லவுக்கு சென்று விசாரணை செய்ததன் ஊடாக மேலதிக மிரட்டல் மற்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் பல கேள்விகள் ஊடாக சாட்சியாளரிடம் வினவப்பட்டது. எனினும் அவை அனைத்தையும் மறுத்த சாட்சியாளர், எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை என்றார்.
அத்துடன் விசாரணைகளின் போது, ஹாதியாவிடம், சி.ஐ.டி. சொல்வதை அப்படியே செய்தால், பிரபாகரனின் மனைவி சுவிட்ஸர்லாந்தில் சுதந்திரமாக இருப்பதைப் போல உங்களாலும் இருக்க முடியும் என சி.ஐ.டி.யினர் ஆசை காட்டியதாக ஹாதியாவின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சாட்சியாளரிடம் பரிந்துரைத்தார். எனினும் அதனை மறுத்த சாட்சியாளர், அப்படி ஒரு விடயத்தை தான் மன்றில் முதன் முறையாக கேள்விப்படுவதாக கூறினார்.
இந்த நிலையில் இவ்வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.- Vidivelli