ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று கிடைத்துள்ளது. இம்மாத இறுதியில் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுமார் 10 பில்லியன் ரூபா செலவில் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் இம்முறை 1 கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க வேண்டும் என சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. இது தொடர்பில் சட்ட ரீதியான உத்தரவைப் பெற தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை ரணில், சஜித், அநுர எனும் முத்தரப்பு போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போது நடத்தப்பட்டு வரும் கருத்துக் கணிப்புகளில் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. எனினும் தனது செல்வாக்கை மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார். மின் கட்டணம் குறைப்பு, காணி உறுதி வழங்கல் என பல்வேறு அறிவிப்புகளும் திட்டங்களும் தினமும் வெளிவந்தமுள்ளன. பொது ஜன பெரமுன தரப்பினரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
சிங்கள மக்களின் வாக்குகள் மேற்படி மூன்று பிரதான வேட்பாளர்களும் பிரிந்து செல்லும் நிலையில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை இப்போதைக்குக் கூற முடியாதுள்ளது. தமிழ் பொது வேட்பாளர் என்ற கதையாடல் தொடர்ந்து வரும் நிலையில் அது எந்தளவு தூரம் வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில்தான் முஸ்லிம் தரப்பு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது. பிரதான முஸ்லிம் கட்சிகள் சஜித் அணியில் உள்ள போதிலும் அக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துச் செயற்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். தத்தமது மாவட்டங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கென பல மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது வழக்கம் போல சலுகைகளுக்கும் சுயநலன்களுக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் அடிபணிய ஆரம்பித்து விட்டார்கள் என்பதையே காண்பிக்கிறது.
முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் ஜனாஸா எரிப்பு ஆகிய தலையாய பிரச்சினைகள் உட்பட முஸ்லிம் சமூகத்திற்கு நீதி கிடைக்க வேண்டிய பல்வேறு விடயங்கள் நம்முன் உள்ளன. எனினும் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்த பொதுவான கோரிக்கைகளை எல்லா வேட்பாளர்களிடமும் முன்வைத்து அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்து ஆதரவளிக்கும் சாத்தியங்களைக் காண முடியவில்லை. முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் தமது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் மற்றும் கட்சியின் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தியே தீர்மானங்களை எடுக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிவிக்க முன்னர், முஸ்லிம் சிவில் சமூக நிறுவனங்கள் முன்வந்து இக் கட்சிகளுக்கு அழுத்தங்களை வழங்க முன்வர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன்களுக்கு உத்தரவாதமளிக்கின்ற, கடந்த கால இழப்புகளுக்கு பரிகாரம் வழங்கக் கூடிய வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என பரிந்துரைக்க வேண்டும். இன்றேல் முஸ்லிம் கட்சிகள் இம்முறையும் சமூகத்தின் வாக்குகளை அடகு வைத்து தமது நலன்களை அடைந்து கொள்கின்ற துரதிஷ்ட நிலையே ஏற்படும். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கலாகாது.– Vidivelli