கலாபூஷணம் ஏ.ஸீ.ஏ.எம். புஹாரி (கபூரி)
கொவிட்19 நோயினால் மரணித்த உடல்களை அவரவர் சமயக் கிரியைகளின்படி இறுதிக் கிரியைகளைச் செய்யவிடாது மெத்தப்படித்த மேதாவிகள் சிலர் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாக அவர்களின் பிரேதங்களையும் எரிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று எரித்ததனால் இவர்கள் என்ன இலாபத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
சர்வதேசத்திலுள்ள சகல மக்களும் தத்தமது விருப்பப்படி இறுதிக் கிரியைகளை நிறைவேற்றலாம் என்று அனுமதியளித்த போதும் இலங்கையில் உள்ள ஒரு சில வக்கிரபுத்தியும், பொறாமை உணர்வும் கொண்டவர்கள் மாத்திரம் ஆட்சியாளர்களைக்கூட மௌனிகளாக ஆக்கி முஸ்லிம் பிரேதங்களை அடக்கவிடாது அடம்பிடித்து புதுப்புது வகையான கருத்துக்களைக் கண்டுபிடித்து தங்களின் தாகத்தைத் தீர்த்துக் கொண்டனர் என்ற உண்மைகள் இப்போது கசிந்து கொண்டிருக்கின்றன. அன்றைய ஜனாதிபதி கோட்டபாய அவர்களே இந்த உண்மையை ஒப்புக்கொண்டு புத்தகம் எழுதியுள்ளார்.
இந்நிகழ்வு நடந்து பல வருடங்களாகி விட்டன. இப்போது இவை தூசு தட்டப்படுவதன் நோக்கம் என்ன?
அமைச்சர் ஜீவன் தொண்டமான் அரசு மன்னிப்புக்கேட்க வேண்டுமென்றும் அமைச்சரவைக்கு பத்திரமொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளேன் என்றும் கூறுகிறார்.
இந்நிகழ்வு நடைபெற்ற காலத்தில் தன்னால் எதையும் செய்ய முடியாதிருந்த ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாகி இந்தக் கீழ்த்தரமான செயலுக்காக காத்தான்குடியில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பின்போதும் பாராளுமன்றத்திலும் மன்னிப்புக் கேட்கிறார். இவ்விடயத்தில் எந்தத்தவறும் இழைக்காத இன்றைய ஜனாதிபதி மன்னிப்புக் கேட்க வேண்டியதன் நியாயம் என்ன? சிந்திப்போமா?
ஜனாதிபதியின் மன்னிப்பு உரைக்குப்பின் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாஸாக்களை எரியூட்டியது மிகவும் பிழையான செயல் என்று எடுத்துரைத்தபின் அமைச்சர் அலி ஸப்ரி அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களும் காராசாரமாக உரையாற்றினர். ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருமே இது சம்மந்தமாக உரையாற்றிய தகவல்கள் எமக்கு ஊடகங்கள் வாயிலாகக் கிடைக்கவில்லை.
மன்னிப்புக் கேட்டுவிட்டால் மட்டும் போதுமா? இச்செயலைச் செய்தவர்கள், செய்யத் தூண்டியவர்கள் இன்னும் மௌனிகளாக இருக்கிறார்களே! ஏன்? இவர்களை இப்படியே விட்டுவிட்டு முஸ்லிம் சமூகம் மௌனம் சாதிக்கலாமா? குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டால்தான் இனிவரும் காலங்களிலாவது நமது சமூகத்தின் மீது அடக்குமுறை செலுத்த முனைவோருக்கு இது ஒரு பாடமாக அமையுமல்லவா?
சமூக விரோதி ஸஹ்ரானின் தவறான சிந்தனைகளினால் இன்றுவரை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களிலிருந்து மீள முடியாது தவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடக்கவிருக்கின்றது என்ற புலனாய்வுத்துறையின் அறிக்கையைக்கூட அலட்சியம் செய்து எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதிருந்த நாட்டின் பாதுகாப்புக்கே பொறுப்பாகவிருந்த அன்றைய ஜனாதிபதி மைத்திரியை நீதிமன்றம் விசாரித்து கோடிக்கணக்கான ரூபாய்களை நஷ்டஈடாகச் செலுத்த வேண்டுமென்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் ஏன் முன்மாதிரியாகக் கொள்ள முடியாது? இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகத் தலைமைகள் ஏன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அசமந்தப் போக்கில் இருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.
இவ்விடயத்தில் அரசியல் கட்சிகளின் தலைமைகள் முன்னுக்கு வருவதில் சில விமர்சனங்கள் ஏற்படலாம். அதனால்தான் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் ஏக பிரதிநிதிகளான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இவ்விடயத்தைக் கையிலெடுத்து ஏனைய நிறுவனங்களினதும் சட்ட வல்லுனர்களினதும் ஆலோசனைகளைப் பெற்று உயர் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தால் என்ன? என்ற ஒரு கருத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கான ஒரு பகிரங்க மடலை எழுதினேன். அது விடிவெள்ளி வாராந்த இதழில் பிரசுரமாகி இருந்தது. இவ்விடயம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பரிசீலனையில் உள்ளதாக எனக்கு வாய் மூலமான ஒரு பதில் கிடைத்தது ஆறுதலாக இருந்தது.
இவ்விடயத்தில் ஏனைய சமூக சேவை நிறுவனங்கள் கரிசனை காட்டாமல் இருப்பதன் காரணத்தை அறிய முடியாதுள்ளது. இது தேவையில்லாத ஒரு விடயம் என்று அவர்கள் கருதுகிறார்களா? அல்லது பெரும்பான்மைச் சமூகத்தில் உள்ள தங்களது முக்கியஸ்தர்களான கூட்டாளிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டியேற்படும் என்று எண்ணுகிறார்களா? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒவ்வொரு ஊரிலுமுள்ள கிளைகள் இது சம்மந்தமாக ஆராய்ந்து தலைமையகத்திற்கு தங்களது ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம். அவர்களில் எத்தனை பேர் இந்த விடயத்தை அறிந்து வைத்திருக்கார்களோ?
இவ்வாறே ஒவ்வொரு ஊரிலுமுள்ள பள்ளிவாசல் பரிபாலன சபைகள், சம்மேளனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் இவ்விடயத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்ததுண்டா?
அனைத்துக்கும் மேலாக ஷூறா கவுன்ஸில், இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் இயக்கம், அகில இலங்கை கதீப்மார்கள் சம்மேளனம், முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் சட்டத்தரணிகள், பல்கலைக் கழகங்கள் சார்ந்த புத்தி ஜீவிகள், ஆசிரிய சங்கங்கள் என்பவர்கள் ஏன் இன்னும் தங்களது உணர்வுகளை வெளிக்கொணரவில்லை.
இவ்வாறான நிறுவனங்கள் ஏன் இவ்விடயத்தில் கரிசனை காட்டவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. சமூக சேவைக்காக என்றே சங்கங்களையும், இயக்கங்களையும் வைத்துக் கொண்டிருப்பவர்கள் இவ்விடயம் சம்மந்தமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் அவர்களுக்கு உற்சாகத்தையும், தைரியத்தையும் கொடுக்கலாமல்லவா? ஏன் அரசியல் இயக்கங்கள்கூட தங்களது ஒத்துழைப்பை வழங்கி தட்டிக் கொடுக்கலாமல்லவா?- Vidivelli