திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி உயர்தர பெறுபேறு இடைநிறுத்தம்
தொடரும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் வெளிப்பாடு
ஐ.சுபைதர்
திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவிகளது க.பொ.த (உ.த) பெறுபேறு இடைநிறுத்தமானது திருகோணமலையில் நிலவிவரும் முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளின் வெளிப்பாடாகும்.
திருகோணமலை நகரம் முஸ்லிம்களும் பூர்வீகமாக வாழ்ந்து வரும் நகரமாகும். இந்த மக்கள் ஏனைய சமுகத்தினருக்கு எவ்வித இடையூறுமின்றி சமாதானமாக வாழ்ந்து வருகின்றமை வரலாற்று உண்மையாகும்.
இந்நிலையில் சிலரால் இந்நகரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான விரோதப்போக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை முஸ்லிம் சமூக ஆர்வலர்களால் அவதானிக்கப்பட்டு வருகின்றது. அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்று தான் திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவிகளது உயர்தரப் பெறுபேறு இடைநிறுத்தமாகும்.
பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை காட்டாது பரீட்சை எழுதினார்கள் என்பது தான் இந்த மாணவிகளது பெறுபேறு இடைநிறுத்தத்திற்கு சொல்லப்படும் காரணமாகும்.
பரீட்சார்த்தி ஒருவர் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக தமது காதுகளைக் காட்ட வேண்டும் என்பது பரீட்சை விதிகளுள் ஒன்றாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஒவ்வொரு பரீட்சை மண்டத்திற்கும் மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர், நோக்குனர்கள் எனப்பலர் நியமிக்கப்படுகின்றனர். பரீட்சார்த்திகளது ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது இவர்களது பணியாகும். எவரேனும் ஒரு பரீட்சார்த்தி பரீட்சை விதிகளுக்கேற்ப தனது ஆளடையாளத்தை வெளிப்படுத்த தவறுவாராயின் அவர் பரீட்சை எழுத அனுமதிக்கப்படக் கூடாது என்பது தான் பரீட்சை விதி.
எனினும் திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவிகள் எல்லாப் பாடங்களும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் எழுத பரீட்சைக் கடமை செய்தோர் அனுமதித்துள்ளனர். இவ்வாறு செய்த பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பரீட்சைத் திணைக்களத்திற்கு பிழையான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதுவே பெறுபேறு இடைநிறுத்தத்திற்கு காரணமாகும்.
உண்மையில் பரீட்சை மேற்பார்வையாளர் பரீட்சை மண்டபத்தில் சீர் செய்திருக்க வேண்டிய விடயம் இது. ஆளடையாளத்தை காட்ட பரீட்சார்த்திகள் மறுத்திருப்பின் அவர்களை பரீட்சை எழுத அனுமதித்திருக்கக் கூடாது.
இந்நிலையில் பரீட்சை மேற்பார்வையாளரின் இந்த விடயம் தொடர்பான பிழையான அறிக்கை முஸ்லிம் விரோதப்போக்கின் ஒரு செயற்பாடு என்பது சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுகின்றது. திருகோணமலை ஸாஹிராக் கல்லூரியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு இது.
திருகோணமலை நகரில் இது போன்ற முஸ்லிம் விரோதச் செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. எனினும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுபோன்ற விடயங்களை அவதானித்து தேவையான முன்நடவடிக்கைகள் எடுக்கத் தவறுகின்றனர். சம்பவம் நடந்த பின் பேசுவோராக அவர்கள் மாறியுள்ளனர்.
திருகோணமலை சண்முகா மகளிர் கல்லூரி அபாயா பிரச்சினை வேண்டுமென்று முஸ்லிம்களுக்கெதிராக ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். நீதிமன்றம் சென்று இதற்கான தீர்வு பெற வேண்டிய நிர்ப்பந்தம் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்பட்டது.
திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றியவரை அவசரமாக இடமாற்ற வேண்டிய தேவை ஏற்பட்ட போது இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த திருமதி இசட்.எம்.எம்.நளீம் பதில் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப் பட்டார். இவர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக இவரது நியமனத்திற்கெதிராக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு இவரது நியமனம் இரத்துச் செய்யப்பட்டது.
அதேபோல இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த பெண் ஒருவர் முன்னர் திருகோணமலை நகரசபை செயலாளராகச் செயற்பட்டு வந்தார். முஸ்லிம் ஒருவர் திருகோணமலை நகரசபை செயலாளராக இருக்கக் கூடாது என்ற கோசம் எழுப்பப்பட்டு அவரும் இடமாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவங்களை அவதானிக்கின்ற போது திருகோணமலை நகரில் முஸ்லிம் விரோதப்போக்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை உறுதிப்படுத்த முடிகின்றது. இதனால் முஸ்லிம் சமூகம் விழித்தெழ வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது.
தமிழ்ச் சமுக ஆர்வலர்கள் இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு இனரீதியான இந்த முஸ்லிம் விரோதப் போக்கை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்ந்து வருமாக இருந்தால் தமிழ் – முஸ்லிம் விரிசல் என்பது சீர்செய்ய முடியாத ஒரு பிரச்சினையாக மாறும். எதிர்பர்க்கப்படுகின்ற இனப்பிரச்சினைத் தீர்வு என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். -Vidivelli