எம்.பி.எம்.பைறூஸ்
வருடாந்தம் மில்லியன் கணக்கான மக்களை உலகெங்கிலுமிருந்து ஒன்றுதிரட்டி புனித ஹஜ் கடமையை வெற்றிகரமாக ஒழுங்கமைப்பதில் சவூதி அரேபியா காட்டும் அர்ப்பணிப்பு மெச்சத்தக்கதாகும். சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்த உயரிய பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையும் மிகவும் வெற்றிகரமான முறையில் நிறைவுக்கு வந்துள்ளது. சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி இவ்வருடம் 1,833,164 பேர் உலகெங்குமிருந்து ஹஜ் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 1,611,310 பேர் வெளிநாட்டவர்களாவர். 221,854 பேர் சவூதியிலிருந்து யாத்திரையில் பங்கேற்றவர்களாவர். மொத்த யாத்திரிகர்களில் 52.27 வீதமானோர் ஆண்களும் 47.73 வீதமானோர் பெண்களுமாவர். இவர்களில் 1,546,345 பேர் விமானம் மூலமாகவும் 60,251 பேர் தரை வழியாகவும் 4,714 பேர் கடல்மார்க்கமாகவும் சவூதியை வந்தடைந்துள்ளனர்.
வெளிநாட்டு யாத்திரிகர்களில் 63.3 வீதமானோர் ஆசிய நாடுகளைச் (அரபு நாடுகள் உள்ளடங்கவில்லை) சேர்ந்தவர்கள். 22.3 வீதமானோர் அரபு நாடுகளையும் 11.3 வீதமானோர் ஆபிரிக்க நாடுகளையும் (அரபு நாடுகள் உள்ளடங்கவில்லை) 3.2 வீதமானோர் ஐரோப்பா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களுக்கான சேவைகளை வழங்குவதில் சவூதி அரசாங்கம் இம்முறை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியிருந்தது. இதற்கமைய Nusuk Care சேவைஊடாக சேவைகளைப் பெற்றுக் கொண்ட யாத்திரிகர்களில் 87 வீதமானோர் இம்முறை ஹஜ் யாத்திரை மிகவும் திருப்தியாக அமைந்திருந்ததாக அபிப்பிராயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது இவ்வருட ஹஜ் யாத்திரை வெற்றிகரமாக அமைந்துள்ளது என்பதற்கான ஆதாரமாகும்.
ஹஜ் யாத்திரையின் போது யாத்திரிகர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க வேண்டும் என்பதற்காக சவூதி அரேபியா வருடாந்தம் பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்து வருகிறது. இரு புனித தலங்களின் அபிவிருத்திக்கு மாத்திரமன்றி அரபா, முஸ்தலிபா மற்றும் மினா ஆகிய தலங்களிலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக பில்லியன் கணக்கான ரியால்கள் செலவிடப்படுகின்றன. இந்த முதலீடுகளே வருடாந்தம் ஹஜ் யாத்திரையின் முன்னேற்றத்துக்கும் யாத்திரிகர்களின் திருப்திகரமாக ஆன்மிகப் பயணத்திற்கும் பெரும் பங்குவகிக்கின்றன.
அண்மைக்காலமாக ஹஜ் பருவ காலத்தில் சவூதியின் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் பாரிய குளிரூட்டிகள், காற்றோட்ட மின்விசிறிகள், பனித்துளி விசிறிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக யாத்திரிகர்கள் இம்முறை கடும் வெயிலுக்கு மத்தியிலும் செளகரியமான முறையில் யாத்திரையை முன்னெடுக்க முடியுமாகவிருந்தது.
இதற்கு மேலதிகமாக யாத்திரிகர்கள் பயணிக்கும் வழிநெடுகிலும் குளிரூட்டப்பட்ட நீர் மற்றும் குடிபானங்களை இலவசமாக விநியோகிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாகும். தொண்டர்கள், பொலிசார், இராணுவத்தினர் என பல்லாயிரக் கணக்கானோர் யாத்திரிகர்களை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் பலராலும் பாராட்டப்படுகின்றன.
அதுமாத்திரமன்றி சுகாதார வசதிகளும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சகல யாத்திரிகர்களுக்கும் முற்றிலும் இலவசமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதய அறுவைச் சிகிச்சைகள், டயலைசிஸ் அவசர சிகிச்சைகள் என்பனவும் இவற்றில் அடங்கும். 1.3 மில்லியன் தடுப்பு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பூசிகள் வழங்குதல் என்பனவும் அடங்கும். ஹஜ் யாத்திரை காலப் பகுதியில் சுகாதார தொழிலாளர்கள் 465,000 அவசர சுகாதார உதவிகளை வழங்கியுள்ளனர். இவ்வாறு சேவை பெற்றவர்களில் 141,000 பேர் இம்முறை உரிய அனுமதியின்றி யாத்திரைக்கு வந்தவர்களாவர். இவ்வாறு துரிதமான சுகாதார சேவையை வழங்கியதன் மூலம் வெப்பத்தின் காரணமாக பரவக் கூடிய தொற்று நோய்கள் யாத்திரிகர்களைப் பாதிக்காமல் தடுக்க முடிந்தமை குறிப்பிடத்தக்க அடைவு என சவூதி அரேபிய சுகாதார அமைச்சர் பஹத் அல் ஜலாஜெல் தெரிவித்துள்ளார்.
துரதிஷ்டவசமாக இவ்வருடம் சுமார் 1300 யாத்திரிகர்கள் மரணத்தைத் தழுவ வேண்டியேற்பட்டமையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். இவ்வாறு மரணித்தவர்களுள் அதிகமானோர் நாட்பட்ட நோயாளர்களும் வயோதிபர்களுமேயாவர். அதிலும் குறிப்பாக மரணித்தவர்களில் 83 வீதமானோர் ஹஜ் விசா அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் ஹஜ் யாத்திரைக்காக அழைத்து வரப்பட்டவர்களாவர்.
சட்டவிரோதமாக வந்ததன் காரணமாக உரிய தங்குமிடங்களையோ வெப்பத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வசதிகளையோ இவர்களால் அணுக முடியாது போனமையே மரணத்திற்காக பிரதான காரணம் எனக் கூறப்படுகிறது. இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியது திருட்டு வழிகளில் யாத்திரிகர்களை அழைத்து வந்த ஹஜ் முகவர்களோயாவர். அதிலும் எகிப்தைச் சேர்ந்த முகவர்களே இந்த மோசடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.
இம்முறை ஹஜ்ஜின்போது மரணித்த 650 எகிப்தியர்களில் 638 பேர் பதிவு செய்யப்படாத சட்டவிரோத யாத்திரிகர்கள் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். எகிப்து அரசாங்கம் இந்த முகவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுவரை 16 முகவர் நிறுவனங்களை எகிப்து அரசாங்கம் தடை செய்துள்ளது.
ஹஜ் யாத்திரையின் போது எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் உரிய போக்குவரத்து வசதிகளை வழங்குவதாகும். இம்முறை யாத்திரிகர்களுக்கு சேவை வழங்குதற்காக 27000 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. 3500 பஸ்கள் யாத்திரிகர்களை மக்கா ஹரம் ஷரீபிலிருந்து மாத்திரம் ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபட்டன.
யாத்திரிகர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்துவதிலும் சவூதி பாரிய முதலீடுகளைச் செய்து வருகிறது. 2030 ஆம் ஆண்டளவில் 150 மில்லியன் விருந்தினர்களுக்கான தங்குமிடங்களை உருவாக்கும் நோக்கில் புதிய ஹோட்டல் அறைகளை உருவாக்குவதற்கான முதலீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் இரு புனித தலங்களைத் தாங்கி நிற்கும் சவூதி அரேபியா உலக முஸ்லிம்களின் ஐந்தாவது கடமையாகிய ஹஜ் யாத்திரையை பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிர்வகிப்பதற்கு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும். உலக முடிவு வரை தொடரும் இந்தப் பணி தொடர்ந்தும் வெற்றியளிக்க பிரார்த்திக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.- Vidivelli