ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க கட்சித் தலைமை தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக செயற்பட்டு வந்த பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் உட்பட கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் நீக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.
அவரது அண்மைய நடவடிக்கைகள் அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆராய்ந்த பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, அடுத்த பொதுத் தேர்தலில் அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பனவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லை என்றும் இதற்கு முன்னர் தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதோடு, நேற்று முன்தினம்(16) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போதும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் பிரதானி சுஜீவ சேனசிங்கவும் இதனை உறுதிப்படுத்தித் தெரிவித்திருந்தார்.
அவ்வாறே, தன்னை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து நீக்க வேண்டாம் என கூறி சரத் பொன்சேகா கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் ஊடாக ஐக்கிய மக்கள் சக்திக்கு இடைக்கால தடை விதிப்பையும் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகத்துக்கு எதிராக, சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவொன்றின் அடிப்படையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், வெற்றிடமாகும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் சிரேஷ்ட உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சி உயர்பீடம் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை ஸ்தாபித்ததன் உண்மையான நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் சமூகமயப்படுத்துவதற்கும், கட்சியின் இரண்டு முக்கிய கொள்கைகளான சமூக ஜனநாயக கொள்கை மற்றும் முற்போக்கு தேசியவாத கொள்கைகளை மக்கள் மயப்படுத்துவதற்கும், அரசியலில் நம்பிக்கையிழந்து அரசியலை விட்டு தூரமாகி இருக்கும் அனைத்தின இளையோர் சமூகம் அடங்கலாக புதிய வாக்காளர்களை கட்சியின் கொள்கைகளுக்கு ஆகர்ஷிக்கவும், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் போன்றவர்கள் சமகால அரசியல் பின்னணியில் மிகவும் பொருத்தமானவர் எனக் கருதியே அவருக்கு இந்நியமனத்தை வழங்க கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
அவ்வாறே, இலங்கையின் அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இடதுசாரி தரப்பின் முக்கிய புள்ளிகளும் சமூக ஜனநாயக கொள்கையின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்த்து வரும் இவ்வேளையில், ஐக்கிய மக்கள் சக்தியை அதன் மாறாத கொள்கைகளோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில் சரியாக ஸ்தானப்படுத்தும் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுத்து வரும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மிகவும் பொருத்தமானவர் என்பதனாலேயே சஜித் பிரேமதாச இத்தீர்மானத்துக்கு வந்துள்ளார்.
அவ்வாறே, அவரை மீண்டும் களுத்தறை மாவட்டத்தின் தலைவராகவும், களுத்துறை மாவட்ட தேர்தல் அரசியலுக்கு வருமாறு கட்சி விடுத்த அழைப்பை இம்தியாஸ் நிராகரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கத்தைத் தொடர்ந்து கட்சியின் முதலவாது பதவி நிலைகளுக்கான நியமணத்தின் போது தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்காரையே சஜித் பிரேமதாச நியமித்திருந்ததோடு, கட்சியின் அப்போதைய மற்றும் எதிர்கால நலன் கருதி அப்போதைய தவிசாளர் பதவியையும் பொன்சேகா அவர்களுக்கு விட்டுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்து கொண்ட டலஸ் அலகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவையினரும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை களுத்துறை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு பிரவேசிக்குமாறு அழைப்பும் விடுத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் பிரகாரம், பிரதான பதவி நிலைகளுக்கு கட்சியின் வருடாந்த அல்லது கட்சியின் விசேட சம்மேளனம் ஒன்றின் மூலமாகவே நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனால், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த சம்மேளனத்தின் போது, தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்டு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.- Vidivelli