எம்.எல்.எம்.மன்சூர்
இலங்கை முஸ்லிம் சமூகம் குறிப்பாக 1990களின் பின்னர் முக்கியமான பல சமூக, சமய மற்றும் கலாசார ரீதியான மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. அதற்கு வழிகோலிய காரணிகள் எவை என்பதை விரிவாக எடுத்து விளக்க வேண்டிய அவசியமில்லை. இந்த மாற்றங்கள் எடுத்து வந்த குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு தாக்கம் ‘சிங்கள –பெளத்த பெரும்பானமை நாடான இலங்கையில் எங்களை அடையாளப்படுத்திக் கொள்வது எப்படி’ என்பது தொடர்பாக முஸ்லிம்கள் எதிர்கொண்ட தடுமாற்ற நிலையாகும்.
இப்பின்னணியில், நாங்கள் ”இலங்கை முஸ்லிம்களா” அல்லது ”இலங்கையில் வாழும் முஸ்லிம்களா” என்ற கேள்வி எழுந்தது.
முதலில் ”இலங்கை முஸ்லிம்கள்” என்ற பதம் எதனைக் குறிக்கின்றது என்பதை பார்ப்போம்.
இலங்கை முஸ்லிம்கள் அல்லது சுதேச முஸ்லிம்கள் – இலங்கையில் பிறந்து, இலங்கையில் வாழ்ந்து, இலங்கையில் மரணிப்பவர்கள். உரிமை கொண்டாடுவதற்கு அவர்களுக்கு வேறு நாடுகள் எவையுமில்லை. இலங்கையின் தேசியக்கொடி, தேசிய கீதம் மற்றும் அரசியல் யாப்பு என்பவற்றுக்கு (ஏனைய பிரஜைகளைப் போலவே) உரிய கௌரவத்தை அளிப்பவர்கள். இலங்கையின் முதன்மை கலாசாரம் மற்றும் பாரம்பரியங்கள் என்பன குறித்த பிரக்ஞையுடன் செயற்பட்டு, அவற்றை கண்ணியப்படுத்தும் அதே வேளையில், தமது தனித்துவமான சமய மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியங்களை பேணி வாழ்பவர்கள்.
கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக சுதேச முஸ்லிம்கள் அப்படித்தான் இந்நாட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அந்த ‘ஈடிணையற்ற சகவாழ்வை’ லோர்னா தேவராஜா விரிவாக பதிவு செய்திருக்கிறார். ‘கிரா சந்தேஸய’ (கிளி விடு தூது) போன்ற மத்திய கால சிங்கள காப்பியங்களும், நூற்றுக்கணக்கான வாய்மொழி வரலாற்றுத் தகவல்களும் அதனை மேலும் ஊர்ஜிதம் செய்கின்றன.
இரண்டாவது வகை அடையாளம் ”இலங்கையில் வாழும் முஸ்லிம்கள்” என்பது. அதாவது, அந்தச் சிந்தனையை கொண்டிருப்பவர்கள் பின்வரும் விதத்தில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்:
”உலகெங்கிலும் 100 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இருந்து வருகின்றன. இலங்கையில் வாழும் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள் அந்த உலகளாவிய முஸ்லிம் உம்மாவின் உறுப்பினர்கள். அந்த வகையில், எமது நாட்டுக்கு வெளியில் மத அடையாளத்தின் அடிப்படையில் எமக்கு ஒரு பாரிய பாதுகாப்பு அரண் இருந்து வருகின்றது.”
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கருத்தியலை உருவாக்கி, அதற்கு செயல் வடிவம் கொடுத்த நபர்களும் அனேகமாக இத்தகைய ஒரு சிந்தனையினாலே தூண்டப்பட்டிருந்தார்கள். தமது செயல்கள் எடுத்து வரக்கூடிய மிகப் பயங்கரமான பின்விளைவுகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் அந்தக் கொடூரத்தை நிகழ்த்துவதற்கு அத்தகைய ஒரு தீவிரவாத மனநிலையே அவர்களைத் தூண்டியிருந்தது.
”ஈஸ்டர் தாக்குதல்கள் பௌத்த பன்சலைகளை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்டிருந்தால் இன்றைக்கு இலங்கையே இருந்திருக்க மாட்டாது” என அண்மையில் முக்கியமான பிக்கு ஒருவர் பொது வெளியில் பேசியிருந்தார். இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளவிருந்த இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ‘Genocide’ எவ்வாறு மயிரிழையில் தவிர்க்கப்பட்டது என்பதனையே அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருந்தார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான கிரிக்கட் போட்டிகள் நடக்கும் சந்தர்ப்பங்களிலும் ஒரு சிலர் அடையாளம் தொடர்பான இந்த தடுமாற்ற நிலையை அனுபவிக்கிறார்கள்.
சிங்கள தேசியவாதிகளும், இனவாதிகளும், ஒரு சில தீவிர அரசியல் பிக்குகளும் இலங்கை முஸ்லிம் சமூகத்தை இந்த இரண்டாவது அடையாளத்தின் அடிப்படையிலேயே நோக்கி வருகிறார்கள். அதுவே இங்குள்ள மிகப் பெரிய பிரச்சினை. ”எங்களுக்கு இருப்பது இந்த ஒரு நாடு மட்டும்தான். உங்களுக்கு எத்தனையோ நாடுகள் இருக்கின்றன” என்ற விதத்திலான அபத்தமான கருத்துக்களை அவர்கள் இந்தக் கண்ணோட்டத்திலேயே அடிக்கடி முன்வைத்து வருகின்றார்கள்.
இலங்கை தமிழ் மக்கள் முன்னெடுத்த 30 வருட கால விடுதலைப் போராட்டம் – தமது மற்ற அடையாளங்களான இந்து மத இந்தியா மற்றும் தமிழர்கள் வாழும் தமிழ்நாடு என்பன இறுதி வரையில் தமக்கு ஒரு பெரும் பாதுகாப்பு அரணாக இருந்து வரும் என்ற நம்பிக்கையில் முன்னெடுத்த போராட்டம் – முள்ளிவாய்க்காலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் மரணத்துடன் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதையும், தமிழீழக் கனவு இறுதியில் எவ்வாறு சிதைந்தது என்பதையும் நாங்கள் பார்த்தோம். மன்னார் கரையிலிருந்து வெறுமனே 18 மைல் தூரத்தில் ஏழு கோடி தமிழர்கள் வாழ்ந்து வந்த ஒரு பின்புலத்தில் இந்தப் பேரனர்த்தம் நிகழ்ந்தது என்பது தான் பெரும் கொடுமை.
பூகோள–அரசியல் நலன்கள் மற்றும் பிராந்திய நலன்கள் என்பவற்றுக்கு நாடுகள் உயர் முன்னுரிமை வழங்கி வரும் இன்றைய உலகச் சூழலில், இலங்கையில் வாழ்ந்து வரும் சிறுபான்மை சமூகங்கள் யதார்த்தத்துக்கு புறம்பான இவ்வாறான எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது மிக மிக ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை.
ஜனாஸா எரிப்பு விவகாரத்தின் போது முஸ்லிம் நாடுகள் தன் மீது அழுத்தம் பிரயோகித்ததாக தனது நூலின் எந்த ஒரு இடத்திலும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டிருக்கவில்லை என்பதையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அறகலய மக்கள் எழுச்சிக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் சாதகமான மாற்றங்களில் ஒன்று அவர்கள் தமது முதலாவது வகை அடையாளத்தை -அதாவது, நாங்கள் இலங்கையின் சுதேச முஸ்லிம்கள் என்ற அடையாளத்தை -பொது வெளியில் வலுவான விதத்தில் வலியுறுத்தி வருவதாகும். அதே வேளையில், (சமகால பூகோள -அரசியல் யதார்த்தங்களுடன் எவ்விதத்திலும் பொருந்திச் செல்லாத) இரண்டாவது வகை அடையாளத்தை முன்வைக்க விரும்பும் சிறு தொகையினரின் குரல்கள் இப்பொழுது பெருமளவுக்கு பலவீனமடைந்திருக்கின்றன. அது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்.
அண்மையில் வெசாக் மற்றும் பொசொன் வைபவங்களுடன் சம்பந்தப்பட்ட அன்னதான நிகழ்வுகளில் தென்னிலங்கையில் (குறிப்பாக சிங்கள கிராமங்களை அண்டி வாழும்) முஸ்லிம் சமூகத்தினர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில் பங்கேற்றிருக்கிறார்கள். தேசியப் பெருவாழ்வின் ஒரு பாகமாக இணைந்து கொள்வதற்கான அவர்களுடைய விருப்பின் ஒரு பிரதிபலிப்பாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது. (இது தொடர்பான முகநூல் பத்வாக்கள் என்னவாக இருந்து வந்த போதிலும்) இந்தச் சம்பவம் ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட பின்புலம், அந்தந்த ஊர்களில் இனங்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வரும் உறவுகள் மற்றும் பன்சல – பள்ளிவாசல் இடையிலான நல்லிணக்கம் என்பவற்றின் பின்னணியிலே (Case by case) அணுக வேண்டியிருக்கிறது.
அடுத்து வரும் மாதங்களில் இலங்கை அரசியலிலும், சமூகத்திலும் முன்னொருபோதும் இருந்திராத அளவிலான பாரிய மாற்றங்கள் ஏற்பட முடியும் என்ற விதத்தில் பரவலாக எதிர்பார்ப்புகள் நிலவி வரும் ஒரு வரலாற்றுத் தருணத்தில் நாங்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தீவிர சிங்கள தேசியவாத நிலைப்பாட்டை முன்வைக்கும் புதிய அரசியல் அணியும் கூட அதன் பரப்புரைகளில் ‘அனைவரையும் அரவணைக்கும் இலங்கை’ (Inclusive Sri Lanka) என்ற வாசகத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறது. அதன் கொடியில் இளம் பிறையையும் காட்சிப்படுத்துகின்றது.
முஸ்லிம்களுடன் தன்னை மிக நெருக்கமான விதத்தில் அடையாளப்படுத்தி வந்த ஒரு சிங்கள அரசியல்வாதியின் மரணத்தின் போது (அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கூட இல்லாத நிலையிலும்) முழு நாடும் பெரும் எடுப்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதை நாங்கள் பார்ப்போம்.
சிங்கள கலை, பண்பாட்டுத் துறையின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான உபுல் சாந்த சன்னஸ்கல அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களுடன் ஒரு நேர்காணலை நடத்தியிருந்தார். கிட்டத்தட்ட 100 நிமிட நேரத்தைக் கொண்ட அந்தக் காணொளி சன்னஸ்கலவின் பிரபல்யமான யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட பொழுது அதற்கு தெரிவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள், குறிப்பாக சிங்கள மத்திய தர வர்க்கத்தின் சிந்தனைப் போக்கில் ஏற்பட்டு வரும் சாதகமான மாற்றங்களை துல்லியமாக பிரதிபலிப்பனவாக இருந்து வந்தன.
‘இவற்றால் எந்தப் பயனும் இல்லை. இலங்கையில் சிங்கள இனவாதம் இன்னமும் வலுவாக இருந்து வருகிறது’ என அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு வார்த்தை ஆம் இனவாதம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. (எல்லா இனங்களிலும்) குறிப்பிட்ட சதவீதத்தில் இனவாதிகள் இருந்து வருகிறார்கள். ஆனால், இன்றைய இலங்கையின் பெரும்போக்கு அரசியலில் (Mainstream Politics) இனவாதமோ அல்லது மதவாதமோ ஒரு நிர்ணய காரணியாக இருந்து வரவில்லை. அத்தகைய சுலோகங்களை இனிமேலும் சிங்கள மக்களுக்கு மத்தியில் சந்தைப்படுத்த முடியாது என்ற விடயத்தை அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் இப்பொழுது நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அடையாளம் குறித்துப் பேசும் பொழுது, வன்னியிலும், கிழக்கிலும் ‘முஸ்லிம் அடையாள அரசியல்’ செய்து வரும் கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும் தவிர்க்க முடியாத விதத்தில் சில கருத்துக்களை சொல்ல வேண்டியிருக்கிறது.
இங்கு முதலாவது சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் 1994 தொடக்கம் 2019 வரையில் கிட்டத்தட்ட 25 வருட காலம் அக்கட்சிகள் கொழும்பு சிங்கள அரசாங்கங்களுடன் செய்து வந்த, அவர்களுக்கு நன்கு பரிச்சயமான அரசியல் பேரங்களை இனியும் அதே விதத்தில் செய்ய முடியாது என்பதாகும். அதாவது, கூட்டணி அரசாங்கத்தில் ஒரு கெபினட் அமைச்சர், இரண்டு ராஜாங்க அமைச்சர்கள், ஒரிரு கூட்டத்தாபனத் தலைவர் பதவிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவராலயங்களில் ஒரு சில நியமனங்கள் என்ற வகையிலான பேரங்கள் இனிமேலும் சாத்தியமில்லை. அத்தகைய பேரங்களுக்கு அடிப்பணியும் ஒரு அரசாங்கம் (SJB அரசாங்கமாக இருந்தாலும் கூட) வெளிச் சக்திகளிலிருந்து கடும் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியும். அது இறுதியில் அந்த அரசாங்கத்தின் ஸ்திர நிலையை கூட ஆட்டம் காணச் செய்ய முடியும்.
அடுத்த விடயம் அடுத்து வரவிருக்கும் புதிய அரசாங்கத்தினால் பாரிய உட்கட்டமைப்பு வசதிகளையோ அல்லது பெருந்தொகையான அரசதுறை நியமனங்களையோ வழங்க முடியாது என்பதாகும். நாட்டின் பலவீனமான பொருளாதாரம் காரணமாக (குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு) அத்தகைய செலவினங்களை மேற்கொள்ள முடியாது என்பது யதார்த்தம்.
ஆகவே, இந்தப் பின்னணியில், கூட்டணி அரசுகளில் இணைந்து கொள்ளும் சிறுபான்மைக் கட்சிகள் அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் எவை? ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு விடயம் இது. கிழக்கில் அதிகூடிய குடிசனச் செறிவினைக் கொண்டிருக்கும் காத்தான்குடி, கல்முனை மற்றும் அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களின் இப்போதைய முன்னுரிமைத் தேவை குடியேற்றங்களை விஸ்தரிப்பதற்கான புதிய காணிகள், புதிய வாழிடப் பிரதேசங்கள். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்துவ அரசியலுடன் பெருமளவுக்கு சம்பந்தப்பட்ட ஒரு தீவிர பிரச்சினையாக (Explosive Issue) காணிப் பிரச்சினை இப்பொழுது கிழக்கில் எழுச்சியடைந்திருக்கின்றது.
சிறுபான்மை கட்சிகளால் மட்டும் இப்பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாது. இன– மத லேபல்கள் இல்லாத ஒரு பொதுச் செயல் திட்டத்தின் கீழ் தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து, அவற்றின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமும், அதற்கூடாக இனவாத / மதவாத சக்திகளை பலவீனமடையச் செய்வதன் மூலமும் மட்டுமே இதனைச் சாதித்துக் கொள்ள முடியும்.
இறுதியில் ஒரு எச்சரிக்கை – நாங்கள் எதனை மாற்றியமைக்க வேண்டும் என போராடுகிறோமோ ஒரு போதும் அதில் நாங்களும் ஒரு பாகமாக இருந்து வர முடியாது. அதாவது, நாங்கள் கடுமையான இனவாத / மதவாத நிலைப்பாடுகளில் இருந்து கொண்டு, ‘மற்றவர்கள் அவ்வாறு இருந்து வரக்கூடாது’ எனச் சொல்வதற்கான தார்மீக உரிமை எமக்கில்லை.– Vidivelli