எப்.அய்னா
தங்க நகை தொடர்பிலான விவகார விசாரணை தொடர்பில், தன்னை கைது செய்த படல்கமுவ பொலிஸார், பன்றி இறைச்சியை ஊட்ட முயற்சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்றத்தை ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுத்ததாக மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த மொஹம்மட் நிப்லி எனும் வர்த்தகர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி இந்த கைது நடந்ததாக கூறும் நிப்லி, இது தொடர்பில் நீதிமன்றுக்கும் தெரிவித்ததாகவும், படல்கமுவ பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவவிடம் விடிவெள்ளி வினவிய போது, வர்த்தகர் மொஹம்மட் நிப்லி கூறுவதைப் போல ஏதேனும் அழுத்தங்கள், அநீதிகள் நடந்திருப்பின் அது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கோ அல்லது உரிய தரப்பினருக்கோ முறைப்பாடளிக்கும் பட்சத்தில் அது குறித்து விசாரணை நடாத்த தயார் என குறிப்பிட்டார்.
மொஹம்மட் நிப்லி முன்பு தங்க நகை கடை நடாத்தியவர். தற்போது தங்க நகைகளை உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்து வர்த்தகம் செய்து வருபவர். மார்க்க செயற்பாடுகளுடன் கூடுதலாக நெருக்கமானவர். மினுவாங்கொடையைச் சேர்ந்த அவர், படல்கமுவ பொலிஸாரால், திவுலபிட்டிய பகுதியை அண்மித்த இடமொன்றில் வைத்து கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
மொஹம்மட் நிப்லி அவர் எதிர்கொண்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
‘அன்று வெள்ளிக்கிழமை. நான் வழமையாக வெள்ளிக்கிழமைகளில் வர்த்தக செயற்பாடுகளில் பெரிதாக ஈடுபடுவதில்லை. மூல பற்றுச் சீட்டு இருப்பின் மட்டுமே நான் நகைகளை கொள்வனவு செய்வேன். அப்படி இருக்கையில், கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் ஒரு தரகர் தொலைபேசியில் அழைத்தார். நகைகளை விற்க ஒருவர் வந்திருப்பதாகவும், எனக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.இதனையடுத்து நான் திவுலபிட்டி பகுதிக்கு சென்றேன்.
அப்போது அங்கு வைத்து படல்கமுவ பொலிஸார் என் கைகளுக்கு விலங்கிட்டு முகத்தை மூடி வேன் ஒன்றில் என்னை ஏற்றிக்கொண்டு எங்கெங்கோ சென்றனர்.
அவர்கள் தங்க நகை திருடர்கள் இருவரை பிடித்துள்ளதாகவும் அவர்கள் நகைகளை தன்னிடமே விற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். மூல பற்றுச் சீட்டு இல்லாத எந்த நகைகளையும் நான் கொள்வனவு செய்வதில்லை என உறுதியாக நான் கூறியதுடன், அவர்களிடம் ஒரு போதும் நகைகளை கொள்வனவு செய்ததில்லை என்பதையும் தெரிவித்தேன்.
ஆனால் அவர்கள் என்னை தொடர்ந்து திருட்டு நகைகளை வாங்கியதாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தினர். மூன்று பவுண் நகைகளை முதலில் கோரினர். பின்னர் 12 பவுண் நகைகளை தர வேண்டும் எனவும் இல்லாவிட்டால் 2 வருடங்கள் வரை சிறையில் இருக்க வேண்டிவரும் எனவும் அவர்கள் அச்சுறுத்தினர்.
பொலிஸில் இருந்த போது அவர்கள் என்னை ‘ தம்பியா’ (பேச்சு வழக்கில் முஸ்லிம்களை அழைக்க பயன்படுத்தப்படும் அநாகரீகமான சிங்கள சொல்) என்ற சொற்பிரயோகம் ஊடாகவே அழைத்தனர்.
அரபா தினத்தன்றும் நான் பொலிஸ் நிலையத்திலேயே இருக்க வேண்டி வந்தது. அன்று நான் நோன்பு பிடித்திருந்தேன். தொழுது கொண்டிருந்த போது என்னை எட்டி உதைந்து ‘ தம்பியா’ எனும் சொல்லால் விழித்து, உனக்கு இங்கு வணங்க முடியாது எனவும் அதற்கு விடவும் மாட்டோம் எனவும் கூறினர். ஆனால் அவர்கள் திருடர்கள் எனக் கூறி கைது செய்திருந்தவர்களுக்கு சிகரட் உள்ளிட்ட அனைத்தும் தாராளமாக பொலிஸ் அனுசரணையிலேயே கிடைத்தது.
இதன்போது பொலிஸார் கோரும் தங்கத்தை அவர்களுக்கு தர வேண்டும் என தொடர்ச்சியாக குறிப்பிட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் பன்றி இறைச்சியை எடுத்து வந்து வாய் அருகே வரை கொண்டு வந்து அதனை ஊட்டுவதாக மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கூறினர்.
பின்னர் மீண்டும் பெருநாளைக்கு இரு தினங்களின் பின்னர், நான் பள்ளிவாசலுக்கு போய்கொண்டிருந்த போது வழியில் வைத்து என்னை கைது செய்து வீட்டுக்கு அழைத்து சென்று வீட்டையும் சோதனை செய்தனர். பின்னர் என்னை மினுவாங்கொடை நீதிமன்றில் 1447, 1448 ஆகிய இரு வழக்கிலக்கங்களின் கீழ் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
நீதிமன்றில் எனக்காக ஆஜரான சட்டத்தரணி பொலிஸ் நிலையத்தில் நடந்த கொடுமைகளை நீதிமன்றில் கூறிய போது, நீதிவான் பொலிஸாரை எச்சரித்து எனக்கு பிணையளித்தார்.’ என நிப்லி குறிப்பிட்டார்.
உண்மையில் பொலிஸ் விசாரணைகளின் போது, கைது செய்யப்படுவோர் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. எத்தனை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கள் இருந்தாலும் இன்னும் பொலிஸ் நிலையங்களின் குற்றங்களை ஒருவர் மீது கட்டி, விசாரணைகளை நிறைவு செய்யும் பழக்கம் மாறியதாக தெரியவில்லை.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை, கைது செய்யப்பட்டவர் முஸ்லிமாக இருந்தமை, அவரது ஆடை (ஜுப்பா) முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் இருந்தமையை மையப்படுத்தி மத ரீதியிலான வெறுப்புணர்வு தூண்டப்பட்டு, குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனினும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இக்குற்றச்சாட்டை அப்படியே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. உண்மையை கண்டறிய விசாரணை வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர் முறைப்பாடளித்தால் விசாரணை செய்யத் தயார் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
அதன்படி, பொலிஸ் தலைமையகத்தில் இன்று (27) முறைப்பாடளிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தகர் நிப்லி விடிவெள்ளியிடம் குறிப்பிட்டதுடன், மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடவும் தயாராகி வருவதாக கூறினார்.
உண்மையில் படல்கமுவ பொலிஸார் வர்த்தகர் நிப்லி கூறுவதை போல நடந்துகொண்டிருப்பின் அது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். எனவே இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு முன்வர வேண்டும்.- Vidivelli