திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்: இலங்கையின் பரீட்சை விதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன
அனைவருக்குமான நீதி திட்ட இலங்கைச் செயலணி அறிக்கை
எம்.ஐ.அப்துல் நஸார்
இலங்கையில் அண்மைக் காலத்தில் கட்டமைக்கப்பட்ட பக்கச்சார்பு மற்றும் இஸ்லாமோபோபியாவின் நிகழ்வுகள் தொடர்பில் அனைவருக்குமான நீதி கரிசனை கொண்டுள்ளது. பரீட்சையின் போது காதுகளை மூடாதிருக்க வேண்டும் என்ற கொள்கையின் காரணமாக அண்மையில், திருகோணமலை நகரிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை நிறுத்தி வைக்க பரீட்சை அதிகாரிகள் தீர்மானித்தனர். இக்கொள்கை, சமயக் கடப்பாடுகளைப் பின்பற்றி ஹிஜாப் அணிய விரும்பும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. இதன் காரணமாக, இக்கொள்கையானது முஸ்லிம் பெண்களை பரவலாகப் பாதிக்கிறது. இது இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான மத பாகுபாட்டு சூழலை ஏற்படுத்துகிறது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் பாரபட்சம் காட்டுகின்ற விதிகளை அமுல்படுத்துகின்றது, 2023 அக்டோபரில் இதேபோன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றது. 13 முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்ததன் காரணமாக அதிபர் நியமனப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் காதை மறைக்காதிருக்க உடன்பட்டபோதிலும் இவ்வாறு பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டன. பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் பெண்களின் கூற்றுப்படி, இத்தகைய விதிகள் அவர்களின் கல்வி முன்னேற்றத்தை சீர்குலைப்பதாகவும், பாகுபாடு மற்றும் சகிப்புத்தன்மையற்ற நிலை தொடர்பிலும் ஒரு பரந்த செய்தியை வெளிப்படுத்துகின்றன.
பல இன்னல்களைக் கடந்து உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு பல்கலைக்கழகக் கல்வி மறுக்கப்பட்டமை உள்ளிட்ட இந்த நடவடிக்கையானது நீண்டகால பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. ‘இலங்கையில் குறிப்பாக வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற பொது நிறுவனங்களில் ஹிஜாப் அணிபவர்கள் மீது சகிப்பின்மை அதிகரித்துள்ளது, மாணவிகளின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம்,’ என அனைவருக்குமான நீதி அமைப்பின் தலைவர் இமாம் அப்துல் மாலிக் முஜாஹித் தெரிவித்தார்.
இலங்கையில் இந்து தேசியவாத இயக்கங்களின் எழுச்சி அதிகளவில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்துள்ளது என்பது தொடர்பில் அனைவருக்குமான நீதி அமைப்பு கவலையடைகின்றது. உதாரணமாக, 2018 இல் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்ததற்கு எதிராக வன்முறைப் போராட்டங்கள் நடந்தன. ராவணா பலய போன்ற இந்து தேசியவாத அமைப்புகள் இந்தப் பதற்றங்களைச் சாதகமாக்கிக் கொண்டு, முஸ்லிம்களின் சனத்தொகைப் பெருக்கம் ஓர் அச்சுறுத்தல் எனவும் முஸ்லிம்கள் கலாசாரத் திணிப்புகளை மேற்கொள்வதாகவும் தவறான கதைகளைப் பரப்பி வருகின்றன.
அண்மைய ஆண்டுகளில், முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்கு வைத்து பாகுபாடான பல ஒழுங்குவிதிகளை இலங்கை இயற்றியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கொவிட் -19 தொற்றுநோய் பரவலின்போது, வைரஸால் இறந்த நபர்களை அடக்கம் செய்வதை அரசாங்கம் தடைசெய்தது மற்றும் அதற்கு பதிலாக தகனத்தை கட்டாயமாக்கியது, தகனம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்பதை நம்பிக்கையாகக் கொண்டுள்ள முஸ்லிம் குடும்பங்களிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. இது தவிர, முஸ்லிம்களுக்கு எதிரான பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அரசாங்க ஆதரவாளர்களுக்கு அதிகாரிகள் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாத நிலையில் பொய்ப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.
உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைபிடிப்பதன் மூலம் இந்த கட்டமைக்கப்பட்ட அநீதிகளை நிவர்த்தி செய்யுமாறு அனைவருக்கும் நீதிக்கான அமைப்பு இலங்கை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது. பாடசாலைக் கொள்கைகள் மதச் சுதந்திரங்களை மதிக்க வேண்டும் மற்றும் அனைத்து மாணவர்களும் பாகுபாடு அல்லது பழிவாங்கலுக்கு அஞ்சாமல் கல்வி சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.- Vidivelli