திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவர்களின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட விடயத்தில் மாணவர்களுக்கான பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதில் தொடர்ச்சியாக பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஏற்பாட்டில் இதுதொடர்பான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை சென்ஜோசப் கல்லூரியில் உயர்தரம் எழுதி பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவர்களும், கடமையில் இருந்த அதிகாரிகள்,மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துரைத்த ஆளுனர், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொரு மாணவர்களும் 13 வருடங்கள் எதிர்பார்த்த கனவுகள், பெற்றார்களின் எதிர்பார்ப்புகள் இந்த பெறுபேற்றில் அடக்கியுள்ளது. எதிர்காலத்தில் வர வேண்டிய சிறந்த கல்விமான்கள் இலங்கையின் உயர்பதவிகளின் வகிக்கக்கூடிய மாணவர்களும் இதில் இருப்பீர்கள். மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய கல்வி முன்னேற்றத்துக்கான முயற்சிகளை தொடருங்கள். உங்களுடைய இடைநிறுத்தப்பட்ட பெறுபேறுகளை விரைவாக வெளியிட ஏற்பாடுகளை கிழக்கு ஆளுநர் என்ற அடிப்படையில் நானும் எனது முயற்சிகளை செய்து வருகின்றேன். இந்த பெறுபெறுகளை வெளியிட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபும் ஆரம்பத்தில் இருந்து பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார் என்று குறிப்பிட்டார்.
இதன்போது தொலைபேசியில் பரீட்சை திணைக்கள ஆணையாளரிடம் இது தொடர்பாக பேசி விரைவாக பெறுபேறுகள் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளர் மதநாயக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா, திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் ரவி, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் முகேஸ், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் முகம்மட் நௌபர், பரீட்சை கடமை நேரத்தில் இருந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.- Vidivelli