எஸ்.என்.எம்.சுஹைல்
“ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் எல்லோரும் சிங்களவர்களுடன் சேர்ந்து, இலங்கையர் என உணரும் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் முறையில், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும்” என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவந்த பழம்பெரும் தமிழ் அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வாழ்க்கைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டார்.
இராஜவரோதயம் சம்பந்தன் 1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி திருகோணமலையில் பிறந்தார். அவரது தந்தை தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார் இரா.சம்பந்தன். 1983 கலவரத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு நீதி வேண்டி தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் சபை அமர்வை புறக்கணித்தமையால் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த அவர் அடுத்து 1989 ஆம் தேர்தலில் தோல்வி கண்டார்.
2001 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதன் தலைமை பொறுப்பையும் ஏற்று வழிநடாத்திய அவர் அப்போது முதல் இறுதியாக நடந்த பொதுத் தேர்தல் வரை அனைத்து பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று தொடர்ச்சியாக 23 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின்போது, பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியதால் அடுத்த பெரிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி சென்றது. இதனையடுத்து இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவானார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இரண்டு தடவைகள் தமிழர்கள் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகியுள்ளனர். 1977 இல் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். அப்போது அவர் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினராக சம்பந்தன் இருந்தார். பின்னர் நல்லாட்சி அரசாங்க காலத்தில் சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைமை பதவியை வகித்தது இரண்டாம் சந்தர்ப்பமாகும்.
இலங்கை வரலாற்றில் தமிழர்களின் மிக மோசமான கால கட்டங்களாக கருதப்படும் 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான ஈழப்போர் இடம்பெற்ற இக்கட்டான காலங்களில் ஓர் அரசியல்வாதியாக தன்னை தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்தவருள் இரா. சம்பந்தன் பிரதான நபராக கருதப்படுகின்றார்.
ஈழப்போருக்கு முந்தைய அரசியல் பிரவேசம், ஜூலை கலவரம் உட்பட 80 களில் இடம்பெற்ற படுமோசமான நிலைமைகள், 2001 க்கு பின்னரான சமாதான பேச்சுவார்த்தைக் காலம், 2006 க்கு பின்னரான இறுதி யுத்த காலம், யுத்த முடிவுக்கு பின்னரான 14 வருடங்கள் போன்றவற்றில் இரா. சம்பந்தனின் அரசியல் வகிபாகம் இலங்கையன் என்ற அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையாது.
அவரது தெளிவான சிந்தனை, நிதானமான போக்கு, அனைத்து தரப்பினரையும் புரிந்துகொண்டு செயற்படல், புத்திசாலித்தனமாக அரசியல் காய்நகர்த்தலை முன்னெடுத்தல், சிறுபான்மை முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்பன மெச்சக் கூடியதாக இருந்தது.
தமிழர் பிரச்சினையை மிகவும் நிதானமாக கையாண்ட அவர், அவற்றை சர்வதேசம்வரை கொண்டு சென்று இறுதிவரை சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதில் விடாப்பிடியாக நின்றதை காணக்கூடியதாக இருந்தது.
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு முஸ்லிம் சமூகம் அவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு பிரதான காரணமாக இருந்தது. அத்துடன், தமிழர் அரசியல் தரப்பில் அனுபவமும் நிதானப் போக்கும் அவர் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்திருந்தது.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டிலும் அவர் இருந்திருக்கிறார். அத்தோடு, இலங்கையில் தமிழ் மொழியை பேசும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே அதிகாரப் பகிர்வு உட்பட அனைத்து உரிமைகளையும் பெறமுடியும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
அதிகாரப் பகிர்வை வென்றெடுப்பதற்கு தமிழர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் முஸ்லிம்கள் மத்தியிலும் இருக்க வேண்டும். புதிய அரசியல் யாப்பின் மூலம் கிடைக்கும் அதிகாரப் பகிர்வில் வடக்கு- கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு எனவும் அவர் கூறிவந்தார்.
தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்பதனால் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது அது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார். மேலும் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
‘ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் எல்லோரும் சிங்களவர்களுடன் சேர்ந்து, இலங்கையர் என உணரும் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் முறையில்,தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமை முயற்சியை, இலங்கை தமிழரசுக்கட்சி, ஒருபோதும் குழப்பாது. நாங்களும் கலந்து பேசத்தான் வேண்டும். கலந்து பங்களித்து ஒற்றுமையை மேலும் பலப்படுத்த வேண்டும்” என்ற நிலைப்பாட்டிலேயே இரா. சம்பந்தன் இருந்தார்.
இலங்கையர் என்ற உணர்வுடன் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாகவும் உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டுவந்த இரா. சம்பந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 30 ஆம் திகதி இரவு கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் காலமானார்.
அண்மைக் காலமாக வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தமையால் தீவிர அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருந்தாலும் கட்சியை உரிய முறையில் வழிநடத்தி தமிழர்களின் உரிமைகள் விடயத்திலும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் கரிசனையுடன் செயற்பட்டு வந்தார். அவரின், இழப்பானது தமிழ் மக்களுக்கு எவ்வாறு ஒரு பேரிழப்பாக அமைந்திருக்கிறதோ, அதேபோன்று வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களுக்கும் பெரும் சோக செய்தியாகவே அமைந்திருந்தது.
ஏனெனில், தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமை விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வந்த சம்பந்தன், சிறு முரண்பாடுகளும் விரிசல்களும் ஏற்படும்போது மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு பேரிடர்கள் ஏற்படுவதை தடுப்பதிலும் கவனமாக இருந்துள்ளார்.
எனவே, இனிவரும் காலங்களில் தமிழர்களின் அரசியல் போக்கு எவ்வாறு அமையும், அது முஸ்லிம் தரப்புக்கு எந்தவகையான தாக்கத்தை செலுத்தும் என்றெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு சம்பந்தன் ஐயாவின் மரணம் ஒரு அரசியல் வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது எனலாம்.-Vidivelli