எப்.அய்னா
அஹ்னாப் ஜஸீம், உலக அளவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரால் அறியப்படும் ஒரு பெயர். இளம் கவிஞர், ஆசிரியரான இவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் அதாவது அத்தாக்குதல் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் அதனுடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டார். பின்னர் தன்னிடம் கற்ற மாணவர்களிடையே அடிப்படைவாதத்தை தூண்டி, பிற மதத்தவர்கள் மீது பகைமை உணர்வை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த குற்றச்சாட்டை சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்க முடியாமல் போயுள்ளதை அடுத்து அவர் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனாலும், அஹ்னாப் ஜஸீம் என்ற இந்த இளம் கவிஞரை, ஆசிரியரை இலங்கையின் பாதுகாப்புத் துறை அல்லது உளவுத் துறை துரத்திக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலைமை இலங்கையின் அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள அஹ்னாபின் தனி மனித சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை வெகுவாக பாதித்துள்ளது.
எந்த அளவுக்கு எனில், அஹ்னாபை தாண்டி அது அவரது குடும்பத்தாரையும் குறிவைத்துள்ளது.
அண்மையில் அஹ்னாப்பின் சகோதரர்களில் ஒருவருக்கு நடந்த திருமண வைபவத்தின் போது, இரவோடிரவாக வீடு புகுந்த பொலிஸார், மற்றொரு சகோதரரை பொய்யான குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையம் வரை அழைத்துச் சென்றுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது தேசிய பொலிஸ் ஆணைக் குழுவில் முறையிட்டுள்ளதாகவும் அஹ்னாப் ஜஸீமின் சட்டத்தரணிகளில் ஒருவரான சஞ்சய் வில்சன் ஜயசேகர தெரிவிக்கின்றார். இது அஹ்னாபுக்காக அவரது குடும்பத்தாரை துன்புறுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.
அஹ்னாப் ஜஸீம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுமார் 579 நாட்களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் பீ. 44230/20 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணை தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதனை மையப்படுத்தி சட்ட மா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டபோது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக்க மன்றில் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீமுக்காக சட்டத்தரணிகளான சஞ்சய் வில்சன் ஜயசேகர, ஹுஸ்னி ராஜிஹ் ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜராகியிருந்தனர்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி, அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. புத்தளம் – மதுரங்குளி பகுதியில் உள்ள எக்ஸலென்ஸி எனும் பெயரை உடைய பாடசாலை மாணவர்களுக்கு தீவிரவாத கொள்கைகளை ஊட்டி இன, மத, முரண்பாடுகள் மற்றும் பகை உணர்வினை தூண்டியதாக அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் கற்பித்த பாடசாலையின் அதிபர், மாணவர்கள் என 5 பிரதான சாட்சியங்கள் ஊடாகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை நிரூபிக்க முடியாமல் போனதால், குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 200 ஆவது அத்தியாயம் பிரகாரம், பிரதிவாதி தரப்பு நியாயங்களை கோராமலேயே அவரை விடுவித்து விடுதலை செய்வதாக கடந்த 2023 டிசம்பர் 12 ஆம் திகதி நீதிபதி அறிவித்தார்.
இதனைத் தொடந்து, அஹ்னாப் சார்பில் அநியாயமாக தான் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக நட்ட ஈடு கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது. அந்த விடயம் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் விசாரிக்கப்பட்ட நிலையில், உளவுத் துறையின் தொந்தரவுகள் அஹ்னாபை மீள இலக்கு வைக்க ஆரம்பித்தன. இதனால் அதிலிருந்து தப்பிக்க அஹ்னாப் நட்ட ஈட்டு விண்ணப்பத்தை மீளப் பெற்றுள்ளார்.
எனினும் அதன் பின்னரும் அஹ்னாபை உளவுத்துறை விடுவதாக இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில், வழக்கின் பின்னர் நீதிமன்றால் அஹ்னாபிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்ட அவரிடம் இருந்து கைப்பற்றிய புத்தகங்கள் உள்ளிட்டவற்றை எடுக்க அஹ்னாப் கொழும்பு வந்துள்ளார். அவ்வாறு வந்து மீள மன்னார் நோக்கி செல்லும் போது, ஜா –எல பகுதியில் வைத்து பஸ்ஸுக்குள் ஏறியுள்ள உளவுத்துறை என நம்பப்படும் குழுவினரால் தனக்கு அசெளகரியங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அஹ்னாப் கூறினார். அவர்கள் புத்தளத்தை நெருங்கிய போது, ஏதோ ஒன்றினை தனது பையில் இட்டு, தன்னை கைது செய்ய முயன்றதை தான் உணர்ந்ததாக அவர் கூறுகின்றார். இதனை ஒத்த சம்பவம் ஒன்று மீளவும் தனக்கு பஸ்ஸில் நடந்ததாக கூறும் அஹ்னாப், தன்னை மர்ம நபர்கள் பின் தொடர்வது குறித்து கடந்த பெப்ரவரி மாதமே சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தும் இதுவரை அந்த முறைப்பாடு தொடர்பில் திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறுகின்றார்.
உண்மையில், அஹ்னாப் ஜஸீமின் கைது தொடர்பில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, உயர் நீதிமன்றில் நிலுவையிலேயே உள்ளது. அவ்வாறு இருக்கையில், அவரது அடிப்படை உரிமைகளை மீறும் வண்ணம் தொடர்ச்சியாக பாதுகாப்புத் தரப்பினர் என நம்பப்படும் குழுவினர் நடந்துகொள்வது, ஈற்றில் அஹ்னாபின் உயிரைக் கூட காவு கொள்ளலாம். புத்தளம் மேல் நீதிமன்ற நட்ட ஈட்டு விண்ணப்பத்தை, இவ்வாறான பின் தொடர்வுகள், அழுத்தங்கள் ஊடாக அஹ்னாபை மீளப் பெறச் செய்த வெற்றியால், அடிப்படை உரிமை மீறல் மனுவையும் அதே பாணியில் மீளப் பெறச் செய்வதற்காக இவ்வாறான அசெளகரியங்களால் அவ்வழக்குடன் தொடர்புபட்ட தரப்புக்கள் ஏதேனும் செய்கின்றனவா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எனவே இவ்விடயம் உடனடியாக உயர்நீதிமன்றின் அவதானத்துக்கு கொண்டு செல்லப்படல் வேண்டும். அஹ்னாபின் சட்டத்தரணிகள் இடையீட்டு மனு ஒன்றினையேனும் தாக்கல் செய்து விடயத்தை உயர் நீதிமன்றுக்கு சொல்ல வேண்டும்.
நிரபராதி என விடுவிக்கப்பட்ட ஒருவருக்கு, அவரது சகஜமான வாழ்வை கொண்டு செல்ல முடியாமல் இவ்வாறு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்படுவது சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கையை இழக்கச் செய்யும். எனவே இவ்விடயம் மிக பாரதூரமனதாக் கருதி உடனடியாக தலையீடு செய்யப்பட வேண்டியதாகும்.- Vidivelli