ஐ.சுபைதர்
இலங்கையில் பல்வேறு பெயர்களில் முஸ்லிம் கட்சிகள் பல செயற்பட்டு வந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் மாத்திரமே கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பெற்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்தும், புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடனும், ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் இணைந்து போட்டியிட்டது.
இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனமும், அம்பாறை மாவட்டத்தில் 2 ஆசனங்களும், திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா 1 ஆசனமும் என்ற அடிப்படையில் மொத்தம் 5 ஆசனங்கள் இக்கட்சிக்கு கிடைத்தது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்தும் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுடனும், ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் இணைந்து போட்டியிட்டது.
இந்த வகையில் வன்னி, அநுராதபுரம், அம்பாறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா 1 ஆசனம் என்ற அடிப்படையில் 4 ஆசனங்கள் இக்கட்சிக்கு கிடைத்தது.
தேசிய காங்கிரசுக்கு அம்பாறை மாவட்டத்தில் 1 ஆசனம் கிடைத்தது. இதன்படி மொத்தம் 225 பாராளுமன்ற ஆசனங்களுள் 10 ஆசனங்கள் முஸ்லிம் கட்சிகளுக்கு கிடைத்தன.
இந்த 10 ஆசனங்களுள் தேசிய காங்கிரஸ் மட்டும் ஆளுங்கட்சிக்கான தனது ஆதரவு நிலைப்பாட்டை தேர்தல் முடிந்த கையோடு பகிரங்கமாக வெளிப்படுத்தியது. முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் எதிர்க்கட்சியில் இணைந்து செயற்பட்டன.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமைத் தவிர பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமத், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சியோடு இணைந்து வாக்களித்தனர்.
அதேபோல அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனைத் தவிர பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் றஹ்மான், அலிசப்ரி றஹீம், எஸ்.எம்.எம்.முஸர்ரப் ஆகியோர் ஆளுங்கட்சியோடு இணைந்து செயற்படுகின்றனர்.
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு நிதி ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டது. இந்த நிதியை எதிர்க்கட்சிப் பக்கமிருந்து செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாத் பதியுதீன், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம்ன், அலி சாஹிர் மெளலானா போன்றோர் பெற்றிருக்கின்றனர்.
இந்நிலையில் பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீனைப்போல தமது பிரதிநிதிகள் இருப்பதாக வாக்காளர்களிடமிருந்து குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.
அடுத்த ஒரு பொதுத் தேர்தலில் இந்த 10 ஆசனங்களும் முஸ்லிம் கட்சிகளுக்கு மீளக் கிடைக்குமா என்ற கேள்வி தற்போது உள்ளது. காரணம் கடந்த காலங்களில் அரசோடு இணைந்து 20 ஆம் திருத்தத்திற்கு வாக்களித்தமை, ஜனாஸாக்கள் பலவந்தமாக எரித்தபோதும் அரசுக்கு மறைமுக ஆதரவு வழங்கியமை, போன்ற செயற்பாடுகளினால் முஸ்லிம் கட்சிகள் மீது முஸ்லிம் சமுகம் அடைந்துள்ள அதிருப்தி நிலையாகும்.
இது ஒருபுறமிருக்க முஸ்லிம் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதா அல்லது பெரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்ற நிலை இன்னொரு புறம். சேர்ந்து போட்டியிடுவதாயின் எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது என்ற நிலை மற்றொருபுறம்.
தனித்துப் போட்டியிடுவதாயின் முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 ஆசனமும், அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனமும் பெறக் கூடிய சூழ்நிலையே உள்ளது. (அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் வாக்குகள் உள்ளன. கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் விருப்பு வாக்கு அதிகம் பெற்றமையினாலேயே 2 ஆசனங்கள் இக்கட்சிக்கு கிடைத்தது.)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமாயின் வன்னி மாவட்டத்தில் ஒரு ஆசனம் பெறக் கூடிய சூழ்நிலை உள்ளது. தேசிய காங்கிரசுக்கு கடந்த போதுத் தேர்தல் போன்று வாக்குகள் அளிக்கப்படுமாயின் அது அம்பாறை மாவட்டத்தில் தனது 1 ஆசனத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது.
இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் உள்ளமை தெரிகின்றது. கருத்துக் கணிப்புகளின்படி முஸ்லிம் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிப்பக்கம் கணிசமான அளவு திரும்பவில்லை என்ற நிலை உள்ளது. எனவே எந்தக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால் ஆசனங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற ஒரு நிர்ப்பந்த நிலை முஸ்லிம் கட்சிகளுக்கு உள்ளது.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டால் மாத்திரமே கண்டி மாவட்டத்தில் அதன் தலைவர் வெற்றிபெறக் கூடிய சூழ்நிலை உள்ளது.
இப்படியான ஒரு சூழ்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான முஸ்லிம் கட்சிகளின் கூட்டு எப்படி அமையப்போகின்றது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டியுள்ளது.- Vidivelli